தோழர்களே! சிபிஐஎம்எல் கட்சியின் பொது மாநாடு இன்று வெகு எழுச்சியோடு தொடங்கி யிருக்கிறது. அடுத்த இரண்டு நாட்கள் பிரதிநிதிகள் மாநாடு நடக்கவிருக்கிறது. மாநாடு வெற்றிபெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிபிஐஎம்எல் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். நான் தோழர் நடராஜனிடம் 10ஆவது மாநாடு எங்கே நடந்தது என்று கேட்டேன். அவர் செங்குன்றத்தில் நடந்தது என்று சொன்னார். 11ஆவது மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிற எனக்கே அது நடந்தது தெரியாது. அது எங்களுடைய தவறும் அல்ல. உங்களுடைய தவறும் அல்ல. நாமெல்லாம் பழகிப்போய் இருக்கிற ஒரு குறைதான் அது. இன்று அகில இந்திய அளவில் சிபிஐ கட்சியின் மாநாடு நடக்கிற என்றால் அந்த மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி அவர்களும் திபங்கர் அவர்களும் கலந்து கொள்கிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டில் திபங்கர் அவர்களும் ராஜா அவர்களும் கலந்து கொள்கிறார்கள். வருகிற பிப்ரவரி மாதம் உங்களுடைய அகில இந்திய மாநாட்டு நடக்கிறபோது சீத்தாராம் யெச்சூரி அவர்களும் ராஜா அவர்களும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இன்று ஏற்பட்டிருக்கிற புதிய சூழல். வலதுசாரிகள் ஓரணியாக திரள்கிறபோது அதற்கு எதிர்வினையாற்றுகிற இடதுசாரிகள் ஓரணியில் திரளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மாநாட்டில் 13 தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு மட்டுமல்ல அது தொடர்பாக நீங்கள் நடத்துகிற அனைத்து போராட்டங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இன்னும் சொல்லப்போனால் இடதுசாரிக் கட்சிகள் எல்லாம் உங்களோடு இணைந்து பணியாற்றுவோம். சவால்கள் நிறைந்த காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கம்யூனிஸ்டு களுக்கு சவால்கள் இல்லாத உலகம் மகிழ்ச்சியைத்தராது. பிஜேபியைப் பொறுத்தவரை ஆர்எஸ்எஸ்ஸின் அடிப்படை லட்சியங்களை நிறைவேற்றிட வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜனசங்க காலம் முதல் அவர்களை எதிர்ப்பவர்கள் இடதுசாரி கள்தான். ஆர்எஸ்எஸ்ஸிற்கு இடதுசாரிகள் தான் அவர்களது முதல் எதிரிகள். இடதுசாரித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்களை குறி வைத்துத் தாக்கிக் கொன்றார்கள். தோழர் திபங்கர் சொன்னதுபோல் ஸ்டேன் சுவாமியை கைது செய்து சாகடித்தார்கள். இந்த நாட்டில் சிறுபான்மை மக்களும் பட்டியலின மக்களும் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள். இந்தியாவிலே இந்தியை திணிக்கப்பட்ட போது அதை முதல்முதலாக எதிர்த்தவர்கள் கம்யூனிஸ்டுகள். தமிழ்நாடு என்கிற மாநிலம் உருவாக குரல்கொடுத்த வர்கள் கம்யூனிஸ்டுகள்தான். அதிகமான மக்கள் பட்டினியில் வாழ்கிற நாடாக இந்தியாவை ஆக்கிய பெருமைதான் மோடி அரசுக்கு உண்டு. அனைத்து பொதுத் துறை நிறுவனங்களும் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. இந்த எட்டாண்டுகள் அம்பா னியையும் அதானியையும்தான் செழிக்க வைத்தார்கள். இந்தியாவில் பணிநிரந்தரம் என்பது கிடையாது. எல்லாம் காண்ட்ராக்ட்மயம். ஒரு பக்கம் நாமெல்லாம் இடஒதுக்கீடு வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். அந்த இடஒதுக்கீடு தத்துவத் தையே சவக்குழிக்கு அனுப்புவதுபோல மோடி அரசாங்கம் பொதுதுறை, அரசுத்துறையை தனியாருக்கு தாரைவார்த்துவிட்ட பின்னர் இட ஒதுக்கீடு கொள்கை எங்கே இருக்கப்போகிறது? இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பாதுகாக்க பிஜேபி அரக்கனை அடித்துவிரட்டுகிற கடமை நம் அனைவருக்கும் முன் உள்ளது. கம்யூனிஸ்ட்டுகளுக்கு இரண்டு கடமைகள் உள்ளன. பாசிச பிஜேபியை வீழ்த்துவது ஒன்று. இடதுசாரிப் பாதையிலே பயணிக்க வேண்டியது மற்றொன்று. இந்த இரட்டைக் கடமை நிறைவேறுகிற போதுதான் இந்திய நாட்டு மக்களுடைய பிரச்சினைகள் தீரும்.