தமிழ்நாட்டில் டாஸ்மாக் தொழிலாளர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இதுநாள் வரை பணி வரன்முறை காலமுறை ஊதியம் கிடையாது. அவர்கள் வாங்கும் தொகுப் பூதியத்தில் உயர்வு அளித்தாலும் கூட அவர்கள் வாங்கும் சம்பளம் மிகவும் சொற்பமே. மேற்பார்வையாளர் ரூ.13,750ம், விற்பனையாளர் ரூ.11,600ம், உதவி விற்பனையாளர் ரூ.11,500ம் தான் பெற்றுவருகின்றனர். சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சட்டப்படியான வார விடுமுறை, தேசிய பண்டிகை விடுமுறை, மிகை நேர ஊதியம் போன்ற எதுவும் கிடையாது. டாஸ்மாக் கடைகளில், பார்களில் பணிபுரியும் ஊழியர்க ளுக்கு பணியிடங்களில் பாதுகாப்பற்ற சூழல் தான் நிலவுகின்றது. சமூக விரோதிகளால் ஊழியர்கள் தாக்கப்படுகிறார்கள். சிலர் உயிரிழந்தும் உள்ளார்கள். பல டாஸ்மாக் கடைகள் பாதுகாப்பற்ற நிலையில்தான் உள்ளன. டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணிச் சுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அரசாங்கம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கிறது. இப்போது காலி பாட்டில்களை திரும்ப வாங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே இருக்கக்கூடிய வேலைகளோடு காலி பாட்டில்களை வாங்குதல், பணம் கொடுத்தல், கணக்கு வைத்தல் என அதற்குரிய வேலைகளைக் கூடுதலாகப் பார்க்கவேண்டியுள்ளது. இந்த காலி பாட்டில்கள் திரும்பப் பெறுவதால் ஏற்படும் கூடுதல் வேலைக்கு கூடுதல் சம்பளம் கிடையாது. கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது. பணிச் சுமைதான் அதிகரிக்கிறது. அதற்கேற்ப ஊழியர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். சுகாதாரமற்ற காலி பாட்டில்களால் ஊழியர் களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாறுமாறாக ஒழுங்கு நடவடிக்கைகள் மேற் கொள்ளப் படுகின்றன. டாஸ்மாக் கடைகளோடு உரிமம் இல்லாத மதுக்கூடங்கள் இயங்குகின்றன. இக் கூடங்களில் பிரச்சனைகள் வரும்போது, டாஸ்மாக் ஊழியர்கள் மீதுதான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உரிமம் இல்லாத மதுக் கூடங்களுக்கு ஆட்சியாளர்கள், நிர்வாகங் களின் ஆசிகள் உள்ளதால், பாதிக்கப்படுகின் றவர்கள் டாஸ்மாக் ஊழியர்களே. வேறு வேலை கிடைக்காமல் பட்டப்படிப்பு படித்தவர்கள் கூட டாஸ்மாக்கில் பணிபுரிகிறார்கள். மது விலக்கு முற்றிலும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று சொல்லும் அதேவேளை, டாஸ்மாக்கில் வேலை பார்க்கும் ஊழியர்களும் அவர்கள் குடும்பங்களும் காப்பாற்றப்பட வேண்டும் என்கிற அடிப் படையில், கடந்த மாதம் ஏஐசிசிடியு உள்ளிட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக தமிழ்நாடு மின்சாரம், ஆயத்தீர்வை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் திரு.செந்தில் பாலாஜியைச் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. இதில் ஏஐசிசிடியு மாநில சிறப்புத் தலைவர் தோழர் சொ.இரணியப்பன், நிர்வாகிகள் சிவா, சைலப்பன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அமைச்சரைச் சந்தித்த பின்னர், சட்டமன்றத்தில் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் அறிவிப்புகள், கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.