பில்கிஸ் பானோ வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புக்கு அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மகிழ்ச்சி தெரிவித்துக் கொள்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நீதிக்கு சாதகமானதும் பில்கிஸ் பானோவின் அயராத போராட்டத்தின் விளைவும் ஆகும். இந்த முடிவுக்குப் பிறகு, பாலியல் வல்லுறவாளர்களைப் பாதுகாப்பதை பாஜக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த 2002ம் ஆண்டு, குஜராத் படுகொலையின் போது, கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோ கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் அவரது கண் முன்னே படுகொலை செய்யப்பட்டதையும் நாம் அறிவோம். அவரது வழக்கில், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, 11 குற்றவாளிகளுக்கு மகாராஷ்டிர உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. ஆனால் இந்த கொடிய குற்றவாளிகள் குஜராத் அரசால் ஆகஸ்ட் 15, 2022 அன்று விடுவிக்கப்பட்டனர். இப்போது, உச்ச நீதிமன்றம் இறுதியாக இந்த குற்றவாளிகளை மீண்டும் சிறைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிரா நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், குற்றவாளிகளை விடுவிப்பது குறித்து முடிவெடுக்க குஜராத் அரசுக்கு உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு குஜராத் பாஜக அரசு மற்றும் ஒன்றிய மோடி அரசு மீதான இடித்துரையாகவும் கொள்ளப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசாங்கம் வாதாடியபோது இந்த முடிவு ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன்தான் எடுக்கப்பட்டதாக கூறியது.

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் உள்ளிட்ட பெண்கள் அமைப்புகள் இந்த பிரச்சினையில் தொடர்ந்து (பில்கிஸ் பானோவுக்கு நீதி கோரி) குரலெழுப்பி வந்தன.

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் பில்கிஸ் பானோவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது; அவரது போராட்ட உணர்வுக்கு வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. அதோடு உச்சநீதிமன்றத்தில் பில்கீஸ் தரப்பை மிக வலுவாக எடுத்து வைத்த இந்திரா ஜெய்சிங், பிரிந்தா குரோவர் உள்ளிட்ட பெண் வழக்கறிஞர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

9 ஜனவரி 2024,

ரதி ராவ்,

தேசிய தலைவர்

மீனா திவாரி,

தேசிய பொதுச்செயலாளர்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் (AIPWA)