அக்டோபர் 3, விடிகாலையில் நியூஸ் கிளிக் இணையதள ஏட்டோடு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இதழியலாளர்கள் மற்றும் அதன் ஊழியர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் (ரெய்டுகள்) இந்தியாவிலுள்ள விமர்சனபூர்வமான ஊடகக் குரல்களின் மீது தொடுக்கப்பட்ட மிக மோசமான தாக்குதலாகும். டெல்லியின் பல இடங்களில் நடந்த சோதனைக ளுக்கு முன்னால், தெலுங்கானாவின் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீதும், சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் மீதும் அதே போல சோதனைகள் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) நடத்தப்பட்டிருக்கிறது. நியூஸ் கிளிக் நிறுவன ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தாவும் சீனியர் நிர்வாகி அமித் சக்கரவர்த்தியும் மிகக் கொடூரமான ஊபா (யூஏபிஏ) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அதைத் தொடர்ந்து கலால்துறையில் ஊழல் என காரணம் கூறி ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு இருக்கிறார். திமுகவின் ஜெகத்ரட்சகன் நிறுவனங்களிலும் வீடுகளிலும் வருமான வரி சோதனைகள் நடத்தப்பட்டு இருக் கின்றன. இந்த அனைத்து சோதனைகளையும் சேர்த்துப் பார்த்தோமேயானால், இதற்கு முன்னால், பீமா கொரேகான் வழக்கிலும், டெல்லி கலவர வழக்கிலும் எப்படி தொடர் கைதுகள் நடந்தனவோ, அதே போல இது இன்னும் மிக விரிவானதான, மிக மோசமான தான புதியதோர் ஒடுக்குமுறை கட்டத்தைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.

பீமா கொரேகான் வழக்கு போலவே, நியூஸ் கிளிக்கிலும் டிஜிட்டல் சாதனங்கள் சட்ட விரோதமாக கைப்பற்றப்பட்டு இருக்கின்றன. பெகாசஸ் போன்ற உளவு மென்பொருட்கள் அவற்றில் பதிவிடப்படும் என்பதை மறுப்பதற் கில்லை. சோதனைகள் நடத்தப்பட்ட விதம், நியூஸ் கிளிக்குக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையில் ஊ பா பயன்படுத்தப்பட்டு இருப்பது, திட்டமிட்டு உருவாக்கப்படும் சொல்லாடல்கள், கதைகள் இவை எல்லாம் ஒரு மிகப்பெரும் சதியை சுட்டுவதாக இருக்கின்றன. அதிகாரத்தின் முன்னால் நேருக்கு நேராக உண்மை பேசும் இதழியல் நெறியை கிரிமினல் குற்றமாக சித்தரிப்பதற்கான, பயங்கரவாதமாக சித்தரிப்பதற்கான மிகப்பெரும் சதியைச் சுட்டுவதாகவே இருக்கின்றன. அத்தகைய உண்மையான இதழியல், வெளிநாட்டு நலன்களால் உந்தப்பட்டதாகவும் தேச விரோத நோக்கம் கொண்டதாகவும் கற்பிக்கப்படுகிறது. விவசாயிகள் இயக்கம், சிஏஏ எதிர்ப்பு இயக்கம் குறித்து எழுதியதற்காக, மதவெறி வன்முறையை, கோவிட் பெருந்தொற்றை அரசு சரியாக கையாளத் தவறியதை அம்பலப்படுத்தியதற்காக இதழியலாளர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். விவசாயிகள் இயக்கம், இந்தியப் பொருளாதாரத்தை சிதைப்பதற்கான, குலைப் பதற்கான ஒரு சதியாக மீண்டும் முன்வைக்கப் படுகிறது. இத்தகைய சொல்லாடல், அனுமதிக்கப்பட்ட இதழியல் என்பது அரசாங்கப் பிரச்சாரம் மட்டுமே என்பதாக அதை சுருக்குகிறது. விமர்சனம் என்பதை தேசத் துரோகத்துக்கு, பயங்கரவாதத்துக்கு இணையானதாக மாற்றுகிறது.

சாங்காயில் இருக்கும் ஒரு அமெரிக்க கோடீசுவரருக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிநாட்டு பிரச்சாரத் தளங்களுக்கும், சீன அரசுக்கும் இடையிலான உறவு பற்றி நியூயார்க் டைம்ஸ் ஏட்டில் ஒரு கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து நியூஸ் கிளிக்கிற்கு எதிரான முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. நெவில் ராய் சிங்கம் எனும் அந்த சர்ச்சைக்குரிய அந்த அமெரிக்க கோடீசுவரர், சோசலிச கருத்தின்பால் நம்பிக்கை கொண்டவராகவும் பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் முற்போக்கு வட்டாரங்களோடு சர்வதேச நிதி தொடர்பு உடையவராகவும் உள்ள ஒரு மென்பொருள் தொழில்முனைவோர் என சித்தரிக்கப்படுகிறார். இந்த நிதியுதவி வலைப் பின்னலின் பயனாளியாக நியூஸ் கிளிக் சித்தரிக்கப்படுகிறது. நியூஸ் கிளிக் வெளிநாட்டு நேரடி முதலீடு விதிகளை மீறியதாக ஆகஸ்ட் 2020ல் பொருளாதார குற்றப் பிரிவு ஒரு வழக்கு தொடர்ந்து இருக்கிறது. பிப்ரவரி 2021ல் அமுலாக்கத் துறை இயக்ககம் அந்த வளாகத்தை சோதனை செய்து இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். அந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும் நியூஸ் கிளிக் மறுத்திருக்கிறது. அனைத்தும் சட்டப்படியான, சட்டத்திற்குட்பட்ட வரவு செலவுகளே என உறுதிப்படுத்தி இருக்கிறது. ஆனால் இப்போது, நியூயார்க் டைம்ஸ் கட்டுரையை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டு, அதன் மீது ஊபா வழக்கு புனையப் பட்டிருக்கிறது. நியூஸ் கிளிக்கின் இதழியல் உள்ளடக்கத்தை, சீன நிதியுதவி, சீனக் கம்பெனிகளின் கைவரிசை என்ற பெயரில், சீனத்தின் நோக்கங்கள் மற்றும் பிரச்சாரங்களோடு தொடர்புபடுத்த முயற்சிப்பது இந்தியாவின் சுதந்திர இதழியல், கட்டற்ற ஊடகம் என்கிற ஒரு கருத்துக் கோப்பையே அசிங்கப்படுத்தும் ஒரு அருவருப்பான சதியேயன்றி வேறல்ல.

நியூஸ் கிளிக் ஏட்டையும், இப்போது விவசாயிகள் இயக்கத்தையும் கூட சீனத்தின் சதி என்றும், வெளிநாட்டு உதவி பெறும் பயங்கரவாதம் என்றும் புனைய முயற்சிக்கும் மோடி அரசாங்கம், இந்திய சீன எல்லைப் பிரச்சனை குறித்தும், உண்மையான கட்டுப்பாடு எல்லைக் கோட்டில் இந்தியா தனது கட்டுப்பாட்டை இழந்து நிற்பது குறித்தும் முற்றிலும் மவுனம் சாதிக்கிறது. சீனத்துடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் கைபேசிகளின் சந்தையில் சீனத்தின் பங்கு விரிவாகிக் கொண்டே வருகிறது. சீனக் கம்பெனிகளின் மீது நிதி முறைகேடு, வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டுகள் இருக்கிறபோதிலும் தொடர்ந்து முக்கிய பல விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு, பெரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு, பிஎம் கேர்ஸ் நிதிக்கும் கூட அவை நிதியுதவி அளித்து வருகின்றன. சீன கம்பெனிகளிடமிருந்து விளம்பரங்கள் பெறுவது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு தேசவிரோத செயல் என்றால், அதற்கு முதல் குற்றவாளியும், பொறுப்பும் இந்திய அரசாங்கமே ஆகும்.

மோடி அரசாங்கத்தின் சுயதம்பட்ட பிரச்சாரத்தை எதிரொலிக்க மறுக்கிற, மாறாக, அதிகாரத்திற்கு எதிராக, இதழியல் கோட்பாடு களைக் கடைபிடித்து ஆய்வு செய்து, துல்லியமாக உண்மை பேசுகிற ஊடகக் குரல்களை தண்டிப்பதற்காகத்தான், அதன் குரல்வளையை நெறிப்பதற்காகத்தான் சீனப் பிரச்சாரம் என்கிற பூதம் கிளப்பப்படுகிறது என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவின் பெரும் பான்மையான பிரதான நீரோட்ட ஊடகங்களை அரசாங்கத்தின் பிரச்சார ஊதுகுழல்களாக மோடி அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டு மாற்றி விட்டது. இதில் இந்தியாவின் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் சதியும் அடங்கி இருக்கிறது. மிகச் சமீப காலம் வரை சாதாரண மக்களின் பற்றியெரியும் பிரச்சனைகளைக் காட்டி வந்த என்டிடிவி போன்ற தொலைக்காட்சி நிறுவ னத்தை அதானி குழுமம் வாங்கியதும், அதைத் தொடர்ந்து அது பெற்றிருக்கும் மாற்றமும் இதற்கு ஒரு நல்ல உதாரணம் ஆகும்.

இது பெரிய ஊடக நிறுவனங்களின் மதிப்பை அரித்துப்போகச் செய்திருக்கிறது. செய்தி சேகரிப்பதற்காக, பகுப்பாய்வுகளுக்காக, சமூக ஊடகங்களையும் இணையதளங்களையும் நோக்கி படையெடுப்போர் எண்ணிக்கை நாளுக்குநாள் பன்மடங்கு பெருகி வருகிறது. விவசாயிகள் இயக்கம் மூன்று கார்ப்பரேட் ஆதரவு வேளான் சட்டங்களை தூக்கியெறிந்தது மட்டுமல்ல, விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கைப்பற்றுவதை முறியடித்தது மட்டுமல்ல, அரச ஆதரவு ஊதுகுழல் ஊடகங்களையும்' கூட தெட்டத் தெளிவாக நிராகரித்து இருக்கிறது. மாறிவரும் ஊடகச் சூழல் பற்றி மோடி அரசாங்கம் மிக நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது. அதனால்தான், இணைய தளத்தில் நிலவும் சுதந்திர ஊடக வெளியை சிதைப்பதற்காகவும் நசுக்குவதற்காகவும் மூர்க்கத்தனமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய இந்தியாவில் மக்கள் ஆதரவு ஜனநாயக ஆதரவு ஊடகங்க ளுக்கு மிச்சம் மீதி இருக்கும் வெளியையும் அடைத்து விட வேண்டும், நசுக்கிவிட வேண்டும் என்றுதான் மோடி அரசாங்கம் இரு முனை கொண்ட ஊடக நிர்வாகத் தந்திரத்தை வகுத்திருக்கிறது. ஒரு புறம், சமூக ஊடகத்தில் செல்வாக்கு செலுத்துகிற தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரோடு வெளிப்படையாக கூட தனது உறவை அதிகரித்து வருகிறது. மற்றொரு புறம், சுதந்திர இதழியலாளர்களைப் பழிவாங்கும் இயக்கத்தைத் தீவிரப்படுத்துகிறது. ஊடகங்களை தண்டிப்பது, நசுக்குவதோடு கூடவே, ஒட்டுமொத்த இடதுசாரி, முற்போக்கு மற்றும் மக்கள் ஆதரவு நோக்கங்கள், இயக்கங்களை, வெளிநாட்டு நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும், வெளிநாட்டு நிதியுதவி பெறும் 'தேசவிரோத சதியாக' சித்தரிக்க முயற்சிப்பது மோடி அரசின் சதித்திட்டமாக இருக்கிறது.

மோடி அரசின் இந்தச் சதியை ஊடக வியலாளர்களும் அறிவாளிகளும் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், இந்திய ஜனநாயக வெளியின் ஒவ்வொரு அங்குலத்தையும் காத்திட வேண்டுமானால், துன்புறுத்தப்படும் இதழியலாளர்கள், செயல்பாட் டாளர்களுக்கு ஆதரவாக இந்திய பொதுமக்கள் ஒவ்வொருவரும் எழுந்து நின்று உறுதியாக கரம் கோர்த்திட வேண்டும்.