சமீபத்தில், இந்திய உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அவர்களால், ஏற்கனவே கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு ஒரு கையில் தராசும் மற்றொரு கையில் வாளும் வைத்துக் கொண்டு இருக்கும் நீதி தேவதைக்குப் பதிலாக, கண்களை துணியால் கட்டாமல், ஒரு கையில் தராசும் மற்றொரு கையில் அரசியலமைப்புச் சட்டப் புத்தகமும் வைத்துக் கொண்டு இருக்கும் நீதி தேவதை சிலை திறந்து வைக்கப்பட்டது. இது பொதுச் சிவில் சட்டத்தைக் குறிக்கும் நீதி தேவதை என்றும் பாரத மாதாவின் வடிவில் உள்ள நீதி தேவதை என்றும் பலரும் மெச்சிக் கொண்டனர். ஆனால், வாள் இருந்த கையில் அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தைக் கொடுத்தது மட்டுமின்றி, புதிய நீதி தேவதையின் நெற்றியில் பொட்டும் வைக்கப்பட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என்கிறது. அந்த அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை நீதி தேவதையின் கையில்  கொடுத்துவிட்டு, இந்து்ப் பெண்கள் மட்டுமே வைக்கக் கூடிய பொட்டை எதற்காக நீதி தேவதையின் நெற்றியில் வைக்க வேண்டும்? இந்துப் பெண்கள் மட்டுமின்றி, இந்து ஆண்களும் பொட்டு வைக்கிறார்கள். பொட்டு வைப்பது என்பது பெண்கள் மத்தியில் பரவலான பழக்கமாக இன்றைய காலத்தில் மாறியுள்ளது என்றாலும் இஸ்லாமியப் பெண்களோ, கிறிஸ்தவ மதப் பெண்களோ பொதுவாக பொட்டு வைப்பது இல்லை. அனைவருக்கும் பாரபட்சமின்றி விருப்பு வெறுப்பின்றி நீதி வழங்க வேண்டும் என்பதைக் குறிக்கும் விதத்தில்தான் நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, மனித குலத்திற்கு எதிரான தீயவர்களை நியாயமான தீர்ப்பின் மூலம் அழிக்க வேண்டும் என்பதைக் குறிக்கவே வாளும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், வாள் போய் அரசியலமைப்புப்  புத்தகம் வந்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்ற வேண்டும் என்றும் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்றெல்லாம் பேசிக் கொண்டு இந்தியாவின் பன்முகத் தன்மையை அழித்தொழிக்க வேண்டும் என்பதற்காகவே பொதுச் சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் சங் பரிவார் பாஜக அரசு, நீதி தேவதையின் கையில் அவர்கள் அழிக்கத் துடிக்கும், அழித்துக் கொண்டிருக்கும் அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தைக் கொடுத்து நீதி தேவதை சிலையையும்கூட பொருளற்றதாக ஆக்க அல்லது காவிமயமாக்க முயற்சிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது அதன் முகப்புரையில் மதச் சார்பின்மை, சோசலிசம் என்கிற சொற்கள் கிடையாது, அவை பின்னர் சேர்க்கப்பட்டது அதனால் அவற்றை நீக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் சங் பரிவார் கூட்டத்தினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள இவர்கள்தான் அரசியலமைப்புச் சட்டப்படி நீதி வழங்க வேண்டும் என்பதற்காக புதிய நீதி தேவதையின் கையில்  அரசியலமைப்பு சட்டப் புத்தகம் கொடுக்கப்பட்டுள்ளது என்று பெருமை பேசுகிறார்கள். பிரதமர் மோடியை அழைத்து தனது வீட்டில் கணபதி பூசை நடத்திய, ராமர் கோயில்-பாபர் மசூதி தீர்ப்பில்கூட எனக்கு உதவியது கடவுள்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அவர்கள் இந்த புதிய நீதி தேவதை சிலையையும் திறந்து வைத்துள்ளார் என்கிறபோது ஒரு சார்பற்ற நீதியை, மதச் சார்பற்ற நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்? நிச்சயமாக நீதிபதி அவர்கள் தான் வணங்கும் இந்துக் கடவுளிடம்தான் உதவி கேட்டிருப்பார். அவரும்  இஸ்லாமியக் கடவுள் இருந்த இடத்தை இந்துக்களிடம் கொடுத்துவிடச் சொல்லிவிட்டார் போலும். இப்படியெல்லாம் பார்க்காமல் வழக்கில் தனக்கு எதிரில் இருப்ப வர்கள் யார்? எந்த மதம்? என்ன சாதி? அவர் தகுதி என்ன? என்றெல்லாம் பார்க்காமல் நியாயத்தின் அடிப்படையில் தீர்ப்பு  வழங்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டுள்ளன. அப்படி கட்டியிருக்கும்போதே தங்களது மத நம்பிக்கையின் அடிப்படையில், விருப்பு வெறுப்பின் அடிப்படையில் நீதிபதிகள் பேசுவதும் தீர்ப்பு வழங்குவதும் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டதால், இனி கண்ணைக் கட்ட வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்களோ?. மத்திய பிரதேச, கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலர் வெளிப்படையாகவே இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு எதிராக வெறுப்பு அரசியல் பேசுகிறார்கள். தமிழகத்தில் கூட உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்எஸ்எஸ் சாகாக்களில் பங்கெடுப்பதும், ஆர்எஸ்எஸ் கூட்டங்களில் பேசுவதும் செய்கிறார்கள். இவர்களிடத்தில் எப்படி ஒரு சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியும். இப்படிப்பட்ட சூழலில்தான், அரசியலமைப்புச் சட்ட முகவுரையில் இருந்து மதச்சார்பின்மை, சோசலிசம் என்கிற சொற்களை நீக்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த அக்.21 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தபோது, நீதிபதி சஞ்சீவ் கண்ணா மனுதாரர்களைப் பார்த்து பல கேள்விகளைக் கேட்டார். இந்தியா மதச் சார்பற்ற நாடாக இருக்க விரும்பவில்லையா நீங்கள்? மதச்  சார்பின்மை இந்திய அரசியலமைப்பின்  அடிப்படை கட்ட மைப்பின் ஒரு பகுதியாகும் என்றும் பல தீர்ப்புகள் மதச் சார்பின்மையின் அடிப்படையில்தான் வழங்கப்பட்டுள்ளன என்றும் சோசலிசம் என்கிற சொல்லானது சமத்துவத்தையும் நாட்டின் செல்வங்கள் சமமாகப் பங்கிடப்பட வேண்டும் என்பதையும் குறிக்கிறது என்று கூறினார். சங்கிக் கூட்டத்தைச் சேர்ந்த மனுதாரர்கள், நாங்கள் மதச் சார்பின்மை வேண்டாம் என்று சொல்லவில்லை, இந்தியா பழங்காலத்தில் இருந்தே மதச்சார்பற்ற நாடாகத்தான் இருக்கிறது இந்த இரு வார்த்தைகளும் இடையில் சேர்க்கப்பட்டதால்தான் எதிர்க்கிறோம் என்று பேசி மழுப்பினார்கள். இந்திய விடுதலைப் போரில் எந்தவொரு பங்களிப்பும் செய்யாத, ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்த சாவர்க்கரின் வாரிசுகள் தற்போது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு எல்லாவற்றையும் மாற்றி இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றிட இடைவிடாமல் வேலை செய்து வருகிறார்கள். ஆர்எஸ்எஸ் அதன் 100வது ஆண்டை கொண்டாட இருக்கிறது. ஆர்எஸ்எஸ் அடிப்படையிலேயே சதி வேலைகளுக்குப் பெயர் பெற்ற அமைப்பாகும். அதன் இந்து ராஷ்டிரக் கனவை இந்திய மக்கள் மதம், சாதி, மொழி கடந்து ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும். இந்தியாவின் பன்முகத் தன்மையை, இந்திய அரசியலமைப்பை, சனநாயகத்தை பாதுகாத்திட வேண்டும்.