இகக(மாலெ)விடுதலை 10வது கட்சிக் காங்கிரஸ் ஆவணத்திலிருந்து...

தேசியச் சூழல்

பற்றிய தீர்மானம்

மூர்க்கமான பாசிச நிகழ்ச்சி நிரல்

(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ன் 10வது காங்கிரஸ் 2018, மார்ச் 23 முதல் 28 வரை பஞ்சாப் மாநிலம் மான்சாவில் நடைபெற்றது. அந்த காங்கிரசில்தேசிய சூழல்குறித்த இந்த மிக முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாசிசத்தின் எழுச்சி, தேசிய அரசியலில் அது ஏற்படுத்தியுள்ள விளைவுகள், அதை எதிர்த்துப் போராடி தோற்கடிப்பதற்கான வழிமுறைகள் குறித்து இந்த தீர்மானம் பேசுகிறது. பாசிசத்தின் தீவிரமடைந்து வரும் மூர்க்கத்தனம் அதற்கெதிராக பெருகி உறுதிப்பட்டு வரும் போராட்டங்கள் என்ற பின்புலத்தில் பாசிச எதிர்ப்பு களப்பணியாளர்களுக்கும் பலதரப்பட்ட முற்போக்கு சக்திகளுக்கும் நிச்சயம் இது பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில் கடந்த இதழ் முதல் மாலெ தீப்பொறி இந்த தீர்மானத்தை தொடராக வெளியிட்டு வருகிறது. வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.- ஆசிரியர் குழு)

1.            கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய அரசியல் நகர்வை கண்டுள்ளது; ஆளும் வர்க்கங்களின் மேலோங்கிய அரசியல் பிரதிநிதியான காங்கிரசின் இடத்தை, பாஜக தீர்மானகரமாக கைப்பற்றியிருக்கிறது. இந்தியா வின் நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக பாஜக, மத்தியில் அறுதிப்பெரும்பான்மை பெற்றுள்ளது மட்டுமின்றி, சில மாநிலங்கள் தவிர பிற எல்லா மாநிலங்களிலும் தனித்தோ அல்லது பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தோ, ஆளும்கட்சி யாகவும் மாறியுள்ளது. சமீபத்தில் அது, இடது கட்சி தொடர்ந்து 25 ஆண்டுகளாக அதிகாரத்தி லிருந்த திரிபுராவில் பெற்றுள்ள வெற்றியால் பாஜக வடகிழக்கு பிராந்தியம் முழுவதும் தன்னுடைய பிடியை இறுக்கிக் கொண்டிருக் கிறது. பாஜக, மத்தியிலும் மாநில அளவிலும் மேலோங்கிய ஆளும் கட்சியாக எழுந்துள்ளதை அடுத்து ஒட்டுமொத்த சங்பரிவாரமும் தங்கள் பாசிச நிகழ்ச்சிநிரலை இதுவரை இல்லாத வேகத்துடனும் மூர்க்கத் துடனும் கட்டவிழ்த்து விட இது உதவியுள்ளது.

2.            2014 தேர்தல்களில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப் பட்டதிலிருந்தே இந்த மூர்க்கம் வெளிப்படை யாகத் தெரிகிறது. அய்க்கிய அமெரிக்காவின் அதிபர் தேர்தல் பிரச்சாரம் போல், 2014 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை பாஜக நடத்தி, மோடியைச் சுற்றி, அவரது குஜராத் மாதிரியைச் சுற்றி ஒரு இதிகாசப் புனைவை கட்டியமைத்தது. காங்கிரஸ் இல்லாத இந்தியா போன்ற மோடியின் முழக்கங்கள், இந்தியாவை வென்றெடுப்போம் போன்ற அவரது பேரணியின் பெயர்கள், சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் இந்த மூர்க்கத்தை வெளிப்படுத்தின. அப்போது முதலே,பாஜக தனது தேர்தல் வெற்றியை (31 விழுக்காடு வாக்குப்பங்கை மட்டுமே பெற்று வென்றுள்ள பாஜக) உண்மையிலேயே இந்தியா வையே வென்று விட்டது போலவும் சங்&- பாஜகவின் கருத்தியலுக்கும் நிகழ்ச்சி நிரலுக்கும் ஏற்ப அனைத்தையும் மறுவடிவமைப்பு செய்ய உரிமம் பெற்றுவிட்டது போலவும் நடந்துகொள்ள துவங்கிவிட்டது. அரசியல் சாசனத்தின் மீது ஒரு பகிரங்கமான தாக்குதலை பாஜக கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஆனந்த் ஹெக்டே போன்ற, மோடியின் அமைச்சர்கள், அரசமைப்புச் சாசனத்தை மாற்றியமைக்கும் பாஜகவின் லட்சியம் பற்றி வெளிப்படையாகவே வலியுறுத்தி வருகிறார்கள்.

3.            இந்தியாவில் பாசிச தாக்குதல், அரசு, அரசு அல்லாத முழுவீச்சிலான சக்திகளாலும், அவை ஒத்திசைந்தும் ஒன்றோடொன்று கூட்டு சேர்ந்துகொண்டும், கட்டவிழ்த்துவிடப்படுகிறது. அரசு மேலும் மேலும் எதேச்சதிகாரமானதாக, ஊடுருவும் தன்மைகொண்டதாக மாறியுள்ளது. கும்பல் படுகொலைகள்; எதிர்ப்புக் கருத்துகள் தெரிவிக்கிற அறிவாளிப் பிரிவினர், செயல் வீரர்கள் குறிவைத்து படுகொலை செய்யப் படுவது, தீவிரமான வெறுப்பு பிரச்சாரம் ஆகியவற்றின் மூலம் சங் பரிவார் மதவெறி, சாதி வெறி, ஆணாதிக்க விதிகளை பலவந்தமாக திணிப்பதை வெளிப்படையாகவும் மறைமுக மாகவும் ஆதரிக்கிறது. குடியுரிமை என்ற சொல் முதற்கொண்டு குடியரசின் தன்மை வரையிலும் மோடி அரசாங்கம் இந்தியாவின் அரசமைப்புச் சாசன அடிப்படையையே சீர்குலைக்க முயற்சித்து வருகிறது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை இழிவுபடுத்துவது

4. நாடாளுமன்ற ஜனநாயக முறையில், மத்திய அமைச்சரவை மூலமான செயல்பாடுகள் என்னும் முறையை அப்பட்டமாக மீறி அய்க்கிய அமெரிக்க அதிபர் முறையில் மோடி தனது அரசாங்கத்தை நடத்தி வருகிறார்வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியை பொருளற்றதாக்குகிற அவர் அடிக்கடி மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களாகட்டும்; மிகவும் முக்கியமான உத்தரபிரதேச தேர்தல்கள் வரும் முன்பு வெளியான செல்லாத பண அறிவிப்பாகட்டும் முந்தைய அரசாங்கம் ஒப்புக்கொண்டதை விட பாதகமான நிபந்தனைகளுடன் ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தத்தை பிரான்ஸ் சென்றபோது அறிவித்ததாகட்டும், நள்ளிரவில் நடந்த நாடாளுமன்ற கூட்டு கூட்டத் தொடரில், இந்தியா விடுதலை பெற்றதுபோன்ற மற்றொரு தருணம் என்பது போல், ஜிஎஸ்டியை அறிவித்ததாகட்டும், நாளொன்றுக்கு ரூ.3 கோடி செலவில் மிகப்பெரும் அளவில் அரசு விளம்பரங்கள் வெளியிடுவது என்பதாகட்டும் இவ்வாறு எல்லாவகையிலும் அதிகாரத்தை முழுமுற்றாக ஒன்றுகுவிப்பது, சற்றும் வெட்கமின்றி, கட்டுக்கடங்காத தனிநபர் கலாச்சாரத்தை  முன்னகர்த்துவது என்பதுதான் மோடி அரசாங்கம்.

5.            ஆட்சியின் முதல் நாளில் இருந்தே மோடி அரசாங்கம் நாடாளுமன்ற நடைமுறைகளை, நிறுவனங்களை, மரபுகளை திட்டமிட்டவிதத்தில் மீறிவருகிறது; இழிவுபடுத்திவருகிறது. திட்ட ஆணையம் மூடப்பட்டு அதனிடத்தில், மக்கள் நலன் குறித்த அக்கறைகளுக்காக உதட்டளவில் கூட பேசாத சந்தேகத்துக்குரிய நிதி ஆயோக் கொண்டுவரப்பட்டது; பொருளாதாரத்தை மின்னணுமயமாக்கம் செய்ய வேண்டும் எனச் சொல்வது; நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்துவது; மோசடியான முறையில் ஆதார் சட்டத்தை நிறைவேற்றுவதுசர்ச்சைக்குரிய வேறுபல நடவடிக்கைகளை நிதி மசோதா வடிவில் நிறைவேற்றுவது போன்றவை அப்பட்டமாகத் தெரியும் ஓரிரு உதாரணங்களாகும்.

6.            ‘ஒரு நாடு, ஒரு தேர்தல்என்பதற்கான பாஜக வின் வளர்ந்து வரும் ஆரவாரங்கள் கூட்டாட்சி, அரசியல் பன்முகத்தன்மைக் கோட்பாடுகளை பின்னுக்குத் தள்ளும் முயற்சியாகும். மேலும், ஒரே சமயத்தில் தேர்தல் என்பதைப் பயன்படுத்தி மக்களின் அரசியல் தேர்வுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், பெரிய அளவில் அரசியல் ஒருபடித்தன்மையைத் திணிப்பது, எல்லா மட்டங்களிலுமுள்ள அரசியல் உரையாடல்களையும் ஆளும் கட்சியும் பெரும் ஊடகங்களும் முன்வைக்கும் கதையாடலுக்கு கீழ்ப்படுத்துவது என்பதாகும்.

7.            இந்த ஆட்சியால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் பலரும் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்கள் போலவே நடந்து கொள்கிறார்கள்; எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட ஆளுநர் பதவியை தவறாகப் பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கிறார்கள், மதவெறி துருவச்சேர்க்கையை பெருக்கி வருகிறார்கள். ஆளுநர் பொறுப்பு என்பது மாநிலங்கள் மீது மத்திய அரசுக்கு ஒரு மேல்நிலை அதிகாரத்தை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டது; ஆனால் இந்த பதவிப் பொறுப்பு தற்போது பாஜக வால், தனது சொந்த அதிகாரப் பறிப்பு நலன்க ளுக்காகவும் நமது அரசமைப்புச் சட்டத்திலுள்ள கூட்டாட்சி சமநிலையிலுள்ள ஒவ்வொரு அம்சங்களையும் சிறுமைப்படுத்தி இந்தியாவை முற்றமுழுக்க ஒரு ஒற்றையாட்சி அமைப்பு முறையாக்கிவிடுவதற்காக (ஆளுநர் அலுவலகம்) தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நட்புசார் முதலாளித்துவம், ஊழல், பொருளாதாரப் பேரழிவு

8.            பிரதமர் கைகளில் அதிகாரம் குவிந்திருப்பதும் நாடாளுமன்ற மரபுகளும் வழிமுறைகளும் சிறுமைப்படுத்தப்படுவதும்: தாராளமய, தனியார்மய, உலகமய பொருளாதார நிகழ்ச்சிநிரல் ஈவிரக்கமின்றி பின்பற்றப் படுவதற்கு உதவுகின்றன. அதிகாரத்துக்கு வந்த உடனேயே நரேந்திரமோடி, 2013 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில், நிலம், வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு மேலான இழப்பீடு, மறுவாழ்வு நடவடிக்கைகள் எனப் போராட்டங்கள் மூலம் வென்றெடுக்கப்பட்ட பாதுகாப்புகள், மேலான இழப்பீடு நிபந்தனை களை, அகற்ற முயற்சி செய்தார். கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததால் நிலம் கையகப்படுத் துதல் அவசரச் சட்டத்தை அவரால் சட்டமாக்க முடியாமல் போனது. ஆனால், அவரது அரசாங்கம் தனது நிகழ்ச்சிநிரலை தொடர்ந்து பின்பற்றுவதை, எல்லா விதங்களிலும் கார்ப்பரேட் நலன்களை முன்நகர்த்துவதை அது தடுத்து நிறுத்திடவில்லை. மொத்த இந்தியப் பொருளாதாரத்தையும் அந்நிய முதலீட்டுக்கு திறந்துவிடுவது, ‘இந்தியாவில் உற்பத்திசெய்என்ற பெயரில் அந்நிய முதலீட்டை வரவழைப் பது, கூட்டு முயற்சிகள், அரசு-தனியார் பங்கேற்பு ஆகிய பெயர்களில் தனியார்மயத்தை திட்ட மிட்டு முன்நகர்த்துவது, பொதுத் துறை சொத்துகளை, நிறுவனங்களை முழுவதுமாக விற்றுவிடுவது ஆகியவை மோடி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையின் மய்யமான அழுத்தமாக உள்ளது; இது வளர்ச்சி என்ற பேரால், (மக்களை) அதிகரித்த அளவில் உடமைகள் பறிக்கப்படுவதற்கும் மக்கள், வாழும் இடங்களில் இருந்து வெளியேற்றப் படுவதற்கும் இட்டுச் சென்றுள்ளது.

9. வங்கித் துறையை மறுகட்டமைப்பு செய்வது, பொருளாதார பரிவர்த்தனைகளை மின்னணுமயமாக்குவது ஆகியவை மோடி அரசாங்கத்தின் பொருளாதார திட்டத்தின் மற்றுமொரு முக்கியப் பகுதியாக உள்ளது. இந்திய வங்கித் துறை எதிர்கொள்ளும் நெருக் கடிக்கு அடிப்படை காரணம், செயல்படா சொத்துக்களின் மிகப்பெரும் சுமை என்பது நன்கு தெரிந்த ஒன்றாகும்; இது (செயல்படாசொத்து) மிகப்பெருமளவில் திரும்பச் செலுத்தப்படாத கார்ப்பரேட் பெரும் கடன்களுக்கு பயன்படுத்தப் படுகிற ஒரு தொழில்நுட்ப சொல்லாகும். கடனை திருப்பிச் செலுத்தாதவர்களை தண்டிப்பதற்கு பதிலாக, அவ்வப்போது, கடன் தள்ளுபடி, மீட்புமுடிப்பு என அரசாங்கம் (அவர்களுக்கு) வழங்கி வருகிறது. செல்லாதபணம் நடவடிக்கை மூலம் புழக்கத்தில் இருந்த 86 விழுக்காடு பணத்தை கட்டாயமாக திரும்பப் பெற்ற பிறகுஇப்போது அரசாங்கம், வங்கியில் உள்ள (பொதுமக்கள்) முதலீட்டை வங்கிப் பங்குகளாக மாற்றி வங்கிகளை மீட்பது பற்றியும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. மின்னணு மயமாக்கம், ஆதார் முதல், நிதித் தீர்வு, முதலீட்டுப் பாதுகாப்பு (எப்ஆர்டிஅய்) மசோதாவின் சில கொடூரமான பிரிவுகள் வரை, நிதித்துறையை மறுகட்டமைப்பு செய்வது தொடர்பான எல்லா முன்வைப்புகளும் சர்வதேச மூலதன எஜமானர்கள் முன்வைக்கிற திட்டத்தின்படி இருப்பதையும், இவற்றுள் பெரும்பாலானவற்றுள் மோடியும் அவரது கட்சியும் ஆட்சிக்கு வந்த பிறகு தலைகீழ் நிலை எடுத்துள்ளன. உலக நிதிநிலையிலிருந்து ஒப்பீட்டு ரீதியிலான பாதுகாப்பு அல்லது அதனுடன் ஒன்றிணையாததும்தான் சர்வதேசநிதி நெருக்கடியின் பேரழிவிலிருந்து இந்திய நிதித்துறையை மிக முக்கியமான வகையில் பாதுகாத்துள்ளது. இந்திய நிதித்துறையை சர்வதேசநிதி மூலதனத்தின் கொந்தளிப்பு, அதன் கூர்மையான தாக்குதல் ஆகியவற்றிலிருந்து இந்திய நிதித்துறையை பாதுகாக்கும் இறையா ளுமை மிக்க பாதுகாப்புகள், தடைகளை பின்னுக்குத் தள்ளுவதன் மூலம், மோடி அரசாங்கம், இந்தியப் பொருளாதாரத்தை, வெளியிலிருந்து வருகிற அழுத்தங்களால், அதிர்ச்சிகளால், படுபயங்கரமானவிதத்தில் எளிதில் இரையாகக் கூடியதாக ஏற்கனவே மாற்றிவிட்டது.

10.         ஊழல், நட்புசார் முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு எதிராக அதிகரித்து வந்த மக்கள் சீற்றத்துக்கு மத்தியில், அடுத்தடுத்து வெளிப்பட்ட பெரும் மோசடி ஊழல்களுக்காக அய்முகூ அரசாங்கத்தை தாக்கியே மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால், கடந்தகாலத்தில் இருந்த எந்தவொரு அரசாங்கமும், மோடி அரசாங்கம் போல், விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச்சில கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுடன் மிகநெருக்கமாக அடையாளப் படுத்தப்பட்ட தில்லை. நாட்டின் இயற்கை வளங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகள், வங்கிநிதி ஆகியவற்றை கார்ப்பரேட் கொள்ளைக்கு உள்ளாக்குவது; வெளிநாடுகளில் அதானி - அம்பானிகளின் நலன்களை முன்னெடுப் பதென இந்த அரசாங்கம் மிகக்குறுகிய காலத்திலேயே நட்புசார் முதலாளித்துவத்தின் முழுவடிவமாக மாறியுள்ளது. முன்பு விஜய் மல்லய்யா, இப்போது நீரவ் மோடி போன்ற மிகப்பெரிய பொருளாதார குற்றவாளிகள் நாட்டைவிட்டு வெளியேற அனுமதித்ததில் இந்த அரசாங்கம் உடந்தையாக இருந்தது, ஜெய் அமித் ஷாவின் சொத்து திகைப்பூட்டும் அளவுக்கு பெருகியது போன்ற முறைகேடுகளை அம்பலப்படுத்தும் ஊடகங்கள் மிரட்டப்படுவது; ரபேல் போர் விமானம், என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்பதை, வர்த்தக ரகசியம், தேசப்பாதுகாப்பு என்றபேரால் நாடாளு மன்றத்துக்கும் சொல்லாமல் மறுத்தது ஆகியவை, ஊழல் விஷயத்தில் அதன் அப்பட்டமான பாசாங்குத்தனத்தை அம்பலப் படுத்துகின்றன. அரசாங்கத்தின் ஒவ்வொரு முக்கிய பொருளாதார முடிவும் சாமான்ய மக்கள்மீது கடும் துன்பத்தையும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில முதலாளிகளுக்கு மிகப்பெரும் ஆதாயத்தை தருவதாகவுமே உள்ளது.

 

ஆழமுறும் விவசாய நெருக்கடி, பெரும் வேலையில்லா திண்டாட்டம், அதிகரித்துவரும் ஏற்றத்தாழ்வு

11.         சிறுவீத உற்பத்தி, சிறுவீத வணிகத்தை சீர்குலைத்து அழித்ததோடு, விவசாயத் துறை மீதும் தீவிரப்பட்டதொரு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடன் தள்ளுபடி, கட்டுப்படியாகும் விலை கேட்கும் விவசாயிகளும் கிராமப்புரத் தொழிலாளர்களும் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஜார்க்கண்டில் நிலப்பறிக்காக விவசாயிகள் மீது, பழங்குடியினர் மீது மீண்டும் மீண்டும் நடக்கும் துப்பாக்கிச் சூடு; உத்தரபிரதேசத்தில், மகாராஷ்ட்ராவில், ராஜஸ் தானில் கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகள் பரிகாசத்துக்கு உள்ளாக்கப்படுவது, உத்தரபிரதேசத்தில், பீகாரில் உழைக்கிற விவசாயிகள் பெருமளவில் அவர்கள் நிலங்க ளிலிருந்து வெளியேற்றப்படுவது, அசாமில், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் விவசாயிகளின் தலைவர்கள் கைது செய்யப்படுவது ஆகிய இவை அனைத்தும், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங் களில் விவசாயிகள் மீது அரசாங்கம் மெய்யான போர் தொடுத்துள்ளதற்கு சான்றுகளாக உள்ளன. பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் பாஜக கட்டவிழ்த்துவிட்டுள்ள மதவெறி நச்சுப்பிரச்சாரம் விவசாயப் பொருளாதாரத்திற்கு பெருத்த சீர்குலைவை, சேதத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, கால்நடை விற்பனை, பால்பொருட்கள் உற்பத்தி, இறைச்சி விற்பனை, உணவு விடுதித் தொழில் என ஒரு சங்கிலித் தொடரான நடவடிக்கை களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடு சரிந்துவரும் காரணத்தாலும் ஒவ்வொரு நலத்திட்டத்தையும் ஆதாருடன் இணைக்கப்பட்டதனால் உண்டான சீர்குலைவாலும் கூடுதலாக ஊரகப் பொருளா தாரமும் பல்வேறு நலத்திட்டங்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

12.         விவசாய நெருக்கடியும் உற்பத்தி, வர்த்தகம் என்ற இரண்டிலும் சிறுதொழில் அதிகரித்த அளவில் பாதிப்புக்கு உள்ளாகி யிருப்பதும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியையும் மிகவும் அஞ்சத்தக்க வகையில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது. உண்மையில் இந்தியப் பொருளா தாரம், வேலை வாய்ப்பில்லாத வளர்ச்சி என்பதிலிருந்து முழுமுற்றான வேலைவாய்ப்பு எண்ணிக்கையில் நிகர வீழ்ச்சியுடனான வேலை வாய்ப்பு இழப்பு வளர்ச்சி என்ற அச்சுறுத்தும் மாற்றமாக உருவாகிக் கொண்டிருக்கிறதுஅரசு மற்றும் பொதுத்துறை உள்ளிட்ட அமைப்பாக் கப்பட்ட துறையில் ஆட்குறைப்பு நடந்துவரும் போது, கடந்த சில பத்தாண்டுகளில் கணிசமான வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டிருந்த தகவல்தொழில்நுட்பம் மற்றும் பிற ஏற்றுமதிசார் தொழில்கள், சர்வதேச பொருளாதார நெருக்கடி, மோடி அரசாங்கம் மனம்போன போக்கில் எடுத்த அதிலும் குறிப்பாக செல்லாதபண நடவடிக்கை, ஜிஎஸ்டி ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனஆண்டுக்கு 2 கோடி வேலைகளை ஏற்படுத்துவது என்ற வாக்குறுதியால் அதிகாரத் துக்கு வந்த மோடி அரசாங்கம், இப்போது வேலை தேடுபவர்களைப் பார்த்து, வேலை தருபவர்களாக மாறுங்கள் என்று சொல்லி வருவதோடு (சராசரி கடன் அளவான ரூ50,000 க்கும் குறைவான) முத்ரா சிறு கடன் திட்டத்தை இதுவரை இல்லாத ஆகப்பெரிய வேலை உருவாக்கத் திட்டமாக பெரிதாக்கிக்காட்டுகிறது.

13. பிரதமர் மோடி, உலக, உள்ளூர் நிறுவனங்களுக்குஎளிதாக தொழில்நடத்தும்வழியை வழங்கி வருவதாக மார்தட்டிக் கொள்கிறார். ஆனால், இதன் காரணமாக, தொழிலாளர், சுற்றுச்சூழல் சட்டங்கள் அரிக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகின்றன. ஆட்சியின் கார்ப்பரேட் சார்பு தோற்றத்துக்கு முகமூடியாக, மோடியும் அவரது அமைச்சர்களும் சமீப காலமாக, மிகவும் கவர்ச்சிகரமானஎளிதாக தொழில் செய்வதுஎன்பதற்கு அக்கம்பக்கமாகவேஎளிதாக வாழ்வதுஎன்பது பற்றியும் பேசிவருகின்றனர். ஆனால், இந்த வஞ்சகமான பரப்புரை, அதிர்ச்சியளிக்கும் பட்டினிச்சாவுகள், சாகுபடியாளர் தற்கொலை களால் நொறுங்கிப்போய் கிடக்கிறது. புதிய பயிற்சியும் சம்பளம் பெறும் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்குப் பதிலாக வேலைவாய்ப்பற்றவர்கள், அமைப்புசாரா துறையில் ஏதாவதொரு தெரு வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக் கின்றனர்; மேலும் அரசாங்கம், பக்கோடா விற்றுப் பிழைப்பது போன்றவற்றைக்கூட சுயவேலைவாய்ப்பு அளித்துவிட்டதாக கூறிக் கொள்கிறது, இவ்வாறு, மோடியின்திறன் இந்தியாதிட்டம் வெற்றுவேட்டாக அம்பலப்பட்டுக் கிடக்கிறது. உண்மையில், தெரு வியாபாரிகள், ‘எளிதாக வாழ்வதும்’ ‘எளிதாக தொழில்நடத்துவதும்அவர்கள் தெருக்க ளிலிருந்து விரட்டப்படும்போது, இரண்டுமே தாக்குதலுக்கு ஆளாகிறது என்பதை துயரத்துடன் சுட்டிக் காட்டுகின்றனர். உலக வளர்ச்சிக் குறியீடுகள், (சர்வதேச தொழிலாளர் அமைப்பு, அய்எல்ஓ புள்ளிவிவரங்கள், மார்ச் 2017) இந்தியாவில், மொத்த வேலைவாய்ப்பில், கூலி பெறும், சம்பளம் பெறும் வேலை விழுக்காடு 21.2% ஆக மட்டுமே இருக்கிறது; இது, தெற்காசிய சராசரி (26%), பங்களாதேஷ் (44.5%), பாகிஸ்தான் (39.6%) ஆகியவற்றோடு அவமானகரமாக பின்தங்கியிருக்கிறது; மேலும், பெரும் கடன்சுமைக்கு ஆளான ஏழை (எச்அய்டிசி) நாடுகளை விடவும் (28.9%), குறை வளர்ச்சி கண்ட நாடுகளை விடவும் (33.3%) பின்தங்கியிருக்கிறது. ஒவ்வொரு நாட்டுக்குமான முறையான கண்டறிதல் (எஸ்சிடி) என்ற உலக வங்கி வரைவு அறிக்கை, இந்தியா பெரும் பான்மை மக்களை ஆபத்தான குறை-வருமான பிழைத்திருக்கும் நடவடிக்கைகளில் தள்ளி விடுவதற்குப் பதிலாக, முறையான, சம்பளம் பெறும், வருமானம் வளர்ந்து வருகிற வேலைகளை உருவாக்கிட வேண்டுமென்று வலியுறுத்துகிறது.

14. சரிந்துவரும் வளர்ச்சி, பெரும்பான்மை இந்தியர்களின் வீழ்ந்து வரும் உண்மை வருமானம் என்பதற்கு மத்தியில், ஆகப் பெரும்பான்மை இந்தியர்களிடையிலான ஏற்றத்தாழ்வு கூர்மையாக வளர்ந்து வருகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில், குறிப்பாக சாமான்ய மக்களுக்கு பொருளாதார பேரழிவு வளர்ந்து கொண்டிருக்கும்போது, கட்டுக்கடங்காத பெருந்தொழில்குழும ஆக்கிரமிப்பு காணப்படுகிற மோடியின் ஆட்சியில், இந்த இயக்கப்போக்கு தொடர்ந்து வேகம் பெற்றுள்ளது. 2014க்குப் பிறகு, முதல் 1% பேரின் செல்வம், 2014ல் 41%ல் இருந்து 2015ல் 53% எனவும் 2016ல் 58.4% எனவும் அதிகரித்துள்ளது. 2017ல் உருவான செல்வத்தில் 73% முதல் 1% பணக்காரர்களிடம் சேர்ந்துவிட்டது என்று சமீபத்திய ஆக்ஸ்பாம் அறிக்கை கூறுகிறது. அதேநேரம், உலகில் மிகவும் பசித்திருக்கும் நாடாக இந்தியா உள்ளது; 2017 சர்வதேச பட்டினிக் குறியீட்டில் 119 நாடுகளுள் இந்தியா 100 ஆவது இடத்தில் உள்ளது.

சிறுபான்மையினர், தலித்துகள் மேலும் அனைத்துவிதமான அதிருப்திகளின் மீதான தாக்குதல்

15.  மூர்க்கமான பெருந்தொழில் குழும ஆதரவு பொருளாதார நிகழ்ச்சிநிரல் முன்னெடுக் கப்படுவதற்கு கூடவே அதீத தேசியவாத கூக்குரலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு எதிர்ப்புக்குரலும் ஒவ்வொரு சங்கடமான கேள்விகளும் தேசவிரோதம் என்று பட்டம் சூட்டப் பட்டு, மவுனமாக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் எல்லைகளைக் காக்கும் ராணுவ வீரர்களின் தியாகத்துக்கு எதிராக நிறுத்தப்படுகின்றன. இந்த அதீத தேசியவாதம், நச்சுத்தன்மை கொண்ட இஸ்லாமிய எதிர்ப்பு வெறுப்பு, வன்முறை ஆகியவற்றுக்கு ஒரு மெல்லிய திரைமட்டுமே. மாட்டுக்கறி உண்பது, கால்நடை வர்த்தகம் தொடங்கி, சங்பரிவாரத்தால்காதல் விடுதலைஎன்றழைக்கப்படும் மதம் மாறிய திருமணங்கள் என ஒரு வதந்தியோ, அல்லது கண்மூடித்தனமான குற்றச்சாட்டோ, எதுவும் எங்கும் எந்த நேரத்திலும் முஸ்லீம்கள் நசுக்கப்படுவதற்கு சொடுக்கு விசையாகி விடுகின்றன. முகமது அக்லாக் நடு இரவில் அவரது வீட்டிலிருந்து வெளியே இழுத்துவரப் பட்டு கொல்லப்பட்டதைக் கண்டோம். ஜார்க்கண்டில், இம்தியாசும் மஜூலும் கொல்லப்பட்டு மரத்தில் தொங்க விடப்பட் டதைக் கண்டோம். ராஜஸ்தான் சாலையொன்றில் பெஹ்லுகான் அவரது வண்டியிலிருந்து இழுத்து தள்ளப்பட்டு பட்டப்பகலில் கொல்லப்பட்டதைக் கண்டோம். ஜூனைத் என்ற இளைஞர் நெரிசலான ரயில்பெட்டியொன்றில் குத்திக் கொல்லப்பட்டதையும் கண்டோம். தூய்மை இந்தியா என்ற பேரால், பெண்கள் அவமானப் படுத்தப்படுவது, வன்முறைக்கு உள்ளாக்கப்படு வதற்கு எதிராகப் போராடிய தோழர் ஸாபர்கான்ஹூசைன் கொல்லப்பட்டதையும் கண்டோம். முகமத் அப்ரசூல் அடித்துக் கொல்லப்பட்டது காணொலிப் பதிவாக்கப்பட்டு, ‘காதல்விடுதலைக்கு எதிரான போதனை விளக்கத்துடன் சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதையும் கண்டோம். இஸ்லாமிய பெண்கள் அமைப்புகள் நீண்ட காலமாக நடத்திய சமூக, சட்டப் போராட் டங்களின் விளைவாக உடனடி முத்தலாக் எனும் தன்னிச்சையான நடைமுறை செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இஸ்லாமிய ஆண்களை அவதூறு செய்யவும் துன்புறுத்த வுமான கருவியாக இத்தீர்ப்பை மாற்றிட முயற்சிக்கப்பட்டு வருகிறது.

16. இஸ்லாமியர்கள் ஒரு சமூகமாக குறிவைக்கப்படும்போது, சங்க் படையின் மூர்க்கம் தலித்துகள் மீதும் அதே அளவுக்கு திருப்பப்படுகிறது. சங்க் படையினர் பல்வேறு பொறுப்புகளுக்கும் அதிகார நிறுவனங்களுள் பலவற்றிலும் உயர்பதவிகள் அடைந்ததை அடுத்து, தலித்துகளுக்கெதிரான தாக்குதல் விரிந்த அளவில் தீவிரமடைவதில் போய் முடிந்துள்ளன. சங் குடும்பத்தினருக்கும் பீகார் நிலவுடமை யாளர்களின் தனியார் படைகளுக்குமிடையே உள்ள அணுக்கமான உறவு, அதிலும் குறிப்பாக, 1990களின் இறுதிப்பகுதியிலும் 2000ன் துவக்கத்திலும் தொடர் படுகொலைகளை நடத்திய மிகவும் அவப்பெயர் பெற்ற ரன்வீர் சேனாவுக்கும் இடையிலான உறவு நன்கறியப் பட்டதுதான்: இப்போது அது தொலைதூரங் களிலுள்ள கிராமப்புரங்களிலிருந்து பெருநகரங் களிலுள்ள பல்கலைக்கழக வளாகங்கள் வரை தலித்துகள் மீதான பொதுமைப்படுத்தப்பட்ட வன்முறை ஏவப்பட்டு வருவதையும் பார்க்கிறோம். அய்தராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் இளம் தலித் ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா நிறுவனரீதியாக படுகொலை செய்யப்பட்டது; குஜராத்தின் உனாவில், தலித் இளைஞர்கள் சாட்டையால் அடிக்கப்பட்ட சம்பவம், காணொலி படமாக்கப்பட்டது; சகரன்பூரில் தலித்துகள் தாக்கப்பட்ட சம்பவம், பீம் படையின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவண் தேசப்பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவது; இந்து யுவவாஹினி பதாகையுடன் மூர்க்கத்தனமான மேல்சாதி இளைஞர்கள் யோகி ஆதித்தியநாத்தின் .பி யிலும் இப்போது பீகாரிலும் நடத்தும் காலித்தனம்; பாஜக ஆளும் மகாராஷ்ட்ராவில் அதிகரித்த அளவில் தலித்துகள் மீது நடந்து வரும் தாக்குதல் என, தாக்குதல் விதம் தெளிவாக இருக்கிறது. இஸ்லாமியர்களோ அல்லது கிறித்துவர்களோ, மதச் சிறுபான்மை யினருக்கு எதிரான மதவாத ஆக்கிரமிப்பு இயக்கத்தில் தலித்துகளை படைவீரர்களாகச் சேர்க்க சங்பரிவார் முயற்சி செய்கிறபோதும் ஆர்எஸ்எஸ் கருத்தியலில் மதவெறியும் சாதிவெறியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகவே உள்ளன.

17.         மதவெறி, சாதிவெறி மூர்க்கம் தீவிரப்படு வதானது, பெண்கள் சந்தித்து வரும் உச்சம் தொட்ட இறுக்கமான கட்டுப்பாடுகளையும் தார்மீகக் காவலையும் வன்முறையையும் காட்டுகிறது. இவை, பழைய காப் பஞ்சாயத் துகளால் மட்டுமல்ல, ரோமியோ எதிர்ப்புக் குழுக்கள் என அறிவித்துக் கொண்டு சாலைகளில் திரியும் புதிதாக உருவாகியுள்ள கண்காணிப்புக் குழுக்களாலும் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. இக்குழுக்களுக்கு சட்டம் ஒழுங்கு எந்திரத்தின் மறைமுக அல்லது வெளிப்படையான ஆதரவும் இருக்கிறது. ‘மகள்களைப் பாதுகாப்போம், மகள்களை படிக்கவைப்போம்போன்ற வஞ்சக முழக்கங்கள், முத்தலக் மசோதா ஆகியவற்றைச் சொல்லி, மோடி அரசாங்கம் தன்னை பெண்கள் ஆதரவு அரசாங்கமாக காட்டிக்கொள்ள முயற்சித்து வருகிறது. ஆனால், வாரணாசி இந்து பல்கலைக்கழகம் போன்ற ஒரு பல்கலைக்கழக வளாகத்தில், நீதித்துறையின் மிக உயர்ந்த மட்டத்திலுள்ள நீதிமன்ற அறையில் நீதி கேட்டு எழும் குரல்கள், பெண்கள் மீதான ஆணாதிக்கத் தாக்குதல்கள் தீவிரமடைவதையும் பரவுவ தையுமே காட்டுகின்றன. இந்தப் பெண்கள் விரோத கலாச்சாரம் மனுஸ்மிருதி கொள்கை களிலும் மரபுகளிலும் வேர்கொண்டுள்ளன என்பதையும் சாதி ஒடுக்குமுறை, ஆணாதிக்க மேலாதிக்கத்துக்கான கையேடான இந்த மனுஸ்மிருதியைத்தான் இந்தியாவின் இறுதியான, அசலான அரசமைப்புச்சட்டம் என ஆர்எஸ்எஸ் தூக்கிப்பிடிக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

18.         இஸ்லாமியர்கள், தலித்துகள் (மாவோ யிஸ்டுகள் அல்லது கிறித்துவர்கள் என்று கூறப்பட்டு குறிவைக்கப்படும் ஒரு பகுதி பழங் குடியினர்), பெண்கள் மீதான வெறுப்பும் வன்முறையும், சங்கிகளின் கருத்தியல் வரை யறையின்படி, அது கம்யூனிஸ்டுகள், இடதுசாரி, தாராளவாத அறிவாளிப்பிரிவினர் செயல்பாட்டாளர்கள் வரையும் கூட விரிகிறது. நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்எம் கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்ற பகுத்தறிவாளர்கள், சமூக நீதி பிரச்சாரகர்கள் கொல்லப்படுவதும் (அவை) கொண்டாடப்படுவதும் கூட நடக்கிறது. மாணவர் தலைவர்கள், இளைஞர் செயல்வீரர்கள் மீது தேசத்துரோக வழக்கு புனையப்படுகிறது அல்லது தேசப்பாதுகாப்பு சட்டம் ஏவப்படுகிறது. உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிற, பொறுப்பேற்பது தொடர்பான சங்கடமான கேள்விகளை எழுப்புகிற பத்திரிகையாளர்கள் வேட்டையாடப்படுகின்றனர். சமூக ஊடகத்திலும் பிரதான நீரோட்ட மின்னணு, அச்சு ஊடகங்களில் எதிர்ப்புக்குரல்களை நசுக்க, அச்சுறுத்த ஒரு பெரும்படையே உருவாக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பல பகுதிகளிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அலுவலகங்கள், செயல்வீரர்கள், திருவுருக்கள், குறியீடுகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. திட்டமிட்டவாறு வெறுப்புப் பொய்களை பரப்புவதன் மூலம் அரசு ஒடுக்குமுறை, அரசு ஒப்புதல் பெற்ற தனியார் வன்முறை என்ற சேர்க்கை மூலம், எதிர்ப்புக் குரல்கள், ஒடுக்கப்படுவது ஆகியவை, மோடியின் இந்தியாவில் ஏராளமாக காணப் படுகின்றன.

19. உக்கிரமான அரசு ஒடுக்குமுறையையும் எதிர்கொண்டு தங்களது சுய நிர்ணய உரிமைக்காக நீண்டகால போராட்டங்கள் நடத்திவரும் காஷ்மீர் போன்றதொரு மாநிலத்தில், ஸ்ரீநகரில் பாஜக அரசு அதிகாரத்திலும் பங்கேற்றிருக்கும்போது, அரசியல்சாசன அடிப்படையிலான ஆட்சி என்ற பாசாங்கைக்கூட உதறிவிட்டு சாமான்ய காஷ்மீரிகளை போர்க்கைதிகள் போல நடத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, காஷ்மீர் மக்கள் மீதான மட்டுப்படாத இந்திய அரசின் ஒடுக்குமுறையை அடுத்து, காஷ்மீர் மக்களது எதிர்ப்பும் தீவிரமடைந்துள்ளது. பெண்கள், பள்ளிக்குழைந்தைகள் உள்ளிட்ட குடிமக்களின் பெரும் பிரிவினர் ராணுவத்துக்கும் காவல்துறையினருக்கும் எதிராக காஷ்மீர் பள்ளத்தாக்கில் நாள்தோறும் போராட்டங்களில் கலந்து கொள்கின்றனர். மத்தியிலும் ஜம்மு காஷ்மீரிலும் இருக்கும் பாஜக அரசாங்கங்கள், பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பது அல்லது தீர்வு காணமுற்படுவது போன்ற தோற்றத்தைக் கூட கைவிட்டு, இந்தியா முழுவதும் இஸ்லாத்தை சாத்தான் மயமாக்கும் முயற்சி யையும், அதீத தேசியவாத நிகழ்ச்சி நிரலையும் விசிறிவிட காஷ்மீரை பயன்படுத்திக்கொள்கிறது.  

மோடி ஆட்சியின் கருவான இயல்புகள்:பாசிசத்தின் மறுக்கமுடியாத எழுச்சி

20. உச்சகட்ட பெருந்தொழில்குழுமக் கொள்ளை, சற்றும் தணியாத மதவெறி முற்றுகை, சாதிய ஒடுக்குமுறை, எதிர்ப்புக் குரல்கள் திட்டமிட்டவிதத்தில் அடக்கப்படுவது, கம்யூ னிஸ்டுகள் மீது அவதூறுபரப்புவது ஆகியவற்றின் இணைப்பே மோடி ஆட்சியை வரையறுக்கும் கருவாக உள்ளது. பிரதான நீரோட்ட இந்திய ஊடகத்தின் பெரும்பகுதி, இதன் ஒருபகுதி சங்-பாஜக கூட்டணிக்கு பிரச்சார இயந்திரமாக அல்லது மோடி ஆட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளர்களாகவே, மிகைநேர பணிசெய்து வரும் ஊடகங்கள்; 2002 குஜராத் நினைவுகளை மறதியில் தள்ளிவிட்டு மோடியை ஒரு ஆற்றல் மிக்க தலைவராகவும், வளர்ச்சியின் மனிதரா கவும், தவறே செய்யாத நிர்வாகியாகவும் சந்தைப்படுத்தியுள்ளன. 2014ன் தேர்தல்களின் வெற்றி, மோடியின் இந்த வளர்ச்சி அவதாரத்தை மெய்ப்பித்துவிட்டதாக பார்க்கப்படுகின்றன. துவக்கத்தில், நல்ல நாட்கள், கருப்புப் பணத்தை மீட்பது, தூய்மை இந்தியா போன்ற வாய் வீச்சுடன் இந்தியாவை பேசவைத்த மோடியின் ஆட்சி, இப்போது தனது அசலான நிறத்தை உலகமே காணும் வண்ணம் காட்டிக் கொண்டி ருக்கிறது.

21. உத்திர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் நியமிக்கப்பட்டது, மோடி & -ஷாவுக்கு அடுத்தபடியாக பாஜகவின் முகமாக அவர் முன்னிறுத்தப்படுவது, ஒவ்வொரு மதவெறி வன்முறை தாக்குதல்கள், கும்பல் படுகொலைகளுக்கும் சங்-&பாஜக அரசாங்கங்கள் உடந்தையாகவும் வெளிப்படையாகவும் ஆதரவு தருவது ஆகியவை, பாஜக ஒரு பிரதான நீரோட்ட வலதுசாரி கட்சியாக பரிணமித்து விட்டதென்றும் கீற்று போன்று வெளிப்படும் மதவெறி வெறும் ஓரஞ்சார கூறுமட்டுமே என்று நம்பிய தாராளவாத மாயைகள் தெள்ளத் தெளிவாக அம்பலமாகி உள்ளன. பீகார், உத்திரபிரதேசம், போன்ற முக்கியமான மாநிலங்களில் மோடியே முன்னின்று நடத்திய தேர்தல் பிரச்சாரங்கள், மோடி முத்திரைக்கு, பெரும்பான்மைவாத மதவாத அரசியலின் முழுமுற்றான மய்யத் தன்மைதான் என்பதை மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளன. மோடியும் பாஜக-ஆர்எஸ்எஸ்சின் அவரது மூத்த தலைவர்களும் சங்க் குடும்பம் நடத்தும், தூண்டிவிடும் கோரக்குற்றங்கள் தொடர்பாக கேளாச் செவியினராய் இருக்கும்போது, வேறு சிலரோ அவற்றை வெளிப்படையாகவே நியாயப்படுத்து கிறார்கள்; கொண்டாட்டத்திலும் ஈடுபடுகிறார்கள்; பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டபோது இதைப்பார்க்க முடிந்தது. மிகச்சமீபத்தில், ராஜஸ்தானின் ராஜஸ்மண்டில் காணொளி காட்சியாக்கப்பட்ட முகமது அப்ரசுல் கொலையிலும் இதை பார்க்கமுடிந்தது. அந்தக் கொலை, திடுக்கிடச்செய்யும் விதம் பாபர் மசூதி இடிப்பின் 25வது ஆண்டைக் குறிப்பதாகவும் இருந்தது.

22. தற்போதைய ஆட்சியின் இந்த சாரமான இயல்புகளை, ஆர்எஸ்எஸ்சின் கருவான கருத்தியல், வரலாற்றோடு சேர்த்துப்பார்த்தோ மானால் இந்தியாவில் இன்று நாம் காண்பது பாசிசத்தின் மறுக்கமுடியாத எழுச்சியாகும். இது பலவிதங்களிலும், இந்திராகாந்தியின் நெருக்கடி நிலை காலத்தோடு ஒப்பீட்டுப்பார்க்க வைக்கிறது. இந்த இரண்டு காலங்களும் நிச்சயமாக, தனிநபர் வழிபாடு, இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்ட பிரச்சாரம், திட்டவட்டமான விதத்தில் சுதந்திரம் மறுக்கப்படுவது, ஜனநாயக நிறுவனங்கள் பலவும் சீர்குலைக்கப்படுவது, ஆகிய அம்சங்களில் திட்டவட்டமான ஒற்றுமை களைக் காட்டுகின்றன. உண்மையில், நெருக்கடி காலத்தின் போது, அடிப்படை உரிமைகள் பலவும் ஒட்டுமொத்தமாக ரத்துசெய்யப்பட்டன. பத்திரிகைகள் தணிக்கைக்குள்ளாக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் கூட்டம் கூட்டமாக கைது செய்யப்பட்டனர். தேர்தல்கள் கூட காலவரம்பின்றி தள்ளிவைக்கப் பட்டன. சட்டமியற்றும் அமைப்புகளின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டன. தற்போதைய ஆட்சியில் மேற்கூறிய இயல்புகள் இன்னமும் முழுமையாக வெளிப்படவில்லைதான். அரசு, ஆளுகை என்பதைச்சுற்றிச் சுழலும் இந்த ஒப்பீடுகளுக்கு அப்பால் பார்த்தால், இந்திரா காந்தியின் நெருக்கடி காலத்துக்கும் தற்போதைய மோடி ஆட்சிக்குமிடையே மிகமுக்கிய வேறுபாட்டைக் காண முடியும். நெருக்கடிநிலை பிரதானமாக ஒடுக்குமுறை, அரசைச் சுற்றிச் சுழல்வதாக இருந்தது. மோடியின் ஆட்சியோ, அரசே வழிநடத்தும் கார்ப்பரேட் தாக்குதலும் இந்து மேட்டிமைவாத ஆர்எஸ்எஸ்ன் பெரும் பான்மைவாதக் கொடுங் கோன்மையின் ஒன்று குவிப்பாகவே உள்ளது. சங்க் பட்டாளம் தனது பாசிச நிகழ்ச்சி நிரலை, அடிக்கடி உசுப்பிவிடப்பட்ட வெகுமக்கள் வன்முறை துணையுடன், கட்டவிழ்த்துவிட சுதந்திரம் பெற்றிருப்பதுதான் மோடி மாதிரி சுயேச்சாதிகார ஆட்சியினை நெருக்கடி காலத்து எதேச்சாதி காரத்திடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

அரசு எந்திரத்தை மதவெறிமய மாக்குவதும் கல்வி, சிந்தனையை ஒருதிறப்படுத்துவதும்

23.இன்று ஆளும் பாஜக அரசாங்கங்களின் ஆட்சிமுறையும் கூட பாசிசத்தின் குணக் குறியீடுகளைக் கொண்டிருக்கின்றன. பாஜகவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசியல் சாசனத்தை திருத்துவது பற்றி வெளிப்படை யாகவே பேசிவருகின்றனர். எதேச்சாதிகாரத்தி லிருந்து பாசிசத்தை வேறுபடுத்திக் காட்டுவது எதுவென்றால் அரசு ஒடுக்குமுறையை சட்டபூர்வ மாக்குவதும் சமூகத்தின் ஒரு பகுதிமக்களை சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையில் அணிதிரட்டுகிற திறனுமாகும். ஆர்எஸ்எஸையும் இந்திய ராணுவத்தையும் கேடுகெட்டவகையில் ஒப்பிட்ட மோகன்பாகவதின் பேச்சு, இந்து சமூகத்தை ராணுவமயமாக்குகிற, ராணுவத்தை மதவெறிமயமாக்குகிற\அரசியல்படுத்துகிற ஆர்எஸ்எஸ்சின் நிகழ்ச்சி நிரலையே வெளிப் படுத்துகிறது. இந்த நிகழ்ச்சி நிரலானது நீண்டகாலமாகவே செயலில் உள்ளது. 1937ல் இந்துமகாசபையின் தலைவர் பி எஸ் மூன்ஜியால் (இத்தாலிய பாசிசத் தலைவரை சந்தித்தவர்; அவரால் உத்வேகம் பெற்றவர்) நாக்பூரில் உருவாக்கப்பட்ட போன்சலா ராணுவக்கல்விக் கழகம் இந்த நிகழ்ச்சி நிரலில் உள்ள இரண்டு அம்சங்களுக்கும் சேவை செய்கிறது. ராணுவ அதிகாரிகளின் பற்றாக்குறையை சரிக்கட்டும்ஊட்டு நிறுவனமாகபோன்சலா ராணுவக் கல்விக்கழகம் சேவைசெய்கிறது என மோகன் பாகவத் 2012லேயே கூறியுள்ளார். மலேகான் வெடிகுண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, ராணுவத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் இந்தக் கல்விக் கழகத்தில் பயிற்சி பெற்றவர். பணிஓய்வு பெற்ற, பணியிலிருக்கிற ராணுவ அதிகாரிகள், பணி ஓய்வு பெற்ற உளவுத் துறையின் மூத்த அதிகாரிகள் இந்தக் கல்விக் கழகத்தில் பயிற்சியாளர்களாக இருந்திருக்கி றார்கள். இஸ்லாமியருக்கு எதிராக கட்டமைக்கப் பட்ட மதவெறி வன்முறையில் ஈடுபட்டு வரும் பஜ்ரங்தள் ஊழியர்களுக்கு இந்தக் கழகம் ஆயுதப்பயிற்சி அளித்து வருகிறது. இந்து இளைஞர்களை ராணுவமயப்படுத்தும் சங்க் வேலைத் திட்டமானது, இஸ்லாமியர்களுக்குபாகிஸ்தானியர்கள்என்று பெயரளித்து, மதவெறி வன்முறையைஉள்நாட்டு எதிரிக்கு எதிரானதேசியவாதமாகமறைத்துக் கொள்கிறது.

24.பாஜக ஆளும் மாநிலங்களின் மற்று மொரு பாசிசக் குறிப்பியல்பு, மேடையேற்றப் பட்டமோதல் படுகொலைகளைக் கொண்டாடு வதும், போர்க் குற்றங்களை அரசுக் கொள்கை யாக கொள்வதுமாகும். போபாலில் எட்டு இஸ்லாமியர்கள் போலி மோதல் ஒன்றில் கொல்லப்பட்டதை மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் வெளிப்படையாகவே கொண்டாடினார். உத்தரபிரதேசத்தில் அடுத்தடுத்து நடந்துவரும் போலி மோதல் கொலைகளை அந்த மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறுவறுப்பான முறையில் நியாயப்படுத்தினார். காஷ்மீரில் ராணுவ மேஜர் ஒருவர், ஒரு காஷ்மீரி மனிதனை ராணுவ வாகனத்தில் கட்டியிழுத்து வந்ததை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. ஜம்முவில் எட்டு வயது குஜ்ஜார் இஸ்லாமிய சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்புக் காவல் படை நபர்களுக்கு ஆதரவாக இந்து ஒற்றுமை முன்னணி முன்வந்தது ஆகியவை, முன்னுக்கு வந்துள்ள நிகழ்வு களாகும். இதுபோன்ற குற்றங்கள் பாஜக அல்லாத ஆட்சிகளிலும் நிகழ்கின்றன. ஆனால், இத்தகைய குற்றங்களை வெளிப்படையாக கொண்டாடுவதற்கு மாறாக மறுப்பதுதான் அங்கெல்லாம் (பாஜக அல்லாத ஆட்சிகளின்) அதிகாரபூர்வ கொள்கையாக இருக்கிறது.

25.பாஜக அரசாங்கங்களால் வரவேற்பளிக்கப் படும் திட்டம், கல்வியை சீர்குலைப்பதும், காவிமயமாக்குவதும் சங்கிகளின் பாசிச திட்டத்தின் முக்கியமானதொரு பகுதியாகும். பாஜக ஆளும் மாநிலங்களில் கல்வித்திட்டம் காவிமயமாக்கப்படுகிறது; வரலாற்றுப் புத்தகங்கள் மாற்றி எழுதப் படுகின்றன. பிஞ்சு உள்ளங்களை நஞ்சாக்கும் முயற்சியாக பள்ளி மாணவர்களுக்கு சங்க் பரிவாரத்தின் கட்டாய முகாம்கள் கூட நடத்தப்படுகின்றன. அதேபோது, உயர்கல்வி நிறுவனங்களும் அவர்களது தாக்குதல் பட்டியலில் உள்ளன. அது போன்ற நிறுவனங் களில் உள்ள பாஜக வால் நியமிக்கப்பட்ட தலைமை அதிகாரிகள், பேச்சு சுதந்திரம், வளாக ஜனநாயகம், சமூக நீதி, ஆய்வு ஆகியவற்றுக்கு ஒட்டுமொத்த அழிவை உருவாக்குகிறார்கள். அனைத்து எதிர்ப்பு, முற்போக்கு குரல்களைத் தாக்குவதற்கான சங்கிகளின் அதிரடிப்படை யினராக அகில பாரதிய வித்யாதி பரிஷத் செயல்படுகிறது.

பாசிச கருத்தியலும் ஆர்எஸ்எஸ்சின் எழுச்சியும்

26. பல வழிகளிலும் ஹிட்லரின் தலைமை யிலான நாஜி ஜெர்மனியோடு தவறுதலின்றி ஒப்பிடுவதற்கு மோடி ஆட்சி இடமளிக்கிறது. 1920களில் ஆர்எஸ்எஸ் உருவானதிலிருந்தே வரலாற்று ரீதியாகவே, முசோலினி, ஹிட்லரின் ராணுவ-மேலாளுமைவாத, அதீத தேசியவாத கருத்தியலுக்கேற்பவே தன்னை வடிவமைத்துக் கொள்ளவே முயற்சித்து வந்துள்ளதைக் காணத் தவறக்கூடாது. உள்நாட்டு எதிரிமீது (நாஜி ஜெர்மனியில் யூதர்களும் பிற மதச் சிறுபான்மை யினரும் என்றால், மோடியின் இந்தியாவில் அது இஸ்லாமியர், தலித்துகள் எல்லாவிதமான கருத்தியல் எதிர்ப்பாளர்கள்) வெறுப்பு, வன் முறையின் மய்யத்தன்மை என்பது, ஓர் அதி உன்னத தலைவரைச்சுற்றி ஒரு தனிநபர் வழிபாட்டு கலாச்சாரத்தை முன்னகர்த்த, வெகுமக்கள் உணர்வுகளை இழிந்தமுறையில் பயன்படுத்திக்கொண்டு, பொய், வதந்தி பிரச்சாரத்தை விடாமல் நடத்துவதும் நாஜி ஜெர்மனியிலும் பாஜக ஆளும் இன்றைய இந்தியாவிலும் ஒத்ததன்மையிலானவை, அழுத்தமானவை நிஜமானவை.

27.இந்த வரலாற்று படிப்பினையை புறக் கணிப்பது; (அதாவது) 1930கள் 1940களில் ஜெர் மானிய முதலாளித்துவம் எட்டியிருந்த வளர்ச்சியை இந்திய முதலாளித்துவம் எட்டவில் லையென்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை சங்பரிவாரத்தால் இழுத்து தள்ளிவிடமுடியாது என்றும் இந்தியா போன்ற ஒரு பரந்த, பன்மைத்துவம் கொண்ட நாட்டில், சமூகத்தில் பாசிச ஒற்றைவாத அடித்துநிரவும் எந்திரத்துக்கு எதிராக உள்ளார்ந்த விதத்தில் பாதுகாப்புகள் இருக்கின்றன என்றெல்லாம் கூறி பொய்யான ஆறுதலைத் தேட முனைவதெல்லாம் குறுகிய கண்ணோட்டம் கொண்டதும், தற்கொலைக் கொப்பானதுமாகும். 21வது நூற்றாண்டின் இந்திய பாசிசம், 20ம் நூற்றாண்டின் அய்ரோப்பிய பாசிசத்துடன் ஒப்பிடுகையில் அதற்கே உரித்தான தனித்த இயல்புகளைக் கொண்டதாகவே இருக்கும்; ஆனால் பாசிச ஆபத்தின் யதார்த் தத்தை சற்றும் குறைத்துவிடவில்லை; அதன் அழிவுகரமான உள்ளாற்றலைக் குறைத்து விடுவதுமில்லை. சர்வதேச பொருளாதார, சமூக, அரசியல் சூழலானது, இன்று உலகின் பல பகுதிகளில் நாம் காண்பது போல மீண்டு மொருமுறை பாசிசப் போக்குகள் எழுவதற்கு தோதாகவே உள்ளது. நீடித்தப் பொருளாதார மந்தநிலை, வளர்ந்து வரும் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார பாதுகாப்பின்மை, இஸ்லாமிய வெறுப்பு, குடியேறியோரைக் கண்டு பதட்டமுறுதல், இவையாவும் அய்க்கிய அமெரிக்காவிலும் பல அய்ரோப்பிய நாடுகளி லும் பாசிச, இனவெறி, நிறவெறி அரசியல் மீண்டும் எழுவதற்கு விளைநிலமாகவே உள்ளன. நெருக்கடியிலுள்ள உலக முதலாளித்துவ ஒழுங்கிற்குள் இந்தியா ஒன்றிணைந்திருப்பது, அதிலும் குறிப்பாக அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியம், இஸ்ரேலுடன் நெருக்கமான போர்த் தந்திர உறவுகள் அதிகரித்து வருவது இந்தியாவில் இந்த பாசிசப் போக்கை வலுப்படுத்தவேச் செய்யும்.

28. இந்தியாவில் பாசிசத்தின் தோற்றத் திலும், வளர்ச்சியிலும் மதவாதம் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. இது விஷயத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது, பிரிட்டிஷ் காலனியத்தின் உதவியுடன் எழுந்த மதவாத அரசியல், ரத்த வெள்ளத்திலும் மனித இடப் பெயர்ச்சிக்கும் மத்தியிலான நாட்டுப் பிரிவி னைக்கு இட்டுச் சென்றதைப் போல, இன்று ஒரு மதச்சார்பற்ற, பன்மைவாத வரையறை யிலிருந்து ஓர் இந்து மேட்டிமைவாதப் பெரும் பான்மைவாத ஒற்றைநிலைக்கு இந்தியாவின் தேசிய அடையாளத்தை மாற்றும் முயற்சிகள், அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்திய தத்துவமான நாகரிகங்களின் மோதலுடன் ஒத்துப் போகிறது; இஸ்லாமிய அரபு உலகத்துடனும் கன்பூசிய சீனத்துடனும் அமெரிக்க தலைமையிலான மேற்கு உலகம் நடத்தும் சண்டையில், இந்து இந்தியா ஒரு முக்கிய கூட்டாளியாகவே நடத்தப்படுகிறது.

29.படிநிலை சமூக ஏற்றத்தாழ்வின் அடை யாளமாகவும் ஒதுக்குதலுக்கும் ஒடுக்குமுறைக்கு மான கருவியாகவும் இருக்கும் சாதியும்கூட (மதம் போலவே) இந்தியாவில் பாசிச திட்டத் திற்கான நடு நாயகமாகவே இருக்கிறது. இந்த சாதிக்கட்டின் காட்டமான சுமைகளை, பெண்களே தாங்க வேண்டியிருக்கிறது. இந்த சமூகப் பின்புலம் பற்றி ஆழமாக அறிந்திருந்த முனைவர் அம்பேத்கர், சாரத்தில் ஜனநாயகமற்ற இந்திய மண்ணில், இந்தியாவின் அரசியல்சாசன ஜனநாயகம் வெறும் மேலாடை என்று விவரித் தார். இந்தியவகைப்பாசிசம், இந்தியசமூகத்தில் ஆழப் பொதிந்துள்ள அநீதி, வன்முறையிலிருந்து சக்தி பெறுகிறது, வலுப்படுகிறது, மேலும் விரிவடைகிறது; வரலாற்றிலும் மரபுகளிலும் உள்ள அனைத்துவிதமான ஜனநாயக விரோத மான அம்சங்களின் மொத்த வடிவமாக இன்றைய ஆர்எஸ்எஸ் உருப்பெற்று நிற்கிறது.

30.ஆர்எஸ்எஸ்சின், முதல் 50 ஆண்டுகால இருத்தலில், அதன் பாசிச கருத்தியலை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. தேசவிடுதலைப் போராட்டத்திலிருந்து அது (ஆர்எஸ்எஸ்) தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் காலனி யாதிக்கத்துடன் அது பல்வேறு தளங்களிலும் கூட்டு வைத்திருப்பதை ஒரு பொதுக் கொள்கை யாகவே கொண்டிருந்தது; அதிலும் குறிப்பாக, நவீன இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஒரு பெரிய சமூகம் என்ற தகுதியை வலுவிழக்கச் செய்யும் நோக்கத்துடன் அவ்வாறு செயல்பட்டது. காந்தியின் அரசியல் படுகொலையைத் தொடர்ந்து அது சட்டபூர்வமாக தடை செய்யப் பட்டிருந்தது மட்டுமின்றி சாமான்ய மக்களிட மிருந்தும் முற்றிலுமாக மதிப்பிழந்தும் போயி ருந்தது. ஆயினும் மதவாதத்தில் காங்கிரசின் ஊசலாட்டமும் நாட்டுவிடுதலை இயக்கத்தின் வாக்குறுதிகளுக்கும் அவாக்களுக்கும் அது இழைத்த துரோகமும் ஆர்எஸ்எஸ் தன்னை மறுஅணி சேர்த்துக் கொண்டு வலிமையும் அங்கீகாரமும் பெற வழிவகுத்தன. மிகவும் குறிப்பாக இந்தியாவின் அடுத்தடுத்த போர்கள் என்ற பத்தாண்டில், முதலாவதாக 1962ல் சீனத்துடன், அதன்பிறகு 1965, 1971 ல் பாகிஸ்தானுடன் போரின் போது ராணுவ தேசியவாதம் தலைதூக்கிய போது, 1960 களின் போது ஆர்எஸ்எஸ் மறுவாழ்வு பெற்றது. நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் போது ஜனநாயகத்தை மீட்பதற்கான வெகுமக்கள் இயக்கத்தின் மூலம் அது மேலும் தன் அமைப்பு வலைப்பின்னலை, செல்வாக்கை விரிவுபடுத்திக் கொள்ள அதற்கு வாய்ப்பளித்தது. பொருளாதார தாராளவாதக் கொள்கையை தழுவிக் கொண்ட தோடு, அய்க்கிய அமெரிக்க சார்பு வெளியுறவுக் கொள்கை நோக்கி நகர்ந்தது என காங்கிரஸ், சுதந்திரப் போராட்டத்தின் மரபுகளிலிருந்து திட்டவட்டமாக விலகியபோது காங்கிரசுக்கும் பாஜகவுக்குமிடையிலான கருத்தியல், கொள்கை வேறுபாடுகள் மங்கலாகிப்போயின. அங்குமிங்கு மாக சில காரியசாத்தியவாத சரிக்கட்டல்களை செய்துகொண்டு பல்வேறு பிராந்தியங்கள், சமூகப்பிரிவுகள் மத்தியிலிருந்து புதிய கூட்டாளி களிடம் சென்று சேர்வது பாஜவுக்கு கடினமாக இருக்கவில்லை.

31. இந்தியாவில், தாராளமயமாக்க, தனியார் மயமாக்க, உலகமயமாக்க கொள்கைகள் மூர்க்கமாக பின்பற்றப்பட்டதால் ஏற்பட்ட நெருக் கடியும் காங்கிரசும் மற்ற பிராந்திய ஆளும் கட்சி களும் மதிப்பிழந்து போனதால் உருவான அரசியல் வெற்றிடமும் ஒன்றையொன்று சந்தித் துக் கொண்டன. இந்த அரசியல் வெற்றிடத்தை கைப்பற்ற பாஜக முயற்சிக்கும் போது ஆர்எஸ்எஸோ, இந்தியாவின் வரலாற்று, அரசியல் கற்பனையினிடத்தில் தனது சொந்த திட்டத்தைக் கொண்டு நிரப்ப இந்தக் கட்டத்தை பயன்படுத்த முயற்சித்து வருகிறது. இந்திய சுதந்திரத்தின் போது மனுஸ்மிருதியை இந்தியா வின் அரசமைப்புச் சட்டமாக்க முயன்று தோற்றுப் போனது ஆர்எஸ்எஸ். சாதி, ஆணாதிக்கம், மதவெறி தப்பெண்ணங்கள், இந்தியாவின் பரவ லான சமூகபொதுப் புத்தியாக இருந்தபோதும் மேலோங்கிய அரசியல் கருத்தொற்றுமை இதை ஏற்றுக்கொள்ளவில்லை; மாறாக, பெயருக்காவது, அரசியல், சமூக சமத்துவ லட்சியத்தை தழுவிக் கொண்டது. நேரு, படேல் போன்ற தலைவர்கள் கூட கோல்வால்கரது இந்தியா பற்றிய லட்சியக் கனவை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது, மோடி அரசாங்கம் அதிகாரத்தில் இருக்கும்போது, தேசியவாதம், வரலாறு, சமூகம் ஆகியவை பற்றி, இதுவரையிலும் தோற்கடிக்கப்பட்ட தனது இந்திய லட்சியத்தை, ஏற்றுக்கொள்ளக்கூடியஇந்தியகருத்தாக நிலைநாட்ட ஆர்எஸ்எஸ் அவசரப்படுகிறது. இந்தப் போக்கில், அவர்கள் நேருவை தூற்றவும் காந்தியை சுத்தப்படுத்தவும் அம்பேத்கர், பகத்சிங்கை சிதைக்கவும் அக்பர், தாஜ்மகால் உள்ளிட்ட வரலாற்றிலுள்ள இஸ்லாமிய ஆளுமைகளையும் சின்னங்களையும்தேசவிரோதமானவைஎனக்கூறி சாத்தான் மயமாக்கவும் செய்கிறார்கள். சாதி, பால் படிநிலைகளை; இருண்டகால, அருவறுப்பான சமூக நடைமுறைகள், மதவெறி தப்பெண்ணங்கள் ஆகியவற்றைஇந்திய கலாச்சாரத்தின் சாரமாகமுன்னிறுத்துகிறார்கள்!

32. வரலாற்றை கையகப்படுத்தும், திருத்தி யெழுதும் இயக்கப்போக்கை எதிர்ப்பது, பாசிச எதிர்ப்பின் ஒரு முக்கியமான அம்சமாக இருக்க வேண்டும். இந்திய மக்களின் காலனிய எதிர்ப்பு விழிப்புணர்விலிருந்தும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான திட்டவட்டமான மக்கள் போராட்டங் களிலிருந்தும் தனிமைப்பட்டிருந்த, அவற்றுக்கு எதிராகவும் கூட இருந்த ஆர்எஸ்எஸ் அது கூறும் நாகரிக அல்லது கலாச்சார தேசியவாதம் என்ற புனைவு கதையாடலை எப்போதும் உருவாக்கி வந்திருக்கிறது. அது தொடர்ந்து புராணக் கதை களை எழுப்புகிறது, அதுதான் வரலாறு என்றும் கூறுகிறது. அதன் பொய்யான மததேசியவாத கதையாடலுக்கு பொருந்தும் விதம் உண்மையான வரலாற்றை திரித்துக் கூறவும் கையகப்படுத்தவும் முனைகிறது. ஆக இந்தியாவை வரையறுக்க, வளர்த்தெடுக்க நடந்துகொண்டிருக்கும் போராட் டங்களின் ஒரு முக்கியமான அரங்கமாக வரலாறு மாறியுள்ளது. வரலாற்றை சிதைக்க, திரிக்க, தன்வயப்படுத்த ஆர்எஸ்எஸ் எடுக்கும் முயற்சி களை முறியடிக்கும் அதேநேரம், இந்தியாவின் மக்கள் வரலாற்றை, ஜனநாயகம், சமூக நீதி, மானுட விடுதலை ஆகியவற்றுக்கான போராட் டத்தின் மகத்தான வரலாற்று ரீதியான மரபு ஆகியவற்றை உயர்த்திப்பிடிக்க வேண்டும். நமது நாட்டின் மகத்தான ஜனநாயக, சோசலிச எதிர் காலத்துக்கான போராட்டத்துக்கு சக்தியூட்டவும், வலுவூட்டவும் நமது வரலாற்று மரபில் உள்ள முற்போக்கான, விடுதலை தொடர்பான அனைத்து அம்சங்களையும் உயர்த்திப்பிடிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும், ஒன்றிணைக்க வேண்டும்.

பொருளாதார, வெளியுறவு கொள்கை

33. தாறுமாறான உலகமய கொள்கையோடு, ஒரு பொருளாதார தேசியவாதத்தைக் கொண்டு பாஜகவை, தேசியவாத ஆர்எஸ்எஸ் மோதச் செய்யும் என எதிர்பார்ப்பது, அடிப்படையற்றது என்று மெய்ப்பிக்கப்பட்டது போலவே, சங்க் பரிவாரின்விளிம்பு நிலை சக்திகளைஆட்சியி லிருக்கும் பாஜக அடக்கிவைக்கும் என்ற விருப்பார்ந்த நம்பிக்கையும் அடிப்படையற்றது. அடக்கிவாசிக்கப்பட்ட தொடக்ககால வாஜ்பாய் ஆட்சி காலத்திலிருந்து 2002 மானுடப்படு கொலை மீதேறி வந்த குஜராத் மாதிரி வரை, ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையும் ஊடுருவும் அரசு, துடிப்பான குஜராத் என்ற கார்ப்பரேட்டுகளின் உரத்த அங்கீகாரத்தோடு குஜராத் மாதிரியை நாடு தழுவிய அளவில் செய்து காட்டுவோம் என்ற வாக்குறுதியோடு 2014ல் நாம் மோடி யுகத்தில் நுழைந்திருக்கிறோம். ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டணி முதிர்ச்சியுற்று வருவதைக் காண்கிறோம். சமூக விவாதப்போக்கிற்கான விளக்கங்களுக்கு ஆர்எஸ்எஸ் கட்டளையிடுகிறது; தனிநபர் சுதந்திரத்தின் எல்லைகளை வரையறுக்கிறது. விளிம்பு நிலை சக்திகள் என்று சொல்லப் படுபவை தண்டனை பற்றிய கவலையேதுமின்றி வெறிபிடித்து ஆடுகின்றன. மறுபுறத்தில், அந்நிய மூலதனத்தை திமிர்த்தனத்துடன் அழைப்பதையும் இந்திய, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங் களின் நலன்களையும் பொருளாதாரவளர்ச்சி என முன்னிறுத்துவதையும் அரசாங்கம் கவனித்துக் கொள்கிறது. மேலும், அய்க்கிய அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் விசுவாசமான இளைய கூட்டாளி என்ற இந்தியாவின் பாத்திரத்தை, ‘முன்னேறி வரும் உலக சக்திஎன ட்ரம்ப் நிர்வாகம் சான்று அளித்திருப்பதையும் காணவேண்டும்.

34. மோடி அரசாங்கத்தின் பொருளாதார, வெளியுறவுக் கொள்கைகள், ஏறத்தாழ 1990களில் காங்கிரசால் அறிமுகப்படுத்தப்பட்ட அதே கொள்கை வரையறைகள்தான். ஆனால், இந்த திசையில் செல்லும் முடுக்கிவிடப்பட்ட வேகமும் மூர்க்கத்தன மான தன்னிச்சையான வழிமுறையும் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி உள்ளிட்டு முந்தைய அனைத்து ஆட்சிகளிட மிருந்து இந்த ஆட்சி தனித்து நிற்கிறது. அந்நிய முதலீட்டுக்கும் நிதி ஒருங்கிணைப்புக்கும் தரும் ஒருமுனைப்பட்ட கவனம், மின்னணுமயமாக்கம், தனியார்மயமாக்கம், தொழிலாளர் சட்டங்களை இறுக்கமாக்குவதும் இப்போது இருப்பது போல முந்தைய ஆட்சிகளில் ஒருபோதும் இவ்வளவு கூர்மையாகவும் வலுவாகவும் இருந்ததில்லை. திட்ட ஆணையம் கலைக்கப்பட் டிருப்பது, உணவுப்பாதுகாப்பும் வேலை உத்தரவாதச் சட்டங்களும் திட்டமிட்டவிதத்தில் மீறப்படுவது, அரசு மருத்துவம் என்பதிலிருந்து காப்பீடு அடிப்படையி லான தனியார் மருத்துவத்துக்கு மாறுவது, வேலைவாய்ப்பு நிகழ்ச்சி நிரலை சுயவேலை வாய்ப்பு என்று சிறுமைப்படுத்துவது, பரிதாபத்திற்குரிய வாழ்வாதாரமான பக்கோடா வியாபாரத்தை ஆதாயமுள்ள வேலைவாய்ப்புக்கு உதாரணமாகக் காட்டுவது, இவை யாவும் அரசு, நல்வாழ்வு பொறுப்புகளை இப்போது துறந்திருப்பதுபோல முழுமையானதாகவோ வெட்கங்கெட்டத் தனமாகவோ இதற்கு முன் எப்போதும் இருந்ததில்லை.

35. வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்த வரை, அய்க்கிய அமெரிக்காவுக்கு போர்த்தந்திர அடிபணியும் கொள்கையை ஒரு புதிய மட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. ஏறத்தாழ முழுமையாக ட்ரம்ப் அதிபராட்சியுடன் அடையாளங்காட்டிக்கொள்கிற, (இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதற் கெதிராக வாக்களித்தது தவிர) இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியுள்ள வர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வரும் போது கூட அமைதி காக்கும் அளவுக்கு சென்றுள்ளது. அமெரிக்கா விலுள்ள இந்துத்வா அமைப்புகள், ட்ரம்பின் வெள்ளையின மேலாதிக்கவாத நிகழ்ச்சிநிரலை வெளிப்படையாகவே ஏற்றுக் கொண்டுள்ளன. பாலஸ்தீன ஆக்கிரமிப்பை இஸ்ரேல் தொடர்வதால், சர்வதேச சமூகத்தின் கண்டனங்களை எதிர்கொண்டு அதிகரித்த அளவில் தனிமைப்பட்டு வரும்போது, மோடி பெரும் ஆரவாரத்துடன் (இஸ்ரேல் பிரதமர்) நேதன்யாஹூவை ஆரத் தழுவிக்கொள்கிறார். சீனாவைக் கட்டுப்படுத்துவது என்ற பேரால், ஜப்பானையும் ஆஸ்திரேலியாவையும் திருப்திப்படுத்த மோடி அரசாங்கம் ஆனதெல்லாம் செய்கிறது, மேலும் ஏசியன் நாடுகளுடன் உறவாடவும் முயற்சிக்கிறது. ஆனால், மோடியின் பெரியண்ணன் அணுகுமுறையால் இந்தியா தனது பக்கத்து நாடுகளிடமிருந்து தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான், சீனாவுடன், தீர்வு காணப்படாத எல்லா பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண அந்நாடுகளுடன் விடாப்பிடியாக உறவாடுவதற்கு பதிலாக, சர்வதேச மேடைகளில் அமைதி, நீதி, வளர்ச்சிக்காக இந்தியா குரலெழுப்புவதற்குப் பதிலாக, உள்நாட்டில் பிரச்சாரம் செய்வதற்கும் அரசியல் நுகர்வுக்கு உதவும் நோக்கம் கொண்ட மோடியின் பயனற்ற ராஜதந்திரம், இந்தியாவின் நிலையை மேலும் பலவீனப்படுத்தி யிருக்கிறது; அதன் நெருக்கமான எல்லா அண்டை நாடுகளிலிருந்தும் இதுவரை இல்லாத அளவுக்கு தனிமைப்பட வைத்திருக்கிறது.

36. மோடி அரசாங்கம், இந்தியக் குடியுரி மைக்கான வரையறையை அதன் குடியுரிமை திருத்த மசோதாவைக்கொண்டு திருத்த முனைகிறது; பாகிஸ்தான், பங்களாதேஷ் அல்லது ஆப்கானிஸ் தானிலிருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கலாமென அந்த மசோதா முன்மொழிகிறது. இந்த முன்மொழிதலானது, அண்டை நாடுகளில் மத அடிப்படையில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மையிருக்கு இடையில் பாரபட்சம் காட்டுவதாகவும் இஸ்லாமியர் அல்லாத குடியுரிமை கோருவோருக்கு சலுகை காட்டுவதாகவும் இருக்கிறது. இந்த மசோதா மூலம், இஸ்ரேல்யூதர்களின் தாய்நாடுஎன்ற மாதிரியின் அடிப்படையில், சத்தமின்றி இந்தியாவை இந்து நாடு என்று முன்னிறுத்தப் பார்க்கிறது. இந்த முயற்சி, அசாமில் அமைதியின்மை, கிளர்ச்சிகளை உருவாக்கியிருக்கிறது. பாஜக இந்த திருத்தத்தைப் பயன்படுத்தி, அசாம் ஒப்பந்தத்தை மறுக்கும் (1971 மார்ச் 24 ம் தேதிக்கு முன் அசாமில் இருப்பவர்கள் என்ற நிபந்தனையை பொருளற்ற தாக்கிவிடும்) என்ற அச்சத்தின் காரணமாக இந்த கிளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மற்றொரு பக்கம், உச்சநீதிமன்ற கண்காணிப்பில், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடந்து கொண் டிருக்கும் இயக்கப்போக்கு பற்றியும் அசாமில் கவலைகள் எழுந்துள்ளன. தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெறாத லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டால் அது மிகப்பெரிய மானுட நெருக்கடிக்கு இட்டுச்செல்லும் என்று அசாம் அரசாங்கத் தலைவர்கள் சொல்லுகின்றனர். இந்த நெருக்கடியை தவிர்க்க, மத்திய அரசு பங்ளாதேஷ் அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் வழிகளைக் கண்டறிய வேண்டும்; தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபடக் கூடியவர்களுக்கு வேலை அனுமதி வழங்கும் சாத்தியப்பாடுகளையும் கண்டறியவேண்டும்.

சங்கப் பரிவாரம் - பாஜக தாக்குதலை

உந்திச் செலுத்தும் முக்கிய காரணிகள்

37. சங்க்&-பாஜக அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றவும் அதன் ஒட்டுமொத்த நிகழ்ச்சி நிரலை கட்டவிழ்த்துவிடவும் சாத்தியப் படுத்தியது எது? தற்போதைய கட்டத்தில் அதற்கு சாதகமாக தெள்ளத் தெளிவாக செயல்பட்ட நான்கு காரணிகளை நெருங்கிச் சென்று பார்க்க வேண்டும். 2014ல் பாஜக, ஒரு தேர்தல் வெற்றியை மட்டும் பெற்று விட வில்லை. ஓர் அசலான அரசியல் வெற்றிடத்தை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டது. காங்கிரஸ், மிக மோசமான நம்பகத்தன்மை, தலைமை நெருக்கடியில் சிக்கியிருந்தது; அதேசமயத்தில், ஏறத்தாழ எல்லா பாஜக அல்லாத அரசியல் நீரோட்டங்களும் அதாவது, பிராந்திய கட்சிகள், ‘சமூக நீதிமுகாம் என்று சொல்லப்படுகிறவையும் இடதுசாரிகளும் தேர்தல் பலம் என்கிற வகையில் ஆகக் கீழான மட்டத்துக்குச் சென்றுவிட்டன. 2014ல் மோடி அழுத்தம் திருத்தமான வெற்றியைபெற்றபோது, அரசியல் சமநிலை பாஜகவுக்கு ஆதரவாக சாயத் துவங்கியது. அது முதல், ஒன்றன் பின் ஒன்றாக சட்டப்பேரவை தேர்தல்களில் (டெல்லி, பீகார், பஞ்சாப் தவிர) வென்று தனது பிடியை உறுதிப்படுத்திக் கொண்டது; மேலும், பாஜக ஆட்சியில்லாத மாநிலங்களிலும் கூட தனக்கு வேண்டியவர்களை ஆளுநர்களாக நியமித்துக் கொண்டதோடு; நாட்டிலுள்ள ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ள முக்கிய பதவிகளிலும் தனது ஆட்களை நியமித்துக் கொண்டது.

38. இரண்டாவதாக, கடந்த முப்பது ஆண்டுகளில், பொருளாதாரக் கொள்கைகள், உள்நாட்டு ஆளுகை, வெளியுறவு கொள்கை தொடர்பான பிரச்சனைகளில் ஏறத்தாழ எல்லா ஆளும் வர்க்கக் கட்சிகள் மத்தியிலும் ஒரு கருத்தொற்றுமை உருவாகியிருப்பதையும் காண முடியும். கொள்கை வேறுபாடுகள் இல்லாத போது, இந்தக் கொள்கைகளை மிகவும் மூர்க்கமாக, தீர்மானகரமாக நிறைவேற்றும் வெற்றியாளனாக பாஜக தன்னை முன்னிறுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது.

39. மூன்றாவதாக, இந்தக் கொள்கைக் கருத்தொற்றுமையைச் சுற்றி, உற்பத்தி செய்யப் படும் பொதுப்புத்தியும் அது அன்றாடம், பிரதான நீரோட்ட கார்ப்பரேட் ஊடகங்களால் வலுப்ப டுத்தப்பட்டு வருவதையும் காண்கிறோம். இந்தவகை பொதுப்புத்தி, பெரிய அளவிலான வெளியேற்றம் வளர்ச்சிக்கு அவசியமான விலை என்றும் மானுட உரிமை பெரிதாக ரத்து செய்யப் பட வேண்டியவை என்றும் தேச ஒற்றுமைக்கு கொடூரச் சட்டங்கள் அவசியமென்றும் பொருளா தார செயல்திறனுக்கு தனியார்மயம்தான் சஞ்சீவி என்றும் இன்ன பிறவாறும் கூறுகிறது.

40.இறுதியாக, கொள்கைக் கருத்தொற் றுமை, உற்பத்தி செய்யப்பட்ட பொதுப்புத்தி என்ற இந்த படைக்கலங்களுடன், அதற்கே சொந்தமான வெறுப்பு, பொய், வதந்தி, தனியார் மயப்படுத்தப்பட்ட பயங்கரம் என்ற வெடி பொருள்களையும் கொண்ட ரகசிய அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பையும் கொண்டிருக்கிறது.

பாசிச தாக்குதலுக்கெதிரான மக்கள் போராட்டங்கள்

41. கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களாகிய நாம், ஜனநாயகத்தின் சமூக மாற்றத்தின் உறுதிமிக்க, தொடர்ச்சியான காவலராகிய நாம், எல்லா விதமான அநீதி, ஒடுக்குமுறையிலிருந்தும் மானுட விடுதலைக்குப் போராடுகிறவர்கள் என்ற வகையிலும் நாம், ஒன்றை ஒப்புக்கொண்டாக வேண்டும். 1947 க்குப் பிறகு நமது தேசவாழ்வின் ஆகப்பெரிய, எப்போதுமில்லாத அரசியல் பேரழிவு, வளர்ந்துவரும் பாசிச தாக்குதல்தான் என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும். எனவே, பாசிசத்தை தோற்கடிப்பதுதான் தற்போதைய கட்டத்தில் நமக்கு மய்யமான அரசியல் சவால், இந்த சவாலை சந்திக்க நம்மா லான அனைத்தையும் நாம் செய்தாக வேண்டும்.

42. பாசிசம் எப்போதுமே முற்றிப்போன பொருளாதார நெருக்கடியும், பாதுகாப்பின்மையும் நிலவும் கால கட்டங்களில்தான் வளர்கிறது. அய்ரோப்பாவில் இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் பாசிசம் எழுந்த பண்டைய காலத்திலும் இதுதான் உண்மை. அய்ரோப்பாவிலும் அமெரிக்காவிலும், வளர்ந்துவரும் வேலை யில்லா திண்டாட்டம், சிக்கன நடவடிக்கை களால் உருவான கோபம், அச்சத்தை மடைமாற்றிவிட்டும் இஸ்லாமிய வெறுப்பு, இனவாதம், அந்நிய கலாச்சார வெறுப்பு நெருப்பை விசிறிவிட்டும் பாசிசப் போக்குகள் தலை தூக்குகின்றன என்பதும் அதே அளவுக்கு உண்மைதான். இந்தியாவிலும் கூட, வேலை வாய்ப்பற்றவர்கள் மத்தியிலிருந்தும், மோடி அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ள பொருளா தாரப் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியிலிருந்தும் பாசிச சக்திகள் தனக்குரிய படை ஆட்களை திரட்டிக் கொள்வதையும் பார்க்கி றோம். பாசிச எதிர்ப்பு போராட்டம் என்பது வெகுமக்கள் சீற்றத்தின், அச்சத்தின் இந்த வேர்க் காரணத்தைக் கையிலெடுத்து, மக்களை அவர்களது பொதுவான வர்க்கக் கோரிக்கைகள் மீதும் வாழ்வாதாரம், பொருளாதார பாதுகாப்பு என்ற பொதுவான பிரச்சனைகள் மீதும் ஒன்று படுத்திட வேண்டும்.

43. 2014ல் மோடியின் வெற்றியை தொடர்ந்து பாசிச சக்திகள் தாக்குதலில் இறங்கிய போது இந்திய மக்கள், பின்வாங்காமல் தொடர்ந்து திருப்பித்தாக்கி வருகிறார்கள். விவசாயிகளும் பழங்குடி மக்களும் 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டம் அல்லது ஜார்க்கண்டின் சோடா நாக்பூர், சந்தால் பர்கானா குத்தகைச் சட்டங்களை திருத்தும் முயற்சியை முறியடித் தார்கள். மிகச்சமீபத்தில், நாடு முழுவதுமுள்ள விவசாய அமைப்புகள் கடனிலிருந்து விடுதலை பெறவும், விளைபொருளுக்கு நியாயமான ஆதரவு விலை கேட்டும் போராட, போர்க் குணமிக்க ஒற்றுமையைக் கட்டி எழுப்பியிருந் தார்கள். ரோஹித் வெமுலா நிறுவனரீதியாக படுகொலை செய்யப்பட்டது, நாடு முழுவதும் மாணவர் மத்தியில் பெரும் விழிப்புணர்வை உருவாக்கியது; தன்னிச்சையான நிர்வாக நடவடிக்கைகள், பொய் வழக்குகள், அரசு ஒடுக்குமுறை, தீய ஊடக விசாரணை, சங்க் காலிகள் மீண்டும் மீண்டும் நடத்திய தாக்குதல் ஆகியவற்றை எதிர்கொண்டு உறுதியாக நின்றது. ஆர்எஸ்எஸ்டன் இணைக்கப் பட்டுள்ள ஏபிவிபி. நாடு முழுவதும் கல்வி வளாகங்களில் அடுத்தடுத்த தேர்தல்களில் மண்ணைக் கவ்வுமாறு செய்யப்பட்டது. 2016ல் நாடு தழுவிய 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம், 2017 நவம்பரில் நாடாளுமன்றம் அருகில் மூன்று நாட்கள் ஆர்ப்பாட்டம் என தொழிலாளர் வர்க்க அணிதிரட்டலையும் கண்டோம்.

இடது ஒற்றுமையும் அனைத்து போராடும் சக்திகள்

மத்தியிலான ஒத்துழைப்பும்

44. குஜராத் முதல் உத்தர பிரதேசம் வரை, மகாராஷ்ட்ரா முதல் பிகார் வரை உற்சாகமூட்டும் தலித்துகளின் எதிர்ப்பு நிகழ்வுகளைப் பார்க்கிறோம். அடிப்படைப் பிரச்சனைகளான நிலம், கல்வி, வேலை, கவுரவம் மீது தீவிரமான அரசியல் அணிதிரட்டல் எனும் புதிய ஆற்றல்கள் முன்வந்துள்ளன. தலித்துகளுக்கெதிரான ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதலின் போது இளம் தலித் தலைவர்களால் தலைமை தாங்கப்படும் புதிய தலைமுறை தலித் இயக்கங்கள் தோன்றியுள்ளன. தாக்குதலுக்கு இலக்காகும் இஸ்லாமிய சமூகத்தின் பக்கம் உறுதியாக நிற்கும், மதவன்முறைகளை நடத்துவதற்காக தலித்துகளை உள்வாங்கிக் கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து உறுதியுடன் நிற்கும் வரவேற்கத்தக்க அம்சத்தை இந்த தலித் இயக்கத்தில் காணமுடிகிறது. ரோஹித் வெமுலாவின் நிறுவன ரீதியான படுகொலை, உனா அக்கிரமங்களை அடுத்து எழுந்துள்ள தலித் இயக்கங்கள், பொருளாதார\பொருளாயத உரிமைகளுக்கும் கவுரத்துக்குமான போராட்டங் களுக்கும் இடையிலானசீனச்சுவரைஉடைக்கத் தொடங்கியிருக்கின்றன.‘பசுவை தாயாகக் காட்டும் சங்க் குறியீட்டுக்கு எதிரான சக்தி மிக்க தலித் சவாலாக உனா இயக்கம் எழுந்துள்ளது மட்டுமின்றி, இழிவான, சுரண்டல் மிக்க உழைப்புக்கு எதிராகவும் நிலப்பங்கீடு, கவுரமான வேலை உத்திரவாதத்துக்கான தலித்துகளின் போராட்டங்களையும் தூக்கி நிறுத்தியுள்ளது. இத்தகையப் போராட்டங்கள், அம்பேத்கரியர்க ளாலும் இடதுசாரிகளால் வழிநடத்தப்படும் தலித்துகள், பிற ஒடுக்கப்பட்ட பிரிவினரது கவுரவம், உரிமைகளுக்கான போராட்டங்களுக் கிடையிலான ஒற்றுமைக்கும் சாதி ஒழிப்பு, சமூக மாற்றம் என்ற கருவான நிகழ்ச்சிநிரல் மீது போராடுவதற்கான வரவேற்பிற்குரிய அரங்கங் களையும் திறந்து விட்டுள்ளது. இத்தகைய அடிப்படை போராட்டங்கள் ஒவ்வொன்றையும் வலுப்படுத்துவதும் இந்த பலதரப்பட்ட எதிர்ப்புகளிடையே நெருக்கமான ஒற்றுமை, ஒத்துழைப்பு, ஒருமைப்பாட்டை உருக்கி உருவாக்குவதும்தான் வெகுமக்கள் எதிர்ப்பின் துடிப்புமிக்க பாசிச எதிர்ப்பணியைக் கட்டுவதற்கு திறவுகோலாகும்.

45. பாசிசம், இந்தியாவின் பெரும்பாலான நிறுவனங்களிடமிருந்து ஆகக் குறைவான எதிர்ப்பையே எதிர்கொள்கிறது. மேலதிகமான நிலப்பிரபுத்துவ, காலனிய அடையாளங்களைக் கொண்டிருக்கிற, எப்போதும் மக்கள்விரோத திசைவழியையே கொண்டிருக்கும் இந்திய அதிகார வர்க்கத்திடமிருந்தும் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை. பிரதான நீரோட்ட ஊடகங்களோ, அதிகாரத்திடம் உண்மையை பேசுகிற, அதை பொறுப்பேற்கச் செய்யும் ஜனநாயக நிறுவனமாக செயல்படுவதற்கு மாறாக, அமலாகிக்கொண்டிருக்கும் நவதாராள வாத கொள்கைகளின் நீட்சியாகவும், மேலாள ராகவும் அமைப்பாளராகவும் பிரச்சாரகராகவும் பாசிச மதவாத தாக்குதலாகவும் கூட செயல் படுகின்றன. ஆயினும், சூழ்நிலையின் தேவைக்கு எழுந்துவருகிற, இளம், கடப் பாடுள்ள களப்பணியாளர் படை வரிசையைக் கொண்ட மிகவும் நம்பிக்கையூட்டும் புதிய அலை எதிர்ப்பு இயக்கங்களையும் காண்கிறோம். அவை, மறுப்பு, எதிர்ப்பின் புதிய வடிவங்கள், வெளிகளோடு முன்வருவதையும் காண்கிறோம். புரட்சிகர கம்யூனிஸ்டுகள் இந்த எல்லா வகை செயலூக்கத்துடனும் நெருக்கமான ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு பாசிசசதித் திட்டத்தை முறியடிக்கவும் நாட்டின் ஒவ்வொரு ஜனநாயக வெளியை\அரங்கை பாதுகாக்கவும் முன்வர வேண்டும்.

46. அரசமைப்புச் சாசனமும் வாக்கும், பாசிச சக்திகளை எதிர்த்துப் போராடவும் தோற்கடிக் கவும் மக்கள் கைகளில் உள்ள இரண்டு ஆற்றல் மிக்க ஆயுதங்களாகும். எனவேதான் இவ்விரண்டு ஆயுதங்களையும் சீர்குலைப்பதற்கான பகீரத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாஜ்பாய் காலத்திலேயே அரசமைப்புச் சாசனத்தை மறுஆய்வு செய்ய பாஜக ஒரு குழுவை அமைத்தது. இன்று பாஜக அமைச்சர் கள் அரசமைப்புச் சாசனத்தை மாற்றியாக வேண்டுமென்று அடிக்கடி பேசிவருவதையும் கேட்கிறோம். அரசாங்கமும் கூட அரசமைப்புச் சாசனத்தை அடிப்படையானவிதத்தில் மறுவரை யறைப்படுத்தவும் மறுவடிவப்படுத்தவும் பலசட்டரீதியான நடவடிக்கைகளை கூர்ந்து ஆராய்ந்து வருகிறது. குடியுரிமைச் சட்டத்துக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள், இந்தியக் குடியுரிமையை நிர்ணயம் செய்வதிலும் அகதிகளை நடத்துவதில் இந்தியாவின் அணுகுமுறையை முடிவுசெய்வதிலும் மதத்தை ஒரு பாகுபடுத்தும் வரையறையாக கடத்திக் கொண்டுவரப் பார்க்கிறது. சட்டங்களை சீரமைப்பது என்ற பேரால் எல்லா தளங்களிலும் ஜனநாயக உரிமைகளை, குறிப்பாக தொழிற்சங்க உரிமைகள், கூட்டுபேர உரிமைகள், பணியிட ஜனநாயகம் ஆகியவற்றை கடுமையாக கட்டுப்படுத்தவும் வெட்டிச் சுருக்கவும் முயற்சிக்கப்பட்டு வருகிறது. இந்திய ஒற்றுமைக்கு நடுநாயகமான பன்மைத்துவம், வேற்றுமையை கீழேதள்ள, (நாட்டின்) கூட்டாட்சி அமைப்புமுறையை, திட்டமிட்ட வகையில் தலைக்குப்புற கவிழ்த்து சீர்குலைத்து, அதை ஆர்எஸ்எஸ்ன் இந்தி-இந்து-இந்துஸ்தான் கொள்கைக்கு கீழ்ப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

47.தேர்தல் அரங்கமும்கூட, ஆட்ட விதிகளை மாற்றியமைப்பதற்கான தொடர்ச்சி யான முயற்சிகளைக் கண்டு வருகின்றன. பெரிய கட்சிகளுக்கு அனாமதேயமாக நிதி அளிக்கும் நோக்கம் நிறைவேறுவதற்கேற்ப தேர்தல் நிதியளிப்பு விதிகளைத் திருத்துவதிலிருந்து இது தொடங்குகிறது. மேலும், பரவலாக்கப்பட்ட பிராந்திய, சமூக முன்னுரிமைகளையும் நோக்கு நிலைகளையும் மேலோங்கிய மய்ய அரசியல் முன்வைப்புகளுக்கு கீழ்ப்படுத்தி, ஒரு பன்மை வாத பலகட்சி ஜனநாயகத்தை அதிகரித்தளவில் இருதுருவ வரையறைக்குள் சுருக்கிவிட ஏதுவாக நாடாளுமன்றத்துக்கும் சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென்ற பாஜகவின் ஆரவாரக் கூச்சல் வரை, தேர்தல் போட்டிக்கான நிலைமைகளை மறுவரையறை செய்ய இடைவிடாது முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறுகளும் வாக்குச் சாவடி மட்ட வாக்கு எண்ணிக்கையில் காணப்படும் முறை கேடுகள் பற்றி அதிகரித்து வரும் புகார்களும் தேர்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை பற்றிய கடும் சந்தேகங்களை எழுப்பியுள்ளன. அரசமைப்புச் சாசனத்தையும் தேர்தல் நடைமுறையையும் சீர்குலைக்க, மோடி அரசாங்கம் எடுக்கும் இந்த முயற்சிகளிலிருந்து அதை தப்பிக்க விட்டுவிடக் கூடாது.

48. உண்மையில், குஜராத் தேர்தல்கள், மோடி ஆட்சியின் தாக்குதலுக்காளாகும் நிலையை அதன் சொந்தக் கோட்டையான குஜராத்தே அம்பலப்படுத்தியிருக்கிறது. அம்மாநிலத்தில், வலுவான எதிர்க்கட்சி இல்லாதபோதும் பல்வேறு பிரிவு மக்களது தொடர்ச்சியான போராட்டங்கள் கிட்டத்தட்ட பாஜகவை ஆட்சியிலிருந்தே வெளியேற்று மளவுக்கு ஒரு சூழலை உருவாக்கியிருந்தன. பாஜக வலுவாக காலூன்றாத, இடைவிடாத வெகுமக்கள் போராட்டங்கள் நடந்து வரும் பீகார் மாநிலத்தில், மோடி-ஷா இரட்டையர்களால் முடுக்கிவிடப்பட்ட பிளவுவாத மதவெறி பிரச்சாரத்துக்குப் பிறகும் பாஜகவுக்கு வலுவான அடிகொடுக்க முடிந்தது. இடது, பிற போராடும் சக்திகளின் ஒற்றுமையையும் அறுதியிடலையும் வலுப்படுத்துகிற அதேவேளை, தேர்தல் அரங்கில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் பாசிச சக்திகளுக்கு சவால் விடவும் (அவற்றை) தோற்கடிக்கவும் திறன்மிக்க தலையீட்டுக்கான போர்த்தந்திரத்தை புரட்சிகர கம்யூனிஸ்டுகள் கண்டுபிடிக்க வேண்டும். கம்யூனிச இயக்கத்தின் அரசியல் சுதந்திரத்தை எந்தவகையிலும் விட்டுக்கொடுக்காமல் எங்கெல்லாம் அவசியமோ அங்கெல்லாம் பாசிச பாஜக, அதன் கூட்டாளிகளுக்கெதிராக இடது அல்லாத எதிர்ப்பு சக்திகளுடன் கரம் கோர்க்கும் கருத்துக்கு தயாராக இருக்க வேண்டும்.

தொடரும்