மாலெ தீப்பொறி விற்பனை இயக்கம் - ஓர் அனுபவம்
தமிழ்நாடு மாநிலக் கமிட்டியின் மாதமிருமுறை இதழான மாலெ தீப்பொறியில், புதுச்சேரிச் செய்திகள் தொடர்ச்சியாக வருவது, புதுச்சேரிக்கென்று தனிப்பக்கம் ஒதுக்கப்பட்டிருப்பது, புதுச்சேரி கட்சி உறுப்பினர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மா-லெ தீப்பொறி விற்பனை மற்றும் பரப்புதல் இயக்கத்தில் இணைந்து செயலாற்றிய தோழர் ஆர்.விஜயா, புதுச்சேரிக்கு மாற்றலாகி வந்து கட்சி வேலைகளுடன் இணைந்து செயலாற்ற ஆரம்பித்ததில் இருந்து தீப்பொறி பத்திரிகை விநியோகம், விற்பனையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இகக(மாலெ) புதுச்சேரி மாநிலக் கமிட்டியில் மாலெ தீப்பொறி விற்பனை, விநியோகம், பரப்புதல் ஆகியவற்றிற்கு தோழர் விஜயா பொறுப்பு. தற்போது கட்சி உறுப்பினர்கள், ஊழியர்கள், தொழிற்சங்க முன்னணிகள், இதர வெகுமக்கள் அமைப்பினர் மத்தியில் தீப்பொறி பத்திரிகை ஓர் அரசியல் ஆயுதமாக, அமைப்பாளராக மாறிவருவதை நடைமுறையில் காணமுடிகிறது. தற்போது புதுச்சேரி பகுதியில் இரண்டு வாரங்களுக்கு 100 இதழ் விற்பனையாகிறது. சந்தா சேர்ப்பு இயக்கமும் தொடர்ந்து நடைபெறுகிறது.
தீப்பொறி விற்பனை, விநியோகம், பரப்புதலை ஓர் இயக்கமாக நடத்தி வரும் தோழர் விஜயா அவர்களிடம் ஒரு நேர்காணல்.
கேள்வி: தீப்பொறி விநியோகம் மற்றும் விற்பனை மீது தங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
விஜயா: 2013 முதல் தீப்பொறி விற்பனை மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறேன். சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கட்சி வேலைகள் செய்து கொண்டிருந்தபோது தோழர்கள் மோகன், முனுசாமி ஆகியோருடன் சேர்ந்து விற்பனை மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுவந்தேன். தெரு பிரச்சாரம், நிதி வசூலில் ஈடுபடும் போதெல்லாம் தீப்பொறியும் சேர்த்து கொடுப்போம். ரூ 50/-& நன்கொடை கொடுப்பவர்களுக்கு இதழ் ஒன்று இலவசமாகக் கொடுப்போம்.
தீப்பொறி விநியோகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தீப்பொறி இதழ் மூலம் கட்சிக் கொள்கை, கோட்பாடுகள், நடப்பு அரசியல் பற்றி நமது நிலைப்பாடுகளை கட்சி உறுப்பினர்கள், வெகுமக்கள் அமைப்பு தோழர்கள் இதர வெளி அமைப்புகளிடமும் கொண்டு செல்ல உதவியாக உள்ளது.
புதுச்சேரியில் தீப்பொறி விநியோகத்தை எப்படி துவங்கினீர்கள்?
ஆரம்பத்தில் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் அவர்களுடன் நானும் கட்சி, தொழிற்சங்க கூட்டங்கள், கூட்டு இயக்கங்களுக்கு செல்வதுண்டு. என்னுடைய தோள் பையில் தீப்பொறி, லிபரேஷன் பத்திரிகைகளை எடுத்துக்கொள்வார். கூட்டங்களுக்கு வரும் தலைவர்கள், தோழர்களுக்கு விற்பனை செய்யச் சொல்வார். பின்னர் நானே இதழ்களை அனைத்துக் கூட்டங்களுக்கும் எடுத்துச் சென்று விற்பனை செய்ய ஆரம்பித்தேன். தற்போது தீப்பொறி இதழ் பல்வேறு அரசியல் பிரிவினரிடமும் பரவி உள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலக் கமிட்டி உறுப்பினரும் குறைந்தது 5 இதழ்கள் விற்பனை செய்கின்றனர். கிளைச் செயலர்கள், கமிட்டி உறுப்பினர்கள் வரை வாங்கவும் விற்பனை செய்யவும் ஊக்குவிக்கிறோம். ஆனால், கட்சி பத்திரிகையை தொழிற்சங்க தோழர்கள் அவ்வளவு ஆர்வமாக வாங்குவதில்லை. அதேவேளை அவர்களிடம் பேசி வாங்க வைக்கிறோம்.
தீப்பொறி விற்பனையை ஒரு வேலையாக பார்க்கிறீர்களா?
இல்லை. கட்சி வேலையின் ஒரு அங்கமாக பார்க்கிறேன். குறைந்தது 50 இதழ்கள் விற்பனை செய்கிறேன். இதை முன்னுரிமை வேலையாக எனக்கு இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.ஆனாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்கிறேன்.
இதர கட்சி / அமைப்பு தலைவர்கள், ஊழியர்களிடம் இதழ் விற்பனை அனுபவம் பற்றி?
இதர அமைப்பினர் ஆர்வத்துடன் வாங்குகின்றனர். கட்டுரைகள், செய்திகள் பயனுள்ளதாக இருப்பதாகச் சொல்கின்றனர். நானும் இதழ் வந்தவுடன் படித்துவிடுவதால் அவர்கள் சொல்வதை புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர்கள், புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனத் தலைவர் ஆர்வத்துடன் வாங்குகின்றனர். அரசு ஊழியர் சம்மேளன தலைவர் தீப்பொறி கட்டுரைகளை மறுவெளியீடு செய்வதாகச் சொல்கிறார்.
இகக(மார்க்சிஸ்ட்) மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் சுதா சுந்தர்ராமன் நமது பத்திரிக்கை சிறப்பாக உள்ளதாகச் சொல்கிறார். குறிப்பாக, முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க்ஷி.வைத்திலிங்கம்(காங்கிரஸ்) ஆகியோரிடம் பத்திரிகை கொடுக்கும்போதெல்லாம் பணம் கொடுத்து வாங்குவார்கள். இப்போது பல அமைப்பினர் மத்தியில் நான் பத்திரிகை மூலம் அறிமுகமாகியுள்ளேன்.
தீப்பொறியின் அடையாளமாக என்னைப் பார்க்கி றார்கள். ஆனால், எனது அடையாளம் தீப்பொறிதான்.
விற்பனையை அதிகபடுத்த உங்கள் ஆலோசனை என்ன?
நானும் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு கமிட்டி உறுப்பினரும் குறைந்தது 20 தனி இதழாவது விற்பனை செய்ய வேண்டும். ஆண்டு சந்தா சேர்ப்பு தொடர் இயக்கமாக நடக்க வேண்டும். தீப்பொறி வாசகர் வட்டம், உள்ளூர் கமிட்டி அளவில் ஏற்படுத்த வேண்டும். விற்பனை பணத்தை உடன் செலுத்த வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)