இரண்டு நாள் பயிலரங்கு:

மாணவர்-இளைஞர் அமைப்புகளை

மிகப் பெரிய போராடும் அமைப்புகளாக

கட்டி எழுப்ப உறுதி ஏற்பு!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)ன் நிறுவனத் தலைவர்களுள் ஒருவரும் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற தலைவருமான தோழர் நாகபூஷன் பட்நாய்க்கின் 24வது நினைவுநாளான அக்டோபர் 9 அன்று புரட்சிகர இளைஞர் கழகம், அகில இந்திய மாணவர் கழகத்தின் மாநில அளவிலான பயிலரங்கம் துவங்கியது. விருத்தாசலத்தில் நடந்த இரண்டுநாள் பயிலரங்கில் அக்டோபர் மாதத்தில் மறைந்த, புரட்சிகர விவசாய இயக்கத்தை தோற்றுவித்த முதன்மைத் தலைவர்களுள் ஒருவரான தோழர் ராம் நரேஷ் ராம், (அக் 26) அனைத்திந்திய விவசாய கிராமப்புரதொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவராக அரும்பணியாற்றி மறைந்த தோழர் டிகேஎஸ் ஜனார்த்தனன் (அக் 27) ஆகியோரை நினைவுகூரும் விதமாக அவர்களது உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இகக(மா லெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வீ.சங்கர், கட்சியின் மாநிலச் செயலாளர் என்கே நடராசன், கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள், புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநிலத்தலைவர் திருமேனி நாதன், பொதுச் செயலாளர் ஜி. தனவேல், அகில இந்திய மாணவர் கழகத்தின் மாநில அமைப்பாளர் பாலஅமுதன் ஆகியோரும் பயிலரங்கிற்கிற்கு வந்திருந்த மாணவர், இளைஞர்களும் மலரஞ்சலி செலுத்தினர்.

தோழர் தனவேல், திருமேனிநாதன், பால அமுதன், அனிதா பிரின்ஸ்  உள்ளிட்ட தலை வர்களையும் இன்னும்பல தோழர்களையும் கொண்ட தலைமைக்குழு பயிலரங்கை வழி நடத்தியது. இரண்டாவது நாள், புஇக வின் மாநிலத் துணைத் தலைவர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட தலைமைக்குழு நிகழ்ச்சியை வழிநடத்தியது மதுரையைச் சேர்ந்த தோழர் மங்கை பாடிய இசைப்பாடலைத் தொடர்ந்து, இகக(மாலெ) மாநிலச் செயலாளர் என்.கே.நடராசன், பயிலரங்கை துவக்கி வைத்துப் பேசினார்.

தமிழ்நாட்டின் பதினேழு மாவட்டங்களிலிருந்து ஏறத்தாழ 80 புதிய தலைமுறையைச் சேர்ந்த மாணவர், இளைஞர் கலந்து கொண்டி ருப்பது, தனக்கு உற்சாகம் அளிப்பதாக தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட தோழர் என் கே, கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்சுகிற வகையில், ஏராளமான இளம்தலைமுறை மாணவர், இளைஞர்களை கட்சிக்குள் கொண்டு வருவதில் இந்தப்பயிலரங்கு திறவுகோலாக விளங்கும் என எதிர்பார்ப் பதாகவும் கூறினார். கட்சி மாநிலக் கமிட்டி வழிநடத்திக் கொண்டிருக்கும் கட்சிமறுசீரமைப்பு இயக்கமும் அதைத்தான் தனது முக்கிய இலக்குகளில் ஒன்றாக முடிவு செய்திருக்கிறது என்றும் கூறினார்.

அடுத்து பேசிய, கட்சியின் இளைஞர்-மாணவர் அரங்கின் மாநிலக் கட்சிப் பொறுப்பாளரும் மத்தியக் கமிட்டி உறுப்பினருமான தோழர் ஆசைத்தம்பி, தோழர்கள் நாகபூஷன், ராம் நரேஷ் ராம், டிகேஎஸ் ஆகியோரது தியாக வரலாறையும் வாழ்வையும் இன்றைய இளம் தலைமுறை படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டு மென்று கூறினார். அக்.9 சேவின் நினைவு நாளை நினைவு கூர்ந்ததோடு பகத்சிங், -ஜேஎன்யு பல்கலைக்கழக அகில இந்திய மாணவர் தலைவர் தோழர் சந்திரசேகர் ஆகியோரது வீரவரலாறு இன்றைய இளம் தலைமுறைக்கு ஒளியூட்டும் வழிகாட்டியாக இருக்கவேண்டு மென்றும் கூறினார்.

இளைஞர் -மாணவர் அமைப்புகளின் கொள்கைத் திசைவழி பற்றியும் அவற்றின் முக்கிய போராட்ட நடவடிக்கைகள், சாதனைகள் பற்றியும் விரிவாக விளக்கிப் பேசினார்.

பெரியார்,- திராவிடம், -தமிழ் தேசியம் அல்லது தமிழ்தேசிய அரசியல் போக்குகள் பற்றிய தலைப்பில் கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினரும் இளைஞர் கழகத்தின் முன்னாள் தலைவருமான தோழர் .சந்திரமோகன் விரிவாகப் பேசினார்.

பெரியார் ஒரு சமூகப் புரட்சியாளர் என்ற வகையில் அவரது முற்போக் கான கருத்துப் பங்களிப்பு பற்றி எடுத்துரைத்தார். பார்ப்பனிய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு ஆகிய பிரச்சனைகள் குறித்து தமிழ்ச் சமூகத்தில் ஒரு தீவிரமான கருத்தியல் போராட்டத்தை, முற்போக்கான கருத்துப் பரவலை உருவாக்கு வதில் பெரும் பங்கு வகித்தார் என்று கூறினார். தொடக்கத்தில் கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து பயணித்த பெரியார் பின்னர் தனித்துப் பயணப்பட்டதற்கான நிலைமைகள் குறித்தும் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது விளக்கிப்பேசினார். மதவெறி பாசிசம் மூர்க்கத் தனமாக எழுந்துள்ள இன்றைய நிலையில் பாசிச எதிர்ப்புப் போரில் பெரியாரது முற்போக்கான கருத்துகளை போர்க்கருவிகளாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கூறினார்.

வரலாற்று ரீதியாக, ஆரியப் பெருமிதத்திற்கு எதிராக திராவிடம் என்ற வரலாற்று, பண்பாட்டு அடையாளத்தை கட்டமைத்து, ஆரியம்-திராவிடம் இருமை முன்னுக்குக் கொண்டு வரப்பட்டது குறித்து விவரித்துப்பேசிய சந்திரமோகன், திராவிட நாகரிகம் தமிழர் நாகரிகமே என்றும் கூறினார்.

தமிழ் தேசிய அரசியல் போக்குகள் பற்றி அவர் பேசும்போது, தமிழரின் தொன்மை நாகரிகத்தைப்பற்றிய புதிய தொல்லியல் ஆய்வுகளை நாம் வரவேற்கிறோம். ஆனால், ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி’ ‘முதல் நாகரிகம்என்ற தமிழ்ப் பெருமிதக் கூட்டுக்குள் நம்மை முடக்கிக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தினார். சீமான் நிகழ்வுப் போக்கு பற்றியும் விவரித்துக் கூறியவர், தமிழ்நாட்டின் முற்போக்கு விழுமியங்களை மறுக்கிற, மாசுபடுத்துகிற சீமானது தவறான கருத்துகளை விமர்சித்துப் பேசினார். 50 ஆண்டுகளுக்கு முன்னரே முடிந்து போன ஒரு விவாதத்தை இப்போது எழுப்பிக் கொண்டி ருக்கும் சீமான் போன்றவர்கள் உயிர்ப்புள்ள இன்றைய பிரச்சனைக ளிலிருந்து திசைதிருப்பும் நோக்கத்துடன் செயல்படுகின்றனர் எனக் கூறினார்.

தமிழக இளைஞர் மாணவர் இயக்க திருப்புமுனைகள், படிப்பினைகள் எனும் தலைப் பின் மீது பேசிய தோழர் பாலசுந்தரம், தமிழ் நாட்டின் தேசிய சுதந்திரப் போராட்டம், சமூக சீர்திருத்த இயக்கம், இடதுசாரி இயக்கம் அதன் போராட்ட முற்போக்கு மரபுகளிலிருந்து இளைஞர் மாணவர் படிப்பினையும் ஊக்கமும் பெறவேண்டும், நாட்டின் விடுதலைக்குப் பின் எழுந்த நக்சல்பாரி புரட்சிப் போராட்ட மரபிலிருந்து உந்துதல்பெற்ற அகில இந்திய மாணவர் கழகமும் புரட்சிகர இளைஞர் கழகமும் காட்டிய திசையில், தமிழ்நாட்டிலும் மிகப் பெரிய மாணவர் அமைப்பாக, இளைஞர் அமைப்பாக வளரவேண்டும் என்றுகூறினார். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில், இளம் பெண்கள், பெண்மாணவர்கள் கலந்து கொண்டி ருப்பதை பாராட்டிப் பேசியவர், திருமுது குன்றத்தில் (விருத்தாசலம்) நடைபெறும் இந்த பயிலரங்கு திருப்புமுனை பயிலரங் காக அமையவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

இடையிடையே பாடல்கள், அனுபவப் பகிர்வுகள் என பயிலரங்கு கலகலப்பான நிகழ்வாகவும் இருந்தது. புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநிலத் தலைவர் திருமேனிநாதனும் பாடல்பாடி தனது பாடும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். தோழர் மங்கை, பகத்சிங்கின் பொன் மொழிகளை தொகுத்து வாசித்தார். மதுரை, குமரி, புதுகை, கடலூர், சேலம், தஞ்சை, திருச்சி, கரூர், உள்ளிட்ட மாவட்டங் களிலிருந்தும் புதுச்சேரியிலிருந்தும் தோழர்கள் காளீஸ்வரன், அனிதா பிரின்ஸ், சுந்தர், உயிரோவியன், மங்கை, ராஜசங்கர், செங்கதிர், அறிவழகன், மெஜோ, ராஜராஜன் உள்ளிட்ட தோழர்கள் தங்கள் மாவட்ட வேலைகள் பற்றி பேசினர்.

மதுரையில், சில அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில், எஸ்விஎன் கல்லூரியில், கொரோனா முழுமுடக்கத்தால் வருமானம் இழந்த பெற்றோர்களின் பிள்ளைகள் கல்விக் கட்டணம் கட்டமுடியாமல் அரசு கல்வி நிறுவனங்களில் சேர விரும்பினர். அவர்கள் படித்த தனியார் கல்வி நிறுவனங்களிலிருந்து மாற்றுச் சான்று கேட்டபோது தராமல், பணம் முழுமையாக கட்டினால்தான் மாற்றுச் சான்று தர முடியும் என்று துன்புறுத்தின. இதில் தலையிட்ட மாணவர் கழகம் பல மாணவர் களுக்கு பாக்கிப் பணம் கட்டாமலேயே மாற்றுச்சான்றிதழ் வாங்கித்தந்த அனுபவத்தை தோழர் காளீஸ்வரன் விவரித்தார். இவ்வாறு வழங்கியதன் மூலம் எஸ்விஎன் கல்லூரி நிர்வாகம் ரூ 6 கோடி இழந்துள்ளதையும் (இதிலிருந்து தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு உதவிபெறும் தனியார் கல்வி நிறுவனங்கள், சுயநிதிக் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் இமாலய கட்டணக் கொள்ளையை தெரிந்து கொள்ளமுடியும்) சுட்டிக்காட்டிப் பேசினார்.

அடுத்து பேசிய ராஜசங்கர், ஆகஸ்ட் 8, கந்தர்வக் கோட்டையில் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர், தமிழ்நாட்டில் மாணவர், இளைஞர் அமைப்புகளை வளர்க்க வேண்டியதன்அவசர அவசியத்தை வலியுறுத்திக் கூறியதை நினைவு படுத்தினார். பொதுச் செயலாளரது வழிகாட்டு தலை செயலாக்கிக் காட்ட நாம் அனைவரும் உறுதிஏற்று செயல்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

அவரை அடுத்து, புரட்சிகர இளைஞர் கழகத் தின் மாநிலத்தலைவர் திருமேனிநாதன், இளைஞர்-மாணவர்களின் இன்றையக் கடமைகள் பற்றி விளக்கிப்பேசினார்.

இதை அடுத்து, புதியக் கல்விக் கொள்கை பற்றிய உங்கள் கருத்து என்ன?, இளைஞர்களின் முதன்மையான பிரச்சனை வேலையின்மையா? வேறு ஏதும் பிரச்சனையா? புரட்சி என்றால் என்ன? இளைஞர்-மாணவர்களுக்கு அரசியல் தேவையா? புஇக, அஇமாக மிகப்பெரிய அமைப்பாக வளர்வதற்கு செய்ய வேண்டியது என்ன? ஆகிய கேள்விகள் மீது 5 குழுவாக பிரிந்து உற்சாகம் மிக்க விவாதம் நடத்தினார்கள். குழு விவாதம் முடிந்தபின், ஒவ்வொரு குழு விலிருந்தும் ஒருவர் தமது குழுவின் கருத்துகளை முன் வைத்தார்.

இதற்குப் பின் பேசிய, அகில இந்திய மாணவர் கழகத்தின் முன்னாள் தேசியத் தலைவரும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் வீ.சங்கர் தனது உரையில், மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கையின் ஆபத்துகள் பற்றியும் அதை மாணவர்-இளைஞர் சமுதாயம் எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டியதின் அவசியம் பற்றியும் விளக்கிப் பேசினார். தாராளமய மாக்கம், தனியார்மயமாக்கம், உலகமயமாக்க கொள்கைகளுக்கு சேவைசெய்கிற வகையில் கல்வித்திட்டத்தை மாற்றியமைப்பது தான் புதிய கல்விக்கொள்கை என்று கூறினார். டாடாவிட மிருந்த இந்திய ஏர்லைன்ஸ் நிறுவனம் தேசிய மயமாக்கப்பட்டது. ஆனால், மோடி அதை டாடாவிற்கே விற்றுவிட்டார். எல்லாம் தனியார் முதலாளிகளுக்கு என்பதுதான் தனியார் மயமாக்கம், இதுதான் மோடியின் கொள்கை.

இளைஞர் கழகம், மாணவர் கழகம் கல்வி, வேலை வாய்ப்புக்காக போராடி வருகிறது. இரண்டும் அடிப்படை உரிமை என்று கூறுகிறது. ஆனால், புதிய கல்விக்கொள்கை கல்வியையும் வேலை வாய்ப்பையும் மறுக்கிறது. தமிழ்நாடு மொழிப்போராட்டத்தால் அறியப்பட்ட மாநிலம். இந்த தமிழ்நாட்டின் மீது ஜனநாயக விரோதமாக மும்மொழிக்கொள்கையை திணிக்கிறது தேசிய புதியகல்விக்கொள்கை. இக்கொள்கை, படிவரிசை சமத்துவமின்மையை உறுதிப்படுத்து கிறது. இது, அம்பேத்கர் வரைந்த அரசியல் சட்டத்தில் சொல்லப்படும் சமத்துவக் கோட்பாடுகளுக்கு எதிரானது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு, அனை வருக்குமான வாய்ப்பை மறுக்கிறது, சமூகநீதிக் கோட்பாட்டை மறுக்கிறது. எனவேதான் அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நீட் தேர்வு கூடாது என்று போராடி வருகின்றன என்று கூறினார்.

தமிழ்நாடு சட்டமன்றம் நீட்தேர்வு வேண்டா மென்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. நல்லது. ஆனால், அதை எதிர்த்து திமுக அரசு உறுதியாக போராடுமா என்பது தெரியவில்லை. ஆனால், மாணவர்கழகமும் இளைஞர் கழகமும் இகக(மாலெ) வும் போராடி, நீட் தேர்வை, புதிய கல்விக்கொள்கையை முறியடிக்கும் என்றும் உறுதிபடக் கூறினார்.

---------------------------------

பிரச்சாரம், உணவு, தங்குமிடம் உள்ளிட்ட ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட புரட்சிகர இளைஞர் கழகத் தோழர்கள் மிக மகிழ்ச்சியுடன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இறுதியாக நிறைவுரை ஆற்றிய புஇக மாநில பொதுச்செயலாளர் ஜி.தனவேல், இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு உள்ள போராட்ட அழைப்புகளை நினைவுபடுத்திப் பேசினார். வருங்காலங்கள் போராட்ட காலங் களாக இருக்கும். அதற்கேற்ப புஇக, அஇமாக அமைப்புகளை பெரிய அமைப்புகளாக வளர்க்க உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிய தனவேல் பல்வேறு மாவட்டங்களிலுமிருந்து வந்திருந்து இரண்டுநாள் பயிற்சி முகாமை வெற்றிகரமாக்கிய இளைஞர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

பின்னர் புதிதாக தேர்வு பெற்ற மாநிலக் குழு உறுப்பினர்களும் நிர்வாகிகளும் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து உற்சாகத்துடன் குழுப் படம் எடுத்துக் கொண்டனர்.

வேலைத்திட்டம்

முதல்கட்டமாக, அக்டோபர் 30 வரை, எல்லா மாவட்டங்களிலும் புஇக மாவட்ட அமைப்புக் குழுக்கள் ஏற்படுத்துவது அல்லது புனரமைப்பது; இளைஞர்-மாணவர் பிரச்சனைகளை முன்னிறுத்தி நவம்பர் 15 தொடங்கி 30 வரை கோரிக்கை மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்துவது; இந்த நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கானோரை அணிதிரட்டிட வேண்டும். நவம்பர் புரட்சிநாள் (நவம்பர் 7), வெண்மணி நாள் (டிசம்பர் 25), மொழிப்போர் தியாகிகள் நாள் (ஜனவரி 25) இவற்றை கடைப்பிடிக்கிற நிகழ்ச்சிகளைக் கட்டமைக்கலாம். ஜனவரி&-பிப்ரவரி இகக(மாலெ) மாவட்டப் பேரணிகளில் இளைஞர், மாணவர் கோரிக்கைகள் மீது சுதந்திர பரப்புரை செய்து, பெரும் எண்ணிக்கையில் சீருடையுடன் கலந்து கொள்வது மார்ச் 23&31 வரை பிரச்சார இயக்கம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது

இந்த வேலைத்திட்டத்தோடு, மாலெ தீப்பொறி இதழுக்கு ரூ 10,000 நன்கொடை அளிப்பது, சந்தா சேர்த்து தருவது என்ற முடிவுகளையும் புஇக மாநிலத்தலைவர் திருமேனி அறிவிக்க அரங்கம் கையொலி எழுப்பி ஏற்றுக்கொண்டது.

அமைப்புத் தேர்தல்:

இளைஞர் கழக, மாணவர் கழகத்துக்கான புதிய அமைப்பு தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலை மாநிலக் குழு உறுப்பினர் சி. ராஜசங்கர் நடத்திவைத்தார். புதிய மாநிலக்குழுக்களையும் மாநில நிர்வாகிகள் பட்டியலையும் ராஜசங்கர் முன்மொழிய அரங்கு கரவொலி எழுப்பி ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. புரட்சிகர இளைஞர் கழகத்துக்கு 21 பேர் கொண்ட மாநிலக் குழு. மாநிலத் தலைவராக திருமேனி நாதன், பொதுச்செயலாளராக ஜி. தனவேல், துணைத்தலைவராக சுந்தர்ராஜனும் செயலாளர்களுள் ஒருவராக மங்கையும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அகில இந்திய மாணவர் கழகத்துக்கு 19  பேர் கொண்ட மாநிலக் குழு தேர்வு செய்யப் பட்டு, மாநிலத் தலைவராக பாலஅமுதன், மாநில பொதுச் செயலாளராக காளீஸ்வரன். மாநிலச் செயலாளர்களாக ஜானகி, மௌனிகாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தீர்மானங்கள்

நீட் தேர்வு வேண்டாமென்று போராடி வரும் தமிழக மாணவர்-இளைஞர் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்!

கொரோனா முடக்கம் காரணமாக +2 மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது; ஆனால், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் அவர்கள் படிக்க விரும்பும் பாடப்பிரிவுகளில் பட்ட வகுப்பில் இடம் மறுக்கப்படுகிறது. படிக்க விரும்பும் அனைவரையும் அவர்கள் விரும்பும் பாடப் பிரிவுகளில், பட்ட வகுப்புகளில் சேர்த்திட மாநில அரசு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்.

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான சமூக நீதி கோட்பாட்டுக்கு புறம்பான உயர்சாதியின ருக்கான 10% இட ஒதுக்கீட்டை ரத்துசெய்யக் கோரி போராடுவோம்!

தமிழ்நாட்டில் எங்கும் எதிலும் தமிழ் என்பதை உறுதி செய்யப் போராடுவோம்!

கண்ணகி-முருகேசன் கொலை வழக்கில் வழங் கப்பட்ட தீர்ப்பை வரவேற்பதுடன் சாதி ஆதிக்கப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் கோரி போராடுவோம்!

பொள்ளாச்சி, எஸ்பிஓஏ பள்ளி, சிவசங்கர்பாபா பள்ளி உள்ளிட்ட இடங்களில் இளம் பெண்கள், பெண் மாணவர்கள் மீது வன்கொடுமை புரிந்தவர்கள்ஒடுக்கப்பட்டோர், மீதான வன் கொடுமை குற்றங்கள் புரிவோருக்கு விரைந்து தண்டனை வழங்கிடக் கோரி போராடுவோம்!

ஆணாதிக்க, சாதி, மதவெறி வெறுப்பு பிரச்சாரங்களை முறியடிக்க சட்டமியற்றக் கோரி போராடுவோம்!

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர் களுக்கு மாதம் ரூ 10,000 நிவாரணம் கேட்டுப் போராடுவோம்!

மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் உள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை உடனே நிரப்பக் கோரி போராடுவோம்!

உழைப்பவர் எவரானாலும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26000/- வழங்கு!

கார்ப்பரேட் ஆதரவு 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யக் கோரி விவசாயிகளுடன் இணைந்து போராடுவோம்!

உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

பகத்சிங், அம்பேத்கர், பெரியார் வழிமரபை உயர்த்திப்பிடிப்போம்!

பகத்சிங்--சந்திரசேகர்-வினோத்மிஸ்ரா புரட்சிகர மரபை உயர்த்திப் பிடித்து சமூக நீதி, வேலை வாய்ப்பு, நாட்டுப் பற்றுக்கான போராட்டத்தில் ஒன்றுபடுவோம்!

கல்வி, வேலை எமது பிறப்புரிமை!

புதியதோர் சமத்துவ சமுதாயம் படைப்பது எமது கடமை!

கார்ப்பரேட்-காவிப் பாசிச எதிர்ப்புப் போரில் களம் காண உறுதி ஏற்போம்!

புரட்சிகர இளைஞர் கழகம் வாழ்க! அகில இந்திய மாணவர் கழகம் வாழ்க! இகக (மாலெ) வாழ்க!

என்ற உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் இரண்டு நாள் பயிலரங்கு உற்சாகம் தெறிக்க வெற்றிகரமாக நிறைவடைந்தது.  

- பழஆசைத்தம்பி