"மக்கள் நலனே கட்சியின் நலன்” என்ற மாபெரும் புரட்சிகர மரபை வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டவர் தோழர் என் கே.நடராசன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)ன் தலைமறைவு புரட்சிகர ஊழியராக, கிராமப்புர ஆதிக்க நிலவுடமை சக்திகளுக்கு எதிரான அச்சமற்ற போராளியாக, பெருமுதலாளித்துவ தொழிலாளர் விரோத ஈவிரக்கமற்ற அடக்குமுறைக்கு சற்றும் அஞ்சாத தொழிலாளர் தலைவராக, புரட்சிகர சமூக மறுமலர்ச்சியின் உந்துவிசையான இக்க(மாலெ) வின் மாநிலச் செயலாளராக கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக,தளராத புரட்சிகர பயணத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் தோழர் என் கே. 

புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி, இகக(மாலெ ) காலூன்றிய திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த தோழர் என்கே, திண்டுக்கல் மாவட்ட கமிட்டிக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது, டிசம்பர் 10, 2022ல் நம்மை விட்டுப் பிரிந்தார். ஆர்எஸ்எஸ், பாஜக தலைமையிலான கார்ப்பரேட் காவிப்பாசிச கொடுங்கோன்மை கோலோச்சிய 2018ல் கட்சியின் மாநிலச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட என்கே, பாசிசத்திற்கெதிரான சளைக்காத களப் போராளியாக விளங்கினார். இடதுசாரி, ஜனநாயக சக்திகளை பாசிச எதிர்ப்பில் அணிதிரட்டி, தஞ்சை பாசிச எதிர்ப்பு மாநாட்டை பெருவெற்றி பெறச் செய்தார். பாசிசத்திற்கு எதிரான உருக்கு நிகர் கட்சியாக இகக (மாலெ)வை வலுப்படுத்தும் திசையில் கட்சியின் 11ஆவது மாநில மாநாட்டை திருச்சியில் வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். இரண்டாவது முறையாக செயலாளராக தேர்வு பெற்றார். 

பாசிச எதிர்ப்பில் இடதுசாரி ஒற்றுமையின் அவசியத்தை உயர்த்திப்பிடித்த என் கே,புரட்சிகர கம்யூனிஸ்ட் அரசியலை நோக்கி ஈர்க்கப்பட்ட இடது செயல்வீரர்களை அணிதிரட்டுவதிலும் ஊக்கமிக்க பங்கு வகித்தார். புரட்சிகர இயக்கத்தை சமூக மயமாக்குவதற்காக, பெண்கள், இளைஞர், மாணவர் சமூகத்தை புரட்சிகர அரசியலுக்கு ஈர்த்திட அரும்பாடுபட்டார் தோழர் என்கே. பகத்சிங், பெரியார், சிங்காரவேலர், அம்பேத்கர், வினோத் மிஸ்ரா உள்ளிட்ட முற்போக்கு, புரட்சிகர ஆளுமை களின் கொள்கைகளை புதிய தலைமுறை சக்திக ளிடம் கொண்டு சேர்ப்பதன் அவசியத்தை எப்போதும் வலியுறுத்தி வந்தார் தோழர் என் கே. 

தலித், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மீது தொடரும் வன்கொடுமைகள், ஏற்றத்தாழ்வு களுக்கு எதிராக ஆட்சியாளர்களை எதிர்த்து களமாடும் கட்சியாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை வழிநடத்துவதில் தீவிரக் கவனம் செலுத் தினார். 

ஏறத்தாழ அரைநூற்றாண்டு கால அவரது வாழ்வும் பணியும் நமக்கு விட்டுச் சென்றது; 'மக்கள் நலனும் கட்சியின் நலனுமே' புரட்சியாளர்களின் வாழ்க்கை லட்சியம் எனும் கொள்கை உறுதிப்பாடு. அந்த உறுதிப்பாட்டின் காரணமாகவே தோழர்கள் அப்பு, மச்சக்காளை, சந்திரசேகர், சந்திரகுமார், சுப்பு உள்ளிட்ட தியாகிகளின் கனவை நனவாக்கும் பயணத்தில் தனது இறுதி மூச்சு வரை இடைவிடாது களமாடினார். 

புதிய ஜனநாயக இந்தியா எனும் கனவை ஈடேற்ற, அதை நோக்கிய பயணத்தில், தடை அரணாக இருக்கும் பாசிசத்தை வேரறுக்க தோழர் என் கே பெயரால் உறுதி ஏற்போம்! 

இகக(மாலெ)வை மிகப்பெரிய புரட்சிகர மக்கள் கட்சியாக வளர்க்கும் தோழர் என் கே வின் கனவை ஈடேற்ற உறுதி ஏற்போம்!!