தமிழ்நாட்டு மக்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீறு கொண்டு எழச்சி பெறச் செய்த வஉசி பிறந்தது செப்டம்பர் 5. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17. அவர் வழியில் வந்த அண்ணாதுரை பிறந்தது செப்டம்பர் 15. திமுக உருவானது செப்டம்பர் 16. தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றைப் புரட்டிப் போட்ட, தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு தந்த, விடியல் தந்த மாதம் செப்டம்பர். அதே செப்டம்பர்தான் இப்போது இருட்டையும் இடியையும் மின்னலால் அல்ல, மின்சாரத்தால் தரப் போகிறது திமுக அரசு. விடியலுக்குப் பதிலாக இருட்டை தமிழக மக்களுக்கு முப்பெரு விழா பரிசாகத் தந்துள்ளது. இந்த செப்டம்பர் 10ம் தேதியில் இருந்து மின்சாரக் கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது. வீடுகளில் குடியிருப் போருக்கு 11%த்தில் இருந்து 45% வரை மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளது. இரண்டு மாதங்களில் 550 யுனிட் அளவு மின்சாரம் பயன்படுத்தியதற்கு முன்பு செலுத்திய கட்டணம் ரூ.240. அதே அளவு யுனிட்டிற்கு இனி செலுத்தப் போகும் கட்டணம் ரூ.2350. கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகரிப்பு. 1000 யுனிட்டிற்கு மேல் ஒவ்வொரு யுனிட்டிற்கும் ரூ.11 கட்ட வேண்டும். பல்லடக்கு மாடிகளில் குடியிருப்போர் எவ்விதக் காரணமும் இல்லாமல் ஒரு யுனிட்டிற்கு ரூ.8 மின்சாரக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். விவசாயிகளுக்கான இலவச மின்சார அளவு தொடர்பாக எதையும் சொல்லாமல் இருக்கிறது தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம். 100 யுனிட் வரையிலான இலவச மின்சாரம் தொடரும் என்று சொன்னாலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கெடுப்பு எனும்போது இலவச மின்சாரக் கட்டணத்தால் எவ்வித பலனும் இனி இருக்கப் போவதில்லை. 101 யுனிட் முதல் 200 யுனிட் வரை ரூ.55ம் 201 யுனிட் முதல் 300 வரை 155 ரூபாயும் 400 யுனிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு 295 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு 500 யுனிட்டிற்கு இனி கூடுதலாக ரூபாய் 595 செலுத்த வேண்டும். இதனால், வாடகை வீடுகளில் குடியிருப்போர் மட்டுமின்றி, சிறு குறு தொழில்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும். பீக் அவர்ஸ் (பரபரப்பான நேரம்) கட்டணம் 20%த்தில் இருந்து 25% மாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பல்வேறு தொழில்கள் நலிவடைந்துள்ள நிலையில், விசைத் தறி போன்ற பல தொழில்களை இழுத்து மூடுவதற்கான நிலைதான் ஏற்படும். விசைத் தறியாளர்கள் மின் கட்டண உயர்வைக் கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தனியாரிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கிவிட்டு, அதன் காரணமாக மின் கட்டணத்தை மக்கள் தலையில் கட்டுவதுதான் இப்போது நடந்துள்ளது. மின் கட்டண உயர்வால் மக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக, மின் வெட்டை அதிகப்படுத்துவார்களோ? திமுக அரசு விடியல் தரும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, இருட்டையும் அதிர்ச்சியையும்தான் அளித்துக் கொண்டிருக்கிறது. மின் கட்டண உயர்வு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டு திரும்பப் பெற வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் தவிர்க்கப் பட முடியாததாகும்.