திருச்சி மாவட்ட சமூக, பொருளாதார கள ஆய்விலிருந்து...

                                                                                       கே.ஜி.தேசிகன்

கட்சி மறுசீரமைப்பு இயக்கத்தின் பகுதியாக திருச்சி மாவட்டம் திருச்சி மாநகராட்சி வார்டு 62, துவாக்குடி நகராட்சி, மணப்பாறை நகராட்சி, வார்டு 1, சமுத்திரம் ஊராட்சி, புறத்தாக்குடி கிராமம், என் பூலாம்பட்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திருச்சி மாநகராட்சி வார்டு 62 -

இங்கு வறிய தலித் கிறிஸ்தவ மக்கள் குடியிருப்புகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலும் இவர்கள் கட்டிட வேலை, எலக்ட்ரிக்கல் வேலை, இதர அமைப்புசாரா வேலைகளில் ஈடுபடுகின்றனர். மாதம் ரூபாய் 7000 முதல் 15,000 வரை சம்பாதிக்கின்றனர். இவர்கள் பெற்றோர்கள் வசித்து வந்த சொந்த வீடுகளில் வசிக்கின்றனர். பெரும்பாலும் ஓட்டு வீடுகள். திருமணம் ஆகும்போது இருக்கின்ற இடத்தை பிரித்துக் கொள்கின்றனர். இடத்துக்கு பட்டா வைத்திருக்கின்றனர். இவர்களுக்கென்று தனி தேவாலயம் உள்ளது. குழந்தைகள் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி அல்லது அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். கொரோனா காலத்தில் கல்வி தொலைக்காட்சி வழியிலான கற்பித்தல் பயனுள்ளதாக இருந்ததாக சொல்கிறார்கள். ஒரு குடும்பத்திற்கு ஒரு ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறார்கள். வீட்டில் எரிவாயு, தொலைக்காட்சி, கேபிள் உள்ளது. ரேஷன் பொருட்களைத் தான் உணவுக்குப் பயன்படுத்துகிறார்கள். ரேஷன் பொருட்கள் இல்லை என்றால் பெரும் துன்பம் தான் என்பதை ஒருமித்த கருத்தாக சொல்கிறார்கள். கல்லூரி படித்தவர்கள் யாரும் இல்லை. சில குடும்பங்களில் பெண்களும் வேலைக்குச் செல்கிறார்கள். ஆண்களின் வருமானத்தில் பெரும்பகுதி சாராயக் கடைக்கு சென்று விடுகிறது. குடிநீர் குழாய் இணைப்பு உண்டு. நல்லது கெட்டதுக்கு குழுக் கடன் மிகப் பெரிய ஆதாரமாக உள்ளது. அதனால் எப்பாடுபட்டாவது முறையாக தவணை கட்டி விடுகிறார்கள். யாரிடமும் விவசாய நிலம் இல்லை. இந்த பகுதி மாநகராட்சியோடு சில வருடங்கள் முன்பு இணைக்கப்பட்டதால் 100 நாள் வேலை பறிபோய் விட்டது என பெண்கள் வருத்தப் படுகிறார்கள். இந்தப் பகுதியில் மாநகராட்சி புதை சாக்கடை பணி நடைபெற்று வருவதால் வருடக்கணக்கில் குண்டும் குழியுமான சாலைகள் உள்ளன. சாலைகளை சரி செய்ய நிர்வாகத்துக்கு எதிரான போராட்டத்திற்கு வர தயாராக இருப்பதாகச் சொன்னார்கள். இகக(மாலெ) மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு கொடுத்து சரி செய்யவில்லை என்றால் மறியல் என்று அறிவித்ததற்கு பிறகு தற்காலிகமாக பிரதான சாலை சீர் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகளில் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வைத்திருக்கிறார்கள். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவத்திற்கு பயன்படுத்து கின்றனர். மாற்று அரசியலுக்கான தேடல் இல்லை என்றே சொல்லலாம். மகளிருக்கான இலவச பேருந்து சேவை பற்றி நேர்மறை கருத்துக்களையே கூறினார். கொரோனா விழிப்புணர்வு உள்ளது, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் மிகக்குறைவே. எல்லா வீடுகளிலும் கழிப்பறைகள் உள்ளன. அரசாங்கத்தின் இலவச திட்டங்களைப் பெறுவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் துணை நிறுவனங்களும் இந்தப் பகுதியில் சில உள்ளன.ஒரு உரிமையாளரை சந்தித்தோம். ஜிஎஸ்டி வரி விதிப்பை வரவேற்றார். வரி ஏய்ப்பை தடுக்க நல்ல முயற்சி என்றார். பில் போடாமல் வணிகம் செய்பவர்கள் எதிர்க் கின்றனர் என்றார். பெல் ஆலையில் ஆர்டர் எடுப்பதற்கான டெண்டர் முறை ஷேர் மார்க்கெட் போல் ஆகிவிட்டது. டெண்டர் இணைய வழியில் நடைபெறுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் துவங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடிந்துவிடும். எப்படியாவது ஆர்டரை எடுக்க வேண்டும் என்பதற்காக துணை நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விலையை குறைத்து விட்டு அந்த ரேட்டுக்கு வேலையை செய்ய முடியாமல் திண்டாடுகிறார்கள். மோடியின் சிறு குறு தொழில்களுக்கான பணமுடிப்பு என்று எதுவும் யாருக்கும் கிடைக்கவில்லை என்றார். அவரும் ஒரு தொழிலாளியாக மெஷினில் வேலை செய்கிறார்.

துவாக்குடி நகராட்சி -

இதுவும் வறிய உழைக்கும் மக்கள் வசிக்கும் பகுதி. பலசரக்கு கடையில் தானியங்களை சுத்தம் செய்து பேக்கிங் செய்யும் பெண்களை சந்தித்தோம். மாதம் அதிகபட்சம் ரூபாய் 7000 சம்பாதிக்கிறார்கள் 10&12 மணி நேர வேலை. ரேஷன் பொருட்களைதான் பயன்படுத்து கிறார்கள். அரசாங்க மருத்துவமனை சுகாதாரமாக இருப்பதாகவும் வசதிகளில் முன்னேற்றம் இருப்பதாகவும் கூறுகிறார்கள். டாஸ்மாக் கடைகள் ஒன்றை ஒழித்தால் போதும் என்கிறார்கள். குடும்ப வன்முறையில் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். டாஸ்மாக் காரணமாகவே கணவனைப் பிரிந்து குழந்தை களை வைத்துக்கொண்டு  கஷ்டப்பட்டுக் கொண் டிருப்பவர்களும் உண்டு.நலவாரியம் சென்று சேராதவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.பெல் துணை நிறுவனங்களில் சிறு சிறு காண்ட்ராக்ட் எடுத்து முன்னேறி விடலாம் என நினைத்தவர்கள் கடன் பொறியில் சிக்கி தவிக்கிறார்கள். குழு கடன் தான் பெரிதும் உதவுகிறது என்கிறார்கள். வசூலிப்பில் கெடுபிடி இல்லை என்று சொல் கிறார்கள். இந்தப் பகுதி மக்கள் பெரும்பாலும் வாடகை வீட்டிலும் மிக மோசமான வாழ்விடங்களிலும் இருக்கிறார்கள். நகைகளை அடகு வைத்து நெருக்கடிகளைச் சமாளித்துக் கொள்கிறார்கள். அனைவரும் கழிப்பறை பயன்படுத்துகிறார்கள். அடுத்த தலைமுறை கல்லூரிப் படிப்புக்கு சென்றிருக்கிறார்கள். இப்பகுதியில் அனைத்து சமூக மக்களும் கலவையாக உள்ளனர். இங்குதான் அனுமன் சேனா அமைப்பு என்று சொல்லிக்கொண்டு ஒரு கும்பல் ஆய்வுக்கு சென்றவர்களை மதமாற்றம் செய்ய வந்திருக்கிறீர்களா? என்று கேட்டு, யார் மதம் மாற்ற வந்தாலும் வெட்டுவோம் என்றார்கள். நாங்கள் கம்யூனிஸ்டுகள் என்று சொன்ன பிறகு நெற்றியில் எந்த அடையாளமும் இல்லாததால் சந்தேகம் வந்ததாக கூறினார்கள்.

மணப்பாறை நகராட்சி வார்டு 1 -

   விடத்தலாம்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம். சாதிக்கு ஒரு தெரு என தனித்தனியாக இருக்கிறது. மக்கள் கடும் வறுமையில் இருக்கின்றனர். கடை கன்னிகளில் வேலை செய்கின்றனர். மருத்துவத்துக்கு மருந்துக் கடைகளில் மாத்திரை வாங்கிக் கொள்கின்றனர். பெரும்பாலும் சிறிய சொந்த வீடு உள்ளது. ஆனால், குடும்பம் பெரிதானாலும் அந்த இடத்திலேயே தான் சமாளிக்கின்றனர். வீட்டு மனை வீடு முக்கிய கோரிக்கையாக உள்ளது. ஒரு வீட்டில் 5 ஏக்கர் விவசாயம் பார்த்த உயர் சாதிக்காரர் ஒருவர் ரேஷன் அரிசி வேண்டாம் என்று இருந்தவர் இப்போது அரிசி அட்டையாக மாற்றி பயன்படுத்துகிறேன் என்கிறார். அந்த அளவுக்கு விவசாயம் பொய்த்துப் போய் இருக்கிறது. மாட்டு தீவனத்துக்காக மட்டும் தன்னுடைய சொந்த நிலத்தில் சோள தட்டை பயிரிடுகிறார். பால் உற்பத்தி மூலம் வருமானம் வருகிறது. இந்த பகுதியில் வடிகால்களை அடைத்து புதிதாக சாலை போட்டிருக்கிறார்கள். அதனால் தண்ணீர் வடிய இடமில்லாமல் தேங்கி நிற்கிறது .அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு வேலைகள் திட்டமிடல் இல்லாமல் கண் மூடித் தனமாக செயல்படுத்தப்படுவதற்கு இதுவும் ஒரு சாட்சி. எந்த பொது கட்டுமானப் பணிகளும் கிராமப்புற பகுதிகளில் முறையாக செய்யப் படவில்லை. திட்ட மதிப்பீடு பெயர்ப்பலகை மட்டும் உள்ளது. திட்டங்கள் பல் இளிக்கின்றன. காண்ட்ராக்டர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகளின் கூட்டுக் கொள்ளை பளிச்சென தெரிகிறது.

சமுத்திரம் பஞ்சாயத்து -

காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாழும் பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம். ஊர் ஊராகச் சென்று ஜோசியம் பார்க்கும், குறிசொல்லும் குடுகுடுப்பைக்காரர்கள் ஆக இவர்கள் இருக்கிறார்கள். வெகுசில குடும்பங் களிலேயே கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் உள்ளனர். கல்லூரி படிப்பு முடித்தவர்கள் கூட  ஊர் ஊராகச் சென்று ஜோசியம் பார்க்கும் பணிக்குச் செல்கின்றனர். சில பெண்கள் டெக்ஸ் டைல் மில்லுக்கு வேலைக்கு செல்கின் றனர். காலை 4 மணிக்கு எழுந்து இரண்டு மணி நேர பயணம் செய்து இரவு 7 மணிக்கு வீடு திரும்புவதாக அழுதுகொண்டே சொன்னார்கள். ஐயாயிரம் ரூபாய் சம்பாதிக்க இவ்வளவு அல்லல் பட வேண்டியிருக்கிறது. கடுமையான உழைப்பு சுரண்டல், வேலைப்பளு, அதிகம் மதிய உணவு வழங்குகிறார்கள். மாதவிடாய் காலத்தில் கூட விடுமுறை எடுக்க அனுமதிப்பதில்லை. உயர்நிலைப் பள்ளி வரை இந்த ஊரிலேயே உள்ளது ஒருவர் வீட்டில் கூட கழிப்பறை இல்லை என்பது அதிர்ச்சியான விசயம். இன்ஜினியரிங் படித்து முடித்தவர்கள் கூட காட்டுக்கு தான் செல்கிறார்கள். வாடகை வீட்டில் குடியிருப்போர் நிறைய உள்ளனர். பெரும்பாலான வீடுகள் குடியிருக்க லாயக்கற்ற தாகவே  உள்ளது. ஜல்  ஜீவன் திட்டத்தில் குழாய் மட்டுமே போடப்பட்டுள்ளது. தண்ணீர் வருவதில்லை. கிராமப்புற அரசு திட்ட கட்டமைப்புகள் எல்லாம் மக்கள் பணம் விரையம் என்பதை காட்டுவதாக உள்ளது. கிராம நிர்வாக அதிகாரி அலுவலகமே இடிந்து விழும் நிலையில் உள்ளது. தகுதியான சிலருக்கு 100 நாள் வேலை வழங்கப்படுவதில்லை. இந்த ஊராட்சியில் தான் பொது தொகுதியில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு இகக(மாலெ) தோழர் வழக்கறிஞர் சக்திவேல்  போட்டியிட்டு சாதி ஆதிக்க வன்முறைக்கு ஆளானார்அமைப்பை வலுப்படுத்த வேண்டியுள்ளது. அப்போது மட்டுமே ஆதிக்க சக்திகளை பின்னுக்கு தள்ள முடியும். காட்டுநாயக்கர் மக்களுக்கு குடிநீர், வீட்டுமனை முக்கிய பிரச்சினைகள். ஆய்வின்போது ஆய்வுக் குழு பஞ்சாயத்து தலைவரையும் சந்தித்தது. ஆய்வுக் குழுவின் நோக்கத்தை கேட்டுக் கொண்டார். பஞ்சாயத்து தலைவருக்குரிய நடை முறை சிக்கல்களை சொன்னார். அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு கட்சி உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மக்கள் அதிகமாக பயன் படுத்தி வந்த சமுத்திரம் ரயில் நிலையம் மூடப் பட்டுள்ளது. மீண்டும் அந்த ரயில் நிலை யத்தை இயங்க வைப்பதற்கான முயற்சிகளில் பஞ்சா யத்துத் தலைவருடன் சேர்ந்து மக்களை திரட்டி இயக்கம் நடத்த தயார் என்று ஆய்வு குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். 100 நாள் வேலை, மக்களின் குடிநீர் பிரச்சினைகள் பற்றியும் அவருடன்  கோரிக்கை வைக்கப் பட்டது. மக்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க எல்லா மட்டத்திலும் இகக(மாலெ) முயற்சி எடுக்கும் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் எந்த சமூக நலத் திட்டப் பயன்களும் தலித் மக்களுக்கு முறையாக சென்றடைவதில்லை என்ற குற்றச் சாட்டும் உள்ளது. ரேஷன் கார்டு, முதியோர் ஓய்வூதியம், குடிநீர் வசதிகள், வீட்டு மனை, வீடு ஆகியவை முக்கிய கோரிக்கையாக முன் வந்துள்ளன. ஆய்வுகள் இறுதி செய்யப் பட்டவுடன் அடுத்த கட்ட இயக்கத்துக்கான திட்டமிடல் செய்யப்படும்.