அக்டோபர் 21, 2021 அன்று, கோவிட்-19க்கான 100வது கோடி தடுப்பூசி போடப்பட்டது. தனது தலைமையின் கீழ் இந்தியா பெற்ற முக்கியமான "வரலாற்றுச் சிறப்புமிக்க" தடுப்பூசிகளின் வெற்றி இது என, தனது உரை மற்றும் செய்தித்தாள் கட்டுரையில், பிரதம மந்திரி நரேந்திர மோடி கூறினார்.
கோவிட்-19 விஷயத்தில் மிகவும் மோசமான தோல்விக்கு மோடியே காரணமானவர். முதல் அலையின் முழு அடைப்பின் போதும், இரண்டாவது அலையின் நெருக்கடியிலும் லட்சக்கணக்கான இந்தியர்களின் உயிரை பலியிட்டவர். இந்தியா மற்றும் வெளிநாடுகளில், அவரின் இந்த பிம்பத்தை சரி செய்ய, அவர் ஒரு "தடுப்பூசி மனிதர்" என்ற பிம்பத்தை கட்டமைக்க, இந்தத் தடுப்பூசி தம்பட்டத்தின் வாயிலாக, மோடியினுடைய அரசாங்கம் முயற்சிக்கிறது. கங்கை நதியில் மிதந்து சென்ற பிணங்கள் மற்றும் மூச்சுக் காற்றுக்காக, மூச்சுத் திணறிய மக்கள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக் குறையினால் இறந்து கொண்டிருந்த மக்களின், பயங்கரப் படங்கள் இன்றுவரை பொது நினைவைத் துன்புறுத்துகின்றன என மோடிக்கு தெரியும். "மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகிக்கப் படாத காரணத்தினால் கோவிட் நோயாளிகள் இறக்கிறார்கள். இது ஒரு குற்றச்செயல் ஆகும். மேலும் இது ஒரு இனப்படுகொலை போன்றதாகும்" என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியது. மே 5 2021 அன்று, உத்தரபிரதேச மற்றும் மத்திய பிஜேபி அரசாங்கங்களின் மீது இந்தக் கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியது. உத்தரப் பிரதேசத்தில், மிக விரைவில் தேர்தல் நடக்க இருக்கிறது. ஆக, அதனுடைய குற்றங்களால் விளைந்த துயர நினைவுகளை, தடுப்பூசிகளின் விஷயத்தில் "வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி" என்று ஊதிப் பெரிதாக்குவதன் மூலம், மோடி அரசாங்கம் மாற்றுவதற்கு முனைகிறது.
ஆனால் இந்த மிகை விளம்பரங்கள், விமர்சனத்திற்கு முன்பு நிலைத்து நிற்காது. மூன்று மாதங்களுக்குள், 100 கோடி தடுப்பூசிகள் என்னும் இலக்கை எட்டுவோமென மோடி அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருந்தது. மாறாக, அதற்கு 9 மாதங்கள் ஆகிவிட்டன. மேலும், 2021 இறுதிக்குள், அனைத்து வயது வந்தோருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் அந்த இலக்கை எட்டுவதற்கு இன்னும் நீண்ட தூரம் போக வேண்டும்.
இந்தியாவில், 18 மற்றும் அதற்கு அதிக மான வயதுடையவர்களுக்கு மட்டுமே கோவிட்&19 தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால், மற்ற பல நாடுகளிலோ, 12 மற்றும் அதற்கு அதிகமான வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதன் மூலம், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், தடுப்பூசி பெற தகுதியானவர்களின் சதவிகிதம் ஏற்கனவே குறைந்துவிட்டது. ஏற்கனவே வரம்புக்குட்பட்ட, தகுதியான மக்கள்தொகையில் 31% பேருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. அதேநேரம் வெறும் 75% பேருக்கு, முதல் தடுப்பூசி மட்டுமே போடப்பட்டிருக்கிறது.
மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, தனது மோசமான செயல்பாட்டுக்கு, தன்னுடைய அதீத மக்கள் தொகையின் அளவை சாக்குப்போக்காக இந்தியா சொல்கிறது. ஆனால் இந்த சாக்குப் போக்கும் கூட, ஆதரவை பெற முடியாது. இந்தியாவை விட, மிக அதிக மக்கள் தொகை கொண்ட சீனா, தன்னுடைய மக்கள் தொகையில் 71% பேருக்கு, முழுவதுமாக தடுப்பூசி போட்டிருக்கிறது.
இந்தியா, தேவையான தடுப்பூசிகளை வாங்குவதற்காக, ஜனவரி வரை காத்திருந்தது, தடுப்பூசி இயக்கப் போக்கு துவங்க வேண்டிய ஐந்து நாட்களுக்கு முன்னதாகத் தான் தடுப்பூசிகளை வாங்கும் முயற்சிகளை மேற்கொண்டது. மற்ற நாடுகளைப் போல, முன்னதாகவே போதுமான அளவிற்கு தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கான முன் உத்தரவாதங்களை மேற்கொள்ளவில்லை. மேலும், மக்கள் தொகையில் 20 சதம் பேருக்கு முதல் தடுப்பூசி மட்டும் போடுவதற்கான அளவு மட்டுமே, கொள்முதல் செய்தது. தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதில் நிகழ்ந்த, இந்த கால தாமதத்தினால் கடும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் இந்திய மக்கள் கொடிய கோவிட்-19 இன் இரண்டாவது அலையின் பாதிப்புக்கு ஆளாகினர்.
அனைத்து இந்தியர்களும் தடுப்பூசியை இலவசமாக பெற்றார்கள் என்று மோடி கூறுவது பொய்யாகும். உண்மையில், பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 தடுப்பூசிகள் இலவசமாக கொடுக்கப்பட்டன. அதே நேரத்தில், இந்தியா போன்ற சில நாடுகளில், மக்கள் தடுப்பூசிக்குப் பணம் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. தடுப்பூசி விற்பனையாளர்களிடம், மாநிலங்கள் தாங்களாகவே வியாபாரம் பேசி ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள மோடி விட்டுவிட்டார். அதன் விளைவாக, தடுப்பூசி விலையில் முற்றிலும் கட்டுப்பாடற்ற நிலை உருவானது. உச்சநீதிமன்றம் தலையிட்டு, தடுப்பூசி விலைகளை ஓரளவாவது கட்டுக்குள் வைக்க, அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தது.
தடுப்பூசி போடுவதில் பிரபலமானவர் களுக்கு சிறப்பு சலுகை கொடுக்கப்படவில்லை என்ற மோடியின் கூற்றும் பொய்யாகும். தனியார் மருத்துவமனைகள், ஒவ்வொரு மாதமும் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 25% கொள்முதல் செய்வதற்கு, அவருடைய அரசாங்கம் அனுமதி அளித்தது. இதன் மூலம், அதிக வசதி படைத்தவர்கள் தனியார் மையங்களில் தடுப்பூசிகளை வாங்கிப் போட்டுக்கொண்டனர். அதே நேரத்தில், ஏழைகள் அரசாங்க மையங் களின் வரிசைகளில் நிற்க வேண்டியிருந்தது.
தடுப்பூசிக் கொள்முதலுக்கு காலதாமதம் செய்து, கடுமையான பற்றாக்குறை ஏற்படுவதற்கு வழிகோலியது; ஏப்ரல் 2021 கும்பமேளா போன்ற பெருவாரியான மக்கள் அணிதிரள்வதற்கு ஊக்குவித்தது; இந்து பக்தர்கள் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற தவறான தகவல்களை பரப்பியது; கும்பமேளாவில் செய்த பரிசோதனை தகவல்களை மாற்றிய மைத்ததன் மூலம் ஒரு பொய்யான பாதுகாப்பு உணர்வை உருவாக்கியது; மற்றும் மருத்துவமனைகளில் போதுமான அளவு ஆக்சிஜன் கையிருப்பை உறுதிப்படுத்த தவறியது போன்றவைகளால் பிரதம மந்திரி மோடியும், பிஜேபியின் மற்ற தலைவர்களும் இரண்டாவது அலையின் அளவு, தன்மை மற்றும் கொடூரத்தை அதிகப் படுத்தியதற்கு, தனிப்பட்ட முறையில் பொறுப் பாளிகள் ஆவர். அன்றிலிருந்து, பிரதம மந்திரி மோடி கோவிட்-19 இரண்டாவது அலையின் மரணங்கள் பற்றிய தகவல்களைத் திட்டமிட்டு மறைக்கிறார். உண்மையான எண்ணிக்கை 40 லட்சத்திற்கு அருகே இருக்கும் போது வெறும் 4 லட்சம் பேர் இறந்தனர் எனச் சொல்கிறார். இன்றும் கூட கோவிட்-&19ஆல் அனாதைகள், துக்கத்தில் உள்ள இணையர்கள் வாழ வழியின்றி உள்ளனர். இதனை அரசாங்கம் ஒப்புக் கொண்ட தற்கான தகவல் எதுவும் கிடைக்காதவர்களுக்கு, உதவி மட்டும் எவ்வாறு கிடைக்கும். முதல் அலையின் போது, பிரதம மந்திரி மோடியின் குரூர, திட்டமிடப்படாத பொது முடக்கத்தின் காரணமாக, எண்ணிலடங்கா புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்தியா இன்னும் அதிகமான வேலையில்லா திண்டாட் டத்திற்குள் தள்ளப்பட்டது. கோவிட்-19 இன் மோசமான தோல்வி பற்றிய உண்மைக் கதையை, அவரின் செல்ல ஊடக நிறுவனங்களை பயன்படுத்தி, தடுப்பூசிகளின் வெற்றி என்னும் புனைகதையின் மூலமாக, மாற்றியமைக்க பிரதம மந்திரி மோடி விரும்புகிறார்.
உலகளாவிய அறிஞர்களின் குழு ஒன்று, உலகத் தலைவர்கள் அடங்கிய "குற்றவாளிகளின் பட்டியல்" ஒன்றை தயாரித்தது. அது, கோவிட்-19 குளறுபடி கொள்கைகளால், தேவையின்றி மிகப்பெருமளவில் நடந்த, தவிர்க்கக்கூடிய மரணங்களுக்கு காரணமான, உலகத் தலைவர் களின் பட்டியலாகும். பிரேசிலின் ஜாயிர் போல்சொனாரோ, பெலாரஸ்ஸின் அலெக்சாண்டர் லூகாஷேன்கோ, அமெரிக்காவின் டோனால்ட் டிரம்ப் மற்றும் மெக்ஸிகோவின் ஆண்ட்ரஸ் மேனுவல் லோபெஸ் ஓப்ராடோர் உள்ளிட்ட தலைவர்கள் அடங்கிய பட்டியலில், நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். கொடிய உயிரிழப்புகளுக்கு இந்தத் தலைவர்கள் பொறுப் பேற்றாக வேண்டும்.
கோவிட்-&19 குளறுபடி கொள்கைகளால், ஆறு லட்சம் பிரேசில் நாட்டவர்களின் மரணத்திற்கு காரணமானவர் அதிபர் ஜாயிர் போல்சொனாரோ. அந்நாட்டின் தேசிய பேரவை உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று அவர் மீது 1200 பக்கங்கள் கொண்ட அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில், அவர் "மனித இனத்திற்கு எதிராக குற்றமிழைத்தவர்" என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனை நாம் நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும். பாரத் பயோடெக்கின் முன்னாள் வியாபார பங்காளி பிரிசிசா மெடிகாமெண்டோவின் இரண்டு உயரதிகாரிகளையும், இந்த அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. இவர்கள், மோசடி மற்றும் போலி ஆவண குற்றங்களோடு சேர்த்து "அமைப்பாக்கப் பட்ட குற்றச்செயல்களை நடத்தினர்" என்று இந்த அறிக்கை கூறுகிறது. இந்தியாவிலும் கூட, மோடி தனது செயல்களுக்கு சுய சான்றிதழ் வழங்கிக் கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்கிறார். அவரின் அந்த முயற்சிகளை அம்பலப்படுத்தி, முறியடிக்க வேண்டும். அவருடைய பொய்களை உரக்கச் சொல்ல வேண்டும். அவரது ஒன்றிய அரசாங்கம் அதேபோல சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்கள் கோவிட்-&19 மற்றும் முடக்ககால பேரழிவுகளுக்கு பொறுப்பேற்க வலியுறுத்த வேண்டும். ஏனெனில் இவைகள் "மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள்" ஆகும்.
எம்எல் அப்டேட் தலையங்கம்
26 அக். - நவ.1 ஆகஸ்ட் 2021
தமிழாக்கம் - செந்தில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)