காவல்துறையில் தன்னுடன் பணிபுரிந்த சக பெண் அதிகாரியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர் முன்னாள் காவல்துறை சிறப்புத் தலைவர் ராஜேஷ்தாஸ். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அவருக்கு உதவி செய்த காவல் அதிகாரி கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதமும் விதித்து விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் இப்படி ஒரு தீர்ப்பு வருவதற்கு பாதிக்கப்பட்டவர் உயர் பதவியில் இருந்த அதிகாரி என்பது கூட ஒரு காரணம் ஆகும். இல்லையென்றால், சாட்சி சொல்ல விடாமலேயே தங்கள் அதிகார பலத்தைக் காட்டியிருப்பார்கள். பாலியல் குற்றச்சாட்டுகளில் மாட்டுகிற பலரும் மக்கள் விரோதிகளாகவே இருக்கிறார்கள். இந்த ராஜேஷ்தாஸ் அதிகாரியாக இருந்த காலங்களில் பல மக்கள் போராட்டங்களை ஒடுக்கியவர். மக்கள் மீது தடியடித் தாக்குதல்களை நடத்தியவர். இவர் தென் மண்டல காவல்துறைத் தவைராக இருந்தபோதுதான் நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது காவல்துறையை ஏவிவிட்டுத் தாக்குதல் நடத்தியவர். முல்லைப் பெரியாறு பிரச்சனையின் போது விவசாயிகளை மிரட்டியவர். இமானுவேல் சேகரன் நினைவு நாளில் பரமகுடியில் துப்பாக்கிசூடு நடத்தி பலர் உயிரிழக்கக் காரணமானவர். ராஜேஷ்தாஸ் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராகப் பணிபுரிந்த போதுதான் டாஸ்மாக் மதுபானங்கள் தனியாருக்கு கைமாற்றப்பட்டு பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்தது. இப்படிப்பட்டவர்தான் இன்று பாலியல் குற்றச்சாட்டு புகாரில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளார். இவருடைய அதிகாரம் கொடி கட்டிப்பறந்தது பெரும்பாலும் அதிமுக ஆட்சிகாலம். இவரது துணைவியார் பீலா ராஜேஷ் சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்தவர். இவர் உண்மை யிலேயே அவர் நடத்திய மக்கள் விரோத செயல்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டியவர். ஆனால், காவல்துறையில் மட்டுமல்ல, பல்வேறு அரசுத் துறையில் உள்ள இம்மாதிரியான மக்கள் விரோதிகள் அவர்களின் மக்கள் விரோதச் செயல்களுக்காகத் தண்டிக்கப்படுவதேயில்லை. விதிவிலக்குகளாக வாச்சாத்தி போன்ற வழக்குகளில் காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட்டார்கள். தந்தை, மகன் இருவரையும் கொன்ற சாத்தான்குளம் வழக்கில் இருந்து குற்றவாளிகளான காவல்துறை அதிகாரிகள் தப்பிக்கவே பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அம்பாசமுத்திரம் பல் பிடுங்கி பல்வீர் சிங் இன்னும் கைது செய்யப்படவேயில்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைக் கொன்றவர்கள் மீது, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் குற்றவாளிகள் என்று கூறிவிட்ட பின்னரும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. இப்போது புளியங்குடி தங்கசாமி பாளை சிறையில் மர்மமாக மரணம் அடைந்துள்ளார். இதற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளைத் தப்பிக்கச் செய்யவே அரசு எந்திரம் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல சமயங்களில் காவல்துறையினரின் அடாவடி, அராஜகச் செயல்கள், அத்துமீறல்கள் வெளியே வராமலேயே போய்விடுகின்றன. யார் மீதும் வழக்குப் போடும் அதிகாரம் தங்கள் கையில் உள்ளது என்பதால் எவரையும் அடிப்பதும் சித்தரவதை செய்வதும் கொல்வதும் தங்கள் உரிமை என்பதுபோல் நடந்து கொள்கிறார்கள். இப்படிப்பட்ட மக்கள் விரோதிகள் தப்பித்துக் கொள்ள இடம் அளிக்கக்கூடாது.