நீண்டகாலமாக தமிழக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலையை கோரி பல தலைவர்களின், வேண்டுகோள்களும், பல ஜனநாயக அமைப்புகளின் ஆர்பாட்டங்களும் போராட்டங்களும் நடந்து வருகின்றன. குழந்தையாக இருந்த போது தந்தையைப் பிரிந்தவர்கள், இளம் மனைவியைப் பிரிந்தவர்கள், மகனையும் சகோதரனையும் பிரிந்தவர்கள் என அவர்களின் கண்ணீர்க் கதைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்கள் இல்லாத அந்த வீடுகளில், வாழ்வாதாரத்திற்காக பெண்கள் வேலைக்கும் சென்று, குழந்தைகள் வளர்ப்பையும் செய்து பெண்கள் அவதியுறுகிறார்கள். சமூகத்தின் பார்வையில் தப்பிச் செல்ல முயலும் குறுகிய கலாச்சார வட்டத்திற்குள் இந்த குடும்பங்கள் இத்தனை ஆண்டுகளும் தள்ளப்பட்டுள்ளன என்ற அவலங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 167 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 145 பேர் 10ஆண்டுகள், 7 ஆண்டுகள் என சிறை தண்டனை அனுபவித்து விடுதலை அடைந்துள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவத்தில் 19 பேர் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ளனர். 18பேர் வெடிகுண்டு இல்லாத வழக்குகளில் சிறையில் உள்ளனர். வெடிகுண்டு வழக்கில் சிறையில் உள்ளவர்களுக்கு எளிதாக பரோல் கிடைக்காது. அவசிய காரணங்களுக்கு உரிய பாதுகாப்புடன் பரோல் கிடைக்கும். அதிகபட்சமாக 27ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். ஆண்டுக்கு, 15 நாள் விடுமுறை வழங்கப்படுகிறது. இவர்கள் கோவை, கடலூர், பாளையங்கோட்டை,சென்னை சிறைச்சாலைகளில் உள்ளனர். சிறை கைதிகள் பெரும்பாலானோர் மாரடைப்பு மற்றும் கண் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறை வாழ்க்கையால் மனநலம் பாதிக்கப்படுகிறார்கள்.

குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஆயுள் கைதிகளாக உள்ள 19 பேரில் 18 பேர் விடுதலைக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்குகள் விசாரணை உச்சநீதிமன்றத்தில் 11ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான பாஷா மட்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவில்லை. 

மற்ற குற்ற வழக்குகளில் தண்டணை பெற்ற கைதிகளை அண்ணா பிறந்த நாள் போன்ற நாட்களில் விடுதலை செய்த தமிழக அரசு, வரும் நாட்களில் கலைஞர், அண்ணா பிறந்த நாட்களில் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்வதை பரிசீலிக்க வேண்டும்.

மற்ற கைதிகளுக்கு கிடைக்கும் அடிப்படை மனித உரிமை இவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது நீதிக்கான மக்கள் இயக்கத்தின் கோரிக்கை.