“அயம் சாரி அய்யப்பா” என்ற பாடல் பாடி அய்யப்பனையும், அய்யப்ப பக்தர்களையும் இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி பாடகர் கானா இசைவாணி, நீலம் பண்பாட்டு மையம் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் 'அனைத்து அய்யப்ப பக்தர்கள்' சங்கத்தினர் புகாரளித்தனர்.

கேரளாவில் இருக்கும் சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்த வழக்கை கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அதில் பாலின பாகுபாட்டை முன்வைத்து பெண்களுக்கு உரிமை மறுக்கப்படக்கூடாது என்று தீர்ப்பளித்தது. அந்த நேரத்தில் தான் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பில் "த கேஸ்ட்லெஸ் கலக்டிவ்" (சாதியற்ற கூட்டு) என்கிற இசைக்குழுவால் “அயம் சாரி அய்யப்பா” என்கிற பாடல் உருவாகி, பாடப்பட்டு வந்தது. அது, பெண்கள் கோயிலுக்குள் நுழையும் உரிமை உள்ளிட்ட பெண்களின் பல்வேறு உரிமைகளைக் கோரும் பாடல். அந்த உண்மையை மறைத்து, மொத்தப் பாடலும் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிரானதாக பொய்யான செய்தியை சங்கிகள் பரப்பி வருகின்றனர்.

என்ன உடை அணிய வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், திருமணம் செய்து கொள்ள வேண்டுமா, வேண்டாமா? இது அனைத்துமே பெண்களின் தனிப்பட்ட உரிமை, சுதந்திரம். யாரும் எதையும் பெண்கள் மீது திணிக்கக் கூடாது. நாகரிக மனித சமூகத்தின் இந்தக் கருத்துகளை நெற்றிப் பொட்டில் அடிப்பது போல பாடுகிறார் இசைவாணி. அடிப்படையில் சங்கிப் படையினருக்கு பெண்களின் சுதந்திரம் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து. 'தாடிக்காரன் பேத்தி' அய்யப்பன் கோயிலுக்கு ஏன் வரவேண்டும் எனக் கேட்கிறார்கள். அந்த தாடிக்காரனே 'வைக்கம் வீரர்' எனப் பெயர் பெற்றவர் தான். நம்பிக்கை வேறு, உரிமை வேறு. கம்யூனிஸ்டுகள் கோயில் நுழைவு போராட்டங்களை முன்னெடுப்பதும் இந்த அடிப்படையில் தான்.

நியாயம் கேட்கும் தருணங்களில் தாங்கள் நம்பும் கடவுளை ஒருமையில் அழைக்கும் வழக்கம் ஆத்திகர்களிடம் உள்ளது. அய்யப்பனிடம் அதேபோன்ற நியாயம் கேட்பு தான் இசைவாணி பாடியுள்ள பாடலின் தொடக்க வரிகளாகும். அதனை ஆத்திகர் கேட்டாலென்ன? ஆத்திகர் சார்பில் நாத்திகர் கேட்டாலென்ன? அதற்கு அய்யப்பன் தானே பதில் சொல்ல வேண்டும். இவர்கள் ஏன் குதிக்கிறார்கள்?  இசைவாணியை இழிவாக சித்தரிப்பதும் அச்சுறுத்துவதும் பெண்களுக்கு எதிரான சங்கிக் கும்பல்களின் கருத்தியல் வெளிப்பாடே. மேலும் இது பெண்ணுரிமை, சமத்துவம், தமிழ்நாட்டின் நீண்டகால பகுத்தறிவு மரபு, அறிவியல் சிந்தனை, பன்மைத்துவ பண்பாடு மீதான தாக்குதலாகும்.

கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற திரைப்படங்களில் பொய் பரப்புரைகள் மூலம் உண்மைகளை திரிப்பதில் வல்லவர்கள் சங்கிக் கும்பல்கள். தற்போது கோத்ரா ரயில் விபத்து தொடர்பான த சபர்மதி ரிப்போர்ட் என்ற திரைப்படத்தின் மூலம் மற்றுமொரு பொய் பரப்புரையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அதனை இந்த நாட்டின் பிரதமர் மற்ற தேஜகூ எம்பிக்களுடன் நாடாளுமன்ற வளாகத் திரையிடலில் கண்டு களிக்கிறார். உண்மை வெளிவந்து விட்டது என தனது எக்ஸ் தளத்தில் பதிவிடுகிறார். நா கூசாமல் பொய்களை கட்டவிழ்த்து விடும் சங்கிக் கும்பல்கள், அதிகாரத்தை நோக்கி உண்மையை உரக்கப் பேசுபவர்களை அச்சுறுத்துவதையும் தண்டிப்பதையும் செயல்திட்டமாகக் கொண்டுள்ளனர்.

அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி, பாடப்பட்டு வரும் பாடலை தற்போது 2024 இல் அய்யப்ப பக்தர்கள் அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டு செல்கின்ற பருவத்தில் சர்ச்சையாக்கியுள்ளனர் சங்கிக் கும்பல்கள். இசைவாணி கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்றும், ஏசுவின் புகழ்பாடும் பாடல்களை பாடுபவர், அய்யப்பனை இகழ்ந்து பாடியுள்ளார் என்றும் மதவெறியை தூண்டிவிடுகின்றனர். தமிழ் சமூகத்தை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதன் மூலம் அரசியல் ரீதியாக அறுவடை செய்யத் திட்டம் போடுகிறார்கள்.

தமிழ் சமூகத்தை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் சங்கிக் கும்பல்களின் நீண்டகால திட்டம் எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவலை சர்ச்சையாக்கியதில் பெரிய அளவில் காணமுடிந்தது. கந்தர் சஷ்டி கவசம் குறித்த கருப்பர் கூட்டம் யூ ட்யூபர்கள் மீது வழக்குப் பதிவு, நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படத்தை சர்ச்சையாக்கி அவரை மன்னிப்பு கடிதம் வெளியிட நெருக்கடிக்குள்ளாக்கியது, கர்னாடக இசைப் பாடகர் டிஎம் கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி பட்டம் வழங்க எதிர்ப்பு, பாஜகவின் வேல் யாத்திரை, உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிரான கூச்சல்கள், தற்போது இசைவாணிக்கு எதிரான அச்சுறுத்தல் என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மக்களின் அடிப்படை தேவைகள் பற்றிய பற்றியெரியும் பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

திமுக அரசின் அறநிலையத்துறை, பழனியில் நடத்திய முருகன் மாநாடு போன்ற நிகழ்ச்சிகள் வலதுசாரி சக்திகளுக்கு துணிச்சல் தந்துள்ளன. “தாடிக்காரன் பேத்திக்கு” ஆதரவாக திமுகவினர் பேசாதது ஆச்சரியமளிக்கிறது. தமிழகத்தை ஆளும் 'பெரியாரின் வாரிசுகள்', பெரியாரின் கருத்துகளை செயலூக்கமிக்க விதத்தில் பரப்புரை செய்ய வேண்டும். வைக்கம் போராட்டத்தின் நூறாவது ஆண்டு கொண்டாட்டத்தை இடதுசாரி அரசுடன் சேர்ந்து வெகுசிறப்பாக கொண்டாடிய திமுக அரசிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும். அதேசமயம் தமிழ்நாட்டில், வலதுசாரிக் கருத்துகளின் அடாவடிக்கு எதிராக இடதுசாரிகளும் பெரியாரிய, அம்பேத்கரிய முற்போக்கு, ஜனநாயக சக்திகளும் விழிப்புடன் செயலாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தமிழ்நாட்டின் பொதுவெளியில், சங்கிகளின் செயல்திட்டம் அம்பலப்படுத்தப்பட வேண்டும். சமூக ஊடகங்களில் பகுத்தறிவும் அறிவியல் சிந்தனையும் கோலோச்சுவதை உறுதிசெய்ய வேண்டும். அந்தவகையில் கானா பாடகர் இசைவாணியின் பக்கம் தமிழ்நாடு நின்றது மகிழ்ச்சிக்குரியது.

                                            அயம் சாரி அய்யப்பா

அயம் சாரி அய்யப்பா,

நான் உள்ளே வந்தா என்னப்பா?

பயம் காட்டி அடக்கி வைக்க, இது பழைய காலம் இல்லப்பா-      அயம் சாரி..

நான் தாடிக்காரன் பேத்தி,

இப்போ காலம் மாறிப் போச்சு

நீ தள்ளி வச்சத் தீட்டா 

நான் முன்னேறுவேன் மாசா - அயம் சாரி..

ஜீன்ஸ் பேன்ட்டா புடவையான்னு 

நானே முடிவு பண்ணிக்குவேன் 

நர்ஸா நான் டாக்டரான்னு  வளர்ந்து நானே சொல்லிக்குவேன்;

சிங்கிளா கம்மிட்டடா எல்லாம் 

நான் எடுக்குற முடிவுல தான்.

திருப்பி அடிக்கவும் இப்போ

இருக்கு எனக்கு தைரியந்தான்.

ஸ்போர்ட்ஸா? டப்பாங்குத்தா?

ஃபிரியா விட்டா பாத்துக்குவேன்

தீட்டானதும் துப்பட்டாவா?

உங்க சடங்குல காரித் துப்பட்டா?     - அயம் சாரி..

இது என்ன புதுசா ஒரு குழப்பம்,

தங்கச்சி உள்ள வந்தா என்ன நடக்கும்?

கொடுக்கலைன்னா எடுத்துக்க உரிமை;

எடுக்கலைன்னா எதுக்கு இந்த இளம? 

அடுப்படிக்கு ஆகாயம் பக்கத்திலே  

படிச்சுபுட்டா எல்லாமே பாக்கெட்டிலே!

பிறப்பில் என்ன ரகசியம் இருக்கு? 

திறக்கலன்னா கதவை ஒடைக்கணும்-   அயம் சாரி..

வெட்கப்பட்டு நிக்கணுமா

அவ நெத்தியில் பொட்டு வைக்கணுமா?

கஷ்டப்பட்டு நான் படிச்சு 

குரங்கு கையில சிக்கணுமா?

என் லைபு எனக்குடா 

உனக்கு சோகம் எதுக்குடா?

என்னோட சுதந்திரம்,

யாரு எனக்கு கொடுக்கணும்?

விரும்பிய வாழ்க்கைத் துணையை 

நானே தேர்ந்து எடுத்துக்கணும்;

சுய மரியாதை இருக்கு...

நான் எதுக்குடா கலங்கணும்?

அயம் சாரி அய்யப்பா...!

2018ல் சென்னையில் நடைபெற்ற மார்கழி மக்களிசையில் கானா இசைவாணி பாடிய பாடல்.

பாடுவோம்; பரப்புவோம்!