பின்னணியில் அமெரிக்க கறுப்பின பாடகி நீனா சிமோன்இன் 'இட்ஸ் எ நியூ டான்' (இதுவொரு புதிய காலை) என்ற பாடல் ஒலிக்கிறது. ஆஸ்திரிய ஓவியர் குஷ்டாவ் கிளிம்ன்ட்இன் புகழ்மிக்க ஓவியம் 'த கிஸ்' (அந்த முத்தம்) காட்சியாகிறது. கலவி முடிந்த பின் தன் காதலனிடம் "இனியா, நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?" என காதலி கேட்கிறாள். அப்படித் தொடங்கும் உரையாடல் இளையராஜா குறித்த விவாதமாக, வாக்குவாதமாக உருமாறு கிறது. அவள் தனது உணர்வுகளை மதிக்க வில்லை என எரிச்சல் கொண்டு, காதலி மீது ஏற்படும் வெறுப்பினால் அவளை சாதி அடிப்படையில் அவமானப் படுத்துகிறான் காதலன். அதனால் கலவி வரை வந்த காதல் சண்டையில் முடிந்து பிரிகிறார்கள். பரந்த தமிழ்த் திரைப்பட பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் இப்படியொரு முதல் காட்சியின் மூலம் சாதி குறித்த வலுவான செய்தியை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.
தமிழ்த் திரைப்படங்களில் நீண்ட காலமாக சொல்லப்பட்டு வரும் இறுகிக் கெட்டித் தட்டிப் போன பல கருத்துகளையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம்.
காதலில் பிரிந்தவர்கள், தன் பால் ஈர்ப்பு
கொண்ட ஆண், பெண், ஒருதலைக் காதல் கொள்பவர், பெண்ணாக மாறிய மாற்றுப் பாலி னத்தவர், பல்வேறு சாதி, மத, வர்க்க பின்னணி கொண்ட நாடகக் குழுவினர் புதிய நாடகம் ஒன்றை நிகழ்த்த ஒன்று கூடுகிறார்கள். அந்த நாடகத்தின் கதை காதல் பற்றியதாக இருக்கலாம் என விவாதிக்கிறார்கள். "காதல்ங்கிற மிக இயல்பான உணர்வுக்குள்ள, இல்லாத கற்பனைக் கதைகள் உருவாக்கி அதை நாடகமா மாத்த முயற்சி செஞ்சி சாதிய, மதத்த, வர்க்கத்த காப்பாத்த நெனைக்கும் நம்மளோட குடும்பங்கள பத்தின நாடகம் இது" என சொல்லப்படுகிறது. கதை விவாதம், ஒத்திகை, நடனப்பயிற்சி என செல்லும் போக்கில் ஒவ்வொருவரின் வாழ்க்கை, மன விருப்பங்கள், மற்றவர்களுடன் உறவு, பிரிவு, சிக்கல்கள் என்பதாக கதை நகருகிறது.
இனியனும் ரெனேவும் நீண்ட தூர இருசக்கர வாகன பயணம் செய்கிறார்கள். இடையில் தனது முன்னாள் காதலி குறித்து பெருமையுடன் பேசுகிறான் காதலன். ஆனால் அதேபோன்று, காதலியின் முன்னாள் காதலர்கள் குறித்து அவள் பெருமையுடன் கூறும் போது அவனது முகம் கறுத்து விடுகிறது. பிறகு அதனை ஏற்றுக் கொள்கிறான். முற்போக்கு எண்ணம் கொண்ட ஆண்களிடம் கூட பெண்களின் கற்பு, புனிதம் குறித்து, ஆழ்மனங்களில் புதைத்து போயுள்ள
அழுக்கு சிந்தனையின் வெளிப்பாடும், பல நூற்றாண்டு காலமாக ஆண் பெண் உறவில் உள்ள சமமற்ற தன்மை மாறிக்கொண்டு வருவதும் வெளிப்படுகிறது. இளையராஜாவை பிடிக்காதவங்களுக்கெல்லாம் நான் முத்தம் குடுக்கமாட்டேன்" என ரெனே இனியனிடம் கூறுகிறார். மேலும், "வர்க்கம் ஒழிஞ்சிட்டா சாதி ஒழிஞ்சிடும். இதெல்லாம் என்னால ஏத்துக்க கூட முடியாது" என்கிறார். ஆனாலும் முத்தம் கொடுக்கிறார். கலவியில் ஈடுபடுகிறார். திருமணம் செய்து கொள்ளலாமா என்றும் கேட்கிறார். ஆக, மனித உறவில் எழும் இதுபோன்ற மாறுபட்ட கருத்துகளால் ஆரம்பத்தில் முரண்படுவதாக இருந்தாலும், தொடர்ந்த இயக்கப்போக்கில் புரிந்து கொள்ளப்படும் போது ஒன்றிணைவதற்கான தடையில்லை என்பது தெளிவாகிறது.
சமூகத்தில் உள்ள பல்வேறு முரண்பட்ட கருத்துகள் முட்டிமோதி ஒரு புதிய ஒத்த கருத்தை எட்டும் நிலைக்கு இட்டுச் செல்லும் கதைப்போக்கினைத் தேர்ந்தெடுத்து இருப்பதன் மூலம் இயக்குனர் பா.ரஞ்சித் மிகச் சிறப்பான ஒரு திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். தமிழ் சமூகத்தின் பொதுப்புத்தியில் காலா காலத்திற்கும் உறைந்து போயுள்ள காதல், பெண்ணுடல், ஆண்-பெண் உறவு, ஆணவக் கொலை போன்ற கருத்துகளை துணிச்சலுடன், தீர்க்கமான விமர்சனத்துக்கு உள்ளாக்கி இருக்கிறார். மேலும் இத்தகைய கருத்துக்கள் கொண்டிருப்பவர்களை ஒரு உரையாடலுக்கு அழைக்கிறார். அவர்கள் தங்களது பிற்போக்குக் கருத்துகளை மாற்றிக் கொள்ள வேண்டும், அதற்கான வாய்ப்பினை வழங்க வேண்டும் என்பது அவரது விருப்பமென புரிகிறது.
நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் மைய கதாபாத்திரமான ரெனே தன்னுணர்வுமிக்க, சுதந்திர சிந்தனையுள்ள, துணிச்சல்மிக்க, சமரசமற்ற, உணர்ச்சிமயமான பெண். ஒரு தலித். அம்பேத்கரியவாதி.
இப்படியொரு கதாநாயகி தமிழ் திரைப் படங்களில் புதியது. சாதிய ஒடுக்குமுறையை சிறு வயதில் இருந்தே அனுபவித்த ரெனே, சில்லு சில்லாக உடைக்கப்பட்ட கண்ணாடித் துண்டு களை போல சிதறிப்போன தன்னை, ஒவ்வொரு முறையும் மீட்டெடுத்து தானொரு வலிமை மிக்கவளாக மாறியதை கூறுகிறார். பெண்ணின் உடல் அவளது உரிமை. வேறு யாருடையதும் அல்ல. அத்துமீறும்போது எதிர்ப்பது, ஆதரவு
தேடும்போது அணைத்துக் கொள்வது, நட்புறவுடன் உள்ளபோது தொடுவது, உரசுவது,
முத்தமிடுவது என அனைத்திலும் எல்லைகளை
தீர்மானிக்க வேண்டியது அவள்தான் என்பதை
தீர்க்கமாக வெளிப்படுத்துகிறார்.
முதல் காட்சியில், தான் தவறு செய்து விட்டதை உணர்ந்து உடனே மன்னிப்பு கோரு கிறார் இனியன். தவறின் தீவிரம் காரணமாக அப்போதைக்கு அதனை மன்னிக்கத் தயாராக இல்லை ரெனே. ஆனால் இறுதியில் மன்னித்து ஒரு சக தோழனாக அவனை ஏற்றுக் கொள் கிறார். அனைத்துமே முரண்பாடுகளின் சங்கமம். இரண்டு எதிரெதிர் போக்குகளின் ஐக்கியமும் போராட்டமும். முற்போக்கு எண்ணம் கொண்ட இனியன் போன்றவர் களிடமும் கூட ஆழ்மனதில் பிற்போக்கு எண்ணங்கள் உள்ளன. சரியான நடத்தை என்பது ஒரு இயக்கப் போக்கு. தவறுகள் செய்யும் போது அது சுட்டிக் காட்டப்படும் போது, அதனை உணர்ந்து, ஏற்றுக் கொண்டு, சரி செய்து கொள்ளும் மனத்துணிவு மட்டுமே ஒருவர் சிறந்த மனிதராக மாறிச் செல்வதற்கான அடிப்படை.
உறைவிடப் பள்ளியில் படித்து, சரளமாக ஆங்கிலம் பேசினாலும் நிலப்பிரபுத்துவ, சாதிய, பிற்போக்கு கருத்துகள் கோலோச்சும் வழமையான குடும்ப அமைப்பின் சூழலில் வளர்ந்த அர்ஜுன், பிற்போக்கு கருத்துகள் ஆதிக்கம் செலுத்தும் இளைஞர்களின் பிரதிநிதியாக உள்ளார். அவ தன் வாழ்நாளில் இதுவரை எதிர் கொள்ளாத பல்வேறு மாறுபட்ட கருத்துகளை எதிர் கொள்ளும் போது, தான் இதுவரை சரியென நம்பிய கருத்துகளை நிலைநாட்ட முயற்சிக்கிறார். பலரும் அதன் பிற்போக்குத் தன்மையை எதிர்க்கும் போது குழம்புகிறார். புரிந்து கொள்ள முயற்சிக்கிறார். இறுதியில் தனது பிற்போக்குக் கருத்துகளை மாற்றிக் கொள்கிறார். ஆனால், இப்படிப்பட்ட கருத்துகள் கொண்டிருக்கும் அனைவரும், இப்படியான உரையாடல்களின் மூலம் மாறி விடுவார்களா? என்பது ஒரு கேள்வியே. ஆனால் இயக்குனர் அப்படியான நம்பிக்கையை வெளிப்படுத்தியது போலவே தெரிகிறது. அரசியல் தெளிவு ஒரே நாளில் வந்து விடுவதில்லை என்றும் அதற்கு தகுந்த சூழலும் போதுமான காலமும் அவசியம் என்றும் சொல்லப் படுகிறது.
இத்திரைப்படத்தின் மையக்கரு ஆணவக் கொலைகள் குறித்த விமர்சனம். காதல் ஒரு உலகளாவிய, அனைத்தும் தழுவியது. அதற்கு
சாதி, மதம், இனம், மொழி, வர்க்கம், பால் போன்ற எவ்வித பேதங்களும் கிடையாது. ஆனால், தமிழ்நாட்டில் தலித் இளைஞர்களுக்கும் ஆதிக்க இடைநிலை சாதி பெண்களுக்கும் இடையே வளரும் காதல், பெரும் சிக்கல்களை எதிர்கொள்கிறது. வசதியற்ற தலித் ஆண்கள் ஜீன்ஸ் பேண்ட்டும் கூலிங் கிளாஷும் அணிந்து கொண்டு, வசதிமிக்க பெண்களை காதலித்து ஏமாற்றுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஒருசில பிற்போக்கு அரசியல் இயக்கங்கள் 'நாடகக்காதல்' என இதனை சித்தரித்து தங்களுக்கு அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார்கள். ஆண், பெண் இருவரும் முடிவு செய்ய வேண்டியதை அரசியல் ஆக்குகிறார்கள். காதல் அரசியல் ஆக்கப் படுகிறது. பெண்ணுடல் குறித்து பல நூற்றாண்டு காலமாக சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ள பெண்களின் கற்பு, புனிதம், குடும்ப கௌரவம் போன்ற பிற்போக்கு நச்சுக்கருத்துகளின் பின்னணியில், பெற்றோர்களின், குடும்பத்தினரின் துணையுடன் சம்பந்தப்பட்ட இருவரையும் கொலை செய்வது நிகழ்கிறது. இந்தக் கலாச்சாரக் காவலர்களை அம்பலப்படுத்துகிறது நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம்.
காட்டுப் பூனை, நாட்டுப் பூனை என்ற உருவகத்தின் வழியாக தலித், இடைச்சாதி காதலர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, ஆணவக்கொலைகளை குறித்து பேசுவதாக வடிவைக்கப்பட்ட நாடகத்தின் வழியாக கதை சொல்லப்படுவது மிகச் சிறப்பானது. அதே பூனை இனத்தின் காட்டு விலங்கான புலியின் உருவகத்தில், சனாதன, வர்ணாஸ்ரம, இந்து மேலாதிக்கவாதிகளின் பிரதிநிதியாக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி உள்ளார் இயக்குனர். படத்தின் இறுதிக்காட்சியில் நடைபெறும் நாடகத்திற்கு இடையூறு செய்து நடிகர்களை அடித்து துவம்சம் செய்யும் அவரை, அனைவரும் ஒன்றிணைந்து அடித்து விரட்டுகிறார்கள். அதிலும் ரெனே முதன்மை பங்காற்று வதையும், மற்ற பெண்கள் முக்கிய பங்காற்று வதையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். சாதியை மறுக்கும் முற்போக்கு, ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து, சாதியை, பிற் போக்கு கலாச்சாரத்தை, மதிப்பீ டுகளை காப்பாற்ற முயற்சிக்கும் சனாதன, இந்து மேலாதிக்கவாத அரசியலை தோற்கடிக்க வேண்டும் என்ற செய்தியாகவே இது உள்ளது.
மேலும் கலை இலக்கியத்தின் சமூகப் பாத்திரத்தைஇது சுட்டிக்காட்டுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
ரெனேவிற்கு எரியும் விண்கற்கள் பெரு மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது. தன் காதலனுடன் சண்டையிட்டு பிரிந்து தனியே நடந்துவரும் இரவில் கூட அத்தகைய விண்கல்லை பார்த்து பரவசப்படுகிறார். புதிய நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக அவற்றை இயக்குனர் காட்சிப் படுத்தி யிருக்கிறார். இறுதிக் காட்சியில் கடற்கரையில் அனைவரும் அமர்ந்து சுதந்திரக் காற்றை சுவாசித்து, அளவளாவிக் கொண்டி ருக்கும் போது நட்சத்திரம் நகருவதை கண்டு களிக்கிறார்கள். கலை இலக்கியத்திற்கு கிடைக் கும் சுதந்திரத்தை சமூகத்திற்கு கிடைத்த சுதந்திரத்தின் வெளிப்பாடாகக் காணலாம். மேலும் சனாதன பிற்போக்கு சக்திகளை வெற்றி கொள்வதே சமூகம் முழுவதற்குமான சுதந்திரத்திற்கு அடிப்படை தேவை எனவும் புரிந்து கொள்ளலாம்.
படம் முழுவதும் வரும் இளையராஜாவின் பாடல்களும் ஓவியம் போன்ற காட்சி பிம்பங்களும் டென்மாவின் இசையும் தமிழ் ராப் இசைக் கலைஞர் அறிவின் பாடல் வரிகளும் திரைப்படப் பார்வையாளர்களுக்கு அற்புத அனுபவத்தை வழங்குகின்றன. ரெனேவாக துஷாரா விஜயன் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். விளிம்பு நிலையில் உள்ள, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு, போராட்டம் குறித்து தொடர்ந்து தனது திரைப்படங்களில் சொல்லி வருவதன் வழியாக இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ்த் திரைப்பட போக்கினை முன்னோக்கி நகர்த்திக் கொண்டு செல்கிறார். அது நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் பார்க்க வேண்டிய படம். விவாதிக்க வேண்டிய படம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)