துன்புறுத்திய பார்ப்பனீயத்தை தூக்கிச்சுமப்பவர்கள்

சூழ்ச்சிமிக்க, கொடூரமான, மாந்தநேயமற்ற அமைப்பான சாதி பல்வேறு இடங்களில் பல்வேறு வழிகளில் பரிணமிக்கிறது. அண்டாமை, தீண்டாமை, காணாமை என்பவை நாடெங்கும் நடக்கும் எல்லோரும் அறிந்த இழி நடவடிக்கைகள். தாழ்த்தப் பட்ட மக்களை அருகே வராதே, நெருங்காதே, உன் நிழல்கூட எங்கள்மீது பட்டுவிடக்கூடாது என்று ஒதுக்கிவைக்கிறார்கள் ஆதிக்கச்சாதியினர். “எதிரே வராதே, எங்கள் தெருவுக்குள் நுழையாதே" என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்து காலுக்குள் போட்டு மிதிக்கின்றனர். "நாங்களும் உங்களைத் தொட முடியாது, நீங்களும் எங்களை அணுகக்கூடாது” என்று தீண்டாமையை வாழ்க்கை முறையாக்கி வைத்திருக்கின்றனர்.