பீகார் மாநில சுகாதாரத் துறையில், ஆஷா (Accredited Social Health Activist) என்ற பெயரில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பெண்கள் மாநிலம் முழுவதும் பணி செய்து வருகின்றனர். மாதம் வெகுமதி (reward) என்ற பெயரில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆஷா தொழிலாளர்கள் சுகாதாரத்துறை பணியாளர்கள் என்பதற்கு அடையாளமாக அவர்களுக்கு சீருடை மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. தொலைதூர குடியிருப்பு பகுதிகளில், மலைப் பிரதேசங்களில் குடியிருப்பவர்களுக்கு மருத்துவ சேவையை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இவர்கள் கருவுற்ற தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில் ஈடுபடுகிறார்கள். மாதம் ரூபாய் 10,000 ஊதியம் என்பதும் ஓராண்டுக்கு மேலான ஊதிய நிலுவைத் தொகையை பெறுவது என்பதும் இவர்களது உடனடி கோரிக்கையாக உள்ளது. இவர்கள் தங்களது அரசாங்கத்தின் பல கோரிக்கைக்காக கதவுகளை தட்டி பார்த்துவிட்டு, இறுதியாக கடந்த ஜூலை 12 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏஐசிசிடியு மற்றும் சிஐடியு சங்கங்களைச் சேர்ந்த ஆஷா தொழிலாளர்களும் ஆஷா உதவியாளர்களும் சுமார் ஒரு லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தின் சுகாதார சேவைகள் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இவர்கள் வேலை நிறுத்தத்தில் இருந்தாலும் அவசரகால பணிகளைத் தொடர்ந்து மேற் கொண்டு வருகின்றனர்.

வேலை நிறுத்தத்தை முறியடிக்க அரசாங்கம் பல்வேறு அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது. ஆனாலும், பெண் தொழிலாளர்கள் அதை தைரியமுடன் எதிர் கொண்டு வேலை நிறுத்தத்தை தொடர்கின்றனர். பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமை யிலான மகா கூட்டணி ஆட்சி செய்கிறது. இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கிற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் குணால், போராடும் தொழிலாளர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் என்றும் மாநில அரசு நிர்வாகம் ஆஷா தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதை உடனடியாக நிறுத்திட வேண்டும் என்றும் அடக்கு முறையை கைவிட்டு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் ஏஐசிசிடியு அகில இந்திய தலைவர்களில் ஒருவரும் ஆஷா தொழிலாளர்களின் தலைவருமான தோழர் சசி யாதவும் பீகார் மாநில அரசின் இந்த புறக்கணிக்கும் போக்கை வன்மையாகக் கண்டித்துள்ளார்.வேலை நிறுத்தத்தின் காரணமாக அரசு  ஆரம்ப  சுகாதார நிலையங்களிலும் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி பணிகளும் குழந்தை பராமரிப்பு பணிகளும் கடுமையாக பாதிப்படைந்துள்ளன.

ஏப்ரல் 2019 முதல் நவம்பர் 2020 வரையிலான 19 மாத காலத்திற்கு மாதம் ரூபாய் 1000 என்ற ஊதியப் பாக்கி கூட வழங்கப் படவில்லை என்ற பின்னணியில், ஒரு மாத காலத்திற்கு முன்பே வேலை நிறுத்த அறிவிப்பு கொடுக்கப் பட்டும் ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவில்லை. கோரிக்கைகளின் நியாயத்தை உணர்ந்து தீர்ப்பதற்குப் பதிலாக அரசாங்கம் அச்சுறுத்தி அடி பணிய வைக்க முயற்சிக்கிறது. ஆனால், வேலை நிறுத்தம் தொடர்ந்து நடக்கும் போது வேலை நிறுத்தத்தில் இணைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று ஆஷா தொழிற்சங்க தலைவர் தோழர் சசியாதவ் குறிப்பிட்டார்.

ஆஷா ஊழியர்களின் பிரதான கோரிக்கைகள் 

* ஆஷா தொழிலாளர்களுக்கு மாநில அரசு ரூபாய் 1000 வெகுமதி என்ற பெயரில் கொடுத்து வருகிறது. இது ஆஷா தொழிலாளர்களை கேவலப்படுத்தும் செயலாகும். 'முறையான மாத மதிப்பூதியம்' என பெயர் மாற்றப்பட்டு மாதம் ரூபாய் 10,000 வழங்க வேண்டும்.

* இந்த சொற்பத்தொகையான மாதம் ரூபாய் 1000 கூட ஏப்ரல் 2019 முதல் நவம்பர் 2020 வரை வழங்கப்படவில்லை. உடனடியாக நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 

* ஊதிய பட்டுவாடாவில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். மாநிலம் முழுவதும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்பட வேண்டும்.

* இந்தத் தொகையை பெறுவதில் உள்ள ஊழல் லஞ்சம் நிறுத்தப்பட வேண்டும்.

* வெறும் சேலையை மட்டும் சீருடையாக வழங்குவதற்கு பதிலாக சட்டை, பெட்டிக்கோட் உள்ளிட்டவை அடங்கிய செட்டாக சீருடை வழங்க வேண்டும்.

* ஆஷா உதவியாளர்களுக்கும் சீருடை வழங்க வேண்டும்.

* நாள் ஒன்றுக்கு ரூபாய் 500 என்ற விதத்தில் ஆஷா உதவியாளர்களுக்கு போக்குவரத்து படி வழங்கப்பட வேண்டும். 

* ஒவ்வொரு பணிக்குமான வெகுமதி தொகை நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்யப் பட்டுள்ளது. அந்தத் தொகை திருத்தி அமைக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும். 

* ஆஷா மற்றும் உதவியாளர் பணியை முறைப்படுத்தி அவர்களுக்கு அரசு ஊழியர் என்ற அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

* கொரோனா பெருந் தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநில அரசு ரூபாய் 4 லட்சமும் மத்திய அரசு அறிவித்தபடி மத்திய காப்பீட்டு திட்டத்திலிருந்து ரூபாய் 50 லட்சமும் வழங்க வேண்டும். 

* ஆஷா வழியர்களும் உதவியாளர்களும் ஊ ஓய்வூதியம் உள்ளிட்ட அரசின் சமூக பாதுகாப்புத் திட்டத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும் அதுவரை அவர்களுக்கு ஓய்வு கால பலனாக ரூபாய் 10 லட்சம் வழங்கப்பட வேண்டும்.

* கடந்த ஜனவரி 2019 இல் ஆஷா தொழிற் சங்கங்களுடன் மாநில அரசு ஏற்படுத்தி கொண்ட ஒப்பந்தம் அமல்படுத்தப்பட வேண்டும்.

ஜூலை 17 அன்று பெரும் எண்ணிக்கையில் ஆஷா தொழிலாளர்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே வேளையில் அவர்கள் மகப்பேறு பணிகள், பச்சிளம் குழந்தை பராமரிப்பு பணிகளுக்கு பாதிப்பு இல்லாமலும் பார்த்துக் கொண்டு அமைதியான வழியில் போராட்டத்தை தொடர்கின்றனர். இதற்கிடையே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சரஸ்வதி தேவி என்ற ஊழியர் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். மாநிலத்தின் பல பகுதிகளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திய ஊழியர்கள் நீதிக்கான தங்கள் போராட்டத்தை தொடர உறுதியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளவர்களுடன் மாநில அளவிலும் பல்வேறு மாவட்ட அளவிலும் பேச்சுவார்த்தைகள் துவக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆஷா தொழிலாளர்கள் சமீப காலங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பெரும்பாலும்இவர்கள் மலைபிரதேசங்களில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையாக மாதம் ரூ. 2000 வழங்கப்படுகிறது. அதோடு முதல் குழந்தை பேறுகாலத்திற்கு கருவுற்ற தாய்மார் களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தால் (வீட்டில் பாதுகாப்பற்ற குழந்தைப் பேற்றைத் தவிர்ப்பதற்காக) ரூ.500/-ம் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு அழைத்து வந்தால் ரூபாய் 150/- ம் ஒரு மாதம் முழுவதும் கருவுற்ற தாய்மாரை பராமரித்து வந்தால் ரூபாய் 500/-ம் வழங்கப்படுகிறது. சராசரியாக ஒரு ஆஷா ஊழியர் மாதம் ரூ5000 முதல் 6000 பெறுவார். ஆஷா, வீடு தேடி மருத்துவம், இல்லந்தேடிக் கல்வி என புதிய திட்டங்களிலும் ஏற்கனவே இருக்கக்கூடிய அங்கன்வாடி, மதிய உணவு திட்டத் தொழிலாளர்களையும் முறைப் படுத்தி நிரந்தரம் செய்ய வேண்டியது அவசியம். உடனடியாக கௌரவமான ஊதியம் கௌர வமான ஓய்வூதியம் ஆகிய கோரிக்கைகள் இருக்கின்றன. தொழிற்சங்க இயக்கம் இன்னும் கூடுதல் முனைப்புடன் செயல்பட்டு இந்தத் தொழிலாளர்களை அணிதிரட்டி இயக்கமாக்க வேண்டிய அவசியம் தமிழ்நாட்டில் இருக்கிறது.

அங்கன்வாடி மையங்களை இணைப்பது என்ற பெயரில் ஏற்கனவே இருக்கக்கூடிய ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்கும் 

நடவடிக்கையில் தமிழக அரசாங்கம் இறங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் காலை சத்துணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, மதிய உணவுத் திட்ட ஊழியர் சங்கங்கள் காலை உணவு திட்டத் தையும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பை தங்களுக்கு அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால், இப்போது அந்த திட்டம் வெளியாள் முகமைக்கு அளிக்கப்பட்டுள்ளது. காலை உணவுத் திட்டத்தையும் சேர்த்து மதிய உணவு திட்ட ஊழியர்கள் பார்க்கும் போது அவர்களை முறைப்படுத்தி பணி நிரந்தரம் செய்வதற்கான கோரிக்கை வலுப்பெறும் என்பதால் அரசாங்கம் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.

கல்வி மருத்துவம் இரண்டையும் தனியார் மயமாக்கியதின் விளைவை நாடு அனுபவித்து வருகிறது. மக்கள் நலன் சார்ந்த இந்தத் துறைகள் அரசின் நேரடி கட்டுப்பாட்டில், நிரந்தர ஊழியர்களை கொண்டு செயல்படும்போது கல்வியிலும் மருத்துவத்திலும் பல்வேறு அளவுகோல்களில் நல்ல முன்னேற்றங்கள் இருந்ததற்கு தமிழ்நாடு மற்றும் கேரள மாதிரிகள் சாட்சியாக இருக்கின்றன.

ஏஐசிசிடியு தலைமையிலான பீகாரில் நடந்து வரும் போர்க்குணமிக்கப் போராட்டம் தமிழக திட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்க இயக்கத்திற்கு புதிய ஒளி பாய்ச்சட்டும்.