பண்ணையடிமைகளின் அடிமைத்தளைகளை அறுத்தெறிய பச்சை வயல்வெளிகளுக்குள் விளைந்திட்ட செங்கொடிகளை நெஞ்சுரமிட்டு வளர்த்தெடுத்த தஞ்சை மண்ணில் பிப்ரவரி 1 அன்று காலை நுழையும் போதே சாலைகள் எங்கும் செங்கொடிகள் பறந்து 'வீழ்க பாசிசம் வெல்க இந்தியா' என்ற முழக்கத்துடன் நடக்கவிருக்கும் பாசிச எதிர்ப்புப் பேரணி, பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தன. தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப் பட்டிருந்த திடலில் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, சாருமஜூம்தார், வினோத்மிஸ்ரா, பகத்சிங், அம்பேத்கர், பெரியார் மற்றும் பொதுச் செயலாளர் திபங்கர் ஆகியோர் படங்கள் மேடையை அலங்கரித்தன. தோழர்கள் டி.பி.பக்ஷி, பி.வி. சீனிவாசன், அப்பு, பாலன், சுப்பு, சந்திரகுமார், சந்திரசேகர், டி.கே.எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட்ட தலைவர்கள், தியாகிகள் படங்களும் இந்தியா கூட்டணியில் இருந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் கட்சிகளின் மாநிலத் தலைவர்கள் படங்களும் வைக்கப்பட்டிருந்தன. பேரணி பொதுக் கூட்டத்திற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக் கணக்கான தோழர்கள் முதல் நாளில் இருந்தே தஞ்சைக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். பிப்ரவரி 1 அன்று மாலை அவர்கள் தங்கியிருந்த இடங்களில் இருந்து பேரணியாக பொதுக் கூட்டத்திடலுக்கு மாலை 4 மணிக்கு வந்தடைந்தார்கள்.

'வீழ்க பாசிசம், வெல்க இந்தியா' என்ற முழக்கத்துடன், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் பறையிசை நிகழ்ச்சியோடு ஆரம்பமானது. நிகழ்ச்சிக்கு இகக(மாலெ) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வீ.சங்கர் துவக்கி வைத்தார். இகக (மாலெ) தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் கண்ணையன் வரவேற்புரையாற்றினார்.

பொதுக்கூட்டத்தில் இகக(மாலெ) அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் சிறப்புரை யாற்றினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தோழர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன், திமுகவின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவர் இராஜேந்திரன், இகக(மாலெ) மத்தியக்குழு உறுப்பினர் சோ.பாலசுப்பிர மணியன், இகக (மாலெ) கர்நாடகா மாநிலக்குழு உறுப்பினர் தோழர் பிஆர்எஸ்.மணி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இகக(மாலெ) மத்தியக்குழு உறுப்பினர்கள் தோழர் பாலசுந்தரம், தோழர் சந்திரமோகன், நிலைக்குழு தோழர்கள் தேசிகன், சங்கரபாண்டியன், சிம்சன், இரணியப்பன், வளத்தான், அந்தோணிமுத்து, சுசீலா, கே.பாலசுப்பிர மணியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இகக (மாலெ ) நிலைக்குழு உறுப்பினரும் மாலெ தீப்பொறி ஆசிரியருமான தோழர் ஜி.ரமேஷ் தீர்மானங்களை முன்வைத்தார். இகக (மாலெ) தஞ்சை மாநகரச் செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

பொதுக் கூட்டத்தில், விசிக தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் பேசுகையில், 'வீழ்க பாசிசம் வெல்க இந்தியா' என்ற முழக்கத்துடன் சிபிஐஎம்எல் நடத்துகிற பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே நான் இரண்டு நாட்களாக நாடாளுமன்றம் செல்வதைக் கூட தவிர்த்துவிட்டு வந்து உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்காக, நாடாளு மன்றத்தில் பங்கேற்பதை விட அங்கே சென்று அவர்கள் மக்களை ஏய்க்கும் வரியைத் தாக்கல் செய்யும் உரையைக் கேட்பதைவிட, இந்த நாட்டைக் காப்பாற்றுவதற்கு, ஜனநாயகத்தைக் காப்பாற்று வதற்கு, இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் என்று உழைப்பதற்கு முன்வந்துள்ள சிபிஐஎம்எல் கட்சி மாநாட்டில் பங்கேற்பதுதான், மக்களைச் சந்திப்பது தான், மக்கள் முன் உரையாற்றுவதுதான் தேவை யானது முதன்மையானது என்ற அடிப்படையில் நான் உங்கள் முன்னால் வந்து நிற்கிறேன். இந்த நல்வாய்ப்பை எனக்களித்த சிபிஐஎம்எல் கட்சி மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி அவர்களுக்கும் மற்றும் சிபிஐஎம்எல் தலைவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், ஜனவரி 26 அன்று நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க வெல்லும் ஜனநாயக மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய சிபிஐஎம்எல் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் அவர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடக் கட்சிகளோடு மட்டுமல்ல, எப்போதும் இடதுசாரிக் கட்சிகளோடும் தொடர்ந்து இணைந்தே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடதுசாரி அரசியலை மையமாகக் கொண்டக் கட்சியாகும். கொள்கைப் பிடிப்புடன் செயல்படக் கூடியவர்கள் இடதுசாரிகள். சாதியக் கட்டமைப்புக்கு எதிராக களம் கண்டவர்கள் இடதுசாரிகள். சாணிப்பால் சவுக்கடியை எதிர்த்துப் போராடினார்கள், பண்ணை ஆதிக்கத்தை எதிர்த்து இரத்தம் சிந்தினார்கள். சீனிவாசராவ் உள்ளிட்ட தலைவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்களோடு நின்று அவர்களை ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட வைத்தவர்கள் இடதுசாரிகள். இடதுசாரிகளைக்கண்டு பிஜேபி அஞ்சுகிறது ஏனென்றால், அவர்கள் பிஜேபிக்கு கருத்தியல் ரீதியான எதிரிகள்.அதனால் தான், காங்கிரஸ் இல்லாத பாரதம் என்று சொல்லும் பிஜேபி இடதுசாரிகள் இல்லாத பாரதம் என்று சொல்கிறார்கள் என்று கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் தனது உரையில், இன்று இந்தியாவில் இடதுசாரி மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காக நாமமெல்லாம் இணைந்து போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம், அப்படியொரு இடதுசாரி மாற்றத்தை ஏற்படுத்துகிற மகத்தான பொறுப்பில் சிபிஐஎம்எல் கட்சியின் பொதுச் செயலாளர் திபங்கர் அவர்கள் மகத்தான் பணியை ஆற்றி வருகிறார்கள் என்பதை நாமெல்லாம் அறிவோம். இந்தியாவில் பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இந்தியா முழுவதும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிற தோழர் திபங்கர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, எல்லா மதத்தினரும் ஒன்று சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடினார்கள். அப்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக் களைத் திசை திருப்பும் வேலையை ஆர்எஸ்எஸ் செய்தார்கள். இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒட்டக்கூடாது என்பதற்காக, அவர்களின் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட மகாத்மா காந்தியைக் கொன்றவர்கள் ஆர்எஸ்எஸ்காரர்கள். ஒரு மதச் சார்பற்ற நாட்டின் பிரதமர், ஊர் ஊராக, கோயில் கோயிலாகச் சென்று வந்து ஒரு மதத்தை அடையாளப்படுத்தும் ராமர் கோயிலைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த ஒரு வார காலத்தில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்தப் போகிறோம் என்று அவர்கள் கூறுகிறார்கள். லட்சோபலட்சம் மக்களை நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சிக்கிறார்கள். இவர்கள் மின்னணு வாக்கு எந்திரத்தை வைத்துக் கொண்டும் தங்கள் கைக்குள் தேர்தல் கமிஷனையும் வைத்துக் கொண்டு தாங்கள் எதை வேண்டு மானாலும் செய்யலாம் எப்படியும் வென்றுவிடலாம் என்று நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கி றார்கள். 2024 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், அதன் பின்னர் தேர்தலே இருக்காது, ஒரு பாசிச ஆட்சிதான் இருக்கும், பேச்சுரிமை, எழுத்துரிமை, போராடும் உரிமை மறுக்கப்பட்டு எல்லாரும் அடிமைகளாக இருப்பர், இந்தியா என்கிற நாடு ஒரு சிறைக் கூடமாக மாறும், மாநில உரிமைகளைப்பறித்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு.பாசிசத்திற்கு எதிரான ஒரு மகத்தான் பணியை சிபிஐஎம்எல் கட்சி கையில் எடுத்திருக்கிறது, அதற்காக நான் பாராட்டுகிறேன் என்றார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன், பாசிசம் தோற்கடிக்கப் பட வேண்டும், இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் இந்தப் பொதுக்கூட்டத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவை பாசிசம் என்று சொல்வது வெறும் வார்த்தைகள் அல்ல. அது உலகத்தில் மக்களிடம் ஏற்படும் எந்தவொரு மாற்றத்தையும் விரும்பாதது, மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தினார் வி.பி.சிங் என்பதற்காகவே அவரின் ஆட்சியைக் கவிழ்த்த வர்கள். சங் பரிவாரங் கள் ஏமாற்றுப் பேர்வழிகள் என்று கூறினார்.

திமுகவின் தலைமைக் கழக செய்தித் தொடர்பாளரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான திரு.டி.கே.எஸ்.இளங்கோவன் தன்னுடைய உரையில், பாஜக ஆட்சியில் பெயர் மாற்றங்கள்தான் நடந்துள்ளன, ஆங்கிலேயர் காலத்து சட்டங்களை இந்தியில் பெயர் மாற்றம் செய்துள்ளார்கள். வேறு எந்த மாற்றமும் நடை பெறவில்லை. ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. பாசி சத்தை வீழ்த்துவதற்கு நாம் ஒன்று பட்டு நிற்போம் என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் பேசுகையில், பாசிசத்தை வீழ்த்துவதற்கு கருத்தாயுதம் தேவை, அந்தக் கருத்தாயுதத்தை கையில் எடுத்து ஜனநாயகத்தை நாம் காக்க வேண்டும், ஜனநாயகம் காக்கப்படுவதற்கு இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கூறினார்