மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்) அமைப்பின் மாநில மாநாடு 2024 நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாள்களில் கோவையில் நடைபெற்றது. "தமிழ்நாடு எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சனைகள்" எனும் பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டின் தொடக்க நிகழ்வு பியூசிஎல் மாநிலத் தலைவர் பேரா. சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்றது : மாநில இணைச் செயலர் வழ. சேகர் அண்ணாதுரை வரவேற்புரை நிகழ்த்த, மாநிலப் பொதுச் செயலாளர் வழ. ஜான் வின்சென்ட் மாநாட்டு அறிமுகவுரை ஆற்றினார்.
நாடறிந்த மனிதவுரிமைச் செயல்பாட்டாளர் எஸ்.வி. ராஜதுரை, இந்தியாவிலும் தமிழகத்திலும் மனித உரிமை அமைப்புகள் தோன்றி வளர்ந்த வரலாற்றை பதிவு செய்தார். அவரது விரிவான உரையின் சுருக்கமான பதிவு கீழே வழங்கப்படுகிறது.
"1936 ஆம் ஆண்டு இரவீந்திரநாத் தாகூரின் வாழ்த்துகளுடன் , சரோஜினி நாயுடு, ஜவகர்லால் நேரு ஆகியோரது முன்னெடுப்பில் "இந்திய சிவில் உரிமைகள் கழகம்" (Indian Civil Liberties Organisation - 1CLU ) இந்தியாவில் முதன் முதலாகத் தொடங்கப்பட்டது. பொதுவாக பிரிட்டிஷ் அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து எதிர்வினை ஆற்றக்கூடிய அமைப்பாக அது செயல்பட்டது. அதன் கிளைகள் கல்கத்தா, சென்னை, மும்பை அஸ்ஸாம் ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டன. இத்தகைய அமைப்பின் தேவையை 1935இல் மும்பையில் நடைபெற்ற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி மாநாட்டில் ஜெயப்பிரகாஷ் நாராயண் வலியுறுத்தியிருந்தார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை 1936 ஆம் ஆண்டிலேயே இந்திய சிவில் உரிமைகள் கழகத்தின் கிளை செயல்படத் தொடங்கியது. 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டதால், இனி இது போன்ற சிவில் உரிமைகள் அமைப்புகள் தேவையில்லை என்று கூறினார் ஜவகர்லால் நேரு. ஆனால் அவரது கருத்தை வி.எம்.தார்குண்டே, ஜெயப்பிரகாஷ் நாராயண் உள்ளிட்டோர் எதிர்த்தனர்.
1949 ஆம் ஆண்டில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி தடை செய்யப்பட்டதன் விளைவாக நடந்த அரசு ஒடுக்குமுறைகளுக்கு எதிர்வினையாற்ற இந்திய சிவில் உரிமைக் கழகத்தின் சென்னை மாகாணக் கிளை முன்வந்தது. இந்த அமைப்பு நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில் திரு.வி.க.,’விடுதலை' ஆசிரியர் சா.குருசாமி, சாரி (கே.ஜி,.கண்ணபிரானின் தமையனார்) ஆகியோர் செயல்பட்டதாகத் தெரிய வருகின்றது. இது பற்றிய ஆய்வுகளை நாம் மேற்கொண்டு விவரங்களை உறுதி செய்ய வேண்டும்.
தடை செய்யப்பட்டிருந்த பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். 1951 ஆம் ஆண்டு சேலம் சிறையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களைக் கண்டித்துச் சிறைப்பட்டிருந்த கம்யூனிஸ்டுகள் போராடினர். அதனால் அங்கு காவல் துறைத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. 22 கம்யூனிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டனர். இது தமிழகமெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இத்தகைய கொடும் உரிமை மீறலைக் கண்டித்துப் பொது வெளியில் எதிர்ப்புகள் உருவாயின. கம்யூனிஸ்டுகளின் மனித உரிமைகளைப் பாது .காக்க இந்திய சிவில் உரிமைகள் சங்கம் பாடுபட்டது.
நாளடைவில் இந்திய சிவில் உரிமைகள் கழகச் செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டது. 1960களின் இறுதியிலிருந்து ஆந்திரா, தமிழ்நாடு முதலிய மாநிலங்களில் நக்சலைட் இயக்கத்தினர் மீது நடத்தப்பட்ட அரசு ஒடுக்குமுறையின் காரணமாக, ஆந்திராவில்APCLC (Andhra Pradesh Civil Liberties Committee ) என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. சில ஆண்டுகளுப்பிறகு OPDR (Organisation for the Protection of Civil Liberties) என்ற அமைப்பும் தோன்றியது.
தமிழ்நாட்டிலும் நக்சலைட்டுகள் மீதான அரசு ஒடுக்குமுறையின் காரணமாக 1970களில் தமிழ்நாடு சிவில் உரிமைகள் சங்கம் (Tamill Nadu Civil Rights Association) சென்னையில் மட்டும் இயங்கி வந்தது. மேயர் கிருஷ்ணமூர்த்தி அதில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டார் சுழற்சி முறையில் பிராமணருக்கான ஒதுக்கீட்டில் மேயர் ஆனவர் வழக்குரைஞர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள். அவர், சென்னையில் குடிசைப் பகுதியில்தான் வாழ்ந்து வந்தார். அவரோடு பத்திரிகையாளர்கள் சாஸ்திரி இராமச்சந்திரன், சதானந்த மேனன், சோசலிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த டாக்டர் விஜயலட்சுமி ஆகியோர் இணைந்து செயல்பட்டனர். மார்க்சியச் செயல்பாட்டாளர் கோவை ஈஸ்வரன் பொதுச்செயலாளராகப் பணியாற்றினார்.
சில நக்சலைட்டுகள் மீது விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கான இயக்கத்தை அந்த அமைப்பு தீவிரமாக மேற்கொண்டதன் காரணமாக மு.கருணாநிதி தலைமையில் அமைந்திருந்த திமுக அரசாங்கம் அந்த நக்சலைட்டுகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. அதே அமைப்பு மேற்கொண்ட இன்னொரு முக்கியமான நடவடிக்கை, சீராளன் என்ற நக்சலைட் காவல் துறையினரால் கொல்லப் பட்டதையும், அதை நேரில் பார்த்த சாட்சிகளான வேலு, ஜெயா ஆகிய இருவரும் காவல் துறையால் சித்திரவதை செய்யப்பட்டதையும் பற்றிய உண்மை அறியும் குழுவின் அறிக்கையை அன்றைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரியிடம் சமர்ப்பித்ததாகும். அதன் காரணமாக விசாரணை ஆணையம் நியமிக்கப்பட்டது. ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்குப் பிறகே வேலு, ஜெயா ஆகியோருக்கு இழப்பீடு தர அரசாங்கத்துக்கு ஆணை பிறப்பித்தது உயர்நீதிமன்றம்.
இந்த அமைப்பு நாளடைவில் செயலற்றுப் போனது. தமிழகத்தில் அதிமுக-வின் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் 1980 - 1982 ஆண்டுகளில் நக்சலைட்டுகள் மீது கடுமையான ஒடுக்குமுறை மேற்கொள்ளப்பட்டது. ஏராளமான காவல் துறை மோதல் சாவுகள் ( Encounter) நடந்தன. சட்டத்துக்குப் புறம்பான வகையில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். எனவே அந்த நிலைமைகளை எதிர்கொண்டு சனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வழக்கறிஞர் பி.வி.பக்தவத்சலம் தலைமையில் OCDR (Organisation for the Protection of Civil Rights), வழக்கறிஞர் ஏ.எம். இப்ராகிம் தலைமையில் PUDR (Peoples Union for Demcratic Rights) ஆகிய அமைப்புகள் நிறுவப்பட்டன. PUDR -இன் முயற்சி காரணமாக திருப்பத்தூர் , தருமபுரி மாவட்டங்களில் நடத்தப்பட்டன ன காவல் துறை ஒடுக்குமுறைகள், என்கவுன்டர் சாவுகள் ஆகியன பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள அனைத்திந்திய அளவில் ஓர் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. அதில் பியூசிஎல் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், எந்த அமைப்பையும் சேராத பத்திரிகையாளர்கள் ஆகியோர் இருந்தனர்.
1980 அக்டோபர் மாதம் அக்குழு திருப்பத்தூர் சென்ற போது அங்கு சீருடை அணியாத காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டது. அவர்களது கைக்கடிகாரங்களும் பிற உடைமைகளும் அபகரிக்கப்பட்டன. அடியும் உதையும் பட்ட கிளாட் ஆல்வாரசின் காமிரா கைப்பற்றப்பட்டது. இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான மோகன்ராமின் முகமும் கைகளும் வீங்கிப் போகும் அளவுக்கு அவர் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
உண்மை அறியும் குழுவினர் சென்னைக்குத் திரும்பிவந்த பிறகு அப்போது பியூசிஎல் அமைப்பின் தமிழ்நாட்டுக் கிளையின் தலைவராக இருந்த துக்ளக் சோ ராமசாமி, பத்திரிகையாளர் கூட்டமொன்றைக் கூட்டி காவல் துறையால் தாக்கப்பட்டவர்களைப் பேச வைத்ததுடன், அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு திருப்பத்தூர் நிகழ்ச்சிகளைக் கண்டனம் செய்தும் அது தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்தும் ஒரு பகிரங்கக் கடிதத்தை அனுப்பினார்.
தமிழ்நாட்டில் காவல் துறை ஒடுக்குமுறை பரவலாக இருந்ததைக் கருத்தில் கொண்டு பியூ,சி.எல், அமைப்பின் தேசியக் கவுன்சிலின் மாநாடு 1980இல் சென்னையில் நடைபெற்றது. சோ.ராமசாமி அவர்கள் கொண்டு வந்த ஒரு தீர்மானத்தை மாநாட்டுப் பிரதிநிதிகள் காரசாரமாக விவாதித்தனர். அத்தீர்மானம் என்னவென்றால் பியூசிஎல் அமைப்பு அரசு வன்முறையை மட்டுமல்லாது, அரசுக்கு வெளியே இருந்து செயல்படும் அமைப்புகளின் (non state actors) வன்முறைச் செயல்பாடுகளையும் கண்டனம் செய்ய வேண்டும் என்பதாகும். அவரது தீர்மானத்துக்கு ஆதரவாக மிகக்குறைந்த வாக்குகளே கிடைத்தன. அதன் பிறகு அவர் ஜனநாயகத்தில் தனக்கு நம்பிக்கை உள்ளதால் பெரும்பான்மையினரின் தீர்ப்புக்குக் கட்டுப்படுவதாகக் கூறினார். ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு பியூசிஎல் அமைப்பிலிருந்து அவரும் பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியர் பிருந்தாவன் மோசசும் பதவி விலகினர். அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் பாரிஸ்டர் இராமச்சந்திரன் , சாஸ்திரி இராமச்சந்திரன் ஆகியோர் முறையே தலைமைப் பொறுப்பையும், பொதுச் செயலாளர் பொறுப்பையும் ஏற்றனர்.
பின்னர் திருப்பத்தூர், தருமபுரி பகுதிகளுக்குச் சென்று உண்மைகளை அறிந்து வருவதற்காக கே.ஜி.கண்ணபிரான், சுவாமி அக்னிவேஷ், சோசலிஸ்டுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மிருணாள் கொரெ உள்ளிட்ட உயர்மட்டக் குழு சென்று, நக்சலைட்டுகள், அவர்களது ஆதரவாளர்கள் ஆகியோரைச் சந்தித்துத் தகவல்களைச் சேகரித்து வந்தது. அவர்கள் தயாரித்த அறிக்கை, காவல் துறையினரின் கண்மூடித்தனமான வன்முறையையும் என்கவுன்டர் என்ற பெயரால் நக்சலைட்டுகள் கொல்லப்படுவதையும் கண்டனம் செய்ததுடன், இது குறித்த சுயேச்சையான விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு விடுத்தது.
கெடுவாய்ப்பாக பாரிஸ்டர் இராமச்சந்திரன் எதிர்பாராத வகையில் காலமாகிவிட்டதால் சென்னையிலிருந்த மூத்த வழக்குரைஞர் சங்கரன், பியூசிஎல், தமிழ்நாட்டுக் கிளையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு சாஸ்திரி இராமச்சந்திரன் வேறு ஒரு ஊருக்கு மாற்றலாகிச் சென்று விட்டதால், ஹென்றி திஃபேன் பொதுச் செயலாளரானர். அதன் காரணமாக பியூசிஎல் அமைப்பின் தமிழ்நாட்டுக் கிளை மதுரையை மையமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது.
1982 அக்டோபரில் அது மதுரையில் காவல் துறை ஒடுக்குமுறையைப் பற்றி 15 நாள் விவாதங்களை நடத்தியது. அந்த விவாதங்கள் நடந்து முடிந்த அன்று வி.எம்.தார்குண்டேவும் கே.ஜி.கண்ணபிரானும் தமிழ்நாடு பியுசிஎல் ஏற்பாடு செய்திருந்த பேரணியைத் தொடங்கிவைத்து பின்னர் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்ற அழைக்கப்பட்டிருந்தனர். பேரணிக்கு ஏற்கெனவே காவல் துறையின் அனுமதியை பெற்றிருந்த போதிலும் மாவட்டக் காவல் துறையினர் பேரணியில் கலந்துகொண்டவர்கள் மீது கண்மூடித்தனமாக லத்திகளால் அடிக்கத் தொடங்கினர். தடியடிபட்ட தார்க்குண்டேlவும் கே.ஜி.கண்ணபிரானும் கைது செய்யப்பட்டுக் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் எத்தகைய ஆளுமைகள் என்பதை அறிந்த முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரன் அரசாங்கம் அவர்கள் இருவரையும் அடுத்த நாளே விடுதலை செய்தது.
அதன் பிறகு பியூசிஎல் தமிழ்நாட்டுக் கிளையின் நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டது. ஆனால் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் மனித உரிமைச் செயல்பாடுகளில் ஈடுபட்டனர். பின்னர் 1989-90இல் மனித உரிமைப் பிரச்சினை தொடர்பாகச் சென்னைக்கு வந்திருந்த காலஞ்சென்ற முனைவர் கே.பாலகோபாலின் ஆலோசனைகளின் பேரில் பி.யு.சி.எல்.மீண்டும் செயல்படத் தொடங்கியது. அப்போது பல இளம் வழக்குரைஞர்கள், ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் பியூசிஎல். அமைப்பில் சேரத் தொடங்கினர், இந்த அமைப்பின் கிளை பாண்டிச்சேரியிலும் உருவாக்கப்பட்டது.
வெறும் காவல் துறை மீறல்களை மட்டும் எதிர்த்துக் களமாடுவதோடு நின்று விடாமல், சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்காகவும் பியூசிஎல் அமைப்புத் தனது செயல்பாடுகளை விரிவாக்கியது. குறிப்பாகப் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளைக் கண்டித்துச் சென்னையில் இரண்டு நாள் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேனாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் மகன் முனைவர் கோபால் அவர்கள் பியூசிஎல் கருத்தரங்கில் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
தற்பொழுது எவ்விதத் தடையுமின்றி சிறப்பாகச் செயல்பட்டு வரும் பியூசிஎல் போன்ற மனித உரிமை அமைப்புகளுக்கு இன்றைய சூழல் மிகப்பெரும் சவாலாக அமைந்துள்ளது. இருப்பினும் பியூசிஎல் அமைப்பு அதைத் துணிவுடன் எதிர்கொண்டு உயிர்ப்புடன் தொடர்ந்து செயலாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது" எனத் தனது உரையை நிறைவு செய்தார் எஸ்.வி.ஆர். அவர்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)