சிதம்பரம் நடராசர் கோயிலில் தலித் பெண்மணியை வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தீட்சிதர்கள் உடனே கைது செய்யப்பட வேண்டும்.

நீதிக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை!

கடந்த பிப்ரவரி 15, 2022 அன்று சிதம்பரம் நடராசரர் கோயிலில், சாமி தரிசனம் செய்யச்சென்ற  ஜெயசீலா ( வயது 37)  என்ற பெண்மணியை அவர் பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர் என்பதால் தீட்சிதர்கள், அவரை மறித்து உள்ளே போகவிடாமல் தடுத்துள்ளனர். மேற்படி பெண்மணி கோயிலின் திருச்சிற்றம்பல மேடை மீது ஏறி நின்று சாமிகும்பிடப் போவதை அறிந்தே அவர் தடுக்கப்பட்டார்; அதுமட்டுமல்லாமல் தீட்சிதர்கள் அவர் சாதியைச் சொல்லி இழிவாகப் பேசி உள்ளனர். திருமதி ஜெயசீலா சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் 20 தீட்சிதர்கள் மீது, பட்டியலின பெண்ணை இழிவுபடுத்துதல் (147, 148 இதசபிரிவு -4, 3(எஸ்), 3(1)(6) வன்கொடுமைச் சட்டம் 1989 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. தமிழக அரசு வழக்குப் பதிவு செய்தும் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளின் பெயர்களே பதிவுப் செய்யப்படவில்லை. சமூகநீதி காக்கும் தமிழக அரசின் நிர்வாக அதிகாரிகள் பெரும்பான்மையோர் பார்ப்பனிய- இந்துத்துவா கோட்பாட்டின் அடிவருடிகளாக செயல்படுகின்றனர்; ஆகவே வழக்குப் பதிவு என்பதும் கூட, பெயரளவுக்கான நடவடிக்கையாகவே இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இதுபோன்று தான் 2019-ல் லதா என்கிற (53 வயது) பெண்மணி தனது மகன் பிறந்த நாள் அன்று சாமி தரிசனம் செய்யச் சென்றபோது தர்ஷன் என்ற தீட்சிதர் 'முறைப்படி யார் பெயருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்' எனக் கேட்காமலேயே அபிஷேகம் செய்தாகிவிட்டது என கூறி விட, அதுபற்றி கேட்டதற்காக அவரது கன்னத்தில் தீட்சிதர் அறைந்துவிட்டார். இதுபற்றி சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் செய்தும் அவரைக் கைது செய்யாமல் காலதாமதப்படுத்தியது காவல்துறை. இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தான் காரணம் என மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதுபோன்று, சிதம்பரம் கோயிலில் தமிழில் பாட முயன்ற ஆறுமுகம் என்ற ஓதுவாரும் கூட பாட அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு பல்வேறு முறைகேடுகள் தில்லை கோயிலில் தொடர்ந்து நடந்து வருகின்றன. உரிய காலத்தில் குற்றவாளிகள் மீது வழக்கு தொடுத்து தண்டிக்கும் நீதியை அரசு உத்திரவாதப்படுத்தாமல் கால தாமதம் செய்வதே சமூக அநீதியாகும்.

uபிப்ரவரி 15 அன்று தீட்சிதர்களால் அவமானப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில் தீட்சிதர்கள் மீது போடப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் பெயர் சேர்க்கப்பட்டு உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.

uசிதம்பர நடராசர் கோயில் தெற்கு வாசல் திறக்கப்பட வேண்டும். நந்தனார் நுழைந்த வாசல் என்பதால் நீண்டகாலமாக சுவர் கட்டப்பட்டு பூட்டிக் கிடக்கிறது. அத்தீண்டாமைச் சுவரை உடனடியாக அகற்ற வேண்டும்.

uஅனைத்து சாதி மக்களும் எவ்வித வேறுபாடோ பாரபட்சமோ இன்றி சுதந்திரமாக சிதம்பரம் கோயிலில் சாமி தரிசனம் செய்திட தீட்சிதர்களின் சாதிய ரீதியிலான ஆதிக்கத்தை ஒழித்திட, கோயிலை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திட, சிதம்பரம் நடராசர் கோவிலை அரசே ஏற்று நடத்த வேண்டும்; இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். அவசியப்பட்டால் அதற்கு ஏதுவாக சிதம்பரம் நடராசர் கோயிலை மீட்டிட சட்டமன்றத்தில் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

uசமூக நீதிக்கெதிராகச் செயல்படும் அரசு அதிகாரிகளைக் கண்காணித்து அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

uதில்லைக் கோயிலில் நடந்த அனைத்து வகை முறைகேடுகள் பற்றியும் ஆய்வு செய்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை நீதிக்கான மக்கள் இயக்கம் முன் வைக்கிறது. தமிழ்நாடு  அரசு உடனடியாகத் தலையீடு செய்து நீதியை நிலை நாட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது.