நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டம், தமிழ்நாடு அரசால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தித் திணிப்பை எதிர்க்கிறது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக அரசு. இரு மொழிக் கொள்கை என்கிறது. அதற்காக தமிழ்நாடு அரசு வைக்கும் ஒரு திட்டத்திற்கு ஆங்கிலத்தில்தான் பெயர் வைக்க வேண்டுமா? இந்தத் திட்டம் இப்போது எதற்காக? இதன் நோக்கம் என்ன? அந்த பவுண்டேசனுக்கு தலைவர் டிவிஎஸ் குரூப்பைச் சேர்ந்த வேணு சீனிவாசன். இவர்தான் இந்த பவுண்டேசன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம் படுத்தப் போகிறார். அதற்காக அந்த பவுண்டேசன் கொடையாளர்க ளிடமிருந்தும் தனி நபர்களிடமிருந்தும் தனியார் நிறுவனங்களிடமிருந்தும் நிதி பெறும். அரசுப் பள்ளிகளை மேம்படுத்த, அரசுப்பள்ளிகளில் வசதிகளைச் செய்து கொடுப்பதற்குத்தான் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை இருக்கிறது. இனி அது என்னவாகும்? பொதுவாகவே தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் வசதிகளை அரசு கல்வித் துறை செய்து கொடுப்பதில்லை. அரசு பள்ளிகளில் சில அக்கறை உள்ள தலைமை ஆசிரியர்கள் கொடையாளர்களை, முன்னாள் மாணவர்களை பார்த்து, பேசி நிதி திரட்டி பள்ளிக்கான வசதிகளை செய்து கொள்வார்கள். இனி அதுவும் கூட அந்த அக்கறையுள்ள ஆசிரியர்களால் செய்ய முடியாது. நிதியை அவர்கள் நேரடியாகப் பெறமுடியாது. நம்ம ஸ்கூல் பவுண்டேசனைத்தான் அணுக வேண்டும். நிதி கொடுக்க நினைப்பவர்களும் இந்த பவுண்டேசனிடம்தான் கொடுக்க வேண்டும். கல்வி, சுகாதாரம், மருத்துவம் மக்களுக்கு இலவசமாக அரசு செலவில் பாரபட்சமின்றி வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே கல்வி தந்தைகள்! பல்கலைக் கழகங்களை, கல்லூரிகளைத் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். தனியார் பள்ளிகளும் நிறையவே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 37,000 அரசுப் பள்ளிகளையும் மேம்படுத்தப் போவதாகச் சொல்லிக் கொண்டு தனியார் கைகளில் ஒப்படைப்பதற்கான முதல் படிதான் இந்த நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டம். இது பாஜகவின் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சம். கல்வி நிலையங்களை, மருத்துவமனைகளை தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள் தத்து எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் இந்த பவுண்டேசன் கொஞ்சம் கொஞ்சமாக அரசுப் பள்ளிகளை தனியாரிடம் தத்து கொடுக்கும். அடுத்து அரசுப் பள்ளிகளின் கட்டணங்களை இந்த பவுண்டேசன் நிர்ணயம் செய்யும். ஆசிரியர்களை இந்த பவுண்டேசனே நியமிக்கும். அவர்களின் ஊதியத்தையும் அதே நிர்ணயிக்கும். இதையெல்லாம் வேணு சீனிவாசன் செய்யப் போகிறார் என்றால், அப்புறம் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழிக்கு அரசில் என்ன வேலை? இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த வேணு சீனிவாசன் தொழிலாளர்கள் விரோத நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றவர். தமிழக கோயில்களை புனரமைக்க, இவரைப் பொறுப்பாளராகப் போட்டார்கள். அறநிலையத் துறை அர்த்தமற்றமானது. கோயில்களில் சிலைகள் திருட்டு அதிகமானது. ரங்கராஜன் நரசிம்மன் இவர் மீது சிலைகள் திருட்டு வழக்குகளைப் போட்டுள்ளார். அதன் காரணமாக முன் ஜாமீன் பெற்றார். ஆர்எஸ்எஸ் சங்கிகளுக்கு மிக நெருக்கமானவர். குருமூர்த்திக்கு உற்ற நண்பர் இவர். உண்மையிலேயே இந்த அரசுக்கு அக்கறை உண்டு என்றால், உண்மையான அக்கறை உள்ள கல்வியாளர்களிடம் கலந்து பேசியிருக்கலாமே!. கடந்த அதிமுக ஆட்சியில் சமூகப் பொறுப்புணர்வு மற்றும் முன்னாள் மாணவர் பங்களிப்பு திட்டம் என்று ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு நிதி தருபவர்கள் அரசு இணையத் தளத்தைதான் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். ஆனால், இந்த ஆட்சியில் தனியார் முதலாளியிடம் முதலமைச்சர் நிதியைக் கொடுக்கிறார். காவிப் பாசிச பாஜகவை எதிர்க்கும் திமுக, அதன் தேசியக் கல்விக் கொள்கையை படிப்படியாக அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. முதலில் இல்லம் தேடி கல்வி. இப்போது நம்ம ஸ்கூல் பவுண்டேசன். இதுபோன்று அடுத்து மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையிலும் வரும் வாய்ப்புள்ளது. இதுவா திராவிட மாடல் ஆட்சி?