'இளையோர் இந்தியா வாக்கெடுப்பு' அகில இந்திய மாணவர் கழகம் அமைப்பால், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த பிரச்சினைகள் மீது, நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங் களில் கடந்த பிப். 7 முதல் பிப். 9 தேதிகள் வரை நடத்தப்பட்ட கருத்து கணிப்பாகும். இந்த வாக்கெடுப்பு 2024 பொதுத் தேர்தலின் வெளிச்சத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கருத்துக்களை தெரிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டது.

மாணவர்கள் அளித்த பதில்கள், மோடி அரசை பெருமளவில் நிராகரித்தது மட்டுமல்லாமல், மோடியின் 10 ஆண்டுகால அழிவுகளுக்கு எதிரான குற்றப் பத்திரிகையாகவும் திகழ்ந்தது. "தரமான கல்வி மற்றும் கண்ணியமான வேலை வாய்ப்பை”, கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் உறுதி செய்ய அப்பட்டமாகத் தவறிய மோடி அரசை குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளனர்.

'மோடி அரசின் 10 ஆண்டுகள், இளையோர் இந்தியாவின் 10 கேள்விகள்'

டெல்லி பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம், வீர் குன்வர் சிங் பல்கலைக்கழகம் (அரா), பாட்னா பல்கலைக்கழகம், பிஎன் மண்டல் பல்கலைக்கழகம் (பீகார்), லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகம் (பீகார்), ஜாமியா மிலியா இஸ்லாமியா, அம்பேத்கர் பல்கலைக்கழகம் டெல்லி, எஸ்கே பல்கலைக்கழகம் மற்றும் டாக்டர். அப்துல் ஹக் உருது பல்கலைக்கழகம் (ஆந்திரப் பிரதேசம்), ஹைதராபாத் பல்கலைக்கழகம், பெங்களூரு பல்கலைக்கழகம், ஸ்ரீ கிருஷ்ணதேவராயா பல்கலைக் கழகம் (கர்நாடகா), பெரியார் பல்கலைக்கழகம், (தமிழ்நாடு), ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் (கொல்கத்தா), கல்கத்தா பல்கலைக்கழகம், ஐசிஎஃப்ஏஐ பல்கலைக்கழகம் (திரிபுரா), ஹேம்சந்த் யாதவ் பல்கலைக்கழகம் (சத்தீஸ்கர்), அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், மணிப்பால் பல்கலைக்கழகம், உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் இணைக்கப் பட்ட கல்லூரிகள் நாடு முழுவதும் உள்ள விடுதிகள் மற்றும் மாணவர் பகுதிகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பல்கலைக்கழகங்களில் கட்டண உயர்வுகள், கல்வி உதவித் தொகைகள் மற்றும் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்ற மோடியின் வாக்குறுதி போன்றவை  முக்கிய கேள்விகளாக இருந்தன.

தேசிய அளவில், சுமார் 1 லட்சம் மாணவர் களிடம் வாக்குகள் பெறப்பட்டன. 88.33% மாணவர்கள் வருடாந்திர கட்டண உயர்வுக்கு ஆதரவாக இல்லை என்றும், 86% மாணவர்கள் மத்திய அரசால் போதிய விடுதிகள் மற்றும் கல்வி உதவித் தொகைகள் வழங்க முடியவில்லை என்றும், ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற ஒன்றிய அரசு முற்றிலும் தவறிவிட்டது என 91% மாணவர்கள் தெரிவித்தனர்.

13,048 வாக்குகள் அளித்த டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று கேள்விகளுக்கு முறையே 92%, 88% மற்றும் 91% 'இல்லை' எனப் வாக்களித்தனர். ஆந்திராவில் 23,450 மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முறையே 84%, 79%, 93% பேர் 'இல்லை' என வாக்களித்துள்ளனர். பாஜக தலைமையிலான யோகி அரசு மற்றும் மோடி தலைமையிலான மத்திய அரசுகளின் மிகப்பெரிய தாக்குதலை எதிர்கொண்டுள்ள உத்திரபிரதேசத்தின் பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், 1711 மாணவர்கள் வாக்குச் சாவடிகளில் வாக்களித்தனர்; கட்டண உயர்வுக்கு எதிராக 91% மாணவர்களும், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை அல்லது விடுதிகளால் பயனடையவில்லை என்று 79% பேரும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க அரசுகள் தவறிவிட்டதாக 87% பேரும் கூறியுள்ளனர்.

வாக்கெடுப்பின் தொகுப்பாக, 'இளையோர் இந்தியா' வெளியிட்ட 10 அம்ச குற்றப் பத்திரிகை, மோடி ஆட்சி, 'பெரியளவு கட்டண உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தியது, மாணவர் விரோத CUET, FYUP தேர்வுகளை கொண்டு வந்தது, சிறுபான்மையினர் மீதும் அறிவியல் மனப்பான்மை மீதும் தாக்குதலை நடத்தி சமூக நீதியை சீர்குலைத்தது' என குற்றம் சுமத்தியது. 

'கல்வி, கண்ணியமான வேலை வாய்ப்பு என்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கை பெரிதாகக் கேட்கப்படவில்லை!' என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது! வெறுப்பு மற்றும் மதவாதத்தின் பிளவுபடுத்தும் கொள்கைகள், கல்வி மற்றும் வேலை வாய்ப்பின் மீதான கார்ப்பரேட் தாக்குதல்களால் "பொது நிதியுதவி பெறும் உயர்கல்வி நிறுவனங் களின் அரிப்பு, ஜனநாயக நிறுவனங்கள் மாற்றுக் குரல்கள் மீதான தாக்குதல், கல்வியை ஏழைகள் அணுக முடியாத நிலை மற்றும் கண்ணியமான வேலையின்மை ஆகியவை இனிமேலும் பொறுத்துக் கொள்ளப்படாது" என்ற செய்தியும் தெளிவாகி யுள்ளது.

பிப்ரவரி 28 அன்று “சலோ டெல்லி” இளையோர் இந்தியா பேரணி :

'இளையோர் இந்தியா' கூட்டமைப்பு அமைக்கும் முயற்சியில் இடதுசாரி மாணவர்கள், இளைஞர்கள் அமைப்புகள் ஆதரவு தந்துள்ளன; மென்மேலும் பல்வேறு முற்போக்கு, சனநாயக அமைப்புகளையும் இயக்கங்களையும் சேர்க்க அனைவரும் தீர்மானித்துள்ளனர்!

முற்போக்கு மாணவர் அமைப்புகள் மற்றும் மக்கள் இயக்கங்களின் மன்றமாக உருவெடுத்துள்ள "யங் இந்தியா”/ “இளையோர் இந்தியா" எதிர்வரும் பிப்ரவரி 28, 2024 அன்று, 2024 நிகழ்ச்சி நிரலை இளையோர் இந்தியா தீர்மானிக்கும்!” என்ற முழக்கத்துடன் ஒரு 'டெல்லி நோக்கி, யங் இந்தியா பேரணி' க்கு அழைப்பு விடுத்துள்ளது. இது, எதிர் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக ஆர்எஸ்எஸ்ஐ எதிர்த்துப் போராட டெல்லியில் அணிதிரள வேண்டுமென நாட்டின் மாணவர்கள், இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள போராட்ட அறைகூவலாகும்.

2024 ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான நிகழ்ச்சி நிரலை இளையோர் இந்தியா தீர்மானிக்கட்டும்!