'தமிழுக்கும் தமிழின் தொன்மைக்கும் உரிய அங்கீகாரத்தை பிரதமர் மோடி வழங்கிவிட்டார். இதுவே தமிழர்களுக்குப் போதுமானது. இனியாவது நிதிப் பங்கீடு, கல்வி உரிமை என எதற்கும் உதவாத விசயங்களுக்காகப் போராடுவதை தமிழர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்'. டெல்லி சென்று மோடியிடம் செங்கோலைக் கொடுத்துவிட்டு வந்த பின்னர் மதுரை ஆதினம் பேசியது இது. மோடி-அமித்ஷா எதிர்பார்த்தது இதைத்தான். இந்த மட அதிபதிகளுக்கு நிதிப் பங்கீடு, கல்வி உரிமையெல்லாம் எதற்கும் உதவாத ஒன்றாம். ஊரை அடித்து உலையில் போட்டு என்பார்களே, அப்படி உட்கார்ந்து தின்னும் இவர்களுக்கு மக்கள் படும்பாடு எப்படி கண்ணுக்குத் தெரியும். உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ் என்று பேசிய மோடி திறந்து வைத்த நாடாளுமன்றக் கட்டடத்தில் தமிழ் மொழி இல்லை. இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் மட்டுமே கல்வெட்டுகள். இதுவும் இந்து மட அதிபதிகளின் கண்ணுக்குத் தெரியாது. இந்தியாவின் விடுதலைக்காக அல்ல, தன் விடுதலைக்காக ஆறு, ஏழு மன்னிப்புக் கடிதம் ஆங்கிலேயருக்கு எழுதிய வீர்! சாவர்கர் பிறந்த நாளில் நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைக்கச் சென்றவர்கள் கண்ணில், இந்தியாவிற்காக சிரமப்பட்டு விளை யாடி, பதக்கங்கள் பெற்றுத் தந்த மல்யுத்த வீராங்கனைகள் நடத்தும் போராட்டம் தென்படவில்லை. மல்யுத்த வீராங்கனை களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய மல்யுத்தக் கழகத்தின் தலைவருமான பிரிஜ்பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் அந்தக் குற்றவாளியை நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவிற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் கோரி அமைதியான முறையில் நாடாளுமன்றம் நோக்கிப் போவோம் என்று சொன்னவர்களை கொஞ்சம்கூட கூருணர்வு இல்லாமல் பெண்கள் என்றும் கூட பார்க்காமல் கொடுந்தாக்குதல் நடத்தி கைது செய்துள்ளது மோடி அரசு. குடியரசுத் தலைவரை அழைக்காமல், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் குற்றமிழைத்தவரைக் கைது செய்யாமல், 'சென்ட்ரல் விஸ்டா' என்ற பெயரில் 13,000 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தில் வெட்டியாகக் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை திறந்த நாள் இந்தியாவின் கருப்பு நாள் என்று எதிர்க் கட்சிகள் அறிவித்ததில் என்ன தவறு இருக்கிறது?. புதிய கட்டடத்தைத் திறந்த கையோடு பழைய நாடாளுமன்றக் கட்டடத்தை தன் நண்பர் அதானியின் அறக்கட்டளையிடம் கொடுத்து அருங்காட்சியமாக மாற்றப் போவதாக அறிவித்துள்ள நவீன நீரோ மன்னர் நடத்திய திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளாததில் என்ன தவறு இருக்கிறது?. நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, பிடில் வாசித்த நீரோ மன்னன் போல், விலைவாசி உயர்வு, வேலையின்மை, பசி, பட்டினி, பாலியல் வன்கொடுமை என பற்றி எரியும் மக்கள் பிரச்சினைகள் எதையும் பற்றிக் கவலைப்படாமல் செங்கோல் பிடித்து மன்னராட்சி மனப்பான்மையில் செயல்படுபவர்களை என்னவென்று சொல்வது? மல்யுத்த வீராங்கனைப் பெண்களை மதிக்காத சங்-பாஜக சனாதனக் கும்பல்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பழங்குடியினத்தவர் என்பது மட்டுமல்ல, அவர் கணவரை இழந்தவர் என்பதாலும்தான் திறப்பு விழாவிற்கு அழைக்கப்பட வில்லை என்று சங்கிகளின் குணமறிந்தவர்கள் கூறுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் இந்திய நாட்டை இன்னும் 100 ஆண்டுகள் ஆள அச்சாரம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.