பிரதிநிதிகள் மாநாடு

காவிப் பாசிசத்திற்கு எதிரான போர்க் களத்தில் விவசாயிகளும் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராடுவதை எடுத்துரைக்கும் விதமாக பச்சை வயல்வெளிகளுக்கு நடுவே சிவப்புக் கொடிகளும் தோரணங்களும் படபட வெனப்பறக்க, இக்க (மாலெ)விடுதலை கட்சியின் 11ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு திருச்சி வயலூரில் 2022 நவம்பர் 26, 27 தேதிகளில் தோழர் பி.வி.சீனிவாசன் நகரில், தோழர் டி.கே.எஸ்.ஜனார்த்தனன் அரங்கத்தில் நடை பெற்றது. நவம்பர் 26 அன்று காலை தியாகிகள் நினைவுச் சின்னத்திற்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் இக்க(மாலெ) கட்சியின் மூத்த தோழர் அ.சிம்சன் கட்சிக் கொடியை ஏற்ற காவிப் பாசிசத்திற்கு எதிரான முழக்கங்கள் விண்ணதிரச் செய்தன.

தோழர் சந்திரமோகன் தலைமையில் தோழர்கள் அந்தோணிமுத்து, கிருஷ்ணவேணி, ரேவதி, கலியமூர்த்தி, நாராயணன், தவச் செல்வன் ஆகிய ஏழுபேர் கொண்ட தலைமைக் குழு மாநாட்டை வழிநடத்தியது. தோழர்கள் சொ.இரணியப்பன், கே.பாலசுப்பிரமணியன், பொன்னுதுரை, ராஜசங்கர் ஆகியோர் உதவிக் குழுவாகச் செயல்பட்டனர்.

தோழர் பாலசுந்தரம் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிய தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. தமிழ்நாட்டின் 28 மாவட்டங்களில் இருந்து 170 பெண் பிரதிநிதிகள் உட்பட 400 பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இக்க(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பிரதிநிதிகள் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றினார். கலைந்து செல்லும் மாநிலக் கமிட்டியின் சார்பாக அறிக்கையை மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் முன்வைத்தார். அரசியல் தீர்மானம், கட்சி கட்டுதல், வேலை அறிக்கை மற்றும் வேலைத் திட்டம் மீது பிரதிநிதிகள் கருத்துக்களை முன் வைத்து விவாதித்தனர். விவாதங்கள் இரண்டா வது நாளும் தொடர்ந்தன. அறிக்கைகள் மீதான விவாதத்தைத் தொடர்ந்து மாநிலச் செயலாளர் தொகுப்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாநாட்டு ஆவணம் ஏகமனதாக பிரதிநிதிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இக்க(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் நிறைவுரையாற்றினார்.

பின்னர் கட்சியின் மத்தியக்குழு பார்வை யாளர் முன்னிலையில் 47 பேர் கொண்ட புதிய மாநிலக்குழு போட்டியின்றி தேர்ந்தெடுக் கப்பட்டது. தோழர் என்.கே.நடராஜன் மீண்டும் மாநிலச் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெ டுக்கப்பட்டார். மேலும் 13 தலைமைத் தோழர் களைக் கொண்ட மாநில நிலைக் குழு தேர்வு செய்யப்பட்டது.

இறுதியில் எதிர்கால வேலைத் திட்டம் மீது, அரசியல் தலைமை குழு உறுப்பினர் தோழர் வீ.சங்கர் உரையாற்றினார். இகக(மாலெ) தமிழ் நாட்டு அரசியல் களத்தில் வளர்ந்து வரும் புரட்சிகர இடதுசாரிக் கட்சி மற்றும் பாசிச எதிர்ப்பு அரசியல் சக்தி என்பதைக் காட்டுகிற வகையில் 2024ல் கட்சியின் மாபெரும் அரசியல் பேரணியை நடத்தி பெரு வெற்றி பெறச் செய்திட வேண்டுமென மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார். சர்வதேசிய கீதத்துடன் மாநாடு நிறைவுற்றது.

மத்திய கமிட்டி உறுப்பினர் பழ.ஆசைத்தம்பி மற்றும் திருச்சி மாவட்ட செயலாளர் ஞான தேசிகன் தலைமையிலான வரவேற்பு குழுவும் தொண்டர் அணியும் மாநாட்டு ஏற்பாடுகளைச் வெகு சிறப்பாகச் செய்திருந்தார்கள்.