2014ல் இருந்தே பாஜகவின் தேர்தல் பேரணிகளில் 'இரட்டை எஞ்சின் அரசாங்கம்' என்ற கூற்றை அடிக்கடி கேட்கிறோம். இந்தக் கூற்று, பாஜக மத்திய ஆட்சி அதிகாரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் மாநிலங்களிலும் தனக்கே வாக்களிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப் பயன்படுத்தப்படும் மோடிஷா ஆகியோரின் மிகவும் விரும்பத்தக்க உருவகமாகும். தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி ஆனந்த நாகேஸ்வரன் இப்போது பொருளாதாரத்தை விவரிக்க விமான போக்குவரத்தின் சொல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தியப் பொருளாதாரம் இப்போது (ஆட்டோபைலட் மோட்') 'தானியங்கு செயல்முறை'யில் உள்ளது என்றும் 2030 வரை 6.57% என்ற அளவில் சீராக அதிகரிக்கும் என்றும் அவர் கூறுகிறார். மோடி அரசாங்கத்தின் ஒன்பது ஆண்டுகளில், நீண்டகால பொருளாதார தேக்கநிலையையும் வீழ்ச்சியையும் நாம் கண்டிருக்கிறோம். பணமதிப்பிழப்பு, சரக்கு சேவை வரி, பொது முடக்கம் ஆகிய முப்பெரும் தாக்குதல்களும் தனியார்மயமாக்கல், ஆட்குறைப்பு, தொழிலாளர்களை தற்காலிகப் பணியாளர்களாக மாற்றுதல் ஆகிய கொள்கைகளும் வேலையின்மையையும் விலைவாசி உயர்வையும் வரலாறு காணாத அளவிற்கு கொண்டு சென்றுள்ளன. ஆனால் இப்போது முக்கியமான மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, தானியங்கு செயல்முறையில் பொருளாதாரம் பாதுகாப்பாக முன்னேறிச் செல்கிறது; அரசாங்கம் எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நமக்குச் சொல்லப்படுகிறது.
தன்னைத் தானே பாராட்டிக் கொள்ளும் இந்தப் பரப்புரைகள் பொதுவாக இரண்டு ஆதாரங்களின் அடிப்படையைக் கொண்டுள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ஒரு மிதமான வளர்ச்சியும் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலில் அதிகரிப்பும் என்ற தற்காலிக புள்ளிவிவரங்கள் தான் அவையாகும். இந்தப் புள்ளிவிவரங்கள் இன்னும் தற்காலிகமான வையே. ஆனால் அரசாங்கமும் அதனை உற்சாகப்படுத்தும் ஊடகங்களும் ஏற்கனவே மேளம் கொட்டத் தொடங்கி விட்டன. நாம் நினைவில் கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், இப்போது கூறப்படும் 6.57% வளர்ச்சியானது, பெருந்தொற்று காலத்தின் போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட மாபெரும் வீழ்ச்சியை தொடர்ந்து வருகிறது. அதாவது பெருந்தொற்று காலத்தின் சரிவில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது என்றே இதற்குப் பொருளாகும். இரண்டாவதாக, தற்போதைய வளர்ச்சி இன்னும் நிலையற்ற தாகவும் மிகவும் சீரற்றதாகவும் உள்ளது. துறைகளின் அடிப்படையில் பார்த்தால், இந்த வளர்ச்சியானது சேவை, கட்டுமானம், சுற்றுலா ஆகிய மூன்று துறைகளில் மட்டுமே குவிந் துள்ளது. வருமானத்தின் அடிப்படையில் பார்த்தால், மேலேயுள்ள அதிக வருமானம் பெறும் 20 சதவீதத்தினரே இந்த வளர்ச்சியை உந்தித் தள்ளுகின்றனர். அதே நேரத்தில் கீழேயுள்ள குறைவான வருமானம் பெறும் 80% மக்கள் மேலும் மேலும் வறுமையில் மூழ்கி வருகின்றனர். இந்த ஏற்றத்தாழ்வான பொருளா தார மீட்சி ஆங்கில மொழியிலுள்ள கே என்ற எழுத்தின் வடிவத்தை ஒத்திருக்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப் பட்ட 'பெரும் பணக்காரர்களின் வாழ்வு' (ஒருவேளை பெரும் பணக்காரர்களின் திருவிழா எனப் பெயரிடப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்) எனத் தலைப்பிடப் பட்ட ஆக்ஸ்பாம் அறிக்கை, இந்த ஏற்றத்தாழ்வான வளர்ச்சியின் அதிர்ச்சியூட்டும் காட்சியை நமக்குக் காட்டியது. பில்லியனர்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு 102 ஆக இருந்தது; 2022ல் 166 ஆக சட்டென்று அதிகரித்தது. இந்தியாவில் 2012க்கும் 2021க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட செல்வத்தில் நாற்பது சதவீதம், மக்கள்தொகையில் ஒரு சதவீதம் மட்டுமே உள்ளவர்களுக்கு சென்று சேர்ந்தது. வெறும் மூன்று சதவீத அளவு செல்வம் மட்டுமே கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினருக்குச் சென்றது. தனியார் நுகர்வு, குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள், சேவைகளை பரந்த மக்கள் நுகர்வது, வருமானத்தின் வீழ்ச்சி, வாங்கும் சக்தியில் ஏற்பட்ட அரிப்பு ஆகிய வற்றின் காரணமாக அதிகரிக்கத் தவறிவிட்டது. இரு சக்கர வாகனங்கள், குறைந்த விலை பயணிகள் கார்களின் விற்பனை குறைந்துள்ள, அதே நேரத்தில், விலையுயர்ந்த கார்கள், ஆடம்பர நுகர்வுப் பொருட்கள் அதிகமாக விற்பனையாகின்றன.
பெரும் செல்வந்தர்களுக்கு ஆதரவான வரிவிதிப்புகளாலும் வங்கிச் செயல்பாடுகளாலும் இந்த அதீத ஏற்றத்தாழ்வான செல்வ விநியோக முறை மறுஉறுதி செய்யப்படுகிறது. இந்தியாவில் செல்வம் அல்லது பரம்பரை சொத்துக்கான வரி இல்லை. அதே நேரத்தில் நடப்பிலுள்ள கார்ப்பரேட் வரி விகிதம் குறைந்து வருகிறது. பெருமளவிற்கு வங்கிச் செயல்பாடுகள் பெரும்பணக்காரர்களின் நலன்களுக்கு ஏற்ற தாகவே உள்ளது. கோடிகளில் வாங்கிய கடனை திரும்பக் கட்டாமல் இருப்பது, கடன் தள்ளுபடிகள், திவாலான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதி ஆதரவு என அனைத்தும் பெரும் பணக்காரர்களின் கைகளில் செல்வம் பெருகுவதற்கான ஒரு கருவியாக வங்கிச் செயல்பாடுகளை மாற்றியுள்ளது. அதானி குழுமத்தின் எழுச்சியும் நெருக்கடியும், தனியார் பெரு நிறுவனங்களின் ஆதாயங்களுக்காக பொதுமக்களின் பணம் தவறாகப் பயன்படுத்தப் படுவதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அதானி குழுமத்தின் துரிதமான, பிரமிக்கத்தக்க எழுச்சியானது அடிப்படையில் இந்தியாவின் உள்கட்டமைப்பை மக்கள் கைகளில் இருந்து அதானியின் கட்டுப்பாட்டிற்கு மாற்றியதைக் குறிக்கிறது. தற்போது, ஹிண்டன்பர்க் அறிக்கை அதானி குழுமத்தின் பிரமிக்கத்தக்க வீழ்ச்சியைத் தூண்டிவிட்ட பிறகு, அதானி சாம்ராஜ்யத்தைக் காப்பாற்ற ஆயுள் காப்பீட்டு கழகம், இந்திய அரசு வங்கி போன்ற பொதுத்துறை நிதி நிறுவனங்கள் தியாகம் செய்யப்பட்டதை மீண்டும் ஒருமுறை நாம் பார்க்கிறோம்.
இந்தியா பெரும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வேளையில், மோடி அரசாங்கம் மோசமான பொருளாதார நெருக்கடி என்ற யதார்த்தத்தை மறுப்பது மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் வகுப்புவாத துருவச் சேர்க்கையை கூர்மைப்படுத்துவதன் மூலமும் சிறுபான்மையினரை பலிகடா ஆக்குவதன் மூலமும் அதை மறைக்க முயல்கிறது. இந்துராஷ்டிரா குறித்த பரப்புரையைத் தொடங்கி வைக்க ஒரு அதிசய பாபா பீகாருக்கு அழைத்து வரப்பட்டார். மகாராஷ்டிராவில், திப்பு சுல்தான், அவுரங்கசீப் போன்ற வரலாற்று நாயகர்களை இழிவுபடுத்துவதன் மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை ஒளரங்கசீப்பின் மறுபிறவி எனக் குறிப்பிட்டு களங்கம் ஏற்படுத்த முயல்கிறார்கள். உத்தரகாண்டில் ஜோஷிமத் பிரச்சினை, அரசு வேலைக்கான தேர்வில் மோசடி, இளம் பெண் அங்கிதா பண்டாரியின் கொலை ஆகியவற்றால் வெகுமக்களின் கோபத்தை பாஜக அரசாங்கம் எதிர்கொள்ளும் வேளையில், 'லவ் ஜிஹாத்', 'லேண்ட் ஜிஹாத்' (காதல் விடுதலை, நில விடுதலை)எனப் பயமுறுத்தி, இந்த 'ஜிஹாதி'களிடமிருந்து 'தேவ பூமி'யைக் காப்பாற்ற அழைப்பு விடுப்பதன் மூலம், முஸ்லிம்களின் கடைகளை மூடுவதற்கும் முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கும் வன்முறை மிகுந்த இயக்கத்தை தொடங்குவதன் மூலம், சங்கப் படையினர் முழு அளவிலான இன அழிப்புக்கு வழிவகை செய்கிறார்கள். மத நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் சீரழிப்பதன் மூலம், இந்த நச்சு அரசியல் இந்தியாவின் பொருளாதார நெருக்கடியை ஆழமாக்கி, ஒரு அரசமைப்புச் சட்டக் குடியரசு என்ற அளவில், இந்தியாவின் தேசிய ஒற்றுமைக்கும் நிலைத்தன்மைக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. இப்படியான செயல் திட்டத்தை மே மாதம் நடைபெற்ற தேர்தலில் கர்நாடகா தோற்கடித்தது. இந்தப் பாசிச நிகழ்ச்சி நிரலை முறியடிக்க முழு இந்தியாவும் நிச்சயமாக இப்போது தயாராக வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)