மார்க்சிய-லெனினிய- மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடித்து இந்திய கம்யூனிச இயக்கத்தில் புரட்சிகர கம்யூனிச இயக்கமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டை) தோற்றுவித்த தோழர்கள் சாரு மஜும்தார், நாக பூஷண், சரோஜ் தத்தா உள்ளிட்ட தலைவர்களுக்கும் இகக(மாலெ) தோற்றத்துக்கு முன்னோட்டமாக திகழ்ந்த நக்சல்பாரி தியாகிகளுக்கும் வெள்ளை அரச பயங்கரவாத ஒடுக்குமுறையால் களப்பலியான எண்ணிலடங்கா தியாகிகளுக்கும் சாம்பல் மேட்டிலிருந்து மாலெ-வை மீண்டும் கட்டி எழுப்பி ஒரு அகில இந்திய புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியாக நிறுவிய தோழர்கள் ஜாகர், வினோத் மிஸ்ரா உள்ளிட்ட தலைவர்களுக்கும் தமிழ்நாட்டில் நாட்டுப்புர, நகர்ப்புர உழைக்கும் மக்களது வர்க்கப் போராட்டத்தை வளர்க்க தங்கள் இன்னுயிர் உள்ளிட்ட அனைத்தையும் அர்ப்பணித்துக் கொண்டவர்களும் இந்த மாநில மாநாட்டு நகரையும் அரங்கையும் தங்கள் பெயரால் தாங்கி நிற்கும் தோழர்களுமான பி.வி. சீனிவாசன், டி கே எஸ். ஜனார்த்தனன் ஆகியோருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) 11ஆவது மாநில மாநாடு செவ்வணக்கம் கூறி அஞ்சலி செலுத்துகிறது!

தமிழ்நாட்டு மண்ணில் இகக(மாலெ)வை துடைத்தெறியும் திட்டத்துடன் கட்சியின் முதல் மாநிலச் செயலாளர் தோழர் அப்பு, கம்யூனிஸ்ட் போராளிகள் மச்சக்காளை, ராயப்பன், சந்திரகுமார், சந்திரசேகர், மாடக் கோட்டை சுப்பு, பார்த்திபன் (கடலூர்), நெல்லை மாரியப்பன், ஆட்சியாளர்களின் புரட்சியாளர் எதிர்ப்பு படுகொலையில் உயிர்நீத்த பாலன், கண்ணாமணி உள்ளிட்ட புரட்சியாளர்களுக்கும் நம்மை விட்டு பிரிந்த அம்மையப்பன் உள்ளிட்ட தலைவர்களுக்கும் மாநாடு அஞ்சலி செலுத்துகிறது.

தமிழ்நாட்டின், ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் தியாகிகளான வேலூர் சிப்பாய்கள், கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், குயிலி, தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், ஆகஸ்ட் புரட்சியின் (வெள்ளையனே வெளியேறு) தேவகோட்டை தியாகிகள், சேலம் சிறைத் தியாகிகள், கோவை சின்னியம்பாளையம் தியாகிகள், வ.உ.சி, சுப்ரமணியசிவா, மகாகவி பாரதியார் உள்ளிட்டோருக்கும்; சாதி ஆதிக்க நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைக்கு பலியான வெண்மணி தியாகிகள், சாதி சமத்துவப் போரில் பலியான இமானுவேல் சேகரன், உள்ளிட்டோருக்கு மாநாடு அஞ்சலி செலுத்துகிறது. 

தமிழ்நாட்டின் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, சாதி ஆதிக்க எதிர்ப்பு உரிமைப் போராட்ட நிகழ்வுகளான கொடியங்குளம், மேலவளவு, தாமிரபரணி, பரமக்குடி உள்ளிட்ட ஊர்களில் படுகொலையானவர்களையும் மாநாடு நினைவுகூர்கிறது.

பார்ப்பனிய எதிர்ப்பு, பகுத்தறிவு, பெண் விடுதலை, கம்யூனிச கருத்துப் பரவலில் முன்னணியில் நின்ற பெரியார், சிங்காரவேலர், தலித் விழிப்புணர்வுக்கு பெரும் பங்காற்றிய அண்ணல் அம்பேத்கர், முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் இராமாமிர்தம் அம்மாள் மற்றும் தோழர் கவிஞர் இன்குலாப், தோழர் செயப்பிரகாசம் உள்ளிட்டோரையும் இன்ன பிறரையும் மாநாடு நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகிறது.

2016ல் நடைபெற்ற கட்சியின் 10ஆவது மாநில மாநாட்டிலிருந்து இதுவரை கட்சியின் பலவேறு மாவட்டங்கள், அரங்குகளில் பணிபுரிந்து நம்மை விட்டுப் பிரிந்த பிரிக்கால் எஸ்.ஏ.சீனிவாசன், சம்மனசு மேரி, உள்ளிட்ட தோழர்களுக்கு மாநாடு செவ்வணக்கம் கூறி அஞ்சலி செலுத்துகிறது.

தனியார்மயமாக்க, தாராளமயமாக்க, உலகமயமாக்க கொள்கைகளை எதிர்த்த தொழிலாளர் போராட்டங்களில் உயிர் துறந்தவர்களுக்கும் கார்ப்பரேட் எதிர்ப்பு, அணுஉலை எதிர்ப்பு, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு, மீதேன் எதிர்ப்பு, எட்டு வழிச் சாலை எதிர்ப்பு போராட்டங்களில் ஆட்சியாளர்களின் குரூர படுகொலைக்கு உயிரிழந்தவர்களுக்கும் மாநாடு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

பாசிச ஆட்சியாளர்களின் கொடூர ஒடுக்குமுறையால் சிறையிலேயே உயிர் பிரிந்த பாதிரியார் ஸ்டேன் சாமி அவர்களுக்கும் சனாதன மதவெறி சக்திகளால் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ், பன்சாரே, கல்புர்கி உள்ளிட்ட அறிவாளிகளுக்கும் மதவெறி கும்பல் படுகொலையால் உயிரிழந்தவர்களுக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கும் அரசமைப்பு சட்டம் பிரிவு 370 அய் ரத்து செய்து காஷ்மீரை துண்டாடிய மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடி ராணுவ ஒடுக்குமுறைக்கு பலியான வர்களுக்கும் மாநாடு அஞ்சலி செலுத்துகிறது.

இந்தி மொழித் திணிப்பைஎதிர்த்து, நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடி உயிரிழந்தவர்களுக்கும் தமிழ்நாட்டின் இடது, முற்போக்கு, ஜனநாயக இயக்கங்கள், போராட்டங்களில் உயிர்நீத்த பெயர் தெரிந்த, பெயர் தெரியாத அனைவருக்கும் மாநாடு தலை தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.