தோழர் கிதிஸ் பிஸ்வாலுக்கு செவ்வணக்கம்!

இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் இறுதி ஆண்டுகளில், தன்னுடைய பயணத்தைத் துவக்கிய, மற்றுமொரு மூத்த கம்யூனிச தலைவர் தோழர் கிதிஸ் பிஸ்வால் அவர்களை நாம் இழந்துவிட்டோம். அவர் மே 5, 1930ல், பூரி மாவட்டத்திலுள்ள திபுரி கிராமத்தில் பிறந்தார். பிருந்தாவன் பிஸ்வால் மற்றும் ரோகிணி தேவி ஆகிய பெற்றோருக்கு பிறந்த மூன்று மகன்களில், இவர் கடைசி மகனாவார். அவருடைய கிராமத்தின் பொது நன்மை மீது கரிசனம் கொண்ட உணர்வுடன் வளர்ந்தார். 1940&-41ல், அவருடைய கிராமம் மிகத் தீவிரமான காலரா தொற்று நோயை எதிர்கொண்டது. அதில், அவருடைய குடும்பத்தினர் 6 பேர் உட்பட 26 பேர் இறந்துவிட்டனர். இளம் கிதிஸ் கிராம மக்கள் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருப்பதைக் கண்டார். எனவே, சக கிராமத்தவர்களின் வளர்ச்சி, நல்வாழ்வுக்கான தேவை குறித்து ஆழமாக உணர்ந்தார். அதேநேரத்தில், அதிகரித்துக் கொண்டி ருக்கும் விடுதலை இயக்கத்தை நோக்கி, குறிப்பாக, 1942ன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நோக்கி ஈர்க்கப்படுவதாகவும் உணர்ந்தார்.

ஆனால், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே கிதிஸ், அவருடைய தந்தையை இழந்தார். அவருடைய படிப்பிற்கு இடையூறு ஏற்பட்டது. அவருடைய குடும்பத்தின் விவசாய வேலைகளில் ஈடுபட வேண்டிய நிலைக்கு ஆளானார். குறுகிய கால இடைவெளிக்குப் பிறகு, அவருடைய படிப்பைத் தொடர்ந்தார். ஒரு ஆசிரியர் பணியையும் மேற்கொண்டார். கிராம மட்டத்திலான அரசாங்க பணியாளராக சில காலத்திற்கு பணியாற்றினார். 1964ல், அந்த வேலையை விட்டுவிட்டு, மீண்டும் ஒரு குறுகிய காலத்திற்கு ஆசிரியர் பணிக்குத் திரும்பினார். அதன்பிறகு, முழுநேர கம்யூனிச அரசியலில் ஈடுபடுவது என முடிவெடுத்தார். ஏற்கனவே, 1958 இல்  அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருந்தார். 1964 இல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்உருவான பிறகு அதில் இணைந்தார். 1990ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)லிருந்து விலகி இந்திய மக்கள் முன்னணியிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-&லெனினிஸ்ட்)டிலும் இணைந்தார். ஒடிசா மாநிலக் கமிட்டி செயலாளராகவும், ராஞ்சியில் நடைபெற்ற 9 வது கட்சி காங்கிரஸ் வரை மத்தியக் கமிட்டி உறுப்பினராகவும் கடமையாற்றினார்.

அவருடைய செயலூக்கமான அரசியல் வாழ்வு முழுவதும் தோழர் கிதிஸ் பிஸ்வால், வெகு மக்களுக்கான புரட்சிகரத் தலைவராக இருந்தார். 1966 முதல் 1970 வரை, பூரி மாவட்டத்திலுள்ள கனாஸ் பஞ்சாயத்தின், புகழ்பெற்ற தலைவராக பணியாற்றினார். அதைத் தொடர்ந்த ஆண்டுகளில், நிலப் போராட்டங்களின், குத்தகை விவசாயிகள் மற்றும் மீனவர் உரிமை களுக்கான இயக்கத்தின் போர் குணமிக்கத் தலைவராக ஆனார். 1999 இல் சில்கா தனியார்மயமாக்க மசோதாவிற்கு எதிராக, சில்கா மீனவர்கள்  வீரமிக்க எதிர்ப்பு இயக்கத்தை இவரது தலைமையில் நடத்தி, தங்களுடைய மீன்பிடி உரிமைகளையும்  வாழ் வாதாரத்தையும் வெற்றிகரமாக பாது காத்தனர். கம்யூனிச கருத்தியல் மீதான தீர்மானகரமான உறுதிக்காகவும், அமைப்பின் மீது உணர்வுப்பூர்வமான அர்ப்பணிப்பிற் காகாவும் தோழர் கிதிஸ் பிஸ்வால் என்றும் நினைவில் கொள்ளப்படுவார். மோசமான உடல்நிலையில் காரணமாகவும், வயது முதிர்ச்சி யினாலும் முடக்கப் படும் வரை, புவனேஸ்வரில் உள்ள தனது வீட்டிலிருந்து புவனேஸ்வர் தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள கட்சி அலுவலகத்திற்கு, ஒவ்வொரு நாளும் மிதி வண்டியில் வருவார். அந்த அலுவலகம்தான், அவருடைய கவனமிக்க மேற் பார்வையிலும் தலைமையிலும் பின்னாளில், நாகபூஷன் பவன் என வளர்ச்சியடைந்தது. அது, ஒடிசா கட்சி வேலைகளின் மையமாக சேவை செய்த அதே நேரத்தில், பலவகை ஜனநாயக சக்திகளுக்கும், நகரத்தில் மேற்கொள்ளப் பட்ட முன் முயற்சிகளுக்கும் புகழ்மிக்க இடமானது. கட்சி மற்றும் பல வெகுமக்கள் அமைப்புகளின், அகில இந்திய கூட்டங்களும், பயிற்சிப் பட்டறைகளும் நடக்கும் மையமானது. ஒடிசாவின் கம்யூனிச இயக்க வளர்ச்சிக்காக, தோழர் கிதிஸ் பிஸ்வால் ஆற்றிய பங்களிப்பை கட்சி எப்போதும் போற்றும். ஒடிசாவில் கட்சி அமைப்பையும், அதன் தலைமையகமான நாகபூஷன் பவனையும் கட்டியெழுப்ப, அவருடைய ஆற்றல், உணர்வு, கவனிப்பு ஆகியவற்றுடன் தலைமைதாங்கிய அவருடைய பண்பு, என்றும் ஒட்டுமொத்த கட்சிக்கு நீடித்த உதாரணமாக நிலைத்திருக்கும். இன்றைய பாசிச எதிர்ப்பு போராட்டத்திலும், மேலெழுந்து வரும் மக்கள் போராட்டத்திலும் அவருடைய மரபு, ஒடிசாவிலும், அதைத் தாண்டியுமுள்ள கம்யூனிஸ்டுகளுக்கு, தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.