பாலசுந்தரம்
2019ல் நடத்தப்படாத 9 மாவட்டங் களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. எதிர்பார்த்தபடியே திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. எதிர்பாராதது, அதிமுக படுதோல்வி அடைந் திருப்பது. அரசியல் சந்தர்ப்பவாதத்துக்கு பேர் போன பாமக, 2019 உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் இருந்தது. ஆனால், இம்முறை உள்ளாட்சித் தேர்தல்களில் தனித்து நின்றுள்ளது. காற்று அதிமுகவுக்கு எதிர்த் திசையில் அடிப்பதை புரிந்து கொண்ட பாமக இவ்வாறு முடிவு செய்திருந்தது. தனது மூர்க்கத்தனமான அரசியலுக்கு முழு வடிவம் கொடுக்க இவ்வாறு முடிவு செய்தது. அதேசமயம், பாஜகவுடன் கூட்டணி (தேசிய ஜனநாயக கூட்டணி) தொடரும் என்று அறிவித்திருந்தது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்த போதிலும் பல இடங்களில் இந்தக் கூட்டணி வேலை செய்யவில்லை. கோவை, ஊராட்சி மன்ற இடைத்தேர்தலில் வார்டு ஒன்றில் போட்டியிட்ட பாஜக காரருக்கு அவரது குடும்பத்தில் 5 வாக்குகள் இருந்தபோதும் கூட ஒரு வாக்கு மட்டுமே பெற்றிருந்தார். இது குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளினர். இவற்றுள் சில முகம் சுளிக்கும் மீம்ஸ்களும் இருந்தன. ஆனாலும் பாஜக, இந்த தேர்தல்களில் மொத்தமாக 341 இடங்களைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக 41 ஊராட்சித் தலைவர்களைப் பெற்றிருக்கிறது. (2019ல் நடைபெற்ற 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல்களில் மொத்தத்தில் சுமார் 80 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது).
ஒன்றிய, மாவட்ட அளவில் பெரிய அளவில் இடங்களைப் பிடிக்காத பாஜக, 41 ஊராட்சித் தலைவர் பதவியைப் பெற்றிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியது. ஓராண்டாக தலைநகரில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் கருத்து எதுவும் சொல்லாதவர் இந்தியப் பிரதமர். ஆனால் தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக பெற்ற 1.26% வெற்றிக்காக ‘காரிய கர்த்தாக்க ளுக்கு’ நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருக் கிறார். இது ஒரு பிரச்சார அரசியல். மோடியே வாழ்த்து சொல்கிற அளவுக்கு தேர்தலில் பாஜகவிற்கு பெரிய வெற்றி கிடைத்துவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் பிரச்சார அரசியல்!
90ம் 21ம்
தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வெற்றி, தோல்விக்கு இணையாக 90 வயது பெருமாத்தாளும், 21 வயது அனுவும் ஊராட்சித் தலைவர்களாக வெற்றி பெற்றதை ஊடகங்கள் முக்கிய செய்தியாக வெளியிட்டன. கடும் போட்டி நிறைந்த உள்ளாட்சி தேர்தல்களில் 90 வயது நிரம்பிய ஒரு மூதாட்டியும் 21 வயது நிறைந்த ஒரு இளம் பெண்ணும் வெற்றி பெற்றிருப்பது தேர்தல் ஜனநாயகத்தின் வெற்றி என்பதாக பாராட்டப்படுகின்றன. அதைபோல, தென்காசி மாவட்டம், வேங்கடம்பட்டி ஊராட்சித் தலைவராக 22 வயது சாருகலாவும் வெற்றி பெற்றிருக்கிறார். பார்த்த மாத்திரத்தில் இவை குறிப்பிடத் தகுந்த முக்கிய செய்திகள் தான். ஆண்கள் ஆதிக்கம் வகிக்கும் தேர்தல்களில் பெண்கள் இவ்வாறு வெற்றி பெறுவது சாதனை யாகக் கூட கருத இடமுண்டு. பெருமாத்தா ளுக்கும் அனுவுக்கும் இதைப் போன்று வெற்றி பெற்ற பெண்களுக்கும் நமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். முதலாவதாக, உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப் பட்டிருப்பதன் காரணமாக பெண்கள் பெரும் எண்ணிக்கையில் வெற்றிபெற முடிந்திருக்கிறது. இது வரவேற்கப் பட வேண்டியதுதான்.
அதேசமயம், பெருமாத்தாள், அனு, சாருகலா போன்றவர்களின் வெற்றிகளை உட்புகுந்து பார்ப்பதும் அவசியம் திருநெல் வேலி மாவட்டம், சிவந்திப்பட்டி ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்றுள்ள பெருமாத்தாள், வெற்றிச் சான்றிதழை பெற்றுக் கொண்டவுடன் விலை உயர்ந்த கார் ஒன்றில் அவர் அமரவைக்கப்படுவதை பார்க்க முடிந்தது. அவரது குடும்பத்தில் 7 தலைமுறையாக ஊராட்சித் தலைவர்களாக வெற்றி பெற்றுள்ளதாக பெருமாத்தாள் கூறுகிறார். அவரது மகன் தங்கப்பாண்டியன் சில முறை இந்த ஊராட்சியின் தலைவராக பதவி வகித்துள்ளார். தென்காசி மாவட்டம், தெற்குமேடு ஊராட்சியில் வெற்றிபெற்றுள்ள 21வயது அனுவின் தந்தை மூன்றுமுறை அந்த ஊராட்சியின் தலைவராக இருந்திருக்கிறார். தென்காசி மாவட்டம், வேங்கடம்பட்டி ஊராட்சியின் தலைவராக 22 வயது சாருகலா வெற்றி பெற்றிருக்கிறார். மற்றுமொரு 90 வயது மூதாட்டி கனகவல்லி சேலம் மாவட்டம், ஆட்டையன்பட்டிக்கு அருகிலுள்ள முருகன்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டிருக்கிறார். (இவர் வெற்றி பெற்றாரா என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை). ஆனால், இவரது கணவர் 20 ஆண்டுகளும் மகன் 20 ஆண்டுகளும் கனகவல்லி 5 (2006-&2011) ஆண்டுகளும் அடுத்தடுத்து இந்த ஊராட்சியின் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். கனகவல்லியின் மகன் பார்த்தசாரதி இம்முறை இந்தத் தொகுதி பெண்களுக்கு ஒதுக்கப் பட்டுவிட்டதால் தனது 90 வயது தாயை நிறுத்தியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். கனகவல்லிக்கு போட்டி வேட்பாளர் யார் தெரியுமா? இவரது மருமகள் புஷ்பா பார்த்தசாரதி!
பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு இருப் பதால், வாய்ப்பு இழந்த செல்வாக்கு பெற்ற ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குகிறார்கள். மேற்சொன்ன விவரங்களிலிருந்து இதை தெரிந்து கொள்ள முடியும். பெண்கள் போட்டியிடும் இடங்களில் எல்லாம் அந்த பெண் பெயரோடு தவறாமல் ஒரு ஆண் பெயர் இடம் பெற்றி ருக்கும். ஆண்கள் போட்டியிடும் இடங்களில் அவர் பெயரோடு ஒரு பெண் பெயர் இருக்கவே இருக்காது. ஜனநாயகத்தின் அடிப்படை கூறு, தேர்தல். ஆனால், இதில் இவரைத் தேர்ந் தெடுக்கவேண்டும் என்பதற்கு மாறாக இன்னாரது மனைவியை அல்லது மகளை அல்லது அம்மாவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ப தாகவே உள்ளது. இதுதான் மேலே சொன்ன எடுத்துக்காட்டுகள் மூலம் தெரியவருவது. பெண்கள் வெற்றி பெற்றாலும் அதிகாரம் செலுத்துவது கணவன் அல்லது மகன் அல்லது தந்தை என்பதுதான் வழக்கமாக இருக்கிறது.
பெண் உள்ளாட்சித் தலைவர்கள் இழிவு படுத்தப்படுவதற்கும் இதுதான் காரணமாக இருக்கிறது. குருமூர்த்திநாயக்கன் பட்டி (விருதுநகர்) ஊராட்சித் தலைவர் முத்துலட்சுமி தரையில் உட்கார வைக்கப்பட்டார். மண்ணம் பந்தல் (மயிலாடுதுறை) பிரியா, அவருக்காக வாங்கப்பட்ட நவீன நாற்காலியில் உட்கார அனுமதிக்கப்படவில்லை. தெற்குத்திட்டை (கடலூர்) ஊராட்சித் தலைவர் எஸ். ராஜேஸ்வரி தரையில் உட்கார வைக்கப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம், ஆத்துப்பாக்கம் ஊராட்சித் தலைவர் வி.அமிர்தம் 2020 ஆகஸ்ட் 15 அன்று தேசியக் கொடி ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. இது பெண்களுக்கு எதிரானது மட்டுமின்றி அதேசமயம் தலித்துகளுக்கு எதிரானது. பெண்ணாயிருப்பவர் தலித்தாயிருந்துவிட்டால் இரட்டைப் பாகுபாடு (இரட்டைச் சங்கிலி). இத்தகைய பாகுபாடுகள் அதிமுக ஆட்சியில் நடந்தவை. உண்மைதான். மேலவளவு முருகேசன் ஊராட்சித் தலைவராக போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பதற்காகவே அதிமுக ஜெ. ஆட்சியில், அவர் உட்பட ஆறு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். அந்த கொலைவழக்கில் தண்டிக்கப்பட்ட 13 பேர்களை அதிமுக அரசு ‘நன்னடத்தை’ என்ற பேரால் ஈபிஸ்&-ஓபிஎஸ் ஆட்சி விடுவித்து விட்டது!
ஆனால் அதிமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட்டு, திமுக ஆட்சி வந்தபிறகும் இந்த பாகுபாடு நீடிக்கிறது. 75 வது சுதந்திரதினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் தூத்துக்குடி மாவட்டம், வில்லிசேரி, அரியநாய கிபுரம் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் தலித் ஊராட்சித் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்ற அனுமதிக்கப்படவில்லை! இதில் பலர் பெண்கள். வெகு கம்பீரமாக முதலமைச்சர் ஸ்டாலின், கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைக்கும் உரிமையை அப்போதைய முதல்வர் கருணாநிதி பெற்றுத் தந்தார் என்பது சரித்திரம். அத்தகைய திமுக ஆட்சியிலும்கூட, பெண்களும் தலித்துகளும் ஊராட்சிகளில் கொடியேற்றும் உரிமையை அனுபவிக்க முடியவில்லை! ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, மேலே சொன்ன பாகுபாடுகளும் ஒடுக்கு முறைகளும் பொதுவெளியில் கவனத்துக்கு வந்தவை. சுருங்கச்சொன்னால், உள்ளாட்சி அமைப்புகள் பெண்கள், தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறை களமாக இருக்கிறது என்பதுதான். அக்டோபர் 22 அன்று பதவி ஏற்பு. சில பஞ்சாயத்துகளில், தலைவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி உறுப்பினர்கள் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துள்ளனர். இது பாப்பாபட்டி, கீரிப்பட்டியை நினைவு படுத்துவதாகவே உள்ளது. பெண்\தலித் ஊராட்சித் தலைவர்கள் நாற்காலியில் உட்கார அனுமதி மறுப்பது, தேசியக் கொடி ஏற்றுவதை தடுப்பது, பதிவேடுகள்\கணக்கு வழக்குகள் தர மறுப்பது உள்ளிட்ட 13 வகையான பாகுபாடுகள் கடைப் பிடிக்கப்படுவதாக, தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ள திரு பழனித்துரை, கூறுகிறார்.
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த செல்லம்மாள் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். வெற்றி பெற்ற செல்லம்மாளிடமிருந்து தென்காசி மாவட்ட திமுக செயலாளர், ஒரு கோடி ரூபாய் கேட்டிருக்கிறார். பண வசதி இல்லாத, செல்லம் மாள் பதவியை உதறிவிட்டார். ரோஷமுள்ள பெண்மணி!. வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராக வள்ளி மலை வேல்முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டி ருக்கிறார். பெங்களூருவிலிருந்து தொழில் செய்யும் இவரைப்பற்றி எங்களுக்கு தெரியாது என்று உள்ளூர் திமுகவினர் கூறுகின்றனர். இந்த முருகனுக்கு 22 கோடி சொத்து இருக்கிறதாம். இவர், கழுத்திலும் கைகளிலும் தேர்வடம்போல் தங்கச்சங்கிலி, கைவளையத்துடன் திரிவாராம். இவரது அரசியல் தகுதி, மக்களவை தேர்தலில் கதிர்ஆனந்துக்கும் சட்டப்பேரவைதேர்தலில் துரைமுருகனுக்கும் தேர்தல் பணியாற்றியதுதான் என்கிறார்கள் திமுகவினர்.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஊராட்சியின் தலைவராக லக்ஷ்மி பங்காரு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ33 கோடி. இவருக்கு மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்த இவரது மகனது சொத்து மதிப்பு ரூ 50 கோடி; லட்சுமியைச் சார்ந்தவர்களின் சொத்துமதிப்பு ரூ66 கோடி (சார்ந்தவர் என்பது பங்காரு அடிகளாக இருக்கலாம்). உள்ளாட்சித்தேர்தல்கள் இன்னமும் கூட மிட்டா மிராசுகளின் தேர்தலாகவே இருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் சில எடுத்துக் காட்டுகள். மிட்டா மிராசுகளுக்கு கூடவே சில கட்சிகளின் பெருந்தலைவர்கள் என்பது புதிய சேர்க்கை. சாமான்யர்கள் வாக்களிப்பார்கள், செல்வச்சீமான்கள் வெற்றி பெறுவார்கள் என்பது விதியாக இருக்கிறது. விதவிலக்குகளும் உண்டு. விதிவிலக்குகள் விதியாக வேண்டும்.
அதிகாரப் பகிர்வு\கிராம சபைக் கூட்டங்கள்
உள்ளாட்சி அமைப்புகளுக்கு 29 பிரிவுகளின் கீழ் அதிகாரப்பகிர்வு வழங்கப்பட்டிருப்பதாக சட்டம் சொல்கிறது. ஆனால், இன்னும் அதிகாரப்பகிர்வும் நிதிப்பகிர்வும் ஒன்றிய, மாநில ஆட்சிகள், மாவட்ட ஆட்சித் தலை வர்களின் கைகளில்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிகாரப் பகிர்வு, நிதிப் பகிர்வு வழங்குவது தொடர்பாக இதுவரை மூன்று கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜெயின் கமிட்டி, (1996), கோ.சி.மணி கமிட்டி (1997), மு.க.ஸ்டாலின் கமிட்டி (2007). இந்த மூன்று கமிட்டிகளும் ஏராளமான பரிந்துரைகளை கொடுத்துள்ளன. ஆனால், அதிகாரப் பகிர்வும் நிதிப்பகிர்வும் உள்ளாட்சிகளுக்கு இன்னும் வந்து சேரவில்லை. இருக்கும் சில்லரை அதிகாரமும் நிதியும் உள்ளாட்சிக்கு வெளியே உள்ள அதிகாரமிக்க சக்திகளாலும் மக்களை மறந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளாலும் வாரி சுருட்டிக் கொள்ளப்படுகின்றன. இந்த நிலமை மாற்றப்படவேண்டும். ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்புக்கு எதிராகப் போராடும் மாநில அரசு உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்துக்காகவும் போராட வேண்டும், தனக்கிருக்கும் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும். முக்கியமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளை செயலற்றதாக்கும் அதிகாரத்துவ முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
உள்ளாட்சி அமைப்பு செயல்பாட்டில் கிராமசபைக்கு முக்கிய பங்கு இருப்பதாக பஞ்சாயத்ராஜ் சட்டம் சொல்கிறது. ஆனால், நடைமுறையில் அது செயலற்றதாக ஆக்கப்பட்டி ருக்கிறது. தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், உணவுப் பாதுகாப்பு சட்டம், கிராம குடிதண்ணீர் வழங்கும் திட்டம், வறுமைக்கோடு பட்டியல் தயாரிப்பு போன்றவை ஊராட்சி அமைப்புகளால் செயல்படுத்தப்பட வேண்டும்; கிராம சபைகளால் முடிவுசெய்யப்பட வேண்டும் என்றிருந்தாலும் இவை அனைத்தும் மேலிருந்தே முடிவுசெய்யப்படுகின்றன. வேறு வகையில் சொல்வதானால் ஒன்றிய, மாநில ஆட்சிகளின் அதிகாரத்துக்கு ஏற்ப (ஒற்றை அதிகாரத்தின் ஊரக அலகாக) செயல்படுவதுதான் உள்ளாட்சி ஜனநாயகம் (வேர்க்கால் மட்ட ஜனநாயகம்) என்பதாக மாற்றப்பட்டிருக்கிறது. சமூகத் தணிக்கை செய்யும் அதிகாரம் கிராமசபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், எந்த ஊராட்சியிலும் அதுபோன்ற சமூகதணிக்கைகள் நடந்ததாக தெரியவில்லை. அதுபோன்ற கோரிக்கைகளை எழுப்பும் இடதுசாரி முயற்சி களும் கூட பல்வேறு வகையில் முறியடிக்கப் படுகின்றன.
அதிமுக ஆட்சியின் போது கிராமசபை கூட்டங்கள், கொரோனா என்ற பெயரால் முடக்கி வைக்கப்பட்டிருந்தன. அப்போதைய எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் கிராமசபைக் கூட்டங்கள் நடத்துவதை ஒரு அரசியல் அணிதிரட்டல் உத்தியாக பயன்படுத்திக் கொண்டார். அவர் முதல்வரான பிறகு கடந்த அக் 2ம் தேதி பாப்பாபட்டி, கீரிப்பட்டி கிராமசபைக் கூட்டங்களுக்குச் சென்று கிராமசபைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருப்பதாக காட்ட முற்பட்டார். ஆனால், கிராமசபை குறித்து ஆய்வுநடத்திய அறப்போர் இயக்கம், பல புள்ளிவிவரங்களை தந்திருக்கிறது. 75% மக்கள், தங்களுக்கு கிராமசபைக் கூட்டம் நடக்கும் இடம், நேரம் தெரிவிக்கப்படுவதில்லை என்கின்றனர். கூட்ட நடவடிக்கைகளை பதிவுசெய்யும் தீர்மானக் குறிப்பேடு கொண்டுவரப் படுவதில்லை என்று 43% பேர் கூறுகின்றனர். கூட்டத்தில் கலந்துகொள்வோரின் கோரிக்கைகள் அல்லது குறைகள் தீர்மானக் குறிப்பேட்டில் பதியப் படுவதில்லை என்று 59% பேர் கூறுகின்றனர். ஊராட்சி வரவு, செலவு விவரங்கள் காட்டப் படுவதில்லை என 79% பேர் கூறுகின்றனர். செய்தி ஏடுகளில் (டைம்ஸ் ஆப் இந்தியா -28-.10-.2021) வந்துள்ள இந்த விவரங்கள் நிச்சயமாக ஆட்சியாளர்களின் கண்களில் பட்டிருக்கும்.
உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து கருத்துக் கூறிய முதல்வர், 5மாத ஆட்சிக்கு மக்கள் தந்த நற்சான்று பத்திரம்தான் தேர்தல் முடிவுகள் என்றார். உள்ளாட்சியில் நல்லாட்சி காண மக்கள் தந்த தீர்ப்பு என்று சில ஏடுகள் கூறின. உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவிவகித்தவர் முதலமைச்சராகி இருப்பது நல்லதொரு வாய்ப்பு. உள்ளாட்சியில் நல்லாட்சியைக் கொண்டுவர இதைவிட வேறு ஒரு வாய்ப்பு கிடைக்காது. தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்பு களில் பெரும்பான்மை பெற்றுள்ள திமுக ஆட்சி பின்வருவனவற்றை செய்தாக வேண்டும்.
வரவிருக்கும் நகர்ப்புர உள்ளாட்சித் தேர்தல்களில் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடத்திட வேண்டும். மொத்த உள்ளாட்சிப் பதவிகளில் 74% ஆக உள்ள பெண்கள், தலித்துகளின் அச்சமற்ற சுதந்திர செயல்பாட்டை உறுதிசெய்ய வேண்டும். சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் சக்திகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். நிலம், வேலை வாய்ப்பு, மருத்துவம்,கல்வி, வீட்டுமனை, வீடு, பொதுவிநியோகம், அடிப் படை வசதிகள், சாதிச் சான்றிதழ் வழங்குதல் ஆகியவை ஊராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இதற்கேற்ப அதிகாரப் பகிர்வும் நிதிப் பகிர்வும் ஊராட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டும். உள்ளூர் ஜனநாயகத்தின் ஆணி வேரான கிராமசபைகளை சமூக தணிக்கை உள்ளிட்ட மக்கள் மேற்பார்வை அமைப்புகளாக 100% செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். எந்தவொரு பெரும் திட்டங்களுக்கும் கிராம சபையின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட வேண்டும். ஊராட்சித் தீர்மானங்களை ரத்து செய்யும் மாவட்ட ஆட்சியருக்குள்ள அதிகாரம் நீக்கப்பட வேண்டும்.
அப்பொழுதுதான் உள்ளாட்சியில் உண்மை யான ஜனநாயகம் மலரும். 90 வயதுக்காரரும் 21 வயதுக்காரரும் வெற்றி பெறுவதே ஜனநாயகம் ஆகிவிடாது. வேர் வரை ஜனநாயகம் மலர வேண்டும். அதுதான் வேர்க்கால் மட்ட ஜனநாயகம் அங்கு ஜனநாயகத்தை மறுப்பவர் களுக்கு, சிதைப்பவர்களுக்கு இடமிருக்கக் கூடாது. அப்போதுதான் உள்ளாட்சியில் நல்லாட்சி மலரும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)