வேலூர் மாநகரம் பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பெரும் இடையூறாக  உள்ளதாகக் கூறி பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிபிஐ(எம்எல்) கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்து மேற்படி டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தப்பட்டது. ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படாததால் பொதுமக்களை திரட்டி சிபிஐ(எம்எல்) கட்சியின்  வேலூர் மாவட்டச் செயலாளர் சரோஜா தலைமையில், டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னரும் டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அறிவித்தபடி  19.11.2024 அன்று மேற்படி டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுப் போடுவதற்கு சிபிஐ(எம்எல்) கட்சித் தோழர்களும் பொதுமக்களும் திரண்டனர். காவல்துறை அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தது. மாலை 6 மணிக்கு மேல் சிபிஐ(எம்எல்) கட்சியின் மாவட்டச் செயலாளர் சரோஜா, ஏஐசிசிடியு மாவட்ட பொதுச் செயலாளர்  சிம்புதேவன், மாவட்டத் தலைவர் மாணிக்கம், மாவட்டக் குழு உறுப்பினர் ஏழுமலை, மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியை சேர்ந்த மூன்று தோழர்கள் என ஏழு பேர் மீது மட்டும் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 483/2024,  189(2), 223, 126(2), 132, 351(2) BNS Act   ஆகிய புதிய குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்துள்ளது தமிழ்நாடு காவல்துறை. பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்திடக் கோரி போராடியவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. மதுக் கடைகள் மூடப்படும் என்று சொல்லித்தான் திமுக ஆட்சியைப்பிடித்தது. ஆனால், கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக, பொது மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை மூடச் சொன்ன சிபிஐஎம்எல் தோழர்களை கைது செய்திருப்பது முறையற்ற செயலாகும். தமிழக அரசு பிரச்சனைக்குரிய சாராயக்கடைகளை உடனடியாக  மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்! கைது செய்யப்பட்ட சிபிஐ(எம்எல்) கட்சி மாவட்டச் செயலாளர் சரோஜா உள்ளிட்ட 7  தோழர்களையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

சிறையிலிருக்கும் தோழர்களை இகக(மாலெ) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி, ஏஐசிசிடியு மாநில சிறப்புத்  தலைவர் சொ.இரணியப்பன், அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் உ.அதியமான் ஆகியோர் சந்தித்து வாழ்த்தும், ஒருமைப்பாடும் தெரிவித்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியரையும் சந்தித்துப் பேசினர்.