சாதியாதிக்கம், சாதியப்படிநிலை, குலக் கல்வி, குலத் தொழில் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதை வைத்துக் கொண்டு, சனாதனத்தை எதிர்ப்பவர்கள் இந்துக்களுக்கு எதிரி, அந்த வகையில் 'இந்தியா' கூட்டணி இந்துக்களுக்கு எதிரி என்று பிரச்சாரத்தைத் திட்டமிட்டு நாடு முழுவதும் பாஜக -சங்கிகள் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டில், சமூகநீதி நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், வனத் துறை அதிகாரிகள் ஆகியவர்களுக்கான கூட்டத்தை துவக்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசும்போது, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் துளியும் சமரசம் கூடாது என்றும் பட்டியலின, பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து மக்கள் அச்சமின்றி தகவல் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ்ஆப், தொலைபேசி எண்ணை மாவட்ட ஆட்சியர்கள் அறிவிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். மேலும், தூத்துகுடி விஏஓ லூர்து பிரான்சிஸ், திருச்சி சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்குகளில் போலீஸார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தந்ததைப் பாராட்டியுள்ளார். ஆனால், அக்டோபர் 2, காந்தி பிறந்த நாள் அன்று நாகர்கோயில் கிருஷ்ணன்கோயில் அருந்ததியர் காலனி மக்கள், 50 ஆண்டுகளாகக் குடியிருக்கும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரி கருப்புக் கொடி ஏந்தி அமைதியாகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது, நாகர்கோயில் காவல்துறையினர், கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி, மலம் அள்ளும் நீங்கெல்லாம் போராட்டம் நடத்துறீங்க என்று சாதி ரீதியாக இழிவாகப் பேசி, பெண்களை மானபங்கப்படுத்தியுள்ளார்கள். போராட்டத்திற்குத் தலைமையேற்ற திராவிட தமிழர் கட்சி மாநில மட்ட தலைவர்களை பஸ் கண்ணாடியை உடைத்ததாக வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளார்கள். அக்டோபர் 3 அன்று, திருநெல்வேலி திருப்பணி கரிசல் குளத்தைச் சேர்ந்த 19 வயது பட்டியலினப் பெண் சந்தியாவை, 18 வயது பூர்த்தி அடையாத இளைஞர் பட்டப் பகலில், நெல்லை டவுன் காவல் நிலையத்தில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் உள்ள குடோனில் வைத்து, தன்னை காதலிக்க மறுத்ததால் கொலை செய்துள்ளார். தென் மாவட்டங்களில், குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டியலின மக்கள் கொடூரமாகத் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன. புளியங்குடி தங்கசாமி, திசையன்விளை முத்தையா, நான்குநேரி சின்னதுரை, கரிசல்குளம் சந்தியா என்று பட்டியல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. வேங்கை வயலில் குடிநீர் தொட்டிக்குள் மலத்தைக் கலந்த கயவர்கள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், மலம் அள்ளும் உங்களுக்குப் போராட்டமா? என்று நாகர்கோயிலில் காவல்துறைக்குள்ளிருந்தே குரல் வருகிறதென்றால், தமிழகத்தின் சமூகநீதி கேள்விக்குள்ளாகாதா? தூத்துக்குடி விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலையில், அம்புகள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளன. எய்தவர்கள் தப்பிவிட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்குள் 17 கொலைகள் நடந்துள்ளன. இதில் பெரும் பாலானவர்கள் பட்டியலினத்தவர்கள். பல கொலைகளில் நன்கு தெரிந்தும் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இன்னும் பல கொலைகளில் கொலைக்குக் காரணமானவர்கள் கைது செய்யப் படவில்லை. இந்த நிலையில், பட்டியலின மக்களுக்காக புகார் அளிக்க தனி வாட்ஸ் ஆப் மற்றும் தொலை பேசி எண்கள் உருவாக்குவது மட்டும் போதுமானதாகுமா?. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் மத்தியில் இருக்கும் சாதியாதிக்க வெறி களையப்பட காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அண்ணாதுரை அவர்களை அண்ணாமலை அவதூறாகப் பேசினார் என்று திடீர் உணர்ச்சி வந்து பாஜக-அதிமுக கூட்டணி உடைந்து விட்டதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பு வாக்குகள், மொத்தமாக திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி பக்கம் செல்லாமல் பார்த்துக் கொள்வதற்கான தந்திரமாகக் கூட இருக்கலாம். இப்படிப்பட்ட நிலையில், பட்டியலின பழங்குடி மக்களுக்கு உண்மையான சமூகநீதி, வாழ்வாதாரம் கிடைக்காமல் போனால், சனாதனத்தை ஒழிப்பது சங்கடத்திற்குள்ளாகும்.