காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கர் பிறந்த நாளான மே 28ம் தேதியன்று, புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்புவிழா தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த போதும், அதேநாளில் புதிய நாடாளுமன்றம் ஆரவாரமாக திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் சைவ மடாதிபதிகள் / ஆதீனங்கள், சைவப் பண்டாரங்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். 'பழங்குடியினரான குடியரசு தலைவர் விழாவிற்கு அழைக்கப்படவில்லை' என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு கட்சிகளும் விழாவைப் புறக்கணித்தன.

புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்புவிழாவுக்கு ஒருவாரத்திற்கு முன்பாக, "நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு செங்கோல்'' என்ற பரபரப்பு அறிக்கைகள், செய்திகள் கட்டமைக்கப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "சோழர்களின் செங்கோல், தமிழ்நாடு ஆதீனங்களிடமிருந்து / சைவ மடாதிபதிகளிடமிருந்து பெறப்பட்டு அந்த நிகழ்ச்சியில் பிரதமரிடம் அளிக்கப்படும். நாடாளுமன்றத்திற்குள், சோழர் கால செங்கோலை பிரதமர் மோடி நிறுவுவார்" என விறுவிறுப்பாக அறிவித்தார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "நமது மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு, சோழர் காலத்துச் செங்கோல் வழங்கப்படவிருக்கிறது. தமிழ்க் கலாச்சாரத்தைத் தேசிய அரங்கில் மீட்டெடுத்ததற்காக, மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குத் தமிழக மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என்று தமிழர் பெருமிதம் பேசினார்.

'நமது தேசிய வரலாற்றுச் சின்னமான புனித செங்கோலை, 28 மே'23 அன்று புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் நிறுவுகிறார்." என்று பாஜக தலைவர் திருமதி வானதி சீனிவாசன் எம்எல்ஏ அறிவித்ததன் மூலமாக, மன்னராட்சி அடையாளமான செங்கோலை "தேசிய வரலாற்று சின்னம்"என்ற மட்டத்திற்கு கொண்டு சென்றார்.

சென்னை உம்மிடி பங்காரு செட்டியார் தயாரித்த செங்கோலை, பாஜக வினர் "சோழர்கள் செங்கோல்" என்றனர். அதற்கடுத்து, ''திருவாவடுதுறை ஆதீனம் பரிசளித்த செங்கோல்'' எனத் திருத்தினர்.

அரசியலில், இந்து மதத்தை கலப்பது

தமிழ்நாடு சைவ மடாதிபதிகள், சிவாச்சாரியார்களை டில்லிக்கு வரவழைத்தது, பாஜக அரசாங்கம். பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 21 சைவ ஆதினங்களும் பங்கேற்க, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,இணையமைச்சர் எல். முருகன் சாட்சியமாக, புதிய நாடாளுமன்ற வளாகத்தில் அடுத்த நாள் வைக்கப்பட இருந்த செங்கோலை திருவாவடுதுறை ஆதினத்திடம் இருந்து பெற்றுக் கொண்டார் பிரதமர் மோடி.

புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில், ஒருபுறம் ஸ்மார்த்த பிராமணர்கள் வேள்வி பூஜை புனஸ்காரம் செய்ய, மற்றொரு புறம் சைவ மட ஆதீனங்கள் சாட்சியமாக செங்கோலை விழுந்து வணங்கிய பிரதமர் மோடி, பண்டார சன்னதிகளிடம் ஆசி வாங்கிக் கொண்டு மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலை நிறுவினார். மக்களாட்சி அமைப்பில் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட மோடி ஒரு சோழ மன்னர் போலவும், மடாதிபதிகள் சோழர் கால செங்கோலை அவருக்கு வழங்குவதாகவும் திரைக்கதையை விஞ்சும் ஒரு கதையாடல் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

செங்கோலும், சைவ மடங்களும்:

வரலாற்று ரீதியாக, சைவ மடங்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மன்னராட்சிகளுடன் (சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள், விஜயநகர பேரரசு, மதுரை நாயக்கர் அரசு, தஞ்சாவூர் மராட்டிய அரசு, திருவிதாங்கூர் ராஜ்ஜியம், சேதுபதி மன்னர்கள் என அனைவருடனும்) நெருங்கிய தொடர்பு, உறவு இருந்தது. செங்கோல் வைத்திருப்பது மன்னராட்சி அதிகாரத்தின் சின்னமாக, மன்னராட்சி மரபாக இருந்து வந்துள்ளது. ஆட்சியதிகாரத்திற்கு அச்சுறுத்தல் வரும்போது எல்லாம், மன்னர்கள் தங்கள் செங்கோலையும், கிரீடத்தையும் மறைத்து வைக்கும் இடங்களாக மடங்களைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். மன்னர்கள் முடிசூட்டும் போது கிரீடத்தை எடுத்துக் கொடுக்கும் உரிமை மடாதிபதிகளுக்கு உண்டு. முடிசூட்டும் போது, செங்கோலையும் கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. தற்போது அதே செங்கோல் தமிழர் பெருமிதத்தை உசுப்பேற்ற, மடங்களை, சைவ வெள்ளாளர் சமூகத்தை தங்கள் பிடிக்குள் கொண்டு வர ஆர்எஸ்எஸ்- பாஜக அரசியல் செயல்தந்திரத்தின் ஒரு கருவியானது. 

அரசியல், வரலாற்றுப் புரிதல் முக்கியமானது:

செங்கோல் வைத்திருப்பது மக்களாட்சி மரபு அல்ல! ஒரு குடியரசில் அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய, நாட்டின் பிரதமர் மன்னராட்சி அடையாளமான செங்கோலை ஏந்துகிறார். கர்நாடக மக்கள் பாஜகவை கைகழுவியதால், தமிழ்நாட்டு மக்களை அரசியல் ரீதியாக ஈர்க்க, தமிழ்நாட்டு ஆர்எஸ்எஸ் சேவகர்களும், பாஜக தலைவர்களும், "புதிய பாராளுமன்றத்தில் சோழர்கால செங்கோல்' எனக் கூப்பாடு போடுகிறார்கள்; "தமிழருக்குப் பெருமை" என உசுப்பேற்று கிறார்கள். தமிழர் பெருமையை தேசிய மட்டத்தில் கொண்டு செல்வதற்கு பாஜகவினர் தான் காரணம் என 'அடையாள அரசியல்" செய்வதும் நடக்கிறது.

செங்கோல் ஒரு மன்னராட்சி மாண்பு ஆகும். இந்து மதப் பண்பாட்டை உயர்த்திப் பிடிப்பதாகும். பாஜக நீண்ட காலமாக, சைவ வெள்ளாள மடாதிபதிகளை உள்ளிழுக்கும் மதம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை கட்டமைத்து வருகிறது. தமிழ்நாடு ஆளுநர் மற்றும் பாஜக தலைவர்கள் மடங்களின் நிகழ்ச்சிகளில் நேரடியாக கலந்து கொள்கின்றனர். மடங்கள் ஆர்எஸ்எஸ் சாகாக்கள், பயிற்சி கூடங்களாக மாறிவருகின்றன. இதன் தொடர்ச்சியாக, மடாதிபதிகளை, சைவ ஆதீனங்களை செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னிறுத்துவதும் நடைபெற்றது. செங்கோல் விஷயத்தில், வெள்ளாளர், வேளாளர் சாதிச் சங்கங்கள் மோடியை உச்சிமோந்து கொண்டாடுகின்றன.

அரசியல் கட்சிகள், சாதிய சங்கங்கள் மற்றும் தமிழ் தேசீய அறிவாளிகள் சிலரும், விமர்சன மற்ற முறையில், சோழர் கால ஆட்சியை புகழ்பாடுவது நடைபெறுகிறது.

சோழர்கள் காலத்தில் சைவம் அரச மதமாக திகழ்ந்தது. அன்றைய காலத்தில், ஒருபுறம் மன்னர்களை வழிநடத்துவதில், சைவ நெறிகள்/ வேதாகம தர்மம் செழிக்க வைப்பதில் மடாதிபதிகளின் பங்கு முக்கியமானது. மற்றொரு புறம், சோழர்கள் காலத்தில் நிலமானியங்கள் பெற்றது வழியாக உருவான பிராமண, ஆதிக்கம் ஏழை வெள்ளாள நிலவுடமை ஆதிக்கம் விவசாயிகளை ஒட்டச் சுரண்டியது.

மடங்களின் ஆதிக்கம், இன்றளவும் இலட்சக்கணக்கான குத்தகை விவசாயிகள் மீது பிணச்சுமையாக நீடிக்கிறது. வரலாறு நெடுக ஆட்சியாளர்களுக்கு சேவை செய்வதில், பார்ப்பனீயமும், வெள்ளாளியமும் கரங்கோர்த்து சென்றுள்ளன. கோவில் நிலவுடமை அமைப்பின் தளகர்த்தர்களாக நின்று கொண்டு மக்களை, விவசாயிகளை சுரண்டுவதில் ஒன்றுபட்டு தான் செயல்பட்டுள்ளார்கள்.

புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் மொழிக்கு இடமில்லை தமிழர் பண்பாட்டு அடையாளங்களும் இல்லை.

புதிய நாடாளுமன்றத்தில், இந்தி, ஆங்கிலம், சம்ஸ்கிருத மொழிகளில் மட்டுமே திறப்புவிழா கல்வெட்டுகள் அமைக்கப் பட்டுள்ளன. "தமிழ் மொழி உலகின் பழமையான மொழி எனவும், செங்கோல் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கலாச்சாரம்" எனவும் பிரதமர் மோடி மற்றும் பாஜகவினரால் ஆரவாரமாக அறிவிக்கப் படுகிறது. ஆனால், புதிய நாடாளுமன்ற திறப்புவிழா கல்வெட்டுகளில், தமிழ் மொழியைக் காண முடியவில்லை. இனிமேல், “இந்தி ஆங்கிலம் சம்ஸ்கிருதம் மட்டுமே'' - - புதிய நாடாளுமன்ற மும்மொழிக் கொள்கை யாகத் திகழும் போலும்!

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில், கலைக் கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில், இந்து கலாச்சாரத்தை சித்தரிக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மகாபாரத போர், கிருஷ்ணன், சாணக்கியன், சிவாஜி எனப் பலரும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளார்கள். சாணக்கியன், சாவர்க்கர், ஆர்எஸ்எஸ் விரும்பிய அகண்ட பாரத காட்சிகள் உள்ளது. ஆனால், தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் காட்சிகள் எதுவும் இல்லை.

எனவே, சோழர் செங்கோல், தமிழ், தமிழர் பெருமை பற்றிய பாஜக பரப்புரைகள் அனைத்தும் மோசடிகளே! ஆர்எஸ்எஸ் சதிகள் அம்பலப்படுத்தப்படவேண்டும்.