சூழ்ச்சிமிக்க, கொடூரமான, மாந்தநேயமற்ற அமைப்பான சாதி பல்வேறு இடங்களில் பல்வேறு வழிகளில் பரிணமிக்கிறது. அண்டாமை, தீண்டாமை, காணாமை என்பவை நாடெங்கும் நடக்கும் எல்லோரும் அறிந்த இழி நடவடிக்கைகள். தாழ்த்தப் பட்ட மக்களை அருகே வராதே, நெருங்காதே, உன் நிழல்கூட எங்கள்மீது பட்டுவிடக்கூடாது என்று ஒதுக்கிவைக்கிறார்கள் ஆதிக்கச்சாதியினர். “எதிரே வராதே, எங்கள் தெருவுக்குள் நுழையாதே" என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்து காலுக்குள் போட்டு மிதிக்கின்றனர். "நாங்களும் உங்களைத் தொட முடியாது, நீங்களும் எங்களை அணுகக்கூடாது” என்று தீண்டாமையை வாழ்க்கை முறையாக்கி வைத்திருக்கின்றனர். இவை எல்லாவற் றையும்விட மோசமாக, "நாங்கள் உங்களை பார்க்கவேக் கூடாது’ என்றும் ஒரு சாராரை ஒதுக்கி வைக்கின்றனர்.
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு, திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தில் தற்போதைய கேரளாவின் பெரும்பகுதியும், தமிழகத்தின் தென்பகுதியான கன்னியாகுமரி மாவட்ட ஊர்களும் இடம்பெற்றிருந்தன. பார்ப்பனீயத்தின் கட்டுக்குள்ளிருந்த இந்தப் பகுதியில் "மனுதர்ம" ஆட்சி நடந்தது. சனவரி 3, 1750 அன்று மன்னர் மார்த்தாண்ட வர்மா தனது நாட்டை அவரது குலதெய்வ மான பத்மநாபசுவாமிக்கு அர்ப்பணித்தார். அதன் மூலம் அந்த நாடு பண்டாரவகை (பத்மனாபரின் சொத்து) என்றும், மன்னர் பத்மனாபதாசராகவும் அறியப்பட்டனர். மன்னருக்கு எதிரான நடவடிக்கைகள் சுவாமி துரோகமாகக் கருதப்பட்டன. அரசச் சொத்துக்களுக்கும், கோவில் சொத்துக்களுக்கும் வேறுபாடுகள் இல்லை எனும் நிலை உருவாகி, திருவிதாங்கூர் அரச குடும்பம் மையப்படுத்தப்பட்ட கோவில் நிர்வாகக் குழுவாக மாறியது.
திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தில் சாணார், பரவர், ஈழவர், முக்குவர், கம்மாளர், புலையர், வாணியர், வண்ணார், காணி, ஆரயன் உள்ளிட்ட பதினெட்டு சாதிகளைச் சார்ந்தவர்கள் தாழ்ந்த சாதியினராகவும், தீண்டத்தகாதவராகவும் கருதப்பட்டனர். "கீழ்சாதி" மக்கள் கோவில் தெருக்களில் செல்லவும், ''உயர்சாதியினரின் தெருக்களில் நுழையவும், பொதுக்கிணறு, குளம் போன்றவற்றில் தண்ணீர் எடுக்கவும், காற்றோட்டமுள்ள வீடுகளில் வசிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
அம்மக்கள் திருமணங்களில் தாலி கட்டுவதற்கும் வரி கட்ட வேண்டியிருந்தது. வீட்டில் பசு மாடுகள் வளர்த்தாலோ, மண்வெட்டிகள் மற்றும் அரிவாள்கள் வைத்திருந்தாலோ வரி விதிக்கப்பட்டது. ஆடவரின் மீசைக்கு, வளைந்த கைப்பிடியுள்ளகுடைகளுக்கு என ‘எங்கும் வரி எதற்கும் வரி' எனும் நிலைமை தாண்டவமாடியது. பதினாறுவயது முதல் அறுபது வயதான ஆண்கள் தங்களுக்கும், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும், இடம்பெயர்ந்து சென்றிருக்கும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் தலை வரி ('poll tax') செலுத்த வேண்டும்.
பனை மரம் ஏறுவதற்காக சாணார்கள் பயன்படுத்திய ஏணிகளுக்கு ‘ஏணிக்காணம்' எனும் வரி கட்ட வேண்டும். பனை மரம் ஏறுவ தற்காக அவர்கள் பயன்படுத்திய அரைக்கச்சுக ளுக்கு (belt) தளைக்காணம் எனும் வரி கட்ட வேண்டும். அவர்கள் குடியிருந்த குடிசைகளுக்கு பணம் ('fanam') எனும் வரி வசூலிக்கப்பட்டது. வீட்டின் கூரையை மாற்றுவதற்கு, திருமணம் செய்வதற்கு, நகைகள் அணிவதற்கு என எல்லாவற்றுக்கும் வரிகள் விதிக்கப்பட்டன.
அய்யா வைகுண்டர் அவர்கள் அருளிய "அகிலத்திரட்டு அம்மானை" நூல் விவரிக்கிறது:
"தாலிக்கு ஆயம் சருகுமுதலாயம் காலிக்கு ஆயம் கம்புதடிக்காயம் தாலமதேறுஞ் சான்றோருக்காயம் தூலமுடனருவாள் தூருவட்டிக்கேயாயம் தாலமதுக்காயம் தரணிதனிலே வளர்ந்த ஆலமரம் வரைக்கும் அதிகயிறை வைத்தனனே வட்டிக்குமாயம் வலங்கைச் சான்றோர் கருப்புக் கட்டிக்கு மாயங் கடுநீசன் வைத்தனனே' (பக்கம் 117).
"...நீசன் ஆர்க்கமுள்ள சான்றோர்க்கு வல்லாண்மையான வரிசையிறைகள் வைத்து கரிவுயிறை பாட்டவிறை கண்டபாட்ட விறையும் தரிசிறை காணாத தறைபாட்ட இறையும் ஆமிசங்களில்லாத அன்நீத வம்பிறையும் நேமித்து வைத்த நிலையுள்ள சான்றோரை" வன்கொடுமைகள் பல செய்ததாக பதிவு செய்கிறார் அய்யா வைகுண்டர் அவர்கள். (பக்கம் 118).
சாணார்கள் மீது இன்னும் ஒரு வன் கொடுமை நடத்தப்பட்டது. அவர்கள் இழைத்த "தவறுகளுக்கும்'' தவறே செய்யாதவர்களுக்கும் பிராயச்சித்தம் எனும் ஒரு தண்டம் விதிக்கப் பட்டது. வரி வசூலிக்கும் "உயர்சாதி' நபர் தன்னுடைய விருப்பப்படி அபராதத் தொகையை முடிவு செய்வார். அதில் பெரும்பகுதியை அவரே எடுத்துக்கொண்டு, வசூலிக்கும் தொகையில் இருபது விழுக்காட்டை மட்டுமே அரசு கருவூலத்திற்குக் கொண்டு சேர்த்தார் அவர்.அதேபோல, சாணார்கள் தங்கள் மூதாதையரி டமிருந்து பாரம்பரியச் சொத்துக்களைப் பெறும் போது, அச்சொத்தின் 40 விழுக்காடு வரையி லானத் தொகையை 'புருஷாந்தரம்' எனும் பெயரில் அரசுக்குச் செலுத்தியாக வேண்டும்.
இவை தவிர, திருதாங்கூர் சமஸ்தானத்தின் இராணுவச் செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் 'தலைஇறை' எனும் வரி விதிக்கப்பட்டது. ஒரே ஓர் ஆண்டில் (1807) மட்டுமே சாணார், ஈழவர், சாம்பவர் சாதி மக்களிடமிருந்து 'தலைஇறை' யாக ரூபாய் 88,000 வசூலிக்கப்பட்டது. இதனைக் கட்ட முடியாமல் பலரும் திருநெல் வேலிக்குத் தப்பியோடினர். இவை எல்லாவற் றையும்விடக் கொடுமையான விடயம் பெண் களின் மார்புகளுக்கு "முலை வரி"யும் விதிக்கப் பட்டது.
பனைத்தொழில் செய்துவந்த சாணார் மக்கள் தீண்டத்தகாதவர்கள், காணத்தகாதவர்களென்று தள்ளிவைக்கப்பட்டு, பனை மரங்களுக்கும் வரி செலுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டனர். சாணார் கள் நம்பூதிரிகளிடமிருந்து 36 அடி தூரத்திலும், நாயர்களிடமிருந்து 12 அடி தூரத்திலுமே நிற்க வேண்டும். சாணார்கள் குடை வைத்திருப்ப தற்கோ, செருப்பு அணிவதற்கோ அனுமதியில்லை; மாடி வீடுகள் கட்டக்கூடாது. அவர்கள் ஆலயங்களிலும், அரண்மனைகளிலும், அரசு அலுவலகங்களிலும், ஆதிக்கச்சாதியினரின் வீடுகளிலும் சாணார்கள் சம்பளமின்றி ஊழியம் செய்ய வேண்டும். அவர்களின் தெய்வங்களை வழிபடுவதற்கும்கூட தடை விதிக்கப்பட் டிருந்தது.
சாணார் பெண்கள் நகைகள் அணியக் கூடாது. அவர்கள் இடுப்பில் தண்ணீர்க் குடங் களை தூக்கிச்செல்லக் கூடாது. அடிமைத் தனத்தை குறிக்கும் விதமாக தலையின்மீது வைத்துத்தான் குடங்களை எடுத்துச் செல்ல வேண்டும். சாணார் ஆண்களும், பெண்களும் இடுப்புக்கு மேல் எந்தவிதமான ஆடைகளும் அணியக்கூடாது. உடம்பின் மேல்பகுதியை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. ஒரு துண்டைக்கூட மேலாடையாக போர்த்திக் கொள்ள முடியாது.
தென் திருவிதாங்கூரின் (தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தின்) கடலோரம் முழுவதும் வாழ்ந்த மீனவர்கள் போர்ச்சுகீசிய மிஷனரிகளால் ஏற்கனவே கிறித்தவர்களாக மாற்றப்பட்டிருந்தனர். இயேசு சபையினரால் உள்நாட்டு பகுதிகளிலும் கிறித்தவம் பரவிக்கொண்டிருந்தது. ஆனாலும் கிறித்தவர்கள் (குறிப்பாக ரோமன் கத்தோலிக்கர்கள்) தாழ்ந்த சாதியினராக, தீண்டத்தகாதவர்களாகவேக் கருதப்பட்டனர். கிறித்தவம் தாழ்ந்த சாதியினரின் மதமாகவேப் பார்க்கப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் பிற ‘தாழ்ந்த சாதி’யினரைப் போலவே, கிறித்தவ ஆண்கள் தலையில் தலைப்பாகை அணிவதற்கும், பெண்கள் இடுப்புக்கு மேல் உடை உடுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
பொருளாதார ரீதியிலும் கிறித்தவர்கள் ஒடுக்கப்பட்டவராகவே இருந்தனர். கிறித்தவர் களாக இருப்பதற்கும் அவர்கள் வரி கட்ட வேண்டியிருந்தது. 'தாழ்ந்த சாதி' மக்கள் 110 விதமான வரிகள் கட்ட வற்புறுத்தப்பட்டதன் காரணமாக தென் திருவிதாங்கூர் பகுதியில் கிறித்தவம் வேகமாக வளர்ந்தது. இந்த மதமாற்றம் மார்த்தாண்ட வர்மாவையும் அவரது 'உயர் சாதி' ஆதரவாளர்களையும் பயங்கொள்ளச் செய்தது. எனவே கிறித்தவர்கள் பல்வேறு வழிகளில் கொடுமைப்படுத்தப்பட்டனர்.
அவர்கள் பலவந்தமாகப் பிடித்துக் கொண்டு வரப்பட்டு, மத ஊர்வலங்களில் விளக்குகளைத் தூக்கிச் செல்லப் பணிக்கப்பட்டனர். கோவில் தேர்களைச் செப்பனிட மரத்தடிகள் கொண்டுவரக் கட்டாயப்படுத்தப்பட்டனர். அடித்து சித்திரவதை செய்யப்பட்டு, பொய் வழக்குகளில் சிறையில் தள்ளப்பட்டனர். கிறித்தவர்களின் மத நம்பிக் கைக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். கிறித்தவ தேவாலயங்களில் வழிபாடுகள் தடுக்கப்பட்டன. சில தேவாலயங்களை இடிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன, சில கிறித்தவப் பள்ளிகளும், தேவாலயங்களும் எரிக்கப்பட்டன. கிறித்தவப் பெண்கள் பாலியல் வன்முறைக் குள்ளாயினர், சாலைகளிலும், சந்தைகளிலும் கேலி செய்யப்பட்டனர். எல்லா பொதுத் தெருக்களையும், கிணறுகளையும் பயன்படுத்த கிறித்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இன்னோரன்ன கொடூரமான நடைமுறை களைப் பார்த்த பிரிட்டானிய ஆட்சியாளர்கள் "திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவும் சாதியக் கொடுமைகளைப் போன்று உலகில் வேறெங்கும் கண்டதில்லை" என்று கருத்துத் தெரிவித்தனர். இக்கொடுமைகளைக் கண்ணுற்றதால்தான் சுவாமி விவேகானந்தர் "திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம் "என்று கண்டித்தார்.
திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தில் தென்திருவிதாங்கூர் பகுதியில், 'கீழ்சாதிப் பெண்கள் தோள் சீலை அணியவோ, மார்பகங்களை மறைக்கவோக் கூடாது எனும் அடக்குமுறையை எதிர்த்து, சாணார்களும், பிற "தாழ்ந்த சாதி களைச்” சார்ந்த மக்களும் ஏறத்தாழ 37 ஆண்டுகள் "தோள்சீலைப் போராட்டம்" எனும் பெரும் போராட்டத்தை நடத்தினர். இந்த சமர் 1822, 1828-1830, 1858-59 காலக்கட்டங்களில் வீரியமாக நடந்தது.
நாளடைவில் கிறித்தவ மதத்துக்கு மாறியப் பெண்கள் 'குப்பாயம்' எனும் உடையை அணிந்த போது, 'உயர்சாதியினர்' கலவரம் செய்தனர். முதலில் 1822 ஆண்டு கல்குளம் மற்றும் இரணியல் பகுதிகளில் கலவரம் மூண்டது. ஆங்கிலேயர்களின் தலையீட்டின் பேரில் 1823 ஆம் ஆண்டு பத்மநாபபுரம் நீதிமன்றம் கிறித்த வர்கள் மட்டும் குப்பாயம் அணியலாம் என்று அறிவித்தது.
மேற்குறிப்பிட்ட ‘உயர்சாதி’ அக்கிரமங்களை எல்லாம் பார்த்து வெகுண்டெழுந்த ஏழைப் பனையேறியான முடிசூடும்பெருமாள் (எ) முத்துக்குட்டி சுவாமி (1809-1851) 1830களின் இறுதியில் தன்னை விஷ்ணுவின் அவதாரமாம் அய்யா வைகுண்டர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு சீர்திருத்தப் போராட்டத்தை மேற்கொண்டார். தன் மக்களை மார்பிலும் முட்டிக்குக் கீழேயும் ஆடையணியுங்கள், தங்கத்தில் தாலி கட்டுங்கள், இடுப்பில் குடம் வைத்து தண்ணீர் எடுங்கள், கருவறையில் நீங்களே சென்று பூசை செய்யுங்கள், வணங்குங்கள் என்றுப் பணித்தார்.
அவரது ஆதரவாளர்களை உரிய சம்பள மின்றி உயர்சாதியினருக்கு வேலை செய்ய வேண்டாமென்றும், அவர்களின் ஆதிக்கத்துக்கு அடிபணிய வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார். அவரது சமூகத்தின் நலனுக்காக "சமத்துவ சமாஜம்' எனும் அமைப்பைத் தோற்றுவித்து, அச்சமின்றி அநியாயத்தை எதிர்த்துப் போராடக் கேட்டுக்கொண்டார்.
இப்போராட்டங்களை 'உயர்சாதியினர்' கடுமையாக எதிர்த்தனர். மேலாடை அணிந்த காரணத்தால் கர்ப்பிணிப் பெண்களை ஏரில் பூட்டி அடித்துக் கொன்றனர். சிலரை சுடுமணலில் நாள்முழுவதும் நிற்க வைத்தனர். மேலாடை அணிந்த பெண்களின் மார்புகளை வெட்டி எறிந்தார்கள். அய்யா வைகுண்டரின் தாக்கம் பரவிவிடும் என்று பயந்த 'உயர்சாதியினர்' அவருக்கு பெரும் கொடுமைகள் இழைத்து, விசம்வைத்துக் கொன்றனர்.
மேற்குறிப்பிட்டக் காட்டுமிராண்டித்தனமான சாதிக்கொடுமைகளை எந்த மடாதிபதிகளோ, சைவ மடங்களின் தலைவர்களோ, சங்கராச்சாரி யார்களோ கண்டிக்கவுமில்லை, எதிர்க்கவு மில்லை. உண்மையில், 1937ஆம் ஆண்டு வரையிலும்கூட ஒடுக்கப்பட்ட சாதியினர் தங்கள் வீட்டுக் கதவுகளை குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் அமைக்கக் கூடாது, வீட்டில் செம்புப் பாத்திரங்கள் பயன்படுத்தக்கூடாது, நிலம் வைத்திருக்கக் கூடாது, செல்லப் பெயர்களைச் சூட்டிக்கொள்ளக் கூடாது என்பன போன்ற நிர்ப்பந்தங்கள் தரப்பட்டன. 'சோறு' என்பதை 'கஞ்சி' என்றும், தமது வீடுகளை 'குடிசை' என்றும் அழைக்கும்படி அவர்கள் வற்புறுத்தப் பட்டனர்.
இத்தனை அநியாயங்கள், அக்கிரமங்கள் பலவீனமான மக்கள் மீது ஏவப்பட்டாலும், எங்கேயுமே "அவர்களோடுப் படுக்காதே" என்கிற கட்டுப்பாடு மட்டும் இருக்கவில்லை. தெய்வங்களாக தங்களை கருதிக்கொண்ட நம்பூதிரிகள் தீண்டத்தகாத ‘கீழ்சாதிப்' பெண்களை எப்போது வேண்டுமானாலும் புணரும் உரிமைப் பெற்றவர்களாக இருந்தனர். சில தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த ஆண்கள் அந்த வன்புணர்ச்சியை "தெய்வ பாக்கியம்" என்று கருதி அவர்களுக்கு இணக்கமாக நடந்து கொண்டார்கள்.
யூலை 26, 1859 அன்று ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி அனைத்து நாடார் பெண்களும் கிறித்தவப் பெண்களைப் போல குப்பாயம் அணிந்துகொள்ள அனுமதிக்கப்பட்டாலும், 'உயர்சாதிப்' பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனாலும் தாழ்த்தப்பட்ட பிற சமுதாயத்தி னருக்கு இவ்வுரிமை கிடைக்கவில்லை. அதே ஆண்டு டிசம்பர் 30 அன்று கோட்டாறு பகுதியில் கிறித்தவ நாடார்களுக்கும் நாயர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. இதில் இந்து நாடார்கள் கிறித்தவர்களுடன் கைகோர்த்துப் போராடினர். பின்னர் கிறித்தவ மிஷனரிகளின் வழிகாட்டலில் போராட்டம் தொடர்ந்தது.
அதன் பிறகு 1865ஆம் ஆண்டு ஆயில்யம் திருநாள் ராமவர்மா மகாராஜா மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார். அதன் மூலம் அனைத்து சாதியைச் சார்ந்த மக்களும் மேலாடை அணிய அனுமதி வழங்கப்பட்டது. இப்படியாக தன்னுடைய உடலை மறைத்து கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கே ஒரு பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.
மேற்படி வரலாறு தெரியாதவர்கள் “இப்படி ஒரு கொடுமை நம் பகுதியில் நடந்ததா" என்கிற ஆச்சரியத்தையும், வேதனையையும், கோபத்தையும் வெளிப்படுத்துகின்றனர். இந்த வரலாறை அரைகுறையாக அறிந்தோர் "இதைப்பற்றி இப்போது ஏன் பேச வேண்டும்” எனும் முட்டாள்தனமான கேள்வியைக் கேட்கின்றனர். வரலாறு அறியாத வர்களை, தம் மூதாதையர்களின் சமூகநீதிப் போராட்ட வரலாறை மறக்க, மறைக்க, மறுக்க முயல்பவர்களை, அதே வரலாறு திரும்பி வந்து ஆட்கொள்ளும், அடிமைப்படுத்தும் ஆபத்து தொக்கி நிற்கிறது.
முன்னர் நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதி என்றும், இப்போது கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி என்றும் அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தின் வாக்குப்பதிவு முக்கியமான செய்தியை நமக்குத் தெரிவிக்கிறது. காங்கிரசுக் கட்சியிலும், தமிழ் மாநில காங்கிரசுக் கட்சியிலும் நின்று போட்டியிட்ட திரு. என். டென்னிஸ் 1980, 1984, 1989, 1991, 1996, 1998 நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று சற்றொப்ப இருபது ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
பின்னர் 1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் 49.4 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்போதிலிருந்து தொடர்ந்து போட்டியிடும் அவர் சராசரியாக மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வருகிறார்.
தமிழ்நாட்டில் இந்துக்களும், கிறித்தவர் களும் முறையே 88%, 6% என்றிருந்தாலும், குமரி மாவட்டத்தில் இந்துக்களும் ( 51.3 \%) கிறித்தவர் களும் ( 44.5 \%) கிட்டத்தட்ட சமமான எண்ணிக்கையிலேயே வாழ்கின்றனர். இரு சமயத்தினருமே பெரும்பான்மை நாடார் சாதியைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இந்து நாடார்கள் தம்மைத் துன்புறுத்திய பார்ப்பனீ யத்தை தூக்கிச் சுமந்து கொண்டிருப்பது மிகவும் வேதனை தருகிற உண்மையாக இருக்கிறது. வரலாறு திரும்பக் கூடாது, மனித உரிமைகளும், கண்ணியமும் மறுக்கப்படும் நிலைமை தங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் வரக்கூடாது என்று விரும்புவோர் விழித்துக்கொள்வது மிகவும் அவசியமானது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)