தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டின் தலைமைக் குழு தோழர்களுக்கும் மற்றுமுள்ள தலைவர் களுக்கும் மாநாட்டு பிரதிநிதிகளுக்கும் அனைத் திந்திய விவசாய, கிராமப்புறத் தொழிலாளர் சங்கத்தின் வணக்கத்தையும் வாழ்த்து களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

விடுதலைப் போராட்ட மரபும் செங்கொடி போராட்ட வரலாறும் கொண்ட கரிசல் மண்ணாம் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இந்த மாநாடு நடப்பது மிகவும் பொருத்தமானது. விருதுநகர் மாவட்ட சிறப்புகளை வரவேற்புரை ஆற்றிய தோழர் எடுத்துக் கூறினார்.... இந்த மண்ணில்தான், கம்யூனிச புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் லட்சியத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மாநிலச் செயலாளர் தோழர் மச்சக்காளை இந்த மண்ணில்தான் ரத்தம் சிந்தினார்; ஆட்சியாளர் களால் கொல்லப்பட்டார் என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இன்று ஜூலை 28, உங்கள் மாநாடு தொடங்கியிருக்கிறது. ஜூலை 28, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் -லெனினிஸ்டை தோற்றுவித்த தோழர் சாருமஜூம்தார், ஆட்சியாளர்களால் கொல்லப்பட்ட நாள். இந்த நாளை தியாகிகள் நாளாக கடைப்பிடித்து வருகிறோம். இந்திய புரட்சியில் தியாகிகள் அனைவரது நினைவாகவும் இந்த நாளை கடைப்பிடித்து வருகிறோம். இந்த நாளில் பல்வேறு நிகழ்ச்சிகளை திட்டமிட்டிருக்கிறோம். ஆனாலும், கிராமப்புறத் தொழிலாளர் மாநாட்டில், இடதுசாரி போராட்ட மேடையில், மாநாட்டில் கலந்து கொள்வது முக்கியமானது என்பதாலும் உங்கள் அழைப்பை ஏற்று உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

இந்த மாநாட்டை துவக்கி வைத்து பேசிய அகில இந்திய தலைவர், இந்திய விவசாயத் தொழிலாளர் இயக்கத்தின் முன்னுள்ள பல்வேறு முக்கிய போராட்ட பிரச்சனைகளைச் சுட்டிக் காட்டினார். அவற்றுள் மிக முக்கியமானது "நிலச் சீர்திருத்தம்". இதற்காக நாம் தொடர்ந்து தீவிரமாக போராடுவதற்கு ஜனநாயகம் வேண்டும். ஆனால், இன்றைய பாசிச மோடி ஆட்சி ஜனநாயகத்தை அழித்து வருகிறது. அடிப்படை உரிமைகளை -உறுதிசெய்யும் அரசமைப்புச் சட்டத்தையே அழித்து வருகிறது. இதற்கு இன்றைய சாட்சி மணிப்பூர். நேற்று காஷ்மீருக்கு நடந்தது இன்று மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கிறது. இது நீடித்தால், நாளை இந்தியாவுக்கும் இதுதான் நடக்கும். எனவே, இந்தியாவைக் காக்க ஜனநாயகத்தை காப்பாற்றியாக வேண்டும். டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப் பட்ட அரசமைப்புச் சட்டத்தை, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் - அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது நமது முக்கிய கடமையாகிறது. ஜனநாயகம் இல்லாமல் கூட்டம் கூடுவது, நிலச் சீர்திருத்தம் உள்ளிட்ட உரிமைகளுக்காகப் போராடுவது, இதுபோல் மாநாடு நடத்துவது முடியாது. எனவே, ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டம் நமக்கு முதன்மையாகிறது. தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாட்கள் வேண்டும் நாட்கூலி ரூ.600 வேண்டுமென இடதுசாரி அமைப்புகள் கேட்டு வருகிறோம். இந்த மாநாட்டிலும் தீர்மானம் நிறைவேற்றியுள் ளீர்கள். ஆனால், ஐந்து கோடி தொழிலாளர் தேசிய ஊரக வேலைத்திட்டத்திலிருந்து விலகிவிட்டதாக ஒன்றிய ஆட்சி பெருமையோடு கூறுகிறது. உண்மையில், மோடி ஆட்சிதான் விலக்கிவிட்டது. நாட்டின், கிராமப்புறத் தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் மோடி ஆட்சி வெளியேற்றப்பட்டாக வேண்டும்.

நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகளும் இதை உணர்ந்துள்ளதால்தான் 26 கட்சிகளைக் கொண்ட "இந்தியா" கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. எண்ணிக்கை பலத்துக்கு அப்பால், இடதுசாரிகள் இந்த கூட்டணியில் இடம் பெற்றிருப்பது மிகவும் முக்கியமானது, மிகவும் அவசியமானது. இந்த கூட்டணியின் அரசியல் திசைவழியை, உள்ளடக்கத்தை வலுப்படுத்துவதற்கு இடதுசாரிகள் இடம் பெறுவது மிக மிக அவசியம்.

இதே நாளில் அண்ணாமலை, ராமேசுவரத்தி லிருந்து நடைபயணம் நடத்தப் போகிறாராம். அமித்ஷா அதை துவங்கி வைக்கப் போகிறாராம்! இந்த பயணத்துக்கு "என் மண்; என் மக்கள்" என்று பெயர் சூட்டியுள்ளனர். இவ்வாறு சொல் வதன் மூலம் பாசிஸ்டுகளின் ஆணவம், அகங்காரம்தான் தெரிகிறது. இடதுசாரிகளாகிய நாம், "நமது மண் நமது மக்கள்" என்று சொல்வது தான் வழக்கம். ஜனநாயகம் நமது வழக்கம்; சர்வாதிகாரம் அவர்களது பழக்கம்.

ஆனால், இதே நாளில் நாம் இடதுசாரிகள் இங்கே கூடியிருப்பது, அவர்களுக்கு, தமிழ் நாட்டில் காலூன்ற துடிக்கும் பாசிஸ்டுகளுக்கு எதிர் சவாலாகும். இடது, முற்போக்கு போராட்ட மரபு கொண்ட தமிழ்நாட்டில் அண்ணாமலை களும் அமித்ஷாக்களும் எத்தனை நடை நடந்தா லும் தமிழ்நாட்டு மக்களை வெற்றிகொள்ள முடியாது. இதை உறுதி செய்ய, இடதுசாரிகள் இன்னும் நெருங்கிவர வேண்டும்; ஒன்றுபட்டாக வேண்டும்.

அன்று முதல் விடுதலைப் போராட்டத்தில், ஆலைத் தொழிலாளரும் அடித்தட்டு விவசாயி களும் பண்ணையடிமைகளும்தான் அடித்தளமாக இருந்தனர். இன்று இரண்டாவது விடுதலைப் போராட்டத்திலும் ஆலைப் பாட்டாளிகளும் கிராமப்புறத் தொழிலாளரும் அடிப்படை விவசாயிகளும் அடித்தளமாக இருக்க வேண்டும்.

அவர்களை அணிதிரட்டும் இடதுசாரிகள் முக்கிய அரசியல் சக்தியாக இருக்க வேண்டும். இந்தியாவுக்கான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்தப் போராட்டத்தில் இந்தியா வென்றாக வேண்டும். பாசிச சர்வாதி காரத்துக்கும் ஜனநாய கத்துக்குமான போர்க் களத்தில் ஜனநாயகம் வெல்ல வேண்டும். அரசமைப்புச் சட்டம் வெல்ல வேண்டும். வெல்லும்.

உங்கள் மாநாட்டு தீர்மானங்களும் போராட்டத் திட்டங்களும் வெற்றிபெற எமது வாழ்த்துகளை தெரிவித்து விடைபெறுகிறேன். பாசிசம் வீழட்டும்; ஜனநாயகம் ஓங்கட்டும்!