தலையங்கம்
வாயாலே வடை சுடுவதை நிறுத்தமாட்டீர்களா
பிரதமர் மோடி ‘மன்கிபாத்’தில் பேசினாலும் ஐ.நா. மன்றத்தில் பேசினாலும் தமிழ் இலக்கியங்களில் இருந்து எதையாவது எடுத்துவிடாமல் இருக்கமாட்டார். அவ்வளவு தமிழ்ப்பற்று! இதைப் பார்த்தவுடன் இங்குள்ள சங்கிகளுக்கு, பார்த்தீர்களா.. பிரதமர் மோடியை.. தமிழ் மீது எவ்வளவு பற்றோடு இருக்கிறார்! என்று ஆனந்தக் கூத்தாடுவார்கள். மோடி தன்னுடைய சுட்டுரையில், தை 2ம் தேதி திருவள்ளுவர் நாள் என்பதால், கடந்த ஆண்டு தான் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையையும் திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்ட வீடியோவைப் பதிவிட்டு, திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதாக தமிழ் மொழியிலேயே பதிவிட்டு பெருமைப் பட்டுள்ளார். ஒக்கி புயலின் போது கன்னியாகுமரி கிட்டத்தட்ட அழிந்தே போனது. நூற்றுக்கணக்கான மீனவர்கள் மாயமானார்கள். அப்போது கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி, சேதங்களை எல்லாம் புகைப்படமாக சுவரில் ஒட்டி வைத்து ஓவியக் கண்காட்சி போல பார்த்து ரசித்தார். திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதாகச் சொல்லும் பிரதமர் மோடி, கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக இலங்கைக் கடற்படையினரால் சிறை வைக்கப்பட்டுள்ள, தமிழக மீனவர்கள் 68 பேர் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அவர்களை விடுதலை செய்வதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் ஒன்றிய அரசு இதுவரை எடுக்கவில்லை. இப்போது இன்னொரு அறிவிப்பு செய்துள்ளார் பிரதமர் மோடி. இனி ஜனவரி 16ம் தேதி ஸ்டார்ட்அப் நாளாகக் கொண்டாடப்படுமாம். இருக்கும் தொழில்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. ரயில்வே, தொலை தொடர்பு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் அதானிக்கும் அம்பானிக்கும் பெரு முதலாளிகளுக்கும் விற்றுக் கொண்டிருக்கும் மோடி, புதிய தொழில் தொடங்குபவர்கள் பற்றி பேசுகிறார். இந்தியாவின் வேலையின்மை 2021 டிசம்பரில் 8% உயர்ந்துவிட்டதாக இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்(Centre for Monitoring Indian Economy). இது 2020ல் இருந்ததை விட 7% கூடுதலாகும் என்கிறது. பல நாடுகளில் வேலையின்மை 2020ல் அதிகரித்தது என்கிற போதிலும் இந்தியாவைப் போல் இல்லை என்கிறார் உலக வங்கியின் முன்னாள் பொருளாதார வல்லுநர் கௌசிக் பாசு. வங்காள தேசத்தில் 5.3%, மெக்சிகோவில் 4.7%, வியட்நாமில் 2.3% என்பதாகத்தான் வேலையின்மை அதிகரித்துள்ளது என்று சொல்கிறார். அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழகத்தின் ஆய்வு 2020ல் மாதச் சம்பளம் பெற்றவர்கள் பெருமளவில் வேலையிழந்துள்ளனர் என்றும் இளம் தொழிலாளர்கள் 15&23 வயதுடையவர்கள் முடக்க காலத்தில் பெரியளவில் வேலையிழந்துள்ளார்கள் என்றும் கூறுகிறது. இந்த வேலையின்மைக்கு பெருந்தொற்றும் ஒரு பகுதிதான் காரணம். உண்மையில் இந்திய அரசின் கொள்கையில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பற்றியோ சிறு வணிகங்கள் பற்றியோ ஒன்றுமே இல்லை என்பதுதான் காரணம் என்கிறார் பேராசிரியர் பாசு. அதிகம் படித்தவர்கள் வேலை என்பது குதிரைக் கொம்பாகவும் படிக்காத ஏழைகளோ எதையாவது செய்து பிழைக்க வேண்டும் என்ற நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார்கள். மாதச் சம்பளம் பெறுபவர் களில் 45% பேர் வெறும் ரூ.9,750தான் மாதம் பெறுகிறார்கள். இது 2019ல் முன்வைக்கப்பட்ட குறைந்தபட்ச நாட்கூலியான ரூ.375க்கும் குறைவு. 2019ல் முன்வைத்ததை பின்னர் ஒன்றிய அரசு கைவிட்டுவிட்டது என்பது வேறு விசயம். இந்த லட்சணத்தில் மோடி ‘ஸ்டார்ட்அப் டே’ என்றும் உலகத் தரத்திற்கு உற்பத்தி செய்யவேண்டும் என்றும் வாயாலே வடை சுட்டுக் கொண்டிருக்கிறார்.
Image: Thanks to BusinessToday.in
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)