கேள்வி: இந்தியாவில் திட்டத் தொழிலாளர்களின் உரிமைக்கான நீண்ட நெடிய போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அகில இந்திய திட்டத் தொழிலாளர் சங்கத்தை உருவாக்குவதில் நீங்கள் முக்கிய பங்காற்றியுள்ளீர்கள் என்பது மாத்திரம் அல்ல, விடாப்பிடியான போராட்டத்தை வழிநடத்தியும் வருகிறீர்கள். திட்டத் தொழிலா ளர்கள், “தொழிலாளர்” என்று அங்கீகரிப்பதற்குப் பதிலாக அவர்கள் “சேவை வழங்குபவர்கள்” என்று அழைக்கப்படுகிறார்கள். திட்டத் தொழிலா ளர்கள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் சொல்ல முடியுமா? யாரெல்லாம் திட்டத் தொழிலாளர்கள்?

பதில்: மத்திய அரசின் திட்டங்களில் சுமார் 1 கோடி பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். சுகாதாரத் துறையில் ஆஷா என்ற பெயரிலும், ஆஷா உதவியாளர் என்ற பெயரிலும் பல்வேறு மாநிலங்களில் திட்டத் தொழிலாளர்கள் பணி புரிகின்றார்கள். தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் அவர்கள் பணிக்கமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே பெண்கள்தான். பள்ளி களில் மதிய உணவுத் திட்டத்தில் பணிபுரிபவர் களில் 95 சதவீதத்தினர் பெண்களே. அடுத்து அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் தொழிலாளர்களாகிய பெண்கள், உணவு சமைத்து அளிப்பது, ஊட்டச்சத்து வழங்குவது, ஆரம்பகால குழந்தை பராமரிப்பு, கருவுற்ற தாய்மார்களை கவனிப்பது ஆகிய பணியில் ஈடுபடுகின்றனர். இப்படி அவர்கள் செய்யும் பணிகளுக்கு அவர்களே முழு பொறுப்பானவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை தொழிலா ளியாகவோ அல்லது ஊழியராகவோ அந்த துறைகள் கருதவில்லை. அதனால் அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அடிப்படையிலான கூலி வழங்கப்படுவதில்லை. எவ்வித சமூகப் பாது காப்புத் திட்டமும் அவர்களுக்கு இல்லை. பீகாரில் நீண்ட, விடாப்படியான போராட்டத் திற்கு பிறகு இப்போதுதான் மாதம் ரூபாய் 6500 7000 வரை பெறுகிறார்கள். இங்கு மதிய உணவுத் திட்ட ஊழியர்கள் வெறும் ரூபாய் 1650 மட்டுமே பெற்று வருகிறார்கள். அங்கன்வாடி ஊழியர் களுக்கும் உதவியாளர்களுக்கும் ரூபாய் 7000க்கும் குறைவாகவே ஊதியம் உள்ளது. 

கேள்வி: மற்ற அரசு ஊழியர்களிலிருந்து இவர்கள் எப்படி வேறுபடுகிறார்கள்?

பதில்: அரசு ஊழியர்கள் போலவே திட்டத் தொழிலாளர்களின் பணியும் உள்ளது. ஆனால், அரசு ஊழியர் என்ற அந்தஸ்து அளிக்கப்படாமல் இருப்பதற்காகவே அவர்கள் திட்டத் தொழிலாளர் களாக பணிக்கமர்த்தப் பட்டிருக்கின்றனர். இது நவீன கால அடிமை முறை. இது கூலியை திருடுவதற்கான தாராளமயமாக்க கொள்கையின் மோசமான ஏற்பாடாகும்.

கேள்வி: ஆஷா, அங்கன்வாடி, மதிய உணவு திட்டம் இன்ன பிற என மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் உள்ளன. வேலையின் அளவு, மதிப்பூதியம் இதர பயன்கள் என்ற விசயத்திலுள்ள ஒத்த தன்மைகள்/ வேறுபாடுகள் என்னென்ன?

பதில்: எல்லா வேலைகளுமே தனித்தனி யானவை. இவர்கள் வேறு, வேறு துறைகளின் கீழ் வேலை செய்பவர்கள். ஆனால், அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்ட அடிப்படையிலான கூலி கிடையாது என்பதே அனைவருக்கும் பொதுவானது. அவர்கள் அரசு ஊழியர்களாக கருதப்பட மாட்டார்கள். இவை எல்லாம் மத்திய அரசால் நடத்தப்படுகிற தேசிய அளவிலான திட்டங்கள். மோடி அரசாங்கம் அடிப்படை உரிமைகளை, கோரிக்கைகளை மறுத்து வருகிறது. அது சமீபத்திய பட்ஜெட்டிலும் வெளிப்பட்டி ருக்கிறது.

கேள்வி: திட்டங்களில் பெரும்பாலும் பெண் தொழிலாளர்கள் பணி புரிவதாக தெரிகிறது. எண்ணிக்கையில் பெண்களின் பங்கு எவ்வளவு இருக்கும்? அப்படி இருப்பதற்கான காரணம் என்ன?

பதில்: பெண்கள் தான் முதன்மையாக தீர்மானிக்கக்கூடிய சக்தியாக திட்டங்களில் வேலை செய்கின்றனர். பெண் தொழிலாளர் பற்றிய அரசாங்கத்தின் அணுகுமுறை கேள்விக்குரியது. அவர்கள் பெண்கள் உழைப்பையும் திறனையும் மலிவானதாகவும் குடும்பத்துக்கு இது கூடுதல் வருமானம் என்றும் பார்க்கிறார்கள். இது அரசாங்கத்தின் ஆணாதிக்க, நிலப்பிரபுத்துவ எண்ணத்தை பிரதிபலிப்பாக உள்ளது. இந்த காரணத்தால் தான், திட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. திட்டவட்டமாக நமது தொழிற்சங்கம் இந்த கோரிக்கையை எழுப்பியிருக்கிறது. பெண்களுக்கு தனி ஓய்வறை, மாதவிடாய் கால விடுமுறை, பாலியல் புகார்களை தீர்ப்பதற்கான பொறி யமைவு, கிராமப்புற பகுதிகளில் பணி செய்யும் போது உரிய பாதுகாப்பு போன்ற பல பிரச்சனைகளை நாம் துவக்கத்திலருந்தே எழுப்பி வருகிறோம்.

கேள்வி: இந்த மிகக் குறைந்த மதிப்பூதியம் கிராமப்புற ஏழை பெண் தொழிலாளர்களின் கடின உழைப்பை எப்படி ஈடுகட்டும்? திட்டத் தொழிலாளர்களின் நிலை மோசமானதாக இருந்த போதிலும் அவர்கள் கிராமப்புற ஏழைகளுக்கு சேவை வழங்கி வருகின்றனர். கிராமப்புற ஏழைகளின் அடிப்படை ஊட்டச்சத்து, கல்வி, சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டத் தொழிலாளர்கள் வறுமை எனும் சுற்றில் சுழன்று கொண்டிருக்கிறார்களா?

பதில்: ஆமாம். திட்டத் தொழிலாளர்களுமே கடுமையான வறுமையில் உழல்கின்றனர். விலைவாசி உயர்வை ஈடுகட்ட அவர்களுக்கு பஞ்சப்படி வழங்கப்படுவதில்லை. பல வருடங்களாகவே அவர்களின் மதிப்பூதியமும் இதர படிகளும் உயர்த்தப்படவே இல்லை.

கேள்வி: திட்டத் தொழிலாளர்களை அமைப்பாக்க ஆரம்ப கட்டத்தில் என்னென்ன சவால்களை பிரச்சனைகளை எதிர் கொண்டீர்கள்? மிகவும் அமைப்பு சாரா தன்மை கொண்ட, பூகோள ரீதியாக பிரிந்து கிடக்கிற திட்டத் தொழிலாளர் களை தொழிற்சங்க அமைப்புக்குள் கொண்டுவர எடுத்துக்கொண்ட இயக்கப் போக்கு பற்றி விரிவாக சொல்ல முடியுமா?

பதில்: அவர்கள் பணிக்கு சேருமிடங்கள் பிரிந்து கிடப்பதால் அவர்களிடம் குழு மனப்பான் மையோ அல்லது சகோதரத்துவ உணர்வோ மங்கி இருக்கும். அவர்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி உணர்வு கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். தொடர்ந்து அவர்களை அணி திரட்டும் போதும், ஊக்கமளிக்கும் போதும் அவர்கள் சங்க உணர்வு பெறுகிறார்கள். ஆஷா தொழிலாளர்களை பொருத்தவரை ஆரம்ப சுகாதார நிலையம் தான் அவர்களது மையம். மேலிருந்து எடுக்கப்படும் பிரச்சாரங்களும் முன் முயற்சிகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 

ஆஷா தொழிலாளர்களின் இரண்டு வேலை நிறுத்தங்கள் அவர்களை அணிதிரட்டிக் கொள்ள உதவின. வெற்றிகரமாக நடத்தப்பட்ட வேலை நிறுத்தங்களும் கட்டமைக்கப்பட்ட விதத்திலான பிரச்சாரமும், நம் அமைப்பை மிகப்பெரிய அமைப்பாக வளர்க்க உதவின. நாம் முதலில் 13 மாவட்டங்களிலிருந்து, 100 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து வேலைகளை துவக்கினோம். போராட்ட இயக்கப் போக்கில் ஆஷா செயல்வீரர்கள் நம்பிக்கை பெற்றனர். அவர்கள் அமைப்பு வேலைகளில் கைதேர்ந்தவர் களாக வளர்ந்தனர். தொழிற்சங்க தலைவர்களின் பாத்திரம் விடாப்பிடியானதாக, ஜனநாயகப் பூர்வமானதாக, வெளிப்படைத் தன்மையுடன் இருப்பது மிகவும் அவசியமானது என்பதை நமது அனுபவம் காட்டுகிறது. அமைப் பினுடைய நன் மதிப்பும், தலைவர்களுடைய நன்மதிப்பும் ஆஷா திட்ட தொழிலாளர்களை நெருக்கமாக கொண்டு வர முக்கியமானவை ஆகும்.

முதலில் நாங்கள் ஆஷா தொழிலாளர்களின் கௌரவத்திற்கான போராட்டத்தை நடத்தினோம். மருத்துவர், மேலாளர், இதர அரசு ஊழியர்கள் எங்களிடம் தவறாக நடந்து கொண்டிருந்தார்கள். தொழிற்சங்கம் அமைத்ததற்காக எங்களை அச்சுறுத்தினார்கள். கோவிட் காலத்தில் உயிரை பணயம் வைத்து மிகப்பெரிய பங்காற்றினோம். ஆனால், பிரதமர் வெறும் உதட்டளவு வாய் சொல்லில் பேசினாரே ஒழிய எவ்வித வெகு மதியும் அளிக்க மறுத்துவிட்டார். தொழிற்சங்க இயக்கத்தின் நீண்ட கால கோரிக்கைகள் கண்டு கொள்ளப்படவேயில்லை. அரசாங்கத்தின் இந்த அலட்சியப் போக்கு அடுத்தடுத்த போராட்ட இயக்கங்களில் கோபமாக வெளிப்பட்டது. இது போன்ற அனுபவம் நாட்டின் பல்வேறு முனைக ளிலும் வெளிப்பட்டது. உத்தரப்பிரதேசம், டெல்லி, கர்நாடகா மற்றும் வேறு சில மாநிலங்க ளிலும் மிகப்பெரிய அணிதிரட்டல் நடைபெற்றது. 

இப்போதைய 32 நாள் வேலை நிறுத்தம் என்பது, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலை நிறுத்தம் மிகவும் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டது. முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோருக்கு முன்னதாகவே கோரிக்கை பட்டியல் கொடுக்கப்பட்டது. மிகப் பரந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஏஐசிசிடியு வும் சிஐடியு வும் இணைந்து கூட்டுக் குழு உருவாக்கப்பட்டது. ஏஐடியுசி யின் தலைமை மதிப்பிழந்து போயிருந்த காரணத்தால் அவர்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை. ஆஷா தொழிலாளர்களின் அனைத்துப் பிரச்சனை களையும் கோரிக்கையாக தயாராக வடிவமைத் திருந்த காரணத்தால் ஆஷா தொழிலாளர்கள் முழு வீச்சில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கு முன்னர் வேலை நிறுத்தம் அறிவித்த போது, உயர்நீதிமன்றம் தலையிட்டு நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்குமாறு அரசாங்கத்துக்கு உத்தரவிட்ட காரணத்தால் வேலை நிறுத்தத்தை துவங்க முடியவில்லை. கூடவே உயர் நீதிமன்றம் ஆஷா தொழிலாளர்களின் கோவிட் கால வேலையைப் பாராட்டி அப்போது பதிவும் செய்திருந்தது.

வேலை நிறுத்தம் துவங்கி ஒரு வார காலத்திற்குள் மாநிலம் முழுவதும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் செய்தி பரவியது. வேலை நிறுத்தம் சூடு பிடித்ததால் எல்லா கிராமப்புற மையங்களும் செயல்பட முடியாமல் போனது. தடுப்பூசி பணி நிறுத்தப்பட்டது. கிராமப்புற மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டன. ஆரம்ப சுகாதார நிலையம் முன்பும் மாவட்டத் தலைமை மருத்துவமனை முன்பும் தொடர் போராட்டங்கள் கட்டமைக்கப் பட்டன. அதன் பின்பு தலைநகர் பாட்னாவில் ஆஷா தொழிலாளர்களும் உதவியாளர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு மேடையில் தொழிற்சங்க தலைவர்களும் முற்போக்கு பெண்கள் கழக தலைவர்களும் 8 சட்டமன்ற உறுப்பினர்களும் உரை நிகழ்த்தினர். இடப் பற்றாக்குறை காரணமாக ஆஷா தொழிலாளர்கள் வீதிகளிலும் அருகாமையில் ரயில் நிலையத் திலும் குழுமி இருந்தனர். இந்த வேலை நிறுத்தம் முழுக்க முழுக்க பெண்களாலேயே கட்டமைக்கப் பட்டது என்பது சிறப்பான ஒன்றாகும்.

ஆஷா தொழிலாளர்களின் வேலை பறிபோகும் என அரசாங்கம் அறிவித்தபோதும் கூட, திட்டத் தொழிலாளர்கள், மருத்துவர் இதர அரசு ஊழியர்களிடம் தன்மையாகவே நடந்து கொண்டனர். பல ஆரம்ப சுகாதார நிலையங் களில் காவல்துறை, ஒரு டஜன் முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்து அச்சுறுத்தியது. இதனால் வேலை நிறுத்தம் பெரிய அரசியல் நிகழ்வாக மாறியது.

அதன் பிறகு அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை துவங்கியது. 'வெகுமதி' என்பதற்கு பதிலாக 'மதிப்பூதியம்' பெறும் ஊழியர்கள் என்ற கோரிக்கையும், ஊதிய உயர்வு கோரிக்கையையும் அரசாங்கம் ஏற்க மறுத்தது. இந்த சூழலில் போராட்டத்தை தீவிரப்படுத்துமாறு ஆஷா தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மருத்துவமனைகள் செயல்பாட்டை இழக்கத் துவங்கியது. இதற்கிடையே வறுமையை விளக்கும் வகையில் தட்டு தட்டும் போராட்டம் பிரபலமாக நடத்தப்பட்டது. தொழிலாளர்கள் கோரிக்கைகளை மெஹந்தி கொண்டு கைகளில் எழுதி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு படம் எடுத்து அனுப்பி வைத்தார்கள். தினமும் வாய்ஸ் மெசேஜ் மூலம் மாவட்ட தலைவர்களுக்கு தலைமையகத்திலிருந்து செய்தி அனுப்பப் பட்டது. இது நன்கு அமைப்பாக்கப்பட்ட விதத்தில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உதவியது.

இப்படி இருக்கையில், போராட்டம் விலக்கிக் கொள்ளப் பட்டால் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என அரசாங்கத் தரப்பு செய்தி அனுப்பியது. செய்தியை நிராகரித்த போராட்டக்காரர்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இது அரசாங்கத்துக்கு வலுவான செய்தியை சொல்லியது. பிறகு சுகாதாரத்துறை செயலாளர் ஏற்பாடு செய்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டோம். கூட்டத்தில் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு இறுதி சுற்று பேச்சு வார்த்தை சுகாதாரத்துறை அமைச்சரும் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவுடன் ஏற்பாடு செய்யப்பட்டது. போராட்டம் வெற்றி அடைந்தது. தொழிலாளர்களும் உதவியாளர்களும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாவட்ட மருத்துவமனைகளிலும் பெரிய அளவில் வெற்றியைக் கொண்டாடினர். 

இந்தப் போராட்டத்தின் விளைவாக அரை அரசு ஊழியர்களாக திட்டத் தொழிலாளர்கள் மாறியதோடு, ஊதியத்தில் ரூபாய் 1500 உயர்வும் கிடைத்தது. மற்ற சில கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இகக(மாலெ) சட்டமன்ற உறுப்பினர்களும் அயர்லா தலைவர்களும் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மத்திய தொழிற்சங்க கூட்டு மேடை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த வேலை நிறுத்தத்தின் விளைவாக ஏஐசிசிடியு உடனும் அரசு ஊழியர் கூட்டமைப் புடனும் இணைக்கப்பட்ட பீகார் மாநில ஆஷா தொழிலாளர் சங்கம் நன்கு பிரசித்திப் பெற்றுள்ளது. நம் அமைப்பின் தலைவர்களும் ஆஷா ஊழியர்கள் மத்தியில் பிரபலம் அடைந் துள்ளனர்.

இந்தப் போராட்டத்தினூடே நமது சங்கம் பல மாவட்டங்களிலும் பல ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் விரிவடைந்துள்ளது. இந்தப் போராட்டத்தின் மூலம் நன்மதிப்பு கிடைத் துள்ளது. இது நாம் ஆஷா தொழிலாளர்களின் அகில இந்திய கூட்டமைப்பின் மாநாட்டை பாட்னாவில் நடத்துவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த போராட் டத்தின் கடைசி முழக்கமாக வந்த செய்தி 'பீகாரில் நாம் போராட்டக் களத்தில் வென்றிருக் கிறோம். அடுத்து நாம் ஒன்றிய மோடி அரசாங்கத்தை கெரோ செய்ய வேண்டும்' ஏனென்றால் முக்கிய திட்டப் பணிகளுக்கான வேலையளிப்பவராக மத்திய அரசாங்கமே உள்ளது. பல வகை திட்டத் தொழிலாளர்களின் மோசமான பணி நிலைமைகளுக்கு மத்திய அரசாங்கமே காரணம். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கான போராட் டத்தை தீவிரப்படுத்த மாநாட்டு மேடையில் இருந்து அறைகூவல் விடுக்கப்பட வேண்டும். மாநாடு திட்டத் தொழிலாளர் தொழிற்சங்க இயக்கத்தில் ஒரு வரலாற்றை படைப்பதாக அமையும். செப்டம்பர் 9-10 தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் நாடு முழுவதுமிருந்து 500 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.