தோழர்களே,

இன்னும் சற்று நேரத்தில், தோழர் என்கே நடராஜன் என்று அறியப்படும் நீலகண்ட நடராஜனின் இறுதிப்பயணம் புறப்படவிருக்கிறது. நமக்கெல்லாம், கட்சி முழுவதற்கும் டிசம்.10 மிக மோசமானதொரு நாள்! இடியென இறங்கிய நாள்! கட்சியின் 11வது மாநில மாநாடு வெற்றிகரமாக திருச்சியில் நடந்து முடிந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. 13வது நாளி லேயே மாநிலச் செயலாளர் தோழர் நடராசன் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். இது மிகக் கொடுமையானது.

அரசப்பிள்ளைப்பட்டி என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்த தோழர் என்கே, "அரசும் புரட்சியும்" என்ற லெனினிய சிந்தனையால் ஈர்க்கப்பட்டார். அரசு இல்லாத ஒரு சமூகத்தைக் காணும் வேட்கையோடு புரட்சிப் பயணத்தை தொடங்கினார். கரட்டுப்பட்டி தோழர் முத்துராஜ், நடராஜன் என்ற சண்முகராஜுக்கு சாருமஜும்தாரையும் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியையும் அறிமுகப்படுத்தினார். எண்பதுகளின் துவக்கத்தில், அந்தப் பகுதியில் கட்சிப் பணி செய்த, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியை நிறுவிய தலைவர்களுள் ஒருவரான பி.வி. சீனிவாசனது பேச்சும் செயலும் தோழர் என்கேவை சுண்டி இழுத்தது. புரட்சியின் அழைப்பை ஏற்று புரட்சியே வாழ்வாக மாற்றிக் கொண்டார் தோழர் என்கே!

தமிழ்நாடு கட்சியின் ஒரு இக்கட்டான தருணத்தில் மாநிலச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மிக மிக நெருக்கடியானதொரு கட்டத்தில் மிக துணிச்சலுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மக்கள் வாழ்வதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் போராடுவதையே வாழ்க்கையாக்கிக் கொள்கிறார்கள். அதுதான் அவரை இத்தகைய துணிச்சலான, சவாலான பணியை மேற்கொள்ள காரணமாக இருந்தது.

அவர் பொறுப்பேற்றது முதல் எந்த வருத்த முமின்றி, புகார்களின்றி கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தி வந்தார். தோழர் மேரி கூறியது போல "மாறாத புன்னகையோடும் மலைக்காத மனதோடும்" அனைத்துக்கும் முகம் கொடுத்தார். கட்சி எடுக்க வேண்டிய கடுமையான பணிகள் எதையும் சிடுசிடுப்பின்றி முன்னெடுத்துச் சென்றார். அதனால் தான் கட்சியின் 11வது மாநில மாநாட்டில் அவர் ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், இப்படி ஒரு மோசமான பேரதிர்ச்சியை நாம் எவரும் எதிர்பார்க்கவில்லை.

தோழர் என்கே தனது இறுதிப் பயணத்தை தொடங்கவிருக்கிறார். ஆனால், நாமெல்லாம் முன்னோக்கிய பயணத்தை தொடர்ந்தாக வேண்டும். கட்சிக் காங்கிரசை பெரும் வெற்றி பெறச் செய்ய நாம் பலமடங்கு பாடுபட்டாக வேண்டும். தோழர் ரேவதி சொன்னார். 'என்கே நம்மோடு இருப்பார். நமக்கு வழி காட்டுவார்' என்று சொன்னார். அவரது புரட்சிகர பண்புகள் நம்மோடு இருக்கும். இருக்க வேண்டும். அவை நமக்கு வழிகாட்டும்.

என் கே வின் குடும்பத்தினரைப்பற்றி சொல்ல வேண்டும். அவர் நம்மோடு இல்லையே? குடும்பத்தின் சுகதுக்கங்களில் பங்குபெறவில்லையே என்ற ஆழமான வருத்தங்கள் இருந்திருக்கும். மகனை நினைத்த போது பார்க்க முடியவில்லையே என்ற மாளா வருத்தம் அந்தத் தாய்க்கு இருந்திருக்கும். ஆனால் அவற்றை யெல்லாம் பொருட்படுத்தாமல் கனத்த இதயத்துடன் இந்த ஏற்பாடுகளை அக்கறையோடு செய்திருக்கி றார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, கட்சியின் விருப்பத்தையும் வேண்டுகோளையும் புரிந்துகொண்டு இதை புரட்சிகர நிகழ்வாக நாம் நடத்த உடன் நின்ற என்கேவின் தம்பி, பேராசிரியர் விஜயக்குமார், தோழர் தேன்மொழி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு தலைதாழ்த்தி நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழர்களே,

தோழர் என்கேவின் உடலைச் சுமக்கும் வண்டிக்கு முன்னே தாழ்த்திய செங்கொடிகளோடு செல்லவிருக்கிறோம். ஆனால் முன்னைவிட பல மடங்கு உயரத்தில் செங்கொடியை உயர்த்தியாக வேண்டும். தோழர் திபங்கர் திருச்சி மாநாட்டில் கூறியது போல் நமது கட்சியை பெரிய கட்சியாக, வலுவான கட்சியாக வளர்த்திட வேண்டும். அதுதான் தோழர் என் கே வின் லட்சியமாக இருந்தது. அதை நிறைவேற்றிக் காட்டுவோம் என உறுதியேற்பதுதான் அவருக்கு நாம் செலுத்துகிற பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்.

தோழர் என்கேவுக்கு வீர வணக்கம்!

(11.12.2022 அன்று அரசபிள்ளைப்பட்டியில் நடைபெற்ற இறுதிப் பயண நிகழ்வில் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் பேசியது)