தலையங்கம்
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வதற்கும் மோடி அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாதாம். அமெரிக்காதான் காரணம் என்று அண்மையில் ஒன்றிய அரசின் ரயில்வே மற்றும் சுரங்கத்துறை இணை அமைச்சர் ராவ் சாகேப் தன்வே சொல்லி யிருக்கிறார். பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை மோடி அரசு குறைத்துள்ளது, மாநில அரசுகள்தான் குறைக்கவில்லை என்று சொல்லும் இந்த அமைச்சர், ஆனாலும் விலை உயர்வுக்குக் காரணம் அமெரிக்கா என்கிறார். இன்னொரு பாஜக அமைச்சர், மாட்டுச் சாணம் மற்றும் மூத்திரத்தால் இந்தியாவின் பொருளாதாரம் உயரும் என்கிறார். ‘சக்தி 2021’ என்ற பெயரில் பெண் கால்நடை மருத்துவர்களின் மாநாட்டில் மத்தியப்பிரதேச மாநில பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசியிருக்கிறார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அனைத்து அத்தியா வசியப் பொருள்களின் விலையும் தன்னாலேயே உயர்ந்து விடும் என்பதை பொருளாதார மேதை வந்து சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. அப்படியிருக்க, மோடி ஆட்சிக்கு வந்தபின்னர் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்தது மட்டுமின்றி, அந்த விலையை அன்றாடம் நிர்ணயிப்பதற்கான அனுமதியை அம்பானிக்குக் கொடுத்ததே இந்த மோடி அரசுதான். பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.37, டீசலுக்கு லிட்டருக்கு ரூ.42 என கலால் வரியை உயர்த்திவிட்டு சமீபத்தில் நடந்து முடிந்த இடைத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து பெட்ரோலுக்கு ரூ.5ம் டீசலுக்கு ரூ.10ம் குறைத்து விட்டோம் என்று மோடியின் ஒன்றிய அரசு மோசடி செய்கிறது. அது மட்டுமின்றி, கலால் வரி வசூலிப்பில் மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய தொகையைத் தொடர்ந்து தர மறுக்கும் மோடி அரசு, மாநில அரசுகள் வரி குறைப்பு செய்யவில்லை என்று அப்பட்டமாகப் பொய் பேசுகிறது. அது மட்டுமின்றி ரூ.2.87 லட்சம் கோடிக்கு பல்வேறு வகைகளில் வரி வசூலிப்பதைத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒன்றிய அரசு, ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாநிலங்களுக்கான பங்குகளைத் தர மறுக்கிறது.
இந்திய மக்களுக்காக ஆட்சிப்பொறுப்பை என்னிடம் தாருங்கள் ஐம்பதே நாட்களில் நான் அனைத்தையும் மாற்றிக் காண்பிக்கிறேன் என்று பிரதமராக வருவதற்குமுன், வாக்குக் கேட்டு வந்தபோது கூறினார் மோடி. இப்போது பல ஐம்பது நாட்கள் கடந்துவிட்டன. மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன!. வணிகர்கள், நடுத்தர மக்களெல்லாம் ஓட்டாண்டிகளாக மாறிவிட்டார்கள். எளிய மக்கள் எல்லாம் ஏதுமற்றவர்களாக மாறியுள்ளார்கள். இன்னொருபுறம் அதானியும் அம்பானியும் உலகப் பணக்காரப் பட்டியலில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் பஞ்சத்தில் திண்டாடிக்கொண்டிருக்கும்போது இந்த நிலைமைகள் பற்றி யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதில் மட்டும் அக்கறையாக உள்ளது மோடி அரசு. பொது மக்கள், வழக்கறிஞர்கள், அறிவாளிகள், மனித உரிமை ஆர்வலர்கள் என்றால் அவர்கள் மீது உபா சட்டம் பாயும். அதுவே நீதிபதிகள் என்றால், இடமாற்றம், பதவி பறிப்பு, கொலை மிரட்டல், மர்ம மரணம் என்று போகும். தேர்தல்கள் நெருங்கும்போதெல்லாம் ஆங்காங்கே குண்டுகள் வெடிக்கும், எப்படி என்று தெரியாமலேயே தீவிரவாதிகள்! கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும். இஸ்லாமியர்கள், தலித்துகள் தாக்கப்படுவார்கள். கலவரங்களை முன்னின்று நடத்துவார்கள் சங்கிகள். பழியை மற்றவர்கள் மீது பயமின்றி போடுவார்கள். இப்படி உலகையே ஏமாற்றும் இவர்களை வீழ்த்துவோம் விரைவிலேயே!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)