புத்தாண்டின் வருகையானது பொதுவாக புதிய இலக்குகளை அமைத்துக் கொள்வதற்கும் புதிய தீர்மானங்களை வகுத்துக் கொள்வதற்கு மான நேரமாகும். ஆனால் மோடி அரசாங்கத்திற்கோ அது உண்மையில், பழைய வாக்குறுதிகளை குப்பைத் தொட்டியில் போடுவதற்கும் புதிய தொடு எல்லைகளுடன் புதிய கதை யாடலை தொடங்குவதற்குமான வழியாகும்.

மோடியின் வெற்றிகரமான 2014 தேர்தல் பரப்புரையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளெல்லாம் சும்மா தேர்தல் பரப்புரை எனக்கூறி வெகு சீக்கரமே கைவிடப்பட்டுவிட்டன. அவை, வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கருப்புப் பணம் நம் நாட்டுக்கு திரும்பக் கொண்டு வரப்படும்; பெருமளவில் (மக்கள்) நுகரும் பெட்ரோல், அத்தியாவசிய பொருட்களின் விலை மலிவாக்கப்படும்; டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுப்படுத்தப்படும்; இந்த வாக்கு றுதிகள், அய்க்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிரான பாஜகவின் பரப்புரை இயக்க கருப்பொருளைச் சுற்றி பின்னப்பட்ட பண ஆதாயங்கள் தொடர்புடைய வாக்குறுதிகளாகும். ஒருபுறம்,சங்-பாஜக அமைப்புகளின் கும்பல் படுகொலை சம்பவங்களுடனும் பாசிச வடிவமைப்பின் வேறுபல நிச்சயமான அறிகுறிகளுடனும் இந்தியா விழித்தெழத்தொடங்கும் போது, மறுபுறம், இந்திய விடுதலையின் 75வது ஆண்டான 2022இல் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் தொடங்குவதற்காக திட்டமிட்டிருந்த, புதிய இந்தியாவின் மாபெரும் காட்சியை இந்த ஆட்சி முன்னிறுத்தியது. ஒவ்வொரு இந்தியருக்கும் குடியிருப்பதற்கான வீடு, ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கழிப்பறை, 24×7 மின்சார வசதி, குழாய் குடிநீர் ஆகியவை புதிய இந்தியாவில் தரப்படும் என்ற வாக்குறுதி உறுதியளிக்கப்பட்டது. 5 ட்ரில்லியன் டாலர் (சுமார் 400 லட்சம் கோடி ரூபாய்) பொருளாதாரத்தில், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. 2022 முடிந்து விட்டது. புதிய இந்தியாவின் புதிய தந்தை நரேந்திர மோடியுடன், இந்தியா, புதிய இந்தியாவாக நிச்சயமாக உருமாறி விட்டது என நமக்குச் சொல்லப்பட்டது. மேலும், இந்த அரசாங்கத்தின் கதையாடல், புதிய அளவுகோல்களுடன் புதிய கால அட்டவணைகளுக்குள் நகர்ந்துவிட்டது. உதாரணமாக, 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார மாவதற்கே இந்தியா இன்னும் மிகவும் பின்தங்கியுள்ள நிலையில், 2050இல் இந்தியா 30 அல்லது 40 ட்ரில்லியன் டாலர் பொருளாதார மாகிவிடும் என நம்மிடம் சொல்வதில், அதானியும் அம்பானியும் தீவிரமாக இறங்கி உள்ளனர்! இந்திய விவசாயிகள், அவர்களின் பயிர்களுக்கு நியாயமான விலையை பெறுவதற் கான உத்தரவாத உரிமைக்காக இன்னும் போராடிக் கொண்டிருக்கிறபோதும், இந்த பாவப்பட்ட விவசாயிகளின் வருமானம் இன்னும் இரட்டிப்பாகவில்லை. மாறாக, இந்த அரசாங்கம், விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பதையும் உரங்களின் விலையை அதிகரிப் பதையும் செய்து கொண்டேயிருக்கிறது. பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்ட குடியிருப்புக்கான திட்டம் யதார்த்த வாழ்விலிருந்து மறக்கடிக்கப் பட்டுவிட்டது. அதேவேளையில், வெறியாட்டம் போடும் புல்டோசர்கள், வீடுகளை இடித்துத் தள்ளுவதையும் மக்களை வெளியேற்றுவதையும் செய்து கொண்டேயிருக்கின்றன.

வாக்குறுதியளிக்கப்பட்டு நீண்ட காலத்திற்கு பின்பும், புல்லட் ரயில்கள் இன்னும் காட்சியளிக்க மறுத்து வருகின்றன. ஆனால், வந்தே பாரத் ரயில்கள் பெரும் கொண்டாட்டங்களுடனும் அரசியல் அணிதிரட்டல்களுடனும் இயக்கப்படுகின்றன. வேகம் மற்றும் சேவையின் படி பார்த்தால், நீண்ட காலத்திற்கு முன்பே, 1988இல் அறிமுகப்படுத்தப்பட்ட சதாப்தி ரயிலுக்குக் கூட, இந்த புதிய ரயில்களை இணையாகச் சொல்ல முடியாது. மேலும் இந்த ரயில்கள், அடிக்கடி நிகழும் விபத்துக்களுக்காக செய்தியில் அடிபட்டுக் கொண்டேயிருக்கின்றன. இந்த சமயத்தில், பின்தங்கிய பகுதிகள், ஒதுக்குப் புறமான பகுதிகளை இணைக்காமல் பெருநகர பகுதிகள், சுற்றுலா தலங்களுக்கு சேவை செய்ய கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டும், பொது மக்களுக்கு நியாயமான விலையில் பாதுகாப்பான ரயில் பயணத்திற்கு மாறாக செல்வந்தர்களுக்கான மகிழ்ச்சி கொண்டாட்டப் பயணங்கள் எனவும் கவனம் குவிப்பது திசைமாறிவிட்டது. கல்வி, மருத்துவத்திலிருந்து குடியிருப்பு, போக்குவரத்து வரை அநேகமாக அனைத்து முக்கிய முனைகளிலும் அரசாங்கத்தின் கொள்கைகள் மேல்தட்டு சீமான்களுக்கு சேவை செய்பவையாக மாற்றப்பட்டுவிட்டன. அதே வேளையில், இலவசங்களின் கலாச்சாரம் எனப்படுவதின் தகுதியற்ற பயனாளிகள் என பொதுமக்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள், அபகரிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்த புதிய கதையாடலில், இலக்கானது திட்டமிடப்பட்ட வகையில் இந்திய விடுதலை யின் நூறாவது ஆண்டான 2047க்கு மாற்றப்பட்டு விட்டது. அந்த நூற்றாண்டுக்கு நம்மை கொண்டு செல்லும் இந்த கால் நூற்றாண்டு 'அமுத காலம்' என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டு மொத்த காலத்திற்கும் 'கடமை'களே மையக் கருப்பொருளாக இருக்க வேண்டுமென நரேந்திர மோடி விரும்புகிறார். 2022இன் ஆகஸ்ட் 15 உரையில் அவர் குறிப்பிடும் அய்ந்து உறுதி மொழிகள் தேசப்பெருமை, ஒற்றுமை, நம்பிக்கை, கடமை ஆகியவற்றை சுற்றியே உள்ளது. இந்தக் கதையாடலில் மக்களின் உரிமைகள் அரசாங்கத் தின் கணக்கு சொல்லும் பொறுப்புகள் குறித்த எண்ணங்கள் வெளிப்படையாக விடுபட்டிருக் கின்றன. அரசமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்ட, மக்களுக்கு கடமைப்பட்ட ஒரு அரசாங்கம் என்ற கருத்துக்கு மாறாக, அவருடைய விருப்பமே சட்டமாகிப் போன ஒரு மாபெரும் தலைவரால் ஆளப்படும் தேர்தல் எதேச்சதிகாரம் என்ற கருத்தாக மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. குறிப்பிடப்பட்ட எந்தவொரு நோக்கங்களையும் நிறைவேற்றாமல் வெளிப்படையாக தோல்வி யுற்ற பணமதிப்பிழப்பு என்ற அதிர்ச்சிகரமான பேரடியின் ஆறு வருடங்களுக்குப் பிறகு, பணமதிப்பிழப்பு 'சரியே' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது, வரும் நாட்களில் அரசமைப்புச் சட்டத்தின் மீதும், குடிமக்களின் உரிமைகள் மீதும் மேலதிக தாக்குதல்களை கட்ட விழ்த்து விட இந்த எதேச்சதிகாரத்தை மேலும் துணிவு கொள்ளச் செய்யும்.

மோடி அரசாங்கத்திற்கு, 2024இல் நடக்க விருக்கும் முக்கியமான போர்க்களத்திற்கான ஏவுதளமாக 2023 இருக்கப்போகிறது. வட கிழக்கில் நான்கும் (திரிபுரா, மேகாலயா, நாகலாந்து, மிசோரம்), தென் மண்டலத்தில் இரண்டும் (கர்நாடகா, தெலுங்கானா), மத்திய, வடமேற்கு இந்தியாவில் மூன்றும் (சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான்) என ஒன்பது மாநிலங்கள் இந்த ஆண்டில் தேர்தலை சந்திக்க உள்ளன. மோடி ஆட்சிக்கு ஒவ்வொரு நிகழ்ச்சியும் தேர்தல் பரப்புரை நிகழ்த்து வதற்கானதாகும். 2024 நெருங்க நெருங்க ஓராண்டுகால உரத்த பரப்புரை, தீவிர வெறுப்பு இயக்கத்திற்கான ஆண்டுக்குள் நாம் நுழைய இருக்கிறோம். ஜி20 தலைமைப் பதவி, இந்தோனேசியாவிடமிருந்து இந்தியாவுக்கு மாறியதையொட்டி, மோடியின் கீழ் இந்தியாவின் சர்வதேச மதிப்பு உயர்ந்து விட்டது என சொல்லப் படுவதின் உரத்த தன்பாராட்டு பரப்புரையும் இருக்கும். நாடு முழுவதும் 56 இடங்களில் பரவ லாக நடக்கும் முன்னேற்பாடு மற்றும் அதற்கு துணைசெய்யும் கூட்டங்களின் உச்சகட்டமாக, டெல்லியில் (செப்டம்பர் 9-10, 2023) நடைபெறப் போகும் ஜி20 உச்சி மாநாடு அமையும். இதனால் உலகின் ஆரவாரம் மிகுந்த கொண்டாட்ட விழாவுக்கான ஆண்டாகவும் இது இருக்கும்.

ஜி20 உச்சி மாநாடுகள் உலகமய எதிர்ப்பு போராட்டங்களால் எப்போதுமே அடையாளப் படுத்தப்பட்டு வந்துள்ளன. இந்தியாவில் நடக்கப் போகும் ஜி20 கூட்டங்கள் தேசப் பெருமையை காட்சிப் பொருளாக்கும் மேடைகளல்ல; ஆளும் கட்சிக்கு ஆதரவாக பயன்படுத்தப்படுவதற்கு மல்ல. கார்ப்பரேட்டுகளின் பேராசை, இலாப வெறி பெருங்கொள்ளைக்கு எதிராக, மக்களின் உரிமையை உறுதிசெய்வதற்கான, பொது மருத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சூழலியல் நீதிக்கான உலக ஒருமைப்பாட்டினை அதிகரிப்ப தற்கான, இந்தியாவின் விழிப்புணர்வு கொண்ட பொதுக் கருத்துக்கு இந்த ஜி20 நிகழ்வு அமைய வேண்டும். இந்திய மக்களாகிய நாம் 2023ஐ முழுமையாக பயன்படுத்திக் கொள்ள ஆயத்தமாக வேண்டும். ஜனநாயகத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் பாசிச திட்டத்தை ஒவ்வொரு முனைகளிலும் தடுத்து நிறுத்தவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.