சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பால் புதுமையர் என்றழைக்கப்படும் எல்ஜிபிடிக்யூஐயினரின் உரிமைக்கு எதிராக ஒரு தீர்ப்பை வழங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக பால் புதுமையர் சமூகத்தைச் சேர்ந்த 15 இணையர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்கள். அந்த வழக்கில் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் அவர்களின் உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் 2018 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் பிரிவு 377ஐ ரத்து செய்தது. தன் பாலினச் சேர்க்கையானது குற்றமாகாது என்று கூறியது. பால் புதுமையர், தன் பாலினச் சேர்க்கை உறவுகள் மனநலக் கோளாறு ஆகாது என்றும் ஒருவரது உடல் உறவுகள் அவரவர் விருப்பம் என்றும் இந்த அடிப்படையில் பாகுபாடு காட்டுவது ஒருவரின் உரிமையை மீறுவதாகும் என்று கூறியிருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், பால் புதுமையர், எல்ஜிபிடிக்யூ சமூகத்தினர் தங்களின் தன் பாலின திருமணத்திற்காகவும் அந்த இணையர்கள் குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்ப்பதற்காகவும் உரிமையும் அங்கீகாரமும் கோரி வழக்குத் தொடுத்திருந்தார்கள். திருமணமான தம்பதியர்க்கு, இணையர்க்கு வழங்கப்படும் உரிமைகள் தங்களுக்கும் வேண்டும் என்று அவர்கள் கேட்டதற்கு, மத அமைப்புகள் கடும் எதிர்ப்புகள் காட்டின. மத அமைப்புகள் மட்டுமின்றி, ஒன்றிய அரசும் அவர்களின் கோரிக்கைக்கு எதிராக நின்றது. இந்த நிலையில்தான் தற்போது உச்சநீதிமன்றத்தின் 5 பேர் அமர்வு ஒரு தீர்ப்பினை வழங்கியுள்ளது.

அந்தத் தீர்ப்பில், தன் பாலின இணையர் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பயன்களை விளக்கியிருக்கிறார்கள். ஆனால், அத்தகைய திருமணத்தைச் செய்து கொள்ளவோ, சேர்ந்து வாழவோ 'அடிப்படை உரிமை இல்லை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. சுப்ரியோ எதிர் இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில்தான் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தற்போது இவ்வாறு வழங்கியுள்ளது. பால் புதுமையர் அல்லது எல்ஜிபிடிக்யூஐயினர் திருமணம் செய்து கொள்ளவோ, குழந்தையைத் தத்து எடுக்கவோ அடிப்படை உரிமை இல்லை என்று கூறியுள்ளது.தன் பாலினத் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று கூறியிருப்பது அவர்களது குடியுரிமை மற்றும் இதர உரிமைகளையும் மறுத்துள்ளதாகும். ஒரு பாதுகாப்பற்ற நிலையை அச் சமூகத்தினருக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் எஸ்.கே.கவுல் இருவரும் சிறுபான்மையினராகவும் மற்ற மூவரும் பெரும்பான்மையினராகவும் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்கள்தான், 2018ஆம் ஆண்டு ஷபின் ஜகன் எதிர் அசோகன் (2018) எஸ்சிசி 368 வழக்கில், 'திருமணம் ஒருவரின் தனிப்பட்ட உரிமையாகும். ஒருவர் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவரது சுய விருப்பம் சார்ந்தது ஆகும். இது இந்திய அரசியல் சாசனம் பிரிவு 21ன் கீழ் ஒருங்கிணைந்ததாகும்' என்று கூறியிருந்தார். தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பிலும் கூட தலைமை நீதிபதி அவர்கள், "ஓர் உறவு பாரபட்சமாக நடத்தப்படும் எனில், ஒரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்காகன சுதந்திரம் மற்றும் அவர்களுடைய தோழமையால் இன்புறு வதற்கான சுதந்திரம் ஆகியன பயனற்றுப் போகும்" கூறியுள்ளார்கள். தன்னுடைய முந்தையத் தீர்ப்பில் கூறியுள்ளது போல், ஒருவர் தனது துணையைத் தேர்ந்தெடுப்ப தற்கான திறன் மற்றும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்க்கையை அமைப்பது ஆகியவற்றை அரசியல் சாசனப் பிரிவு 21ம் சமத்துவத்திற்கான உட்பிரிவு உள்ளிட்ட இதர பிரிவுகளும் வரையறுத் துள்ளதை இந்தத் தீர்ப்பிலும் அவர் அங்கீகரித்துள்ள அதேவேளை, தன் பாலின இணையர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான உரிமை உள்ளது என்று குறிப்பிடாமல் விட்டு விட்டார். அதாவது, இரு பாலினத்தவர்கள் அல்லாத, ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை சிறப்புத் திருமணச் சட்டம் அனுமதிக்கவில்லை என்றால் அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று குறிப்பிட மறுத்து விட்டுள்ளார்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் எஸ்.கே.கவுல் இருவரும், தன் பாலின காதல் இயற்கையானது, காலங்காலமாக நடை முறையில் இருந்து வந்துள்ளது, இன்று அனைத்து பிரிவின ரிடமும் இத்ததைய வழக்கம் உள்ளது, இத்தகைய

உறவுகள் மேல் தட்டுப்பிரிவினரிடம் மட்டுமல்ல அடித்தட்டு மக்களிடத்திலும் நகர்புறம், கிராமப்புறத்திலும் காணப்படுகின்றன என்று தங்களது சிறுபான்மைத் தீர்ப்பில் கூறியுள்ளார்கள். மேலும் இந்த உறவை, இதுபோன்ற நிலையான உறவில் இருந்து கிடைக்கும் உரிமைகளையும் அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இப்படியெல்லாம் குறிப்பிட்டுவிட்டு, அந்த பால் புதுமைச் சமூகத்தினரின் திருமணத்தை அங்கீகரிப் பதற்கான வாய்ப்பை, அமைச்சரவைக் குழுவிடம் விட்டுவிட்டார்கள் என்பதுதான் வேதனைக்குரியதாகும்.

திருமணம் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை என்பதே இப்போது மறுக்கப்பட்டுள்ளது. திருமணம் என்பது அவர்களின் அடிப்படை உரிமை என்பதை மறுத்துவிட்டு தன் பாலின இணையர்களுக்கு சில துணைச் சலுகைகளை வழங்கக் கூறியுள்ளார் தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்கள். அதாவது, ரேசன் அட்டை வழங்குவது, கூட்டாக வங்கிக் கணக்கு துவங்குவதற்கான வசதி, இத்தகைய வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தைப் பெறுவதற்கான உரிமை பெற்ற நபராக (நாமினி) இவர்களது பெயரை அளிப்பதற்கான உரிமை, மருத்துவ நடைமுறைகளின் போதும் சிறைச்சாலைகளுக்குச் சென்று சிறைவாசிகளைப் பார்க்கப்போகும் போதும் இவர்களை உறவினர்களாகக் கருதும் உரிமை, இறந்துபோன வாழ்க்கைத் துணையின் உடலைப் பெறுவதற்கான உரிமை, இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கான உரிமை ஆகியவற்றை அளித்திட அரசால் அமைக்கப்படும் குழுவிற்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளார்கள்.

தன் பாலின இணையர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் இவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் இவர்களுக்குத் தொல்லை கொடுப்பதைத் தடுத்து பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்றும் தேவைப்பட்டால் அவர்கள் தங்குவதற்கு பாதுகாப்பு இல்லங்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் அரசுக்கும் காவல் துறைக்கும் வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளார்கள். ஆனால், பெரும்பான்மை தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதி பட், நீதிபதி ஹிமா கோலி மற்றும் நீதிபதி நரசிம்மா ஆகியோர் இந்த ஆலோசனைகளைக் கூட வழங்கத் தயாராக இல்லை. நீதிபதி சந்திரசூட் அவர்கள், பால் புதுமையர் உட்பட திருமணம் ஆகாத இணையர்கள் குழந்தைகளைத் தத்து எடுக்கலாம் என்று கூறியுள்ளார். சிறுபான்மைத் தீர்ப்பு இதையே கூறுகிறது. கேரா (CARA) சுற்றறிக்கை திருமணமாகாமல் சேர்ந்து வாழும் இணையர்கள் தத்தெடுக்கத் தகுதியற்றவர்கள் என்று கூறியது அரசியல் சாசனப் பிரிவு 15ஐ மீறுவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆனாலும்,குழந்தைகளைத் தத்தெடுக்கும் இந்த உரிமையும் பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பால் பறிபோய்விட்டது.

பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு ஒட்டுமொத்தமாக அரசியல் அமைப்பு சாசனத்திற்கு எதிராக, இந்த பால் புதுமையினருக்கு உரிமைகளே இல்லை என்பதாக இருக்கின்றது என்றால், சிறுபான்மை நீதிபதிகளின் தீர்ப்பானது, வரும்... ஆனா வராது... என்பது போல் உள்ளது. இது திருநங்கையர்களாக, திருநர்களாக இயல்பிலேயே இருக்கின்றவர்கள் சமூகத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதற்கு மாறாக, மேலும் அவர்கள் சிக்கல்களைச் சந்திக்கின்ற நிலையை உருவாக்கியுள்ளது.

புராணங்களில், இதிகாசங்களில் தன் பாலினத் திருணங்களை ஏற்றுக் கொள்ளும் இச் சமூகமும், மதவாதிகளும் நடைமுறை எதார்த்தத்தில் இந்த தன் பாலின இணையர்களை அங்கீகரிக்க மறுக்கின்றனர். திருநங்கையும் திருநம்பியும் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. அதாவது ஆணாக அறிப்பட்டவர்கள், பெண்ணாக அறியப்பட்டவரைத் திருமணம் செய்து கொள்ளலாம். மாற்றுப் பாலினத்தவரைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறது. ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை, தத்து எடுப்பதைத் தடுக்கிறது. தன் பாலினத்தவர் திருமணம் செய்து கொள்வது பற்றி அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் திருமணம் அடிப்படை உரிமையில்லை என்றும் கூறியிருப்பது, தன் பாலினத் திருமணத்தை மட்டுமின்றி, காதல் திருமணத்தை, கலப்புத் திருமணத்தைக் கூட எதிர்க்கும் மதவெறிச் சக்திகள் ஆட்சியில் இருக்கும் போது, அவர்கள் கையில் முடிவெடுக்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் விட்டுவிட்டுள்ளதானது காவிப் பாசிசத்தின் பிடிக்குள் உச்ச நீதிமன்றமும் சிக்கிக் கொண்டுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

பால் புதுமையினர் எல்ஜிபிடிக்யுஐ சமூகத்தினர் இயல்பானவர்கள், இயற்கையானவர்கள். அவர்கள் இயற்கைக்கு மாறானவர்கள் அல்ல. இயற்கைக்கு மாறானவர்கள் என்று மதவாதிகள் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இச்சமூகத்தினர் தங்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கு, திருமணம், தத்தெடுத்தல் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வென்றெ டுப்பதற்கு, அதற்குரிய சட்டத்தை உருவாக்குவதற்கு முற்போக்கு, ஜனநாயக சக்திகள் எப்போதும் துணை நிற்கும், நிற்க வேண்டும்.