மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, அம்பாசமுத்திரம் கிராமத்தில் மூன்று பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட பேர் 7 மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்து கொத்தடிமைகளாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தி தமிழ்நாடு சிபிஐ(எம்எல்) தோழர்களுக்குக் கிடைத்தது. அந்த தொழிலாளர்கள் மகாராஷ்டிரா வின் பீட் மற்றும் பார்பானி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை அண்ணா கோத்வே என்கிற ஒப்பந்தக்காரர்தான் அடிமைகளாக வைத்திருந்துள்ளார். அவர் சரத்பவாரின் தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் ராஜஸ்ரீ சர்க்கரை ஆலைக்காக தேனி, மதுரை மாவட்டங்களில் கரும்பு வெட்டுவதற்காக 100 தொழிலாளர்களை அவர் ஏற்பாடு செய்துள்ளார். அந்தத் தொழிலாளர்களுக்கு மராத்தி தவிர வேறு மொழி தெரியவில்லை. 2.5.2023 அன்று இகக(மாலெ) மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் சந்திரமோகன் வழிகாட்டுதலில் மாநிலக்குழு உறுப்பினர் பொன்னுதுரை மற்றும் தோழர் ஜெகதீஸ்குமார் அந்த தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திற்குச் சென்று பார்த்தனர். அவர்களின் நிலைமை மிக மோசமானதாக இருந்தது. ஒப்பந்தக்காரர் தோழர்கள் தொழிலாளர் களைச் சந்திக்க விடாமல் மிரட்டியுள்ளார். இருப்பினும் தோழர்கள் தொழிலாளர்களைச் சந்தித்து விவரங்கள் தெரிந்து கொண்டனர். ஒரு நாளைக்கு காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை 16 மணி நேரம் வேலை வாங்கப்பட்டுள் ளார்கள். ஒரு டன் கரும்பு வெட்ட இரண்டு பேருக்கு ரூ.275 மட்டுமே கூலியாகக் கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால், ஒப்பந்தக்காரர் ஆலை நிர்வாகத்தி டமிருந்து ஒரு டன் கரும்பு வெட்ட கூலியாக ரூ.1000 வாங்கியுள்ளார். தொழிலாளர்கள் வசிக்கும் இடமும் வேலை செய்யும் இடமும் சுகாதாரம் இல்லாமல் மிக மோசமாக இருந்தது. பாலியல் துன்புறுத்தல்களையும் தொழிலாளர்கள் சந்தித்துள்ளார்கள்.

இது தொடர்பாக மதுரை மாவட்ட ஏஐசிசிடியு சார்பாக மதுரை மாவட்ட ஆட்சி யரிடம் மே 3ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. மறுநாளே காவல்துறையும் பல்வேறு அரசு ஒப்பந்தகாரர் துணையுடன் வந்து சேர்ந்தார்கள். பல்வேறு மிரட்டல்களுக்கு மத்தியில் சில தொழிலாளர்கள் தங்களின் வேலை நிலைமை மற்றும் அடிமை நிலைமையைச் சொல்லியுள்ளார்கள். பல தொழிலாளர்கள் பயந்து போய்விட்டனர். அரசு அதிகாரிகள், ஒப்பந்தக்காரர் அண்ணா கோத்வே மீது கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்வதற்குப் பதிலாக தங்களிடம் பேசிய 7 தொழிலாளர்களை மட்டும் விடுவித்துவிட நடவடிக்கை மேற்கொண்டனர். அதிகாரிகள் குற்றமிழைத்த சர்க்கரை ஆலை மீதோ ஒப்பந்தக்காரர் மீதோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கத் தயாராக இல்லை. சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் சொல்லி 7 தொழிலாளர்களை மட்டும் திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டார்கள். ராஜஸ்ரீ ஆலை நிர்வாகம் அந்தத் தொழிலாளர்களுக்கு மும்பை செல்ல முன்பதிவில்லாத ரயில் டிக்கட்டை மட்டும் எடுத்துக் கொடுத்துவிட்டு, அவர்கள் வேலை பார்த்ததற்கு கூலியோ, பணப் பயனோ, பயணத்திற்கு உணவோ, பணமோ எதுவும் கொடுக்காமல் அனுப்பிவிட்டது.

அரசு அதிகாரிகளும் ஒப்பந்தக்காரர்களும் கள்ளக் கூட்டு வைத்துக் கொண்டு புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களைச் சுரண்டுகிறார்கள். மகாராஷ்டிரா, வடக்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் உள்ள பழங்குடிகள்,தலித்துகள் அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு இதுபோன்று கொத்தடிமைகளாக ஒப்பந்த மாஃபியாக்களால் தமிழ்நாடு போன்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

கொத்தடிமைச் சட்டத்தின் கீழ் ராஜஸ்ரீ நிர்வாகத்தின் மீதும் ஒப்பந்தக்காரர் அண்ணா கோத்வே மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கொத்தடிமைகளாக உள்ள மராத்தித் தொழிலாளர்கள் அனைவரையும் விடுவித்து அவர்களுக்குரிய கூலி, பணப் பயன் களை முழுவதுமாக வழங்கிட வேண்டும், உணவு உள்ளிட்ட பயணச் செலவுகளுடன் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஏஐசிசிடியு கோருகிறது.