'மோடியே திரும்பிப் போ' என்று முழக்கமிட்டு ட்டிரெண்டிங் ஆக்கி, ஆகாயத்தில் பறந்தாலும் அங்கேயும் எதிர்ப்பைக் காட்டுவோம் என்று கருப்பு பலூன் விட்ட தமிழ்நாட்டில், அதே மோடி, வெள்ளைக் குடையோடு வரவேற்கப்படுகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்தனர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள். மறுநாளே அதே ஆளுநருடன் ஒரே மேடையில் வீற்றிருந்தார் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள். ஒன்றிய அரசு தமிழ்நாட்டை ஓரங்கட்டியும் கண்டுகொள்ளாமலும் இருந்தபோது, திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழக மக்களுக்கு மோடி அரசு ஓரவஞ்சனை செய்கிறது, தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகச் செயல்படுகிறது என்று சொல்லி 'மோடியே திரும்பிப் போ' என்று முழக்கமிட்டபோது முன் வரிசையில் நின்ற திமுக, ஆட்சிக்கு வந்தபின்னர், ஆளுங்கட்சியான பின்னர், ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைச் செயல்பாட்டில் மாற்றம் வந்துவிட்டதா?. ஆரம்பத்தில் ஒன்றிய மோடி அரசு, ஓரவஞ்சனையோடு தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிதியை தராமல் இருந்தபோதும், தேவையில்லாமல் வரிகளை ஒன்றிய அரசு விதித்தபோதும் அதற்கெதிராக குரல் கொடுத்துக் கொண்டிருந்தவர் தமிழ்நாடு நிதியமைச்சர். தற்போது அவரது குரலைக் கூட கேட்க முடியவில்லை. ஒருவேளை, தமிழ்நாட்டிற்கான நிதிப் பங்கீட்டை முழுமையாக ஒன்றிய அரசு கொடுத்துவிட்டதா? நிச்சயமாக இல்லை என்று சொல்லலாம். அதுமட்டுமின்றி ஒன்றிய மோடி அரசும் சரி, பாஜகவும் சரி தமிழ்நாட்டிற்குள் தங்கள் நடவடிக்கைகளை வெளிப்படையாகவே செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழ் மக்கள் என்று பேசிக்கொண்டே தமிழர்களுக்குத் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே உள்ளிட்ட ஒன்றிய அரசுத் துறைகளில் தற்போது பணிக்கு ஆள் எடுத்துள்ளார்கள். அதில் ஒருவர் கூட தமிழர் அல்ல. இந்தி மொழித் திணிப்பு மீண்டும் தலை தூக்குகிறது. திராவிட பாரம்பரியத்தில் வந்த அறநிலையத்துறை அமைச்சரோ, ஆகம விதி, ஆராதனை, ஆக்கிரமிப்பு அகற்றல், ஆபரணங்கள் பாதுகாப்பு என்று சொல்லி ஆர்எஸ்எஸ் சங்கிகளோடு போட்டி போடுகிறார். காவல்துறையில், அரசாங்கத்தில் காவிச் சங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது. கோவை கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் தமிழ்நாடு அரசே தானாக முன்வந்து ஒப்படைத்ததாகட்டும், நீட் தேர்வை ரத்து செய்வதற்கு வலுவான முயற்சியை அல்லது போராட்டத்தை முன்னெடுக்காமல் தமிழ்நாடு அரசே நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை ஏற்படுத்துவதாகட்டும் ஒன்றிய அரசின் தொழிலாளர் சட்டத் தொகுப்புக்கு விதிகள் உருவாக்குவதி லாகட்டும் ஒன்றிய அரசின் போக்குவரத்துச் சட்டங்களை திடீரென அமல்படுத்துவதிலாகட்டும் தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான இல்லம்தேடிக் கல்வியை அமல்படுத்துவதிலாகட்டும் திமுக அரசின் மோடி எதிர்ப்பு முனை கூர் மழுங்கிப் போய் விட்டதா? தமிழ்நாடு அரசால் செய்யக்கூடியவைகூட நடைமுறைக்கு வராமல் உள்ளன. தமிழ்நாடெங்கும் பகுதி நேரக் கல்லூரி ஆசிரியர்கள் திமுக தேர்தல் போது கொடுத்த தன் வாக்குறுதியான பணி நிரந்தத்தை நிறைவேற்றக் கோரி போராடுகிறார்கள். இவ்வாறு அனைத்து பிரிவு மக்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், திமுக அரசு இளைஞர்களுக்கு அரசாங்க வேலை என்பதற்கு மாறாக தனியார் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்திக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசுக்கு அனுசரைைணயாகச் செல்வது என்பது திமுகவினருக்கு வேண்டுமானால் பலன் தரலாம். தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பலனையும் தரப் போவதில்லை. 2021ல் பாஜக-அதிமுக எதிர்ப்பில்தான் திமுக ஆட்சிக்கு வந்தது. பாஜக எதிர்ப்பு நிலை கூர் மழுங்கினால் 2024ல் வரும் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் திமுகவிற்கும் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)