மக்களுக்கு ஒரே நம்பிக்கை, மாற்று இடதுசாரிகளே!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி பிரதேச 23வது மாநாடு நவம்பர் 16 - 17 தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்&- லெனினிஸ்ட்) சார்பில் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் தோழர் சோ. பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு மாநாட்டின் பொது அரங்கில் உரை நிகழ்த்தினார். அவர் பேசியது...
மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போராட்ட தருணத்தில் நடைபெறுகிறது. நாடு விடுதலை அடைந்ததற்கு பின்னால், கடந்த ஒரு ஆண்டுகாலமாக தலைநகர் டெல்லியை நாடு முழுவதும் இருந்து வரும் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்ற னர். இன்னும் சில நாட்களில் ஓராண்டு நிறைவடைய உள்ளது. மத்திய பாஜக அரசின் விவசாயிகள் விரோத மூன்று சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெறும் இந்தப் போராட்டம் அமைதி வழியில் நடைபெறும் போராட்ட வடிவில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டு வருகிறது.
விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாய தொழிலாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள் தங்கள் ஒத்துழைப்பை காட்டி வருகின்றனர். டில்லியில் கூடிய அனைத்து தொழிற்சங்கங்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 48 மணிநேர வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 4 புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும் தொழிலாளர்களுக்கு விரோதமானவை என்பதை அம்பலப்படுத்தி வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில், புதுச்சேரி மக்கள் யாருக்கும் பெரும்பான்மை அளிக்கவில்லை. ஆண்ட கட்சிகளை முழுவதுமாக நிராகரித்து விட்டனர். தமிழகத்தில் பாஜகவுக்கு அடிமை ஆட்சி நடத்திய அஇஅதிமுக முழுவதுமாக புதுச்சேரி மாநிலத்தில் துடைத்தெறியப்பட்டு விட்டது. மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிக் காட்ட சுயேச்சைகளுக்கு வாக்களித்து விட்டனர்.
சட்டமன்றத்திற்கு வெளியே மக்களுக்கு ஒரே நம்பிக்கை, மாற்று தற்போது இடதுசாரிகளே உள்ளனர். இந்த வாய்ப்பையும் சவாலையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பயன்படுத்தி முன்னேறிட வேண்டும். அதற்கு போராட்ட ஒற்றுமையும் செயல்திட்டமும் அவசியமாகும். எழுந்துவரும் பாசிச தாக்குதல்களை முறியடித்திட இந்த வழியே நம்பிக்கை, மக்களுக்கான மாற்று ஆகும்.