ஹரியானா தேர்தல் முடிவுகள் அனைத்து அரசியல் பார்வையாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அனைத்து கள அறிக்கைகளையும் தேர்தல்களுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகளையும் அனேகமாக பொய்யாக்கியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹரியானாவில் பாஜக வெற்றி பெற்று இருக்கிறது.  2014, 2019 மற்றும் சமீபத்திய 2024 மக்களவை தேர்தல்களில் அது பெற்றதை விட இந்த முறை அதிகம் பெற்றுள்ளது. இந்த முடிவுகள் ‘எதிர்பார்ப்புக்கு மாறானது’, ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என காங்கிரஸ் கூறியுள்ளது. மேலும் பல்வேறு முறைகேடுகள் குறித்து கேள்விகள் கேட்டு, அரசு நிர்வாக எந்திரத்தின் மோசடி நடவடிக்கைகள் குறித்து புகார் சொல்லியும் பல்வேறு தீவிர பிரச்சனைகளை தேர்தல் ஆணையத்திடம் எழுப்பி உள்ளது. ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் அனேகமாக எதிர்பார்த்த மாதிரியே வந்துள்ளன. அங்கு தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான பாதியளவை சற்று கடந்து சென்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் மற்றுமொரு வாய்ப்பை தவற விட்டு விட்டது என அது ஹரியானாவை இழந்தது குறித்து நிச்சயமாக சொல்லப்படும். ஜம்முவில் காங்கிரசின் மிக மோசமான செயல்பாட்டையும் இந்த ஹரியானா தோல்வியுடன் இணைத்து வட இந்தியாவில் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் போது அது தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாவதன் அறிகுறியாக மீண்டும் ஒருமுறை பார்க்கப்படும்.

ஊடக விவாதங்களின் கவனம் ஹரியானா தேர்தல் முடிவுகள் மீது குவிக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தபோதிலும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகளும் நிச்சயமாக முக்கியத்துவம் வாய்ந்தவைதான். அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற ஜனநாயகம், கூட்டாட்சி கட்டமைப்பு மீது தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல் என்பது ஜம்மு காஷ்மீரின் அரசமைப்புச் சட்ட அந்தஸ்தை ஒழித்துக் கட்டியதில் இருந்து தொடங்கியது. ஒரு மாநிலம் ஒரே இரவில் இரண்டு ஒன்றியப் பகுதிகளாக (யூனியன் பிரதேசம்) பிரிக்கப்பட்டது. மேலும் இணையம் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த எதிர்கட்சியினரும் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது வீட்டுச் சிறைக்குள் வைக்கப்பட்டனர். ஜனநாயகம் தற்காலிகமாக நீக்கப்பட்டது. தொகுதிகள் மறுவரை யறைக்கு உட்படுத்தப்பட்டன. அதன்மூலம் தேர்தல் வரைபடத்தில் பெரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஜம்மு காஷ்மீர் தொகுதி களின் மொத்த எண்ணிக்கை 83 லிருந்து 90 ஆக அதிகரிக்கப்பட்டது. அதிகரிக்கப்பட்ட ஏழில் ஆறு தொகுதிகள் ஜம்முவிற்கு ஒதுக்கப்பட்டன. அதன் மூலம் 47 தொகுதிகளை கொண்ட காஷ்மீர் சமவெளியின் எண்ணிக்கைக்கு கிட்டத்தட்ட இணையாக 43 தொகுதிகள் ஜம்முவிற்கும் ஒதுக்கப்பட்டன. இது இந்த இரண்டு பகுதி மக்கள் தொகை பங்கில் அப்பட்டமான முரண்பாட்டை வெளிப்படுத்துகிறது. காஷ்மீர் சமவெளியின் மக்கள் தொகை 56.4% என்பதோடு ஒப்பிடும்போது ஜம்முவின் மக்கள் தொகை 43. 6% தான். கூடுதல் பிரிவினர்களை உள்ளடக்க எஸ்சி, எஸ்டி வகையினங்கள் மறு சீரமைக்கப்பட்டன. அதன் மூலம் பாஜகவிற்கு சாதகமான தொகுதிகள் உருவாக்கப்பட்டன. இவையெல்லாவற்றுக்கும் மேலாக ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களை நியமிக்கும் தனிப்பட்ட சிறப்பு அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு வழங்கப்பட்டது.

இந்தப் பாசிசத் தாக்குதல், தீய நோக்கத்துடன் சிதைத்தல் என்ற பின்னணியில் ஜ&கா முடிவுகள் பார்க்கப்பட வேண்டும். உண்மையில் காஷ்மீர் சமவெளியைப் பொறுத்தவரையில் இந்த வாக்குகளை, அழுத்தம்திருத்தமான எதிர்ப்பு வாக்குகளாகவே பார்க்க வேண்டும். பாஜகவிற்கு மட்டுமல்ல, அதன் முந்தைய கூட்டாளியான பிடிபி-க்கும் ஒரு பாடம் கற்பிக்கவும், பாஜகவிற்கு எதிரான வாக்குகளை சிதறடிக்கும் எண்ணத்துடன் வழங்கப்பட்ட பாஜகவின் திட்டத்தை தோற்கடிக்கவுமான வாக்குகளாகவே பார்க்க வேண்டும்.. மாநில அந்தஸ்தை பறித்தற்கு எதிரான கோபம் காஷ்மீர் சமவெளியோடு மட்டும் நிச்சயமாகக் குறுகிப் போய்விடவில்லை. லடாக்கின் லே, கார்கில் ஆகிய இரு பகுதிகளிலும் ஆழ்ந்த ஏமாற்றத்தை நாம் காணலாம். ஜ&கா தேர்தல் காலத்தில் லே முதல் டெல்லி வரை நடைபெற்ற பருவநிலை பேரணியில் இது மீண்டுமொருமுறை வெளிப்பட்டது. ஜம்முவில் கூடுதல் ஆற்றல்மிக்க, தீர்மானகரமான தேர்தல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், பாஜகவின் கூட்டாட்சிக்கு எதிரான பிரிவினைவாத செயல்திட்டத்திற்கு எதிராக ஜம்முவிலும் உள்ள அதிருப்தியை அறுவடை செய்திருக்கலாம். ஆனால் அப்படியான திறனோ அல்லது அமைப்போ காங்கிரசிடம் நிச்சயமாகவே இல்லை. அதற்கு மாறாக காங்கிரஸ் தேர்தல் நெறிமுறைகள் குறித்து கிஞ்சித்தும் அக்கறை காட்ட வில்லை. அது ஆசிபாவை கொடூரமாக பாலியல் வன்முறையும், கொலையும் செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேசிய அவப்புகழ் பெற்ற சவுத்ரி லால் சிங்கை முதலில் மக்களவைத் தேர்தல்களில் உதம்பூரிலும், மீண்டும் தற்போது சட்டமன்றத் தேர்தலில் பாஷோலி தொகுதியிலும் நிறுத்தியது.

ஹரியானாவில் பாஜக அரசாங்கத்திற்கு எதிராக பத்தாண்டுகளாக திரட்டப்பட்ட அதிருப்தியின் மீது சவாரி செய்து தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என எதிர் ்பார்க்கப்பட்டது. அதிலும் குறிப்பாக வேளாண் சட்டங்கள், ராணுவத்தில் அக்னிபாத் திட்டம், மல்யுத்த வீராங்கனைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகியவற்றுக்கு எதிரான வெகுமக்களின் கோபம் ஹரியானாவில் வெளிப்படையாக தெரிந்தது. ஆட்சிக்கு எதிரான இந்த அதிருப்தி நிச்சயமாக மெய்யானது தான். ஏனெனில் முதலில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அதிகரித்த அளவில் அவப்பெயர் பெற்ற முதலமைச்சர் மனோகர்லால் கட்டாருக்குப் பதிலாக நயாப் சிங் சைனியை முதலமைச்சராக பாஜக மாற்றியது. மேலும் ஒரு சில அமைச்சர்களுக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பினை மறுத்தது. அனேகமாக எட்டு அமைச்சர்களும் அவைத் தலைவரும் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவினர். ஆனால் பாஜகவிற்கு எதிராக ஒரு தீர்மானகரமான வெற்றியை பெறுவதற்கு, ஆட்சிக்கு எதிரான இந்த அதிருப்தி மட்டுமே போதுமானதல்ல என்பதை மக்களவைத் தேர்தல்கள் போதுமான அளவிற்கு வெளிப்படுத்தின. முதலமைச்சராக நயாப் சைனியை கொண்டு வந்ததன் மூலம் பாஜக ஆட்சிக்கு எதிரான அதிருப்தி காரணியை வலுவிழக்க செய்தது. அது மட்டுமல்ல ஓபிசி சமூக பிரிவினரையும் தனக்கு ஆதரவாக உறுதிப்படுத்தியது. மேலும் இந்த மாநிலத்தில் பாரம்பரியமான ஜாட் ஆதிக்கத்திற்கு எதிரான சமூக பிளவுக் கோட்டை (Social fault lines) அகலப்படுத்தியது. மக்களவைத் தேர்தல்களில் அரியானாவின் 10 மக்களவை தொகுதிகளில் ஐந்தை தக்கவைப்பதில் பாஜக வெற்றி கண்டது. அதனை அப்படியே சட்டமன்ற தொகுதிகளுக்கு மாற்றினால் 42 தொகுதிகளில் முன்னிலை பெற்ற காங்கிரசை விட அதிக எண்ணிக்கையில் பாஜக 44 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸின் கூட்டணியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி மீதமுள்ள நான்கு தொகுதிகளில் முன்னிலை பெற்றது.

மக்களவை தேர்தல் அனுபவத்திலிருந்து காங்கிரஸ் போதுமான பாடங்களை கற்றுக் கொள்ளவில்லை என்பது போலவே தெரிகிறது. இதன் காரணமாக காங்கிரஸ் பெற்ற வாக்கின் பங்கு 28.08% லிருந்து 39.09% ஆக 11% மும், அது பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 31இல் இருந்து 37 ஆகவும் அதிகரித்திருந்த போதிலும் பெரும்பான்மைக்கு தேவையான பாதி அளவை தாண்டிச் செல்வதில் காங்கிரஸ் தோல்வியுற்றது. தீவிரத் தன்மை வாய்ந்த முஸ்லிம் எதிர்ப்பு வெறுப்புணர்வு பரப்புரை இயக்கத்துடன் ஜாட் அல்லாத எஸ்சி-ஓபிசியினரின் துருவச் ்சேர்க்கையையும் ஒன்றிணைக்கும் பாஜகவின் செயல்திட்டம் மீண்டும் ஒருமுறை தனது ஆட்சிக்கு எதிரான அதிருப்தி காரணியை தடுத்து நிறுத்துவதில் வெற்றி கண்டது. சட்டத்திற்கு புறம்பான பசு பாதுகாப்பு குழுவினருக்கு நயாப் சிங் சைனியின் அப்பட்டமான ஆதரவும், உச்ச நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய எஸ்சி/எஸ்டி உள் ஒதுக்கீடு தீர்ப்பினைத் தொடர்ந்து எஸ்சி/எஸ்டி உள் ஒதுக்கீடு சம்பந்தமான குறி வைக்கப்பட்ட அறிவிப்புகளும் பாஜக செயல்திட்டத்தின் தெளிவான அடையாளங்களாகும். ஒரு தலித் மாநில தலைவரையும் (இந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார்), குறிப்பிடத்தக்க தலித் நாடாளுமன்ற உறுப்பி னராக குமாரி செலீஜாவையும காங்கிரஸ் கொண்டிருந்த போதிலும், எஸ்சி-ஓபிசி சமூகத்தினரிடம் பாஜகவின் செல்வாக்கை திறன்மிக்க வகையில் தடுத்து நிறுத்துவதில் காங்கிரஸ் தோல்வியுற்றது. மீதமுள்ள 62 தொகுதிகளில் அந்த கட்சி முன்னேறி சென்ற போதும், ராஜஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ஓபிசி ஆதிக்கம் செலுத்துகிற ஹரியானாவின் அஹிர்வால் மண்டலத்தின் 28 தொகுதிகள் (குர்கான், ரேவாரி, பரிதாபாத், பிவானி-மகேந்தர்கர் மக்களவைத் தொகுதிகள்) காங்கிரஸின் தோல்வியை உறுதி செய்தன.

பாஜக ஹரியானாவில் எதிர்பாராத விதமாக பெற்ற பலன்களை எதிர்வரும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், டெல்லி, பிஹார் ஆகிய மாநில சட்டமன்ற தேர்தல் பரப்புரை இயக்கத்திற்கு வலுவூட்ட நிச்சயமாக முயற்சிக்கும். ஆனால் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு 2023 இறுதியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பாஜக ஆச்சரியமான வெற்றி பெற்றிருந்தபோதிலும் சில மாதங்களுக்கு பிறகு உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் மாபெரும் தேர்தல் அடியை வாங்குவதிலிருந்து பாஜகவை அது தடுத்து நிறுத்தவில்லை. இதனை 2024 மக்களவைத் தேர்தல்கள் தெளிவாகவே நமக்குக் காட்டின. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், டெல்லி, பிஹார் ஆகிய மாநிலங்களுக்கு நடைபெற இருக்கிற அடுத்த சுற்று சட்டமன்றத் தேர்தல்களில் மோடி அரசாங்கத்திற்கும் சங்கி படையணிக்கும் தீர்மானகரமான தோல்வியை வழங்க மக்கள் இயக்கங்களின் சக்திகளும் இந்தியா முகாமின் கட்சிகளும் நிச்சயமாக உறுதிப்பாட்டுடன் தயாராக வேண்டும்.