முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற மாநில விழிப்புணர்வு, உயர்நிலை கண்காணிப்புக் குழுக்கூட்டங்களில் வந்த வேண்டுகோள்களை அடுத்து ஆதிதிராவிடர்/பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர், இந்து அறநிலையத்துறை, வனத்துறை பள்ளி, கல்லூரிகளை அரசின் கல்வித்துறையின் கீழ் கொண்டு வருவது என்றும் இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் பணி பாதுகாக்கப்படும் என்றும் 2023-24 நிதிநிலை அறிக்கையில் அப்போதைய நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.
இதை அடுத்து இந்த அறிவிப்பை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், கல்வியாளர்கள், ஆளுமைகள் கருத்து தெரிவித்தும் வருகின்றனர். கடந்த 19.05.2023 அன்று தமிழ்நாடு தழுவிய அளவில் ஆதிதிராவிடர்/பழங்குடி கல்வி பள்ளிகள், தங்கும் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் இந்த இணைப்பு முயற்சியை கைவிடக் கோரி கிளர்ச்சிகளை நடத்தியுள்ளனர்.
இந்து அறநிலையத்துறையை தவிர்த்து ஆதிதிராவிடர், பழங்குடி நலத்துறை யின் கீழ் சுமார் 2,000 பள்ளிகளும் விடுதிகளும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். அரசின் கண்காணிப்பு நாளடைவில் புறக்கணிக்கப்பட்டு சீர்குலைந்து போயுள்ளது. இதனால் இவற்றில் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் கல்வித் தரமும் கீழே சென்ற வண்ணமுள்ளன. அதிலும் சிறப்பு கவனிப்பு மிகவும் தேவைப்படுகிற கிராமப்புர மாணவர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பது தெரிய வருகிறது. இந்த நிலையில், இந்த கல்வி நிறுவனங்கள் பற்றிய எவ்வித ஆய்வுமின்றி 'வேண்டுகோள்கள் வந்துள்ளன' என்ற பேரில் அவசர அவசரமான அறிவிப்பு வியப்பளிக்கிறது. சமூக நீதி பற்றி இடைவிடாது பேசி வரும் அரசிடம் இதுபோன்ற காரண காரியமற்ற, அவசர அறிவிப்பை எவரும் எதிர்பார்க்கவில்லை.
எனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட்) தமிழ்நாடு அரசிடம் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.
1.ஆதிதிராவிடர்/பழங்குடி உள்ளிட்ட பிரத்தியேகமான பள்ளி/கல்லூரிகள், விடுதிகள் உள்ளிட்ட நிறுவனங்கள் அதன் நோக்கங்கள், இலக்குகளை எட்டிவிட்டனவா? நோக்கங்களை அடைய ஆட்சியாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள், நிதி, உள்கட்டமைப்புகள் போதுமானவை தானா? கண்காணிப்பு நடவடிக்கைகள் போதுமானவை தானா? என்ன காரணங்களுக்காக கல்வித்துறையின் கீழ் கொண்டுவர அரசு முயற்சிக்கின்றது? அதனால் ஏற்படப்போகும் விளை பயன்கள் யாவை? பொது நீரோட்டத்துடன் கலக்கும் பொது நோக்கம் கொண்டது என்று சொல்லப்படுமானால், வலுவான சிறப்பு முயற்சிகள் மூலம் 'தனித்த நீரோட்டத்தை' பொது நீரோட்டத்தில் கலக்கச் செய்யும் கோட்பாடு நிறைவடைந்து விட்டதா? பொது நீரோட்டத்தில் மலிந்திருக்கும் சாதிய பாகுபாடுகள், வன்முறைகள் களையப்பட எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள், என்ன? சமீபத்திய தேர்வுகளில் 50,000 க்கு மேற்பட்டவர்கள் தேர்வு எழுதச் செல்லவில்லை என்ற பின்னணியில் கல்வித் தரத்தை மேம்படுத்திட அரசிடம் உள்ள திட்டங்கள் என்ன? என்பன உள்ளிட்ட விசயங்களைக் கொண்ட "வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.
2. அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் சங்கங்கள் இவற்றைக்கூட்டி ஜனநாயக ரீதியிலான கலந்தாலோசனை நடத்தப்பட வேண்டும்.
3. இதில் பெறப்படும் கருத்துகள், பரிந்துரைகள் அடிப்படையில் சிறப்பு பள்ளிகளை தொடர்வதா? கல்வித்துறையுடன் இணைப்பதா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.
4. அதுவரை, இந்த சிறப்பு பிரிவுகளை கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டுமென இகக(மாலெ) வலியுறுத்துகிறது.