ஜெய் பீம்மைச் சுற்றி

                                                                                        -சங்கரந்தம்பி

ஜெய்பீம். இந்த முழக்கம் எல்லாருக்கும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்தாலும் சிலருக்கு மட்டும் ஆத்திரத்தையும் எரிச்சலையும்  ஏற்படுத்துகிறது. அப்படிச் சிலரை எரிச்சலடையச் செய்துள்ளது, ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள,“ஜெய்பீம்திரைப் படம். திரைப்படத்தில் வன்னியர் சாதி அடையா ளமானநெருப்புச் செம்புபடம் போட்ட காலண்டர், கொலை பாதக போலீஸ் எஸ். வீட்டின் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது, வன்னியர் அனைவரையும் இழிவு படுத்தி விட்டது என்ற அன்புமணி ராமதாஸ். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு சாதியினரை தவறாகச் சித்தரிக்கலாமா-? அராஜகப் போலீஸ் வீட்டில் அப்படிக் காட்டியதன் மூலம் ஒட்டுமொத்த வன்னியர் சாதியினரையும் அராஜகப் பேர்வழிகள் என்று சொல்கிறீர்கள் சூர்யாவுக்கும் ஞானவேலுக்கும் அச்சுறுத்தும் தொனியில் அன்பு(மணி) மிரட்டல் தொடுத்தார்அதனைத் தொடர்ந்து அந்தப் படம் நீக்கப் பட்டது. ஆனாலும் அத்தோடு நிற்கவில்லை. அடுத்து ஒன்றை எடுத்துக் கொண்டார். சந்துரு என்றும் ராஜாகண்ணு என்றும் பெருமாள்சாமி என்றும் நடந்த உண்மைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களின் உண்மைப் பெயரையே திரைப்படத்திலும் பயன்படுத்திக் கொண்டுவிட்டு போலீஸ் எஸ்ஐக்கு மட்டும் குருமூர்த்தி என்று எப்படி பெயர் வைத்தீர்கள். இறந்துபோன வன்னியர் சங்கத் தலைவர் குருவின் பெயர் தானே அது என்று கிளப்பிவிட்டார்.

சூர்யாவின் படம் எங்கும் ஓடாது என்றும் நடமாட முடியாது என்றும் சகட்டுமேனிக்கு மிரட்டல்கள். இதில் வேடிக்கை என்ன வென்றால், குருவின் மரணத்திற்குப் பின்னர் அக்குடும்பத்தை ராமதாஸ் கண்டு கொள்ளவே யில்லை என்று பொருமியவர்கள் கூட இப்போது அன்புமணி பக்கம் சேர்ந்து கொண்டார்கள். இதை எதிர்பார்த்துதான் அன்புமணியும் அப்படி ஒரு பிட்டைப் போட்டார் போலும்சூர்யா இப்படி எங்கள் சாதியை இழிவுபடுத்தி விட்டதால் 20 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்று ஒரு பக்கம். நீ உயிருடன் நடமாட முடியுமா? என்று இன்னொரு பக்கம். சாதி அரசியல் அப்பட்டமாக வெளிப்படுகிறது.

சூர்யா பக்கம் நாங்கள் நிற்போம் என்று பாரதிராஜா சூர்யாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவுடன் உங்கள் தேவர் படத்தினை அந்தப் பின்னணியில் காட்டியிருந்தால் நீங்கள் சும்மா இருப்பீர்களா? என்று பாரதிராஜாவின் சாதியை வம்புக்கு இழுப்பது மட்டுமின்றி, முக்குலத்தோரையும் தனக்கு ஆதரவாக வர மறைமுகமாக அழைப்பு விடுக்கிறார். ‘நெருப்புச் செம்புவன்னியர் சாதிக்கான அடையாளம் என்பது நிறைய பேருக்குத் தெரியாமல் இருந்ததை தெரியப்படுத்தியதோடு மட்டு மல்லாமல், அந்தக் காட்சியை மீண்டும் ஒருமுறை நிறைய பேரைப் பார்க்க வைத்த பெருமையும் அன்புமணியைச் சாரும்.

சமீபத்தில் நடந்த பாமக கூட்டம் ஒன்றில் மருத்துவர் ராமதாஸ், அறுபது தொகுதிகளை நாம் வென்று விட்டால் அடுத்த முதல்வர் அன்புமணிதான், அதற்காக நீங்கள் தமிழ்நாடு முழுவதும் செல்ல வேண்டும் வீடு வீடாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் திண்ணைகளில் படுத்துறங்கி மக்களிடம் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று சொல்லி வாக்குச் சேகரிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். தமிழ்நாட்டின் முதல்வராக வர விருப்பப்படுபவர் ஒரு சாதிக்கான முன்னேற்றத்தை மட்டுமே பேசக் கூடியவராக இருக்க முடியுமா? முதல்வர் என்பவர் அனைத்து மக்களுக்குமானவராக இருப்பது மட்டுமின்றி, அடித்தட்டில் இருக்கக் கூடியவர்களுக்கு, அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு இருக்கக்கூடியவர்களுக்கு ஆதரவானவராக அல்லவா இருக்க வேண்டும்.

நிஜத்தில் ராஜாக்கண்ணு மனைவியின் பெயர் பார்வதி. திரைப்படத்திலோ அவருக்கு செங்கேனி என்று வைத்துள்ளார்கள். பல கதை மாந்தர்களின் பெயர்களும் திரைப்படத்தில் மாற்றப்பட்டுள்ளது. ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவியோ அல்லது அடிப்படையாகக் கொண்டோ திரைப்படம், நாவல் எதுவேண்டு மானாலும் வரலாம். அதில் என்ன மாதிரியான காட்சி அமைப்புகள் வைக்க வேண்டும் என்பது அதைப் படைப்பவர்களின் உரிமை சுதந்திரம். திட்டமிட்டு ஒருவரை இழிவுபடுத்த வேண்டும் என்று ஒரு படைப்பு உருவாக்கப்படுமானால் அதைக் கண்டனம் செய்வதில் எவ்விதத் தவறும் இல்லை.

ஜெய்பீம் படத்தில் காட்டப்படும் போலீஸ் போல் எதார்த்தத்தில், சமூகத்தில் அந்த குறிப்பிட்ட சாதியில், அல்லது ஆதிக்க சாதி களில் யாரும் இல்லை என்று சொல்லி விட முடியுமா? இன்று தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடக்கும் பல தாக்குதல்களில் நடவடிக்கைகள் அல்லது வழக்குகூட பதியப்படாமல் இருக்கி றார்கள் பல காவல்நிலையங்களில் உள்ள சாதி ஆதிக்க மனோபாவம் உள்ள காவல் அதிகாரி களும் காவலர்களும்.

ஜெய் பீம்திரைப்படத்தில் எஸ்.. குருமூர்த்தி வீட்டில் உள்ள காலண்டர் மூலம் அவர் வன்னியர் என்று காட்டியதுபோல், அவருக்காகப் போராடியவரும் வன்னியர்தான் என்று நீங்கள் ஏன் காட்டவில்லை என்று அன்பு கேட்கிறார். அதற்கு இயக்குநர் ஞானவேல், போராடியவர் ஒரு கம்யூனிஸ்ட் தோழர், கம்யூனிஸ்ட்களுக்கு கம்யூனிஸ்ட் என்பதுதான் அடையாளம். அவர்கள் சாதி, மதத்தைக் கடந்தவர்கள் என்று பதில் அளித்திருக்கிறார். இயக்குநர் ஞானவேல், ஒட்டு மொத்த கதை, திரைக் கதை மற்றும் காட்சி அமைப்புக்கும் நான் மட்டுமே பொறுப்பு, சூர்யாவிற்கு இது பற்றி எதுவும் தெரியாது என்றும் அதற்காக தான் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக அறிவித்த பின்னரும்ஜெம் பீம்திரைப்படக் குழுவினர் மீதான தாக்குதல்கள் தொடர்வது என்பது ஆபத்தானது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது.

இது பெருமாள் முருகன் எழுதியஅர்த்தநாரிநாவலை வைத்துக் கொண்டு சங்கிகள் செய்த அடாவடிச் செயலுக்கு ஒப்பானது. பெருமாள் முருகனை மன்னிப்புக் கேட்க வைத்ததுபோல், ஞானவேலையும் கேட்க வைத்துள்ளார்கள். சங்கிகளின் சங்கமத்தில் இவர்கள் இருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. சர்ச்சைக்குப் பின்னர், அன்புமணி குறிப்பிட்ட அந்தக் காலண்டரை மாற்றிவிட்டு, லட்சுமிப்பட காலண்டர் காட்டப் படுகிறது திரைப்படத்தில். சங்கிகள், சாமிப் படத்தைப்போட்டு ஒரு இந்துவை இப்படி நீ இழிவுபடுத்தலாம் என்று பெரிய அளவில் வரிந்து கட்டிக் கொண்டு வரவில்லை. எச்.ராஜா மட்டும் ஏன் லட்சுமிபடம் என்று கேட்கிறார். திரைப் படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் பாதிக்கப்பட்ட பார்வதியும் இறந்துபோன ராஜக்கண்ணுவும் இந்துக்கள்தான். இந்தச் சங்கிகள் இப்போது நடக்கும் சர்ச்சையில் இந்துப் பார்வதியின் பக்கம் இல்லையே ஏன்? எச். ராஜாவுக்கு ராஜாகண்ணும் பார்வதியும் இந்துவாகத் தெரியவில்லையே ஏன்?

இந்தச் சாதிச் சர்ச்சையில் பார்வையாளர் களாகச் சங்கிகள் மட்டுமல்ல, சமூகநீதி காக்கும் ஆட்சியாளர்!களும்கூட பார்வையாளர்களாகவே உள்ளார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின், ஜெய் பீம் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு எனக்கு இரவெல்லாம் தூக்கம் வரவில்லை என்றார். அவரின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அது படம் அல்ல, பாடம் என்றார். அடுத்தடுத்து இருளர், குறவர் மக்களைக் கூட சந்தித்தார்கள். சில உதவிகளைக்கூட செய்தார்கள். ஆனால், அந்த மக்கள் நிரந்தரமாக தங்கள் வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக் கொள்ள இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை. தமிழ் நாட்டில் உள்ள பழங்குடி மக்கள், பலர் அந்தத் திரைப்படத்தில் காட்டப்படுவதுபோல் இன்றும் கூட பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் வாழ்ந்த வனத்தில் வாழ்வாதாரம் இல்லை. வருமானம் இல்லை. வாழ வழியில்லை. செங்கற் சூளைகளில் மரம் வெட்ட என்று பல வேலைகளைப் பார்க்கி றார்கள். ஆந்திராவிற்கு மரம் வெட்டச் சென்றவர்களை செம்மரக் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்று சொல்லி பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டுள்ளார்கள். அவர்களை மீட்க இந்த அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது?

இப்பவும் திருக்கோயிலூர் வழக்கில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்க வில்லை. அன்றைய விழுப்புரம் மாவட்டத்தில், 2011 நவம்பர் 11 அன்று திருக்கோயிலூர் காவல் நிலையத்தில் நான்கு பழங்குடியினப் பெண்கள், காவலர்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப் பட்டார்கள். அந்த வழக்கு இன்று வரை விசாரணைக்கே வரவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அது திருத்தத்திற்காகத் திருப்பி அனுப்பட்டு என்று பத்தாண்டுகளாக விசாரணையே நடைபெறாமல் உள்ளது. குற்றவாளிகளுக்கு இதுவரை அழைப்பாணை கூட அனுப்பப்படவில்லையாம். இதுபோன்ற வழக்குகள் தமிழ்நாடெங்கும் ஏராளமாகத் தேங்கிக் கிடக்கின்றன. குறிப்பாக பழங்குடியினர் மீதான பல வழக்குகளில் நீதி கிடைக்காமல் இருக்கின்றன. ஜெய் பீம் பார்த்து தூக்கத்தைத் தொலைத்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதுபோன்று நீதிக்காகக் காத்துக் கிடக்கும் வழக்குகளை விரைந்து நடத்தி பாதிக்கப்பட்ட வர்களுக்கு நீதி கிடைக்க உடன் வழி செய்வாரா?

காவல்நிலையப் படுகொலைகள் என்பது தொடர்கதையாகவே உள்ளன. அதற்கு சமீபத்திய சாட்சி, சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ். தந்தை மகன் இருவரும் அடித்துக் கொல்லப் பட்டது. அந்த வழக்கும்கூட மடைமாற்றிவிடப் படுவதாக இழுத்தடிக்கப்படுவதாகச் சொல்லப் படுகிறது. இன்னும் எத்தனையோ சித்தரவதை கள், கொடுமைகள், கொலைகள் காவல் நிலையங்களில் நடந்து கொண்டிருக்கின்றன வெளியே தெரியாமல். இடதுசாரி தினசரி பத்திரிகை ஒன்றில் வந்த ஜெய்பீம் திரைப்பட விமர் சனத்தில், ஜெய்பீம் திரைப்படத்தில் காட்டப்படும் காவல் நிலையச் சித்தரவதை கொஞ்சம் அதீதமாகக் காட்டப்பட்டுள்ளதாகக் கூறப் பட்டுள்ளது. ஜெய்பீம் திரைப்படத்தில் காட்டப்பட்ட கொடுமையை விட நிஜத்தில் அதிகம் என்றுதான் நீதிபதி சந்துரு அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, சாத்தான்குளம் சம்பவத்தில் இறந்துபோன தந்தையும் மகனும் குதத்தில் இருந்து இரத்தம் வரும் அளவிற்கு கொடூரமாகத் தாக்கப்பட் டார்கள். இதுபோன்ற கொடுமைகள், காவல் நிலைய கஸ்டடிக் கொலைகள் ஏதாவது காவல் நிலையத்தில் அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்துவதற்கு முதல்வர் மு.. ஸ்டாலின் அரசு முன்வருமா?

காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ள அரசு, காவல்நிலையங்களில் புகார் அளிக்க வருபவர்களிடம் கண்ணியமற்ற முறையில் நடந்து கொள்ளும் காவலர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் இதுபோன்ற கொடுமைகளைத் தடுத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளுமா-? அல்லது கடந்த காலங்களில் மக்கள் பிரச்சினைகளை பேசிய திரைப்படங்களை  திரையிடுவதற்கு தடை விதித்ததுபோல், சிலர் எதிர்த்தார்கள் என்பதற்காக, அவர்களின் வாக்குகள் வேண்டும் என்பதற்காக திரைப் படங்கள் திரையிடுவதற்கு தடை விதித்ததுபோல் ஜெய் பீம் திரைப்படத்திற்கும் தடை விதிக்கப் படுமா?

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது கோமல் சுவாமிநாதன் எழுதி பாலசந்தர் இயக்கியதண்ணீர் தண்ணீர்படம் நாட்டின் அவலத்தைப் பேசியதால், தன் ஆட்சியின்  அவலத்தை எடுத்துக் காட்டியதால், அப்படத்தை திரையிடத் தடைவிதித்தார். டாவின்சிகோட் திரைப்படம் கிறிஸ்தவர்களின் உணர்வுகளைப் புண் படுத்து கிறது என்று சொன்னதால் அப்படம் தமிழகத்தில் திரையிடுவதை கருணாநிதி முதல்வராக இருந்தபோது அப்படம் திரையிடு வதற்கு தடை விதித்தார். சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காட்டி ஜெயலலிதா விஸ்வரூபம் திரைப் படத்திற்குத் தடை விதித்தார்.

 அன்புமணி ராம்தாஸ் பஞ்சாயத்துத் தலைவர் சாதி ஆதிக்க வெறியுடன் செயல் படுவதாகக் காட்டப்பட்டுள்ளது என்று பொரு முறுகிறார்ஜெய்பீம் திரைப்படத்தை வைத்துக் கொண்டு அன்புமணி கட்சியினரும் சாதியினரும் திரைப்படத்தில் காட்டப் பட்டுள்ளதுபோல் பழங்குடி மக்களின் மீது, இன்றளவும் தொடரும் கொடுமையை, சாதிய ஒடுக்குமுறையை திசை திருப்பப் பார்க்கிறார்கள். சமீபத்தில் தஞ்சை மாவட்டம் திருவைக்காவூரில் தலித் மக்கள் பொது இடத்தில் பேனர் வைத்ததற்கு வன்னியர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று பேனர் வைப்பது நிறுத்தப்பட்டது மட்டுமின்றி, தலித் மக்களை வன்னியர்கள் தாக்கினார்கள். அவர்களுக்கு ஆதரவாக காவல்துறையினர் தலித் மக்கள் வீடுவீடாகச் சென்று தாக்குதல் நடத்தி அவர்களைக் கைது செய்தார்கள். கடந்த தேர்தலின் போது பாஜகவினரும் பாமகவினரும் சேர்ந்து கொண்டு சிதம்பரம் தொகுதியில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வீட்டைக் காலி செய்ய வைத்த கொடுமை யெல்லாம் நிஜத்தில் நடக்கும்போது அது போன்ற கொடுமைகளைத் திரைப்படத்தில் காண்பித்தால், திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் பதிய வைத்தால் இவர்களுக்குப் பதற்றம் ஏற்படுகிது.

ஜெய்பீம்திரைப்படக் குழுவினருக்கு எதிராக பல்வேறு வகைகளில் தொடரும் தாக்குதல்களை தமிழகத்தின் இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக இயக்கத்தைச் சேர்ந்த வர்கள் கண்டித்துள்ளார்கள். இப்படிப்பட்ட சூழலில் தமிழக அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு, ஜெய் பீம் படக்குழுவினருக்கு எதிராகப் பேசியும் மிரட்டியும் பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறவர்களை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இது படம் அல்ல, பாடம் என்று சொன்னதை, அது போன்ற பாடங்களை மக்களிடத்தில் கொண்டு செல்வதற்குத் தடை ஏற்படுத்துபவர்களைத் தடுத்திட வேண்டும். இல்லையென்றால், திரைப்படத்தில் சீர்திருத்தக் கருத்துக்களை முற்போக்கு விழுமியங்களைப் பேசி மக்களைக் கவர்ந்து ஆட்சியைப் பிடித்த அன்றைய திமுகவின் இன்றைய வாரிசு இவர்கள் என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போகும். இவர்கள் பெரியாரின் அண்ணாவின் வாரிசுகள் என்று சொல்வதில் அர்த்தம் இல்லாமல் போகும்.