2023 டிசம்பர் 9, 10 தேதிகளில், சிபிஐஎம்எல் கட்சியின் கர்நாடக மாநில இரண்டாவது மாநாடு ரெய்ச்சூர் மாவட்டம் சிந்தனூரில் நடைபெற்றது. டிசம்பர் 9 காலை கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் கொடியேற்றி வைத்தார். செங்கொடிகள் நிறைந்த கண்கவர் பேரணி 4 கி.மீ. தூரம் எழுச்சிகரமாக நடைபெற்றது.

அதற்குப் பின்னர், டவுன் ஹால் அரங்கில் "பாசிசத்திற்கு எதிரான கர்நாடகம்" என்ற தலைப்பில் பொதுமாநாடு ரெய்ச்சூர் மாவட்ட செயலாளர் நாகராஜ் பூஜாரி தலைமையில் நடைபெற்றது. இக்க(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர், அரசியல் தலைமை குழு உறுப்பினர் தோழர் வீ.சங்கர், சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் தோழர் பசவராஜ், சிபிஐ கட்சி ரெய்ச்சூர் மாவட்டச் செயலாளர் தோழர் பாசுமியா, கர்நாடகா சிபிஐஎம்எல் மாநிலச் செயலாளர் தோழர் கிளிஃப்டன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக தேசியத் தலைவர் ரதிராவ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

டிசம்பர் 9 அன்று மதியம் முதல் டிசம்பர் 10 அன்று மாலை வரை நடைபெற்ற பிரதிநிதிகள் அமர்வில், சுமார் 135 பிரதிநிதிகள், பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். தலைமைத் தோழர்கள் கிளிப்டன், பிஆர்எஸ்.மணி, மைத்ரேயி ஆகியோர் வேலை அறிக்கைகள் மற்றும் வேலைத் திட்டத்தை முன்வைத் தனர். அதன்மீது பல்வேறு திருத்தங்கள், ஆலோசனை களை பிரதிநிதிகள் முன்வைத்தனர். அவற்றின் மீதான விளக்கத்துடன் அறிக்கைகள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டில் உரையாற்றிய இகக (மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் மற்றும் அரசியல் தலைமை குழு உறுப்பினர் தோழர் வீ.சங்கர், 'கர்நாடக அரசியல் சூழல் மற்றும் நமது கட்சியின் வளர்ச்சி மற்றும் சந்திக்கும் சவால்கள் பற்றி' விளக்கிப் பேசினார்கள். மாநாடு 23 உறுப்பினர்கள் கொண்ட புதிய மாநிலக் கமிட்டியை ஒருமனதாக தேர்ந்தெ டுத்தது. தோழர் கிளிப்டன் மீண்டும் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். நிறைவாக மத்திய கமிட்டி பார்வையாளர் தோழர் சந்திரமோகன் வாழ்த்துரை வழங்கினார். பிரதிநிதிகளின் எழுச்சிகர மான முழக்கங்களுடனும், சர்வதேசிய கீதத்துடனும் மாநாடு நிறைவுற்றது.

காவிப் பாசிசத்தை அரசியல் களத்தில் வீழ்த்திய கர்நாடகத்தில், மாநிலம் தழுவிய புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியாக சிபிஐஎம்எல் வெல்லட்டும்!