விவசாயிகள் இயக்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை உறுதிப்படுத்துவோம்!

பாசிசத்திற்கெதிரான சண்டையை தீவிரப்படுத்த இகக (மா லெ) வை வலுப்படுத்துவோம்!


வரலாற்றின் முக்கியமான பிரச்சனைகள் பலவும் மக்களது தெருப்போராட்டங்கள் மூலம்தான் தீர்க்கப்படுகின்றன. தோழர் வினோத் மிஸ்ராவின் இந்த சொற்கள், நமது அனுபவத்தில், உண்மை என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது. கோவிட் பெருந்தொற்றை சாதகமாக எடுத்துக்கொண்டு, தனியார் பெரும் நிறுவனங்களிடம் விவசாயத்தின் கடிவாளங்களை, மோசடியாக நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் மூலம் மோடி அரசாங்கம் ஒப்படைக்கப் பார்த்தது. ஆனால், பஞ்சாப் விவசாயிகள், பெருந்தொற்றுக்கு மத்தியிலும் இயக்கத்தை கட்டி எழுப்பினர். அந்த இயக்கம், நாடு முழுவதுமுள்ள விவசாயிகளுக்கு உத்வேகமூட்டியது. கொடூர சட்டங்களுக்கு சவால் விட்டும், தீயவர்களெனச் சித்தரிக்கும் பரப்புரைகள், தீவிரமான தாக்குதல்களுக்கு மத்தியிலும் போராட்டத்தை ஒரு முழு ஆண்டு வரை நீடித்து நிலைக்க வைத்துள்ளனர். இறுதியாக, இந்த ஆணவமிக்க மோடி அரசாங்கத்தை, மூன்று சட்டங்களையும் ஒட்டு மொத்தமாக ரத்து செய்யவும் வைத்துள்ளனர். இவ்வாறு விவசாயிகள் போராட்டம் வரலாறு படைத்திருக்கிறது. விவசாயிகள் இயக்கம் இத்தகையதொரு சக்திமிக்க பாசிச எதிர்ப்பு தடையரணாக வளர்ந்திருப்பதைக் காண வாய்த்திருந்தால் தோழர் வினோத்மிஸ்ரா ஆகப் பெரும் மகிழ்ச்சியடைந்திருப்பார்.

மோடி அரசாங்கம்,  விவசாயிகள் இயக்கத்தின் சக்தியை புரிந்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் இயக்கம், பெருந்தொழில் குழும மூர்க்கத்தனத்துக்கு சவால்விடும் சக்தி கொண்டிருக்கிறது; மதவாத அணிச் சேர்க்கையை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்ட வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் சக்தி கொண்டது; மேலும், தங்களது உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அனைத்து சக்திகள் மத்தியிலும் அனைத்தும் தழுவிய நம்பிக்கையை வரவழைக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது. மிக முக்கியமான உ பி, பஞ்சாப் தேர்தல்கள் வரவிருக்கும் பின்னணியில், இந்த சட்டங்களை ரத்து செய்கிறபோது கூட,  மோடி அரசாங்கம் விவசாயிகள் இயக்கத்தோடு ஒரு பேச்சுவார்த்தை அடிப்படையிலான தீர்வுக்கு வர மறுத்து விட்டது. வேளாண் சட்டங்களை ரத்துசெய்யும் மசோதாவுக்காக சொல்லப்படும் ‘நோக்கங்கள், காரணங்கள் ‘ பற்றிய அறிக்கை, எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளை மகிழ்வுறச் செய்வதற்கு மோடி அரசாங்கம் மேற்கொள்ளும் பெருந்தன்மை நடவடிக்கை என (உண்மையை) மூடி மறைத்து கூறுகிறது. ஆயினும்,இந்த அரசாங்கத்தின் ஆணவமும் வஞ்சகமும் கொண்ட பரப்புரையால் அரசாங்கத்தின் தோல்வி, கையறுநிலையை மறைத்துக் கொள்ள முடியவில்லை.

லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது வன்முறை தாக்குதலை தூண்டிவிட்ட அமைச்சர் அஜய் மிஷ்ரா தெனியை பதவி நீக்கம் செய்வது, இயக்கத்தில் பங்கு பெற்ற விவசாயிகள், செயல்வீரர்கள் அனைவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வது, அனைத்து பயிர்களுக்கும் அனைத்து விவசாயிகளுக்குமான சட்டபூர்வமான விலை உத்தரவாதம் போன்ற தங்களது பிற முக்கிய கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்துவது முற்றிலும் சரியானதே. பஞ்சாப், அரியானா, மேற்கு உ பி விவசாயிகள் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான போராட்டங்களை வெற்றிகரமாக தலைமை தாங்கி நடத்தியுள்ளனர் என்றால், தற்போது மற்ற மாநிலங்கள் அதிலும் குறிப்பாக கொள்முதல் மிகக் கீழாக இருக்கிற குறைந்தபட்ச விலைக்கு குறைவாக விற்குமாறு தள்ளப்பட்டுள்ள மாநிலங்கள், விவசாயிகள் இயக்கத்தின் அடுத்த கட்டத்தில் பெரும் பங்கு வகித்தாக வேண்டும். தாங்கள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை மறுக்கப்படுகிறது. பெரும்பான்மையான தொழிலாளரது கடின உழைப்புக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுக்கப்படுகிறது. ஆனால் கம்பெனிகள், நுகர்வோர்களிடமிருந்து தொடர்ந்து அதிகரித்துவரும் அதிகபட்ச சில்லரை விலையை வசூலித்துக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார்கள். எனவே, குறைந்தபட்ச ஆதாரவிலைக்கான போராட்டம், வாழ்வதற்கான ஊதியத்திற்காகவும், உயர்ந்து வரும் விலைவாசியை கட்டுப் படுத்துவதற்குமான போராட்டத்துடன் இணைக்கப் படவேண்டும். 
 
(விவசாயிகள்) இயக்கம் வெற்றிபெற்றது எதனாலென்றால், அது பல மாதங்களாக கட்டமைக்கப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டதனாலும், விவசாயிகளை பல பத்து லட்சங்களில் தீவிர முனைப்புடனும், முறைசார்ந்த வகையிலும் திரட்டியதாலும்தான் என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும். விவசாயிகள் இயக்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியால் உருவாக்கப்பட்டுள்ள உத்வேகம், தற்போது விரிவாக அமைப்பைக் கட்டுவதற்கும், பரந்த அரசியல் அணிதிரட்டலுக்குமான உத்வேகமாக மாற்றப்பட வேண்டும். 

வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்த ஒரு வாரத்தில், அரசமைப்புச்சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நவம்பர் 26 அய், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வையே நிராகரிப்பதற்கென்றே மோடி கையலெடுத்துக் கொண்டார். அரசமைப்பு சட்டம் பற்றி அஞ்சுகிற,  அதிலும் குறிப்பாக அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையில் உயர்த்திப்பிடிக்கப்படும் லட்சிய உணர்வு, அரசமைப்பு சட்டத்தால் பற்றுறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளும், உரிமைகளுக்காகப் போராடும் வெகுமக்களது ஆயுதங்களாக மாறுவதைக் கண்டு அஞ்சி, உரிமைகளை கடமைகளுக்கு அடிபணியச் சொல்வதன் மூலம், பிரதமர் அரசமைப்புச் சட்டத்தை தலைகீழாக்க முற்படுகிறார். நெருக்கடி நிலையின் போதுதான், ஒரு அரசமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் குடிமக்களுக்கான கடமைகள் என்ற ஒரு பிரிவு அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்த ஆட்சி, ஜனநாயக நிறுவனங்கள் மீதும் கூட்டாட்சி வரையறை மீதும் அரசமைப்பு சட்ட மதிப்புகள் பற்றுறுதிகள் மீதும் தாக்குதலை தீவிரப் படுத்திவரும் நிலையில், பாசிச எதிர்ப்புப் பபோராட்டத்தை வலுப்படுத்திட விவசாயிகள் இயக்கத்தின் வெற்றியிலிருந்து உற்சாகத்தைப் பெற்றிட வேண்டும். விவசாயிகள் இயக்கமும் கூட, புதுப் பாதை காட்டிய சமக் குடியுரிமை இயக்கத்தாலும் இஸ்லாமியர்கள், பல்கலைக் கழக மாணவர்களால் சக்திபெற்ற வரலாற்று எழுச்சிமிக்க ஷாகின்பாக்  மாதிரியாலும் உத்வேகம் பெற்றுதுதான். 

2021 இந்திய மக்களுக்கான ஒரு பயங்கரமான ஆண்டாக இருந்திருக்கிறது. மக்களின் உயிர்களைக் காக்கும் பொறுப்பை அரசு துறந்துவிட்டது; மிருகத்தனமான ஒடுக்குமுறையை ஏவியது, கொடூர மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தியும், பொதுச் சொத்துகளை திட்டமிட்ட வகையில் விற்றும் வருகிறது. ஆனபோதும், வீரமிக்க போராட்டங்களாலும் ஏராளமான தியாகங்களாலும் வென்ற மக்களது வெற்றியைக் கொண்டும் இந்த ஆண்டை முடித்து வைக்கிறோம். உத்திர பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல்களுடன் புத்தாண்டு துவங்குகிறது.  நம்முடைய பலம், ஆற்றல்அனைத்தையும் திரட்டி பாசிச சக்திகளை பின்னுக்குத் தள்ள, இந்த தேர்தல்களை சக்திமிக்க மக்கள் இயக்கமாக மாற்றிட வேண்டும்.

இன்று, தோழர் வி எம்மின் காலம்தவறிய மரணத்தின் 23வது ஆண்டை கடைப்பிடிக்கும்போது, (அவர்) கருத்தியல் துணிவையும் அமைப்பு வலுவையும் ஒன்றிணைத்து தீரமிக்க முன்முயற்சியையும் மக்களின் அறுதியிடலையும் கொண்ட சக்திமிக்க ஒரு கம்யூனிஸ்ட் கட்சியாக இகக (மா லெ) வை வளர்க்க, அவரது வாழ்நாள் முழுக்கப் போராடியதை நாம் நினைவுகூர வேண்டும். மக்களது வெற்றிமிக்க அறுதியிடலுக்கான திறவுகோல் கட்சியை வலுப் படுத்துவதாகும். சவால்கள் வளர்ந்து வருவதோடு, கட்சி விரிவாக்கத்திற்கும் அனைத்தும் தழுவிய முன்முயற்சிகள், தலையீடுகளுக்குமான உயர்த்தப்பட்ட பங்கு பணிக்கான ஏராளமான ஆற்றல்களையும் கூட நாம் அடையாளம் காண முடியும். தருணத்தைக் கைப்பற்றுவோம்; 2022 அய் இன்னும் மேலான முயற்சிகளுக்கும் இன்னும் பெரிய வெற்றிகளுக்குமான  ஆண்டாக மாற்றுவோம்.

மத்தியக் கமிட்டி,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (லிபரேசன்)