'எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை, எனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்திட வேண்டும், எனது தந்தை குடிப்பழக்கத்தை எப்போது நிறுத்துகிறாரோ அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும்' என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு வேலூரைச் சேர்ந்த 16 வயது கொண்ட விஷ்ணுப்பிரியா சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கள்ளச் சாராயத்தால் பலர் இறந்தபோது அரசே விற்கும் சாராயத்தால் குடும்பம் சீரழிந்து குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகி, அவர்களே சாவைத் தேடிக் கொள்ளும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. கள்ளச் சாராயத்தால் இறந்த வர்கள் குடும்பத்தினருக்கு ரூபாய் பத்து லட்சம் கொடுத்துவிட்டு, ஸ்பிரிட் விற்ற பொறியாளரைக் கைது செய்த தமிழ்நாடு அரசு விஷ்ணுப் பிரியாவின் மரணத்திற்கு என்ன காரணம் சொல்லப் போகிறது?
அரசாங்கம் டாஸ்மாக் மூலமாக மது விற்கவில்லை என்றால் கள்ளச் சாராயம் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் என்று சாராய விற்பனைக்குக் காரணம் சொன்னார்கள். ஆனால், டாஸ்மாக் மதுவையையும் கூட வாங்கி கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்கிறார்கள் என்று வழக்குப் போடுகிறார்கள். டாஸ்மாக் ஊழியர்களை அதிக விலைக்கு விற்கச் சொல்லிவிட்டு பின்னர் அவர்கள் மீதே வழக்கு போடுவதும் நடந்து கொண்டிருக்கின்றது என்று சொல்கிறார்கள்.
இதுபோன்ற வழக்கு ஒன்று தென்காசி மாவட்டம் புளியங்குடி, நடு கருப்பழகுத் தெருவைச் சேர்ந்த 26 வயது இளைஞர், கட்டிடத் தொழிலாளி, பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த தங்கசாமி மீது போடப்பட்டு அவரைச் திருநெல்வேலி பாளையங்கோட்டைச் சிறையில் அடைத்து அவர் சிறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். அவரைக் கைது செய்த விவரமோ சிறையிலடைத்த விவரமோ குடும்பத்தாருக்குத் தெரியாது. சிறையில் இறந்து போய்விட்டார் என்ற செய்தி வந்த பின்னர்தான் தங்கசாமியின் அம்மாவிற்கும் தம்பிக்கும் தெரியவந்துள்ளது. தங்கசாமியின் தந்தை மாடசாமி ஏற்கனவே இறந்து போய்விட்டார். தங்கசாமியின் தம்பி ஈஸ்வரனும் கூலி வேலைதான் செய்து வருகிறார். தங்கசாமி மீது கடந்த 11.6.2023 அன்று டாஸ்மாக் மதுவை வாங்கி அதிக விலைக்கு கள்ளத்தனமாக விற்றார் என்றும் அவரைப் பிடித்த போலீஸாரிடம் அவரும் இன்னொரு பெண்ணும் தகாராறு செய்து அசிங்கமாகப் பேசி, போலீஸாரைக் கொன்று போடுவோம் என்றும் மிரட்டியதாக புளியங்குடி காவல் நிலையத்தில் குற்ற எண் 211/2023ல் வழக்கு போடப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி அவரைக் கைது செய்தது பற்றி குடும்பத்தாருக்கு தெரிவிக்க வில்லை. அவர்களோ தேடிப் பார்த்து விட்டு வெளியூருக்கு சென்ட்டிரிங் வேலைக்குச் சென்றிருக்கலாம் என்று இருந்துள்ளார்கள். 14ம் தேதி மாலை ஊர் நாட்டாமையிடம் தங்கசாமியைப் பற்றிய விவரத்தைக் கேட்டுவிட்டு அவர் இறந்து போய்விட்டார் என்று சொல்லி யிருக்கிறார்கள். இதைக் கேட்டு புளியங்குடியில் ஊர் மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளார்கள். விசாரித்தபோது, தங்கசாமி தன் நண்பனின் ஊரில் இருசக்கர வாகனத்தை போலீஸ் ஸ்டேசனில் பிடித்து வைத்துள்ளார்கள் என்று அதை வாங்கி வருகிறேன் என்று சொல்லிச் சென்றார் என்றும் அதன் பின்னர் வரவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. நண்பன் வாகனத்தைக் கேட்கச் சென்றவர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளார்கள்.
15.6.2023 அன்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிண வறைக்கு வந்து பார்த்தபோது தங்கசாமியின் உடம்பில் காயங்கள் காணப்பட்டுள்ளன. அதை உறவினர்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார்கள். அவர்களின் செல்போனைப் பிடிங்கி, காவல்துறை அதிகாரி சதீஸ்குமார் அதை அழித்துவிட்டுள்ளார். திருநெல்வேலி நீதித்துறை நடுவர் முன்பு உடற்கூராய்வு நடத்தப்பட்டுள்ளது. எப்படியாவது குடும்பத்தினரிடம் பேசி தங்கசாமியின் உடலை பெற்றுக் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டது காவல்துறை. முதலில் இறப்புக்குக் காரணம் காக்கா வலிப்பு என்றனர். பின்னர் மாரடைப்பு என்றனர். கொந்தளிக்கும் குடும்பத்தினரையும் ஊர் மக்களையும் காவல் துறைக்கு கைப் பொம்மை யாகச் செயல்படுபவர்களைக் கொண்டு சமாதா னப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த விவரம் அறிந்தவுடன் இகக(மாலெ) மாநில நிலைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜி.ரமேஷ், மாவட்டச் செயலாளர் எம்.சுந்தர்ராஜ், இகக(மா) மாவட்டக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் கு.பழனி, மனித உரிமை அமைப் பின் வழக்கறிஞர் மாடசாமி ஆகியோர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் உடற்கூராய்வு பிரிவுக்குச் சென்று உறவினர்கள் மற்றும் ஊர்காரர்களைச் சந்தித்துப் பேசினார்கள். மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு (W.M.P.Nos.12224 and 12225 of 2020 amended order dated 28.2.2023) படி உடல் கூராய்வு அறிக்கை மற்றும் வீடியோ பதிவுகள் குடும்பத்தாருக்கு கொடுக்கப்பட்டு அதனை ஆய்வு செய்தபின்னர் தேவை ஏற்படின் மறு உடற் கூராய்வு கோரலாம் என்றும் அதுவரை உடல் பாதுகாப்பாக வைத்திருக்கப்பட வேண்டும் என்றும் எடுத்துக் கூறி, அதனைத் தொடர்ந்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு மார்க்சிஸ்ட் அலுவலகத்தின் நடத்தப்பட்டது.
15.6.2023 மாலை நடைபெற்ற பத்திரிகை யாளர் சந்திப்பில், வழக்கறிஞர்கள் ஜி.ரமேஷ், கு.பழனி, மாடசாமி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கர், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டச் செயலாளர் எம்.சுந்தர்ராஜ், விசிக செய்தித் தொடர்பாளர் முத்துவளவன், தமிழர் உரிமை மீட்புக்களம் அமைப்பாளர் லெனின், திராவிட தமிழர் கட்சி பொதுச் செயலாளர் கதிரவன், இறந்து போன தங்கசாமியின் சகோதரர் ஈஸ்வரன், ஊர் நாட்டாமை அமுதசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மறுநாள் 16.6.2023 அன்று காலை நீதித்துறை நடுவர் அவர்களிடம் உடற்கூராய்வு அறிக்கை மற்றும் வீடியோ பதிவுகள் தரக்கோரியும் உறவினர்கள் எடுத்த வீடியோ அழித்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மனு கொடுக்கப்பட்டது. உடற்கூராய்வு அறிக்கை மற்றும் வீடியோ உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவமனையில் கேட்டபோது, உடற்கூராய்வு அறிக்கை மட்டுமே கொடுத்தார்கள். வீடியோ பதிவை நீதித்துறை நடுவர் கேட்டதாகச் சொல்லி காவல்துறை வாங்கிச் சென்றுள்ளது. ஆனால் அந்த வீடியோ பதிவு நீதித்துறை நடுவர் அவர்களுக்கு 17.3.2023 வரை வந்து சேரவில்லை என்று கூறினார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தி னருக்கு அந்த வீடியோ பதிவு உடன் கிடைக்க விடாமல் செய்து வருகிறது காவல்துறை.
இந்த நிலையில் வீடியோ கிடைக்கப் பெற்று நிபுணர்கள் கொண்டு ஆய்வு செய்தபின்புதான் தங்கசாமியின் உடலைப் பெறமுடியும். அதுவரை தங்கசாமியின் உடலைப் பாதுகாக்க வேண்டும். மேலும் உடற்கூராய்வு அறிக்கை, தங்கசாமியின் உடலில் காணப்படும் 7 காயங்கள் அவர் இறப்பதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன் ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறது. அப்படி யென்றால், அக்காயங்கள் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருந்த காலத்தில்தான் ஏற்பட்டுள்ளது. எனவே புளியங்குடி காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீதும் பாளை சிறை அதிகாரிகள் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்திட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்குப் பின்னர்தான் தங்கசாமியின் உடலைப் பெறமுடியும். 17.3.2023 அன்று மாலை 5 மணிக்கு நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சிகள் சார்பாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநில நிலைக்குழு உறுப்பினர் ஜி.ரமேஷ் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் மேற்படி கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. தவறும்பட்சத்தில் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகள் குறித்து பேசி முடிவெடுக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங் களில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதும் படுகொலை செய்யப் படுவதும் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. திருநெல் வேலி மாவட்டம் முக்கூடலில் கோழிக்கடை நடத்தி வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆறுமுகம் ஆதிக்க சாதியினரால் வெட்டிக் கொல்லப் பட்டார். செங்கோட்டையில் பஞ்சாயத்து அலுவலகத்தில் மேற்பார்வை யாளராகப் பணிபுரிந்த தலித் சமூகத்தைச் சார்ந்த 27 வயது ராஜேஷ் அலுவலக வளாகத்தில் பட்டப்பகலில் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் களால் வெட்டிக் கொல்லப்பட்டார். அம்பாச முத்திரம் ஏஎஸ்பி பல்வீங் சிங் மற்றும் காவல் அதிகாரிகள் மீது வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டும் அவர்கள் யாரும் கைது இன்னும் கைது செய்யப்படவில்லை. இப்போது புளியங்குடி தங்கசாமியின் காவல் கொட்டடி மரணம். தங்கசாமியை மது விற்றவர் பிரச்சனையை திசை திருப்புகிறார்கள். யாரையும் அடித்துக் கொல்ல காவல்துறையினருக்கு என்ன உரிமை இருக்கிறது?
சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அடுத்த மேல்பாதி கிராமத்தில் தர்ம ராஜா திரவுபதி அம்மன் கோயிலுக்குள் தலித் இளைஞர்கள் கூட்ட நெரிசலில் தவறுதலாகச் சென்றதற்காக, அவர்களைத் தாக்கியுள்ளனர் ஆதிக்க சாதியினர். தொடர் பிரச்சினையால் அக்கோயிலுக்கு அறநிலையத்துறை பூட்டு போட்டுள்ளது. பட்டியலின மக்களை ஏன் கோயிலுக்குள் விட மறுக்கிறீர்கள் என்று கேள்வி கேட்காத பாஜக சங்கிகள், கோயிலுக்குப் பூட்டு போட்டதற்குக் குதித்துக்கிறார்கள். கோயில் நுழைவுப் போராட்டங்களை 50 ஆண்டுகளுக்கு முன்பே நடத்திய தமிழ் நாட்டிலும் தலித் மக்கள் கோயிலுக்குள் நுழையத் தடை, சாதியாதிக்க வெறிப் படுகொலைகள், காவல் கொட்டடி மரணங்கள், காவல் நிலையச் சித்தரவதைகளும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. 13.6.2023 இரவு, தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில், பெட்ரோல் இல்லாமல் தன் இரு சக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டுவந்த விஜய் என்ற கட்டுமானத் தொழிலாளியை, காரணமின்றி கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் காவல் துறையினர். அதை வெளியில் சொன்னால் கஞ்சா வழக்குப் போடுவோம் என்று மிரட்டியுள்ளார்கள். காவல் துறையினருக்கு மனித உயிர்கள் மிகவும் மலிவாகப் போய் விட்டது. பொய் வழக்குப் போடுவது, கொடூரமாகச் சித்தரவதை செய்வது எல்லாம் அன்றாட நிகழ்வுகளாகிக் கொண்டிருக்கின்றன. சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்போல்தான் புளிங்குடி தங்கசாமியின் மரணமும். அவர் உடம்பில் ஏற்பட்ட காயத்திற்குக் காரணம் சொல்ல மறுத்து திசை திருப்புகிறது அரசு நிர்வாகமும் காவல் துறையும். 'ஜெய்பீம்' திரைப்படம் பார்த்து விட்டு தனக்கு தூக்கம் வரவில்லை என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், நிஜத்தில் அன்றாடம் நடக்கும் காவல் கொட்டடி மரணங்கள் தடுக்கப்படவில்லை என்பது மட்டுமின்றி, குற்றவாளிகளான காவல் துறையினர் காப்பாற்றப்படுகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் விசயம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)