நீதி, மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தின் மீது கொண்ட உறுதிப்பாட்டுக்காக, கடந்த 4 ஆண்டுகள் 7 மாதங்களாக (ஏப்ரல் 9, 2020 முதல்) திகார் கொடுஞ்சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 27 வயது (கைது செய்யப்பட்ட போது) குல்பிஷ் பாத்திமா, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராக (வடகிழக்கு தில்லி, சீலாம்பூரில்) போராடிக் கொண்டிருந்த பெண்களுடன் கரம் கோர்த்து களமாடினார்.
பல பொய் வழக்குகளுடன் கொடூரமான உபா சட்டத்தின் கீழும் கைதுசெய்யப்பட்டு வெஞ்சிறைக்குள் வைக்கப்பட்டுள்ளார் பாத்திமா.
இரண்டு வழக்குகளில் பிணை வழங்கப்பட்டாலும் வெளியே வரமுடியாமல் உபா வழக்கு. பல்கலைக்கழக உயர்கல்வி பயின்றவர். நீதிக்கான, ஜனநாயகத்துக்கான போராளி.
சிறை அவரை சிறைப்படுத்தவில்லை. சிறைவாசிகள், அவர்தம் குழந்தைகளுக்கு ஆசிரியராக்கியது.
சிறையின் இருள் கவிந்த பாறைக்குகைக்குள்ளிருந்தும் சிறகடித்துப் பறக்கும் கவிஞராக்கியிருக்கிறது.
அவருக்கு முன்பே சிறையிலிருந்து விடுதலை பெற்ற அவரது சில கவிதை வரிகள்.
புன்னகைக்கத் துணிந்த நிலவு!
பல நேரங்களில்,
ஒவ்வொரு நாளும் ஏணிபோலாகி விடுகின்றன.
ஒவ்வொரு படியாக ஏறிக்கொண்டிருப்பதாகவே உணர்கிறேன்.
ஆயினும் நான் சென்று சேரவேண்டிய இடத்தை எட்டிப்பிடிக்க முடியவில்லை.
நிலவு எனது நல்ல நண்பராக, அல்லது
நம்பிக்கைக்குரியவராகி விடுகிறது.
நிலவை என்னால் பார்க்க முடிகிறது.
அநேகமாக அது முழு நிலவாக இருக்கக் கூடும்.
அது
மேகங்களுடன் போராடிக் கொண்டிருக்கிறது.
இருள் கவிந்த மேகத்தின் சிறகுகள்
அதை மறைத்துவிட முயற்சிக்கின்றன.
அந்த நிலவு அடங்க மறுக்கிறது;
அச்சுறுத்தும் இருட்டை மீறியும்
அது புன்னகைக்கத் துணிகிறது, ஒளிரத் துணிகிறது!
இகக (மா லெ) பொதுச் செயலாளர் திபங்கர் முகநூல் பக்கத்திலிருந்து
(அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சிறைவைக்கப் பட்டுள்ள உமர் காலித் உள்ளிட்ட அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்)